என்னுள்ளே இருக்கின்றாய்.எந்நேரமும்
என்னருகில்.
கானகத்தில் வழி தவறி வந்தவரை
வழிப்பறி செய்து அவர்கள் வாழ்வை
அழித்து வாழ்ந்துவந்த கொள்ளையனை
உன் பக்தனாய் ஏற்றுக்கொண்டாய் .
கலியுகத்தில் எப்போதும் உன்னையே
நினைத்துக்கொண்டிருக்கும் என்
போன்றவர்களை மட்டும் ஏற்றுக்கொள்ள
உனக்கு இன்னும் மனம் வரவில்லை
கண் முன்னே எப்போதும் இருக்கின்றாய்
ஆனால் கண்ணுக்கு புலப்படாமல்
அங்கும் இங்கும் திரிகின்றாய்
புலால் உண்ணும் கண்ணப்பனுக்கு
காட்சி தந்தாய் புலன்கள் என்னும்
சிலந்தி வலையில் சிக்கி மீளமுடியாமல்
தவிக்கும் என் போன்றவர்களுக்கு
விடுதலை எப்போது?
உலக மாயையில் சிக்கிகொண்ட
இவனுக்கு உன் மாயாஜாலங்கள்
எவ்வாறு புரியும்?
மரிக்கவே படைக்கப்பட்ட அழியும் உடலைப்
பராமரிக்கவே வீணாகிறது உழைப்பும்
செல்வமும்
பொய்யான உறவுகளுக்காகவே
ஏங்கி வாடி வதங்கி அல்லல்பட்டு
அலைபாய்கிறது பந்தப்பட்ட மனம்
ஓசைப்படாமல் தன் பக்கம் இழுத்து
என்னை அடிமைப்படுத்தி தன் வசம்
வைத்திருக்கிறது ஆசைகள் என்னும் பேய்கள்
அவம் பேச பொழுது இருக்கிறது ஆனால்
தவம் செய்ய நேரமில்லை.
வெட்டியாய் பொழுது போக்க
நேரம் உண்டு .ஆனால் வெட்ட வெளியாய்
எங்கும் பரந்து கிடக்கும் உன்னை அறிய
நேரம் இல்லை
என்னுள்ளே இருக்கின்றாய்.எந்நேரமும்
என்னருகில். ஆனால் உன்னை எங்கெங்கோ
எதிலெதிலோ தேடுகிறேன் ஆயுள் முழுதும்.
மதம் சார்ந்து தேடினாலும் நீ கிடைப்பதில்லை
மதம் பிடித்து யானையைப்போல்
அலைவதைத் தவிர
உன்னை இல்லை என்றாலும் உனக்கு
ஒன்றும் ஆவதில்லை நீ இருக்கிறாய் என்று
நம்பினாலும் நீ என்னை சட்டை
செய்வதில்லையே அது ஏன் ?
நான் பட்ட துன்பங்கள் போதும் என்று
நீதான் இவன்மீது இரக்கம் கொள்ளவேண்டும்
எல்லா இடர்களினின்றும் விடுபட வேண்டி
இல்லையேல் காலன் என்னை கொன்றுவிடுவான்
மீண்டும் பிறவி பெற எவ்வளவு காலம்
காத்திருக்கவேண்டும் என்பதை யாரறிவார் ?
No comments:
Post a Comment