Friday, May 31, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (52)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள் (52)







மனமே நீ துர்புத்தியை விட்டுவிடு.

(கீர்த்தனை-செடே  புத்தி  மாநுரா-(325)
ராகம்-அடாண-தாளம்-ஆதி 

மனமே நீ துர்புத்தியை விட்டுவிடு

சாஸ்வதமான பலனளிக்கக்கூடிய  
தகுந்த பாத்திரம் (தெய்வம்)
யாரென்பதை அறிந்துகொள்

இப்பூவுலகில் பிறந்தவனுக்கு பழவினைப்படி
தகுந்த பயன் கிடைக்குமென்று
பெரியோர்கள் கூறி நீ கேட்டதில்லையா?
இவ்வனைத்தும் "ஸ்ரீ வாசுதேவனே "
என்று சிந்தனை செய்வாயாக .

ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும்
இடையில் திரைபோல் இருப்பது மனம்தான்
சூரியனை காணவொட்டாமல் தடுக்கும் மேகம்போல

மேகம் விலகியதும் சூரியனை
நாம் காண்பதுபோல்
இறைவனை நாம் தரிசிக்கலாம்.

மனம்தான் பந்தத்தை ஏற்படுத்துகிறது.
அதே மனம்தான் இறைவனிடம்
 நாட்டம் கொண்டபின்
நம்மை பந்தத்திலிருந்து
விடுதலை செய்ய உதவுகிறது.

மனதை கட்டுப்படுத்தக்கூடிய சக்தி
நம் புத்திக்கு இருக்கிறது.

 யானையை எப்படி அங்குசத்தை கொண்டு
நாம் அடக்கிஅதை  நம் வழிக்கு கொண்டுவருகிறோமோ
அதைபோல் நம் மனதிற்கும்  
நல்ல உபதேசங்களை செய்து
நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும்.

அப்போதுதான் நாம் ஆன்ம விழிப்பு பெற இயலும்.
இல்லையேல் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் நம் பயணம் புறப்பட்ட
இடத்திலேயே நின்றுகொண்டிருக்கும்.
நம் வாழ்வும் முடிந்துவிடும்.

அதனால்தான் ஸ்வாமிகள்  மனதிற்கு
உபதேசம் செய்யும் வகையில்
பல கீர்த்தனைகளை
இயற்றியுள்ளார் நமக்காக.

உபதேசங்களை மனதில் கொள்ளுவோம்
நம்முள்ளே உறையும் ராம தத்துவத்தை 
உணர்ந்து உய்வோம்.   

pic.courtesy-google images

Thursday, May 30, 2013

தியாகராஜ சுவாமி சிந்தனைகள் (51)

தியாகராஜ சுவாமி 
சிந்தனைகள் (51)






இராமா!என்னை பாலிக்கும் தெய்வமே!
என்னைக் காக்க இதுவே தருணம்.

கீர்த்தனை (191)-ராம சமயமு ப்ரோவ-ராகம் மத்யமாவதி -தாளம்-ஆதி. 

இராம! என்னை பாலிக்கும் தெய்வமே!
என்னைக் காக்க இதுவே தருணம்
அரக்கரை வதைப்பவனே!
மேக வண்ணனே!
சதா நியமத்துடன் உன் நாம சங்கீர்த்தனம்
செய்யும் மகான்களின் விருப்பத்தையளிப்பவனே !

புலன்களை அடக்கியவர்களைக் காப்பவனே!
வேதங்களில் சஞ்சரிபவனே!
பக்தரின் உள்ளத்துறைபவனே!
திருமகள் நாயகனே!
உள்ளம் கவரும் குணசீலனே!
காலனை வென்ற சிவனின் தோழனே!
முடிவற்றவனே!
முனிவரால் தியானிக்கப்படுபவனே!
மறைமுடியால் அறியப்படுபவனே!
மகாராஜர்களால் தொழப்படுபவனே!
சாந்த ஸ்வரூபனே!
கருணை நிரம்பிய உள்ளத்தவனே!

தேவர்,முனிவர் குழாத்தினால்
தொழப்படும் பாதனே!
பக்தருக்கு ஆனந்தம் அளிப்பவனே!
சூரிய குலத்திற்கு சந்தனம் போல்
குளிர்ச்சி தருபவனே !
சத்ருக்களை ஒழிப்பவனே!
நந்தகமென்னும்
கத்தியை அணிந்தவனே!

சனந்தனர் முதலியோரால்
துதிக்கப் பெறுபவனே!
முல்லைப் பற்களையுடையவனே!
மந்தர மலையை தாங்கியவனே!

கோவிந்த!முகுந்த!
என் மீது உனக்கென்ன சந்தேகம்?

இவ்வுலகில் காரணமின்றி
அருள் புரிபவன் நீ என்று
உன்னை பூசித்தேன் .
கஜேந்திர ரஷகா!

அந்த யானை அரசனால்
வணங்கப்பெற்றவனே!

சேஷ சயன!

கேளாய்!உலகநாயகனே!சீதாபதியே !
ஒளி வீசும் கிரீடத்தை அணிந்தவனே!
பிரமனால் தொழப்படுபவனே!

இதுவே நீ என்னைக்
காக்க வேண்டிய  சமயம்.

மிக அருமையா ,
பொருள் பொதிந்த ஒரு பிரார்த்தனை பாடலை 
நமக்காக ஸ்வாமிகள் இயற்றி தந்துள்ளார். 

இதை தினமும் நாம்  பாடி வந்தால் போதும் 
அந்த இராமபிரானின் அருள் நமக்கு 
நிச்சயம் கிடைத்துவிடும். 

Pic-courtesy-google images 


Wednesday, May 29, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் 

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்
என்ற தலைப்பின் கீழ் அந்த மகான் இராமபிரான் மற்றும்
பல தெய்வங்களின் மீது தெலுங்கு மற்றும்

 வடமொழி கீர்த்தனைகள் இயற்றி பாடி பரவசமடைந்த
அந்த கிருதிகளின்பொருளை அனைவரும்அறிந்துகொண்டு
அந்த கீர்த்தனையை கேட்கும்போது உணர்ந்துகொண்டு
பயன் பெற வேண்டும்  என்ற நோக்கத்துடன் இதுவரை 50 கீர்த்தனைகளுக்கான விளக்க உரையை பதிவிட்டேன்.

இராம நாமத்தின் பெருமையையும் ,
இராம பக்தியின் மேன்மையையும் பறை சாற்றும்
இந்த விளக்கங்கள் குறிப்பாக ராம பக்தர்களுக்கு
பிடித்திருக்கும்  என்று நம்புகிறேன்.

என் கருத்துக்களை அமிர்த வர்ஷணி இதழில்
வெளியிட்டு அதை அனேக ராம பக்தர்களிடம்
கொண்டுசேர்த்த ஸ்ரீ ஆனந்த வாசுதேவன்
அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை
தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வுலகில் எவ்வளவோ
கற்றறிந்த பண்டிதர்கள் மத்தியில் மற்றும்
மகான்கள் இருந்தபோதும்
இந்த எளியேனின் முயற்சிக்கு
தங்கள் ஊக்கத்தையும் ஆக்கத்தையும்
தந்து என்னை எழுத உற்சாகபடுத்திய
அனைத்து நல்ல பெருந்தன்மையான
உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த
வந்தனங்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ
அங்கெல்லாம் ஸ்ரீ ராம பக்த ஹனுமான்
பிரசன்னமாகி கேட்டு மகிழ்கின்றான்
துளசிதாசரின் வாழ்க்கை சரிதத்தில்
இந்த உண்மை உள்ளது.

ராம நாமத்தை மெய் மறந்து பாடும்
ஆஞ்சநேய சுவாமியின்  படம்
20 ஆண்டுகளுக்கு முன் வரைந்தேன்
அந்த படம் இதோ.






யார் இவர்?

யார் இவர்?























பாரெல்லாம் உய்விக்க 
பாரதத்தில் தோன்றிய ஞானி 

அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த
நாட்டு மக்களை மீட்க வந்த
மகுடமில்லா ,நாடில்லா ராஜரிஷி

தங்கள் கொள்கைகளே உண்மை என்றும்
மற்றதெல்லாம் உண்மையல்ல என்று
மடத்தனத்தில் ஊறித்திளைக்கும்
மடாதிபதிகளிடையே மேலைநாட்டு
மோகத்தில் ஊறி தன்னிலை  மறந்துவிட்ட
மக்களின் மடத்தனத்தை அகற்ற வந்த
வந்த மாபெரும் யுகபுருஷன்

ஆடம்பரமும் அகந்தையும் கோலோச்சி
மக்களிடையே விலகி நின்ற மடத்தை
தியாகமும்,அன்பும்,கொண்டு
மனித குலமனைத்தும் அருகில் வந்து
ஆனந்த வாழ்வு பெற்று வாழ
வழி வகை செய்த சீர்திருத்தவாதி

வேதத்தை கற்று பிழைப்பு நடத்தியவரின்
மத்தியில் வேதத்தை கற்றுணர்ந்து
அதை அனைவரும் கற்று உய்ய
நாடெங்கும் வேத பாடசாலைகளை
நிறுவி வேதம் தழைத்தோங்க
செய்த வேத வித்து

தெய்வங்களுக்கு இவர் கணக்கற்ற
ஆலயங்கள் சமைத்தார். சிதைந்து
போன ஆலயங்களை சீரமைத்தார்.அன்று

ஆனால் தெய்வமோ
இவரை மக்களின் மனதிலே
தெய்வமாக கோயில்
கொள்ள வைத்துவிட்டது இன்று

உலகம் பலவிதம் என்று
அனைவருக்கும் போதித்தவர்

அது வேறுவேறு போல் தோன்றிடினும்
அதன்  மூலம் ஒன்றுதான் என்பதை
வாழ்வில் நடத்தி (நடித்தும்)காட்டியவர்

சனாதன தர்மத்தை கடைபிடிப்பவன்
படித்தவனே ஆயினும் பாமரனே
ஆயினும் அவன் உள்ளே உறையும்
இறைவன் ஒன்றே என்ற சங்கரனின்
தத்துவத்தை வாழ்வில்
நிகழ்த்தி காட்டியவர்

அன்று காலடியில் பிறந்து சனாதன தர்ம
எதிரிகளை தன் வாதத்தால்
ஆட்கொண்டவரின்
மறு உருவமாக மீண்டும் அவதரித்து
பாரதம் முழுதும் பாத யாத்திரை செய்து
பாவத்தில் மூழ்கியிருந்தமக்களுக்கும்
பவத்தில் துன்பப்பட்டுக்கொண்டிருந்த
பாமரர்களுக்கும் புனர் வாழ்வு தந்தவர்.

சகல சாத்திரமறந்தவர்.
சகல கலைகளையும் ஆதரித்து வளர்த்தவர்.
சாதா பாத்திரங்களையும்
சத் பாத்திரங்களாக மாற்றியவர்
வறுமையில் வாடிய மக்களின்
வாழ்வில் வளமை சேர்த்தவர்.

பற்றற்றவர் ,தன்னை பற்றுக்கோடாக
கொண்டவர்களின் பற்றை அறுத்தவர்.

துறவிக்கு  வேந்தனும் துரும்பு
என்ற மொழிக்கேற்ப என்று
பீடுநடை போட்டவர்

மக்களின்மனங்களில்
காலம் காலமாக மண்டிக்கிடந்த
பீடைகளை அகற்றியவர்

வரையின்றி அருட்செல்வத்தையும்
பொருட் செல்வத்தையும் வாழ்நாளில்
வாரி வாரி வழங்கியவள்ளல்

கற்று தெளியாது, அகந்தை
கொண்டலைந்தவர்களின்
செருக்கை அடக்கி அவர்களை
ஆட்கொண்டவர்.

தோற்றத்தில்தான் ஆண்டி
அந்த தில்லையாண்டிபோல

ஆனால் மனித குலமனைதிர்க்கும்
அரசனாகவும் குருவாகவும்
விளங்கியவர்.

கண்டாரையும் காணாதாரையும்
இவர் கண்டுகொண்டு
அருள் செய்த அற்புத
தெய்வீக புருஷர்.

உடலை உகுத்தாலும்
உள்ளமெல்லாம்
ஒளியாய் ,வானமெங்கும்
ஒலி அலையாய்
கலந்து நின்று கார்மேகம்போல்
அமுத மழை
பொழியும் மகான்.

இவர்போல் இனி
என்று காண்போம்
இவ்வுலகில்.

அவர் அறிவுரை
வழி நடப்போம்.
அன்பினால்
அனைவரும் இணைவோம்
இந்த அகிலத்து
மக்களனைவரும்
ஆனந்தமாக வாழ

பேரின்பம் பெற வழி காட்டிய
பெரியவா போற்றி

பேதங்கள் நீங்கி
வேதங்கள் தழைக்க
வழி செய்த
வித்தகா போற்றி போற்றி.


தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (50)

தியாகராஜ சுவாமிகளின்  
சிந்தனைகள் (50) 


 



தாறுமாறாக பேசும் மாந்தர் 
எனக்கிழைக்கும் 
துன்பங்களைக் கண்டு 
நீ வாளாவிருப்பது நியாயமா?
இராமா !

எனக்கு சமானமானவர்களுக்கெதிரில்
நீ என்னை செய்யும் அலட்சியம்
போதாதா?

என் மானசீகப் பூஜையைக் காட்டிலும்
அயலார் கையினால் செய்யும் பூஜையைக்
கண்டு உன் உள்ளம் குளிர்ந்ததா?

தாறுமாறாகப் பேசும் மாந்தர்
எனக்கிழைக்கும் துன்பங்களைக் கண்டும்
நீ வாளாவிருப்பது
நியாயமா?

பரமார்த்தத்தை விரும்பும்
ஞானிகளின் துயரங்களை
நீ போக்கியருளவில்லையா?

(கீர்த்தனை-50)-சரிவாரிலோந சௌக -ராகம்  பிந்நசட்ஜம் (மேள-9)- தாளம்-தேசாதி 

இந்த கீர்த்தனையில் பகவான் பக்தர்களின் 
பக்தியை கடுமையாக சோதிப்பதை விட 
இந்த உலக மாந்தர்கள் பக்தர்களுக்கு  
அளிக்கும் தொல்லைகளும்  
கொடுமைகளும் சொல்லதரமன்று.
ஞானிகளின் வாழ்க்கைசரிதங்களை
படித்தவர்கள் இதை புரிந்துகொண்டிருப்பார்கள்.

ஒரு பக்தன் இறைவனை 
அடையவேண்டுமென்றால் 
இத்தகைய அவமானங்களையும்,
கொடுமைகளையும் இறைவனின் 
பிரசாதமாக ஏற்றுக்கொண்டு 
முணுமுணுக்காமல் மனதில் 
சிறிதும் அகந்தையில்லாமல்  
மிகவும் பொறுமையுடன் 
சகித்துக்கொள்ள
பழகி கொள்ள வேண்டும். 

அதற்கு பரிபூர்ண சரணாகதியும்,
நம்பிக்கையும் தேவை.

அது இல்லாவிடில் அவர்கள்
வெற்றி அடையமுடியாது .

பக்தனுக்கு அவன் உபாசனா
மூர்த்திதான் எல்லாம்

எல்லாவற்றையும் அவனிடமேதான்
முறையிடவேண்டுமேதவிர
மனிதர்களிடம் சென்று
யாசிப்பதோ அவர்களிடம்
துவேஷமோ பாராட்டக்கூடாது.

Pic-courtesy-google images

Tuesday, May 28, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(49)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(49)





இராம பக்தி
என்னும் மார்க்கம் எது?

புவி முழுவதும் இங்குமங்கும்
மாந்தர்கள் திரிந்துகொண்டு
கலவரப்படுகிறார்களே தவிர
இராம பக்திஎன்னும்
நல்வழியை அறியமாட்டார்

அதிகாலையில் எழுந்து ,
நீராடிய பின்னர்
விபூதி முதலியன அணிந்துகொண்டு
ஜபம் செய்வதுபோல் விரல்களை
விட்டு விட்டு எண்ணி
வெளிக்கு நல்லவர்கள்போல் நடித்து
நன்கு பணம் திரட்டுவதில்
ஆசை கொள்வார்களே தவிர
இராம பக்தி மார்க்கத்தை
அறியமாட்டார்கள்.

(கீர்த்தனை-49-தெலியலேருராம பக்தி மார்கமு -ராகம்-தேனுக-(மேள-9)-தாளம்-தேசாதி )

மிக அருமையான கீர்த்தனை
இன்று மாந்தர்கள் எப்படி இருக்கிறார்களோ
அன்றும் .மாந்தர்கள் அப்படிதான்போலும்.

மாந்தர்கள் காலையில் கண் விழித்ததும்
ஊடகங்களை தான் காண்கின்றனர்.
செய்தி தாள்களைதான் படிக்கின்றனர்.
செய்திகளைத்தான் கேட்கின்றனர்.

கொலை,கொள்ளை, வன்முறை,
இயற்கை இடர்ப்பாடுகள், போர்
பற்றிய பிற செய்திகளையும்
அறியவே ஆர்வம் காட்டுகின்றனர்.

இன்றைய மனிதர்கள் பிறரின்
வாழ்க்கையின் அந்தரங்கங்களை தெரிந்துகொண்டு
அதை வம்பளக்க காட்டும் ஆர்வம்
தன் மனதில் புரையோடிபோயிருக்கும்
காம குரோத,லோப ,மோகம், மத மாச்சர்யம்
போன்ற தீய குணங்களை
இனம் கண்டுகொண்டு அவைகளை
ஒழிக்க அக்கறை காட்டுவது கிடையாது.

நம்மை மீளா உறக்கத்தில் ஆழ்த்தாமல்
நம்மை உயிரோடு நாளை தொடங்க வழி வகை 
செய்த கருணாமூர்த்தியான இறைவனை 
அனைத்தையும் மறந்து அவனை 
ஒருமையுடன் நினைப்பதும் கிடையாது.
அவனை வாழ்த்துவதும் கிடையாது. 
வணங்குவதும் கிடையாது. 

அப்படி வழிபாடுகள் செய்யும் 
ஒரு சிலரும் கடமைக்காகதான் 
அதை செய்கின்றனரே தவிர உண்மையுடனும் 
நம்பிக்கையுடனும் ஈடுபடுவதுகிடையாது. 

எந்நேரமும்  காசை சேர்க்க அலைவதும் 
பிறகு சேர்த்த காசை அழிப்பதும்தான் 
இன்றைய மனிதர்களின் தலையாய 
கடமைகளாக போய்விட்டது.

இனிமேலாவது மனித குலம் திருந்தவேண்டும். 
இராம பக்தி மார்க்கத்தை அறிந்துகொண்டு உய்யவேண்டும். 
இல்லாவிடில் வருந்துவதை தவிர வேறு வழியில்லை. 

Pic.courtesy-googleimages 

Monday, May 27, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(48)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(48)




இராம பக்தன் 
கைகொள்ளவேண்டிய 
அடிப்படைக் குணங்கள் 

பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே
என்ற துணிபுடன்
அத்வைத நம்பிக்கையுடன்
நடக்கும் பக்தர்களுக்கு வசப்படும்
கல்யாணசுந்தர ராமனின் கருணை
எவ்வாறு கிடைக்குமெனில்
அது கீழ்கண்ட விதமே

அத்தகைய ராம பக்தன்
ஒரு காலும் பொய் பேச மாட்டான்

அற்பர்களை இரக்கான்

நல்லரசர்களிடம்
கூட சேவை புரியான்

இறைச்சியை கையாலும்
தொடமாட்டான்

மது அருந்தான்

பெண்டிர்,மக்கள்,செல்வம், ஆகியவை மீது
உண்டாகும் மூவகை ஆசைகளை
மேற்க்கொள்ளான்

ஜீவன் முக்தன் நானே
என்ற அகம்பாவத்துடன் திரியமாட்டான்

பிறரை வஞ்சனை செய்யான்

பெரியோரிடம்
அசத்தியம் பேச மாட்டான்

மனக்கவலை மிகுந்து
சுகத்தை இழக்கமாட்டான்

செயல்கள் அனைத்திலும்
தன் ஆத்மா வெறும் சாட்சியென்று
தெரிந்தும் இலட்சியத்தைக் கைவிட மாட்டான்

தாமரைக் கண்ணனும் தியாகராஜனை
காப்பவனுமான இராமனின் கருணை
எவ்வாறெனில் இவ்விதம்தான் இருக்கும்.

(கீர்த்தனை(397)-கருணா ஏலாகண்டே-ராகம்-வராளி-தாளம்-ஆதி ) 

இந்த கீர்த்தனையில் ஒரு ராம பக்தன்
கைகொள்ளவேண்டிய அடிப்படை குணங்களை 
தெளிவுபடுத்தியிருக்கிறார். ஸ்வாமிகள். 

மேலும் தன் அடிப்படை லட்சியமான ராமனை 
அடைவதை எந்த நிலையிலும் கைவிடக்கூடாது 
என்பதையும்வலியுறுத்தி கூறியிருக்கிறார். 

Pic-courtesy-google images 

Thursday, May 23, 2013

ஸ்ரீநரசிம்மன்எங்கிருக்கிறான்?


ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி 



ஸ்ரீ நரசிம்மன் எங்கிருக்கிறான்? 









































அவன் பக்தர்கள் அவனை
அவன் கோயில் கொண்டுள்ள
தலங்களுக்கெல்லாம் தேடி யாத்திரை
செய்து கொண்டிருக்கிறார்கள்.

பக்த பிரஹலாதன் அவனை தேடி
எங்கும் செல்லவில்லை.

அவன் அவன் தந்தைக்கு தன் பிஞ்சு கையால்
சுட்டிக் காட்டிய கம்பத்தில் காட்சி தந்தான்
 நரசிம்மன் உக்ரமாக

உக்ரம் தணிந்ததும் சாந்த ஸ்வரூபனாக
காட்சிதந்தான் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மனாக

பல்லாண்டு கடும் தவம் புரிவோக்கு
அவன் தரிசனம் கிடைப்பதில்லை

ஊண் உறக்கமின்றி  அவனை தவிர
வேறு எதையும் நினைக்காத ஒரு வேடுவனுக்கு
ஒரே நாளில் காட்சி தந்து தன்னை அடையும்
மார்க்கத்தை உலகத்திற்கு காட்டினான் அந்த பரம்பொருள்.

இன்றைய உலகில் பிணிகள் நீங்கவும்
துன்பம் நீங்கவும் மட்டுமே அவனை வழிபடுகிறார்கள்.
அவற்றை அவன் போக்குகின்றான்.

நிரந்தர துன்பமான பிறவி பிணியை
நீக்க கோரி யாரும் அவனை வழிபடுவதில்லை.
அதனால்தான் அவர்கள் இன்பதுன்பங்களில்
தொடர்ந்து உழன்று கொண்டிருக்கிறார்கள்.

சாசுவதமான நிம்மதியும்,சுகத்தையும்
பெற வேண்டி பக்த பிரகலாதன் காட்டிய
வழிமுறை பின்பற்றுவோம்.
அவன் அருளை பெற்று வாழ்வோம்.

அவன் தூணிலும் மட்டுமில்லை
துரும்பிலும் மட்டுமில்லை

நம் உள்ளத்திலும்
அவன் வாசம் செய்கின்றான்
அவனை அழைக்க
நாம் பிரகலாதனை போல்
பக்தி செய்ய வேண்டும்.





Tuesday, May 21, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(47)


தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(47)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(47)



இராமா! 

பக்தரைக் காப்பதில் உனக்கு நிகர் யார்?

இராமனே ! உனக்கிணை யார் உளர்?

பக்தரை காப்பதிலும் உன் புகழிற்கு 
இழுக்கின்றி நல்லோரை முறையாக 
காப்பாற்றுவதில் 
உனக்கு நிகர் எது?

பகைவனின் தம்பி என்பதையும் 
பொருட்படுத்தாமல் அவனுக்கு 
அபயம் அளித்தனை!

அவன் பக்தியை மெச்சி அவனுக்கு 
இலங்கை ராஜ்ஜியத்தினை அளித்தனை !

தேவராலும் மறையவராலும்
பூஜிக்கப்பெறுபவனே !
நாகம் மீது சயனம் கொண்டவனே!
தியாகராஜன் கொண்டாடும் இராமனே!
பக்தரை காப்பதில்
உனக்கு இணை யார் உளர்?
யாரும் இல்லை. 

கீர்த்தனை(388)
எவ்வரெ ராமைய நீ ஸரி ...
ராகம்-காங்கேய பூஷணி-(மேள-33)
தாளம்-தே-சாதி 

இந்த கீர்த்தனையில் பக்தனைக் காப்பதில்
இராமபிரானுக்கு இணை யாரும் இல்லை
 என்கிறார் ஸ்வாமிகள். 

அறியாமையினால் தன்னை இழந்து 
தன் கணவனால் சாபத்திற்கு 
ஆளாகி கல்லாய் கிடந்த அகலிகையாகட்டும் 


தன்னுடைய பகைவனின் 
தம்பி விபீஷணனாகட்டும்

படிப்பறிவில்லா 
வேடுவ பக்தை சபரியாகட்டும்,

யாராயிருந்தாலும் அவர்களின் 
குற்றம் குறைகளை ஆராயாது, 
அவர்களின் பக்திஒன்றியே கருத்தில் கொண்டு 
அபயம் அளித்தவன் ஸ்ரீராமபிரான் ஒருவன்தான். 

ஸ்ரீராமனிடம் பக்தி கொள்ளுபவர்கள் 
தங்கள் கடந்த காலத்தில் செய்த 
தவறுகளை பற்றியோ பாவங்களை பற்றியோ 
எதையும் சிந்தனை செய்யாமல் 
அவன் திருவடியே கதி என்று 
சரணடைபவர்களை அவன் ஒருபோதும்
காப்பாற்றாமல் அன்றும் விட்டதில்லை. 
விடுவதுமில்லை. 

பயத்தை போக்கவே வந்துதித்த
ஸ்ரீராமனிடம் பக்தி இருந்தால் போதும்
பயம் தேவையில்லை. 

அவனுடையநாமம்
பயத்தையும் போக்கும், 
பாவங்களையும் நீக்கும்
பரமபதத்தையும் அளிக்கும்.
என்பது சத்தியம். 

எனவே நித்தியம் நாம் எதை 
செய்ய மறந்தாலும் 
நமக்கு நினைவு உள்ளவரை. 
அவன் நாமத்தை மறக்காமல் 
ஸ்மரணம் செய்து வந்தால் போதும்.
 நமக்கு மரண பயம் இல்லை. 

Pic.courtesy-google-images 

Friday, May 17, 2013

இராம நாம மிட்டாயி


இராம நாம மிட்டாயி 






மிட்டாயி மிட்டாயி
இராம நாம மிட்டாயி
எட்டாள் பலம் கொடுக்கும்
பட்டாபிராம மிட்டாயி  (மி )

எட்டெழுத்து மந்திரமும்
ஐந்தெழுத்து மந்திரமும்  சேர்த்து உண்டான
சத்தான மிட்டாயி  இராம நாம மிட்டாயி   (மி )

எட்டாத பொருளை
எட்ட வைக்கும் மிட்டாயி
அரிதான  வீடுபேற்றை எளிதாக
கிட்ட வைக்கும் மிட்டாயி
இராம நாம மிட்டாயி   (மி )

நாவிலே அடக்கி கொண்டால் போதும்
மனதில் தோன்றும் நய வஞ்சக
எண்ணத்தை எல்லாம்
நசிக்க செய்யும் மிட்டாயி
இராம நாம மிட்டாயி   (மி )

அடங்கா திரியும் ஐம்புலன்களின்
ஆட்டத்தை அடக்கி ஒடுக்கும் மிட்டாயி
இராம நாம மிட்டாயி   (மி )

தீராத வினைகளை
தீர்த்து வைக்கும் மிட்டாயி
நெஞ்சில் ஆறாத ரணங்களை
ஆற்றிவிடும் மிட்டாயி   (மி )

பகைவரில்லா வாழ்வு தரும் மிட்டாயி
இராம நாம மிட்டாயி   (மி )

பிறவி பிணி தீர்க்கும் மிட்டாயி
இராம நாம மிட்டாயி (மி)

மீண்டும் பிறவா வரமருளும்
இராம நாம மிட்டாயி (மி )

வாழ்வில் அமைதியும்
ஆனந்தமும் வற்றாது
தந்தருளும் மிட்டாயி
இராம நாம மிட்டாயி   (மி )

இக பர சுகம் அடைய
நாத் தழும்பேற ஒவ்வொரு கணமும்
சொல்லுவோம் ராம நாமம்
நிலையான பதத்தினை
அடைந்து இன்புறுவோம்.   (மி )

Pic.courtesy-google-images

Thursday, May 16, 2013

ஆன்ம விடுதலை.


ஆன்ம விடுதலை. 




எல்லோருக்கும் இறைவன் ஒருவனே 

ஆத்திகர்கள் தெய்வம் என்கிறார்கள்
நாத்திகர்கள் இயற்கை என்கிறார்கள்

மொத்தத்தில் ஒரு சக்தி ஒன்றுள்ளது
அதுதான் அனைத்தையும் செய்கிறது,
அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது

அளவுக்குமீறி ஆட்டம் போட்டால்
தலையை தட்டி அடக்கி வைக்கிறது

அப்படியும் அடங்காவிட்டால்
அடியோடு அழித்துவிடுகிறது.

இந்த உலகம் தோன்றியநாள்
முதற்கொண்டு இந்த செயல்கள்
நடந்துகொண்டு வருகின்றன.
இதில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த உண்மையை அறிந்துகொண்ட ஞானிகள் ,
மற்றும்,யோகிகள் சித்தர்கள் அந்த சக்திக்கு
அடிபணிந்து வணங்கி இந்த உலகத்தில்
மன திருப்தியோடு வாழ்ந்து மீண்டும்
அந்த சக்தியில் கலந்துவிட்டனர்.

பலர் இறைவனின் ஆணைப்படி
அருவமாக இருந்துகொண்டு
மனித குலத்திற்கு உண்மைகளை எடுத்துசொல்லி
அவர்களை நல்லதொரு பாதையில்
செலுத்தி கொண்டு வருகின்றனர்.

ஆனால் பெரும்பாலான மனிதர்கள்
 இந்த உண்மையை தங்கள் அகந்தையினால்
 ஏற்றுக்கொள்வதுமில்லை

அதைஅறிந்துகொள்ளவோ அல்லது
புரிந்துகொள்ளவோ  ஆர்வம் காட்டுவதில்லை.

அவர்கள் உலக மோகத்திலும்
போகத்திலும் மூழ்கியே இன்பதுன்பங்களில் சிக்கி அல்லல்படுக்கொண்டிருக்கின்றனர்.

சிலர் இந்த உண்மையை அறிந்துகொண்டாலும்
இந்த சிக்கலிலிருந்து வெளிவர உறுதியான
நடவடிக்கைகள் எடுக்கும் அளவிற்கு
மனஉறுதியும் விடாமுயற்சியும் இருப்பதில்லை.

ஒரு சிறு தடை ஏற்பட்டாலும்
அவர்கள் சாதனைகளை தொடர்வதில்லை.

இறைவனே பலமுறை அவதாரம் செய்தும்,
தன் அடியார்களை உலகிற்கு அனுப்பி மனித குலம்
உண்மையை உணர்ந்து உய்வதற்கு வழிகாட்டியும்
அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு
முன்னேறியவர்கள் வெகு சிலரே.

இறைவன் வைரக்கற்களை
அளிக்க காத்திருக்கும்போது
அவர்கள் கூழாங்கற்களையும்
,கண்ணாடி கற்களையும் யாசித்து
 பெற்றுக்கொண்டு திருப்தி அடைந்து
மீண்டும் பிறவி என்னும் குழியில்
விழுந்து தத்தளிக்கின்றனர்

இறைவனை அடைய எவ்வளவோ
கடினமான சாதைனைகள் இருந்தும்
அவைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு
அவன் நாமத்தை ஜெபிப்பதே
எளிதான சாதனையாக இருப்பதை
உணர்ந்துகொண்டு அனைவரும்
ஆன்ம விடுதலை பெறமுயற்சிக்க வேண்டும்.

Wednesday, May 15, 2013

இறைவன் இரக்கமே உருவானவன்


இறைவன் 
இரக்கமே உருவானவன்  




படைப்புகளிடம் கொண்ட 
இரக்கத்தினால்தான் 
அவன் விண்ணிலிருந்து
அவர்களை துன்பங்களிலிருந்து 
காக்கவும் அறியாமையிலிருந்து 
விடுவிக்கவும் படைப்புகளின் வடிவத்தில் 
விண்ணிலிருந்து இறங்கி புவிக்கு வருகிறான். 

அவன் அவ்வாறு வந்தாலும் அவனை
அறிந்துகொள்ளுபவர்கள் மிக அரிது 

உருவத்தில் தங்களை போன்றே அவன்
இருப்பதால் அவனை தங்களைபோன்றவன் என்றே
கருதி ஒவ்வொரு முறையும் கிடைத்தற்க்கரிய வாய்ப்பை இழக்கின்றனர்.

அவன் அனைத்தையும் சரி செய்தபின்
இந்த உலகில் நடமாடிய வடிவத்தை
மறைத்துக்கொண்டு விடுகிறான்

அவனை அறிந்தவர்கள் 
அவனின் பெருமையை
பற்றி கூறியபின் 
அறியாமையினால் அவனுடன் பழகியும் 
உண்மையை அறியாமல் போய்விட்டோம் என்று 
அவன் வடிவங்களை நினைத்து வணங்கி 
ஆதங்கப்படுகிறது மனித குலம்  

இறைவனை அடைய நினைப்பவர்கள் தங்கள் 
உள்ளத்திலும் அதே இரக்கம் இருக்க வேண்டும்
என்பதை உணர மறுக்கிறார்கள். 

மீளா உறக்கமாகிய மரணம் வருவதற்குள் 
அவனை வணங்கி அவன் அருள் பெற 
முயற்சி செய்யாது தினமும் உறங்கி 
காலத்தை வீணடிக்கிறது மனித குலம் 

குடலுக்காகவும், கூடலுக்காகவும் 
வாழ்நாள் முழுவதும் உழைத்து 
கணக்கில்லா பாவங்களை செய்யும் மனிதர்கள் 
இதை சிந்தித்தால் அவர்கள் எடுத்த 
இந்த பிறவி பயனுள்ளதாகும். 

Pic.courtesy-google-images 

ஆன்மீக சாதனைகள்



ஆன்மீக சாதனைகள் 




கேள்வி: நான் பல ஆண்டுகளாக 
பலவிதமான ஆன்மீக சாதனைகள் செய்தும் 
எந்த முன்னேற்றமும் இல்லை.

சில நேரங்களில் இவையெல்லாம் 
வீண் செயலோ என்று தோன்றுகிறது.

இவைகளையெல்லாம் விட்டுவிட்டு 
இந்த உலக இன்பங்களில் மூழ்கிவிடலாம்
போன்று தோன்றுகிறது. 

இருந்தாலும் அதற்கும் 
மனம் ஒப்பமாட்டேன் என்கிறது. 

மனம் அலைபாய்ந்து என்னை குழப்புகிறது. 
மனதில் நிரந்தரமான 
அமைதி ஏற்பட என்ன செய்ய வேண்டும். 

பதில்: இந்த நிலை எல்லா சாதகர்களுக்கும்
 பல கால கட்டங்களில் ஏற்படும்.
அவைகளெல்லாம் இறைவன் 
அவனுக்கு வைக்கும் சோதனைகள்.

 நல்ல அடித்தளமில்லாமல் கட்டப்படும் கட்டிடம்
ஆட்டம் கண்டு அழிந்து போகும். 

எனவே சுயலமற்று அமைந்த
 நல்ல எண்ணங்களின் அடிப்படையில் வளரும் 
ஆன்மீகம்தாம் ஒரு பக்தனை 
உண்மை பொருளை நோக்கி இட்டு செல்லும்.

அவ்வாறில்லாது அகந்தை பொருட்டு
 பிறரை ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் சென்று 
பெறும் பலனெல்லாம் அழிவிற்குதான் 
கொண்டு செல்லும். 

எப்படி என்றால் பலன்களை கோரி
 பிறரை அடக்கி ஆள நினைத்து
 பல வரங்களை பெற்ற அசுரர்கள் பிறரை 
துன்புறுத்தி அவர்களும் கோர மரணத்தை
அடைந்ததுடன் அவர்கள் செய்த சாதனைகளும் 
விழலுக்கு இறைத்த நீராகி போயின 
என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

எனவேதான் இறைவனை அடையவேண்டும்
அவனை உணரவேண்டும் என்ற
ஒரே நோக்கத்துடன் மட்டுமே
அவனை உபாசனை செய்யவேண்டும்.

மற்றபடி உலகபோகங்களை வேண்டியோ
அதிகாரம் வேண்டியோ அவனை உபாசிக்கக்கூடாது.

இறைவன் அவைகளை
 நமக்கு தருவானாயினும் அது சாதகர்களுக்கு
அழிவைத்தான் தரும். என்பதை.
 உணர்ந்து கொள்ளவேண்டும்.

எனவே இறைவன் நமக்கு தரும்
சோதனைகளும் தடைகளும் நம்மை புனிதமாக்கி
அவன் திருவடிகளில் சேர்த்துக்கொள்வதற்கு
அவன் நம் மீது காட்டும் கருணையே
என்று அறிந்துகொண்டு அவன் திருவடிகளில்
இன்னும் தீவிரமாக பக்தி செலுத்தவேண்டும்.

அவ்வாறு செய்தோமானால்
நம் வெற்றி உறுதி.

பாதிப்புகளை  மட்டுமே எண்ணி எண்ணி
மனம் சோர்ந்துபோகாமல் அதற்காக
வீணடிக்கும் சக்தியை
இறைவனைநோக்கி திருப்ப வேண்டும்


இறைவனால் முடியாதது
எதுவுமில்லை.
அவன் உளதை இலதாக்குவான்.
இல்லாததை உளதாக்குவான்

அவன் நினைக்கும் கணமே
மலை மடுவாகும்,
 மடு மலையாகும். .

ஆனால் மனிதர்களுக்கு
அவன் மீது உண்மையான
நம்பிக்கை இருப்பதில்லை.

அவர்கள் உள்ளம்
தேனிரும்பு போல் இருக்கிறது .

நெருப்பில் இருக்கும்போது
நெருப்பாக ஒளிவிடுகிறது.

அகன்றதும் மீண்டும்
துருப்பிடிக்கும் இரும்பாகி
அழிந்தே போய்விடுகிறது.

எப்போதும் அவன்
நினைவாகவே இருந்தால்
என்றும் ஒளிவீசலாம்
அவனோடு சேர்ந்துகொண்டு.

ஆனால் அதற்கு மனிதர்களிடம்
பொறுமையும்,நம்பிக்கையும் வருவதில்லை.

வந்தாலும் அந்த நம்பிக்கை
நீண்ட நேரம் நிலைத்து நிற்பதில்லை.

அதனால்தான் பல ஆண்டுகள்
ஆன்மீக சாதனைகள் செய்தாலும்
ஓட்டையுள்ள பானையில்
உள்ள நீர் சிறிது சிறிதாக
கசிந்து கொண்டிருப்பதுபோல்
பலன் ஏதும் ஏற்படுவதில்லை.

தகுந்த குருவை அடைந்து 
அந்த ஓட்டையை கண்டறிந்து 
அதை அடைத்தால்தான் நம் மனம் 
இறைவனின் நாமத்தால் நிரம்பி 
நம்முடைய சாதனை வெற்றிபெறும். 

Pic. courtesy-google images 

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(46)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(46)




இராமா என் மனம் உன் 
திருவடிகளையே நாடுகிறது 

கீர்த்தனை-(342)-ராமா நீபை-தநக-ராகம்-கேதாரம் -தளம்-ஆதி

தாமாரைக் கண்ணனான சீதாராம!
உன் மாய என்னவோ நான் அறியேன்
உன்மீதுள்ள என்னாசை என்றம் அகலாது

என் மனம் உன் திருவடிகளை நாடுவதும் ,
கண்கள் உன் திவ்விய வடிவத்தையே விரும்புவதும்
நான் கேட்கும் உன் திருநாமங்களை ஜபிக்க என் நாவு ஊறுவதும் உன் கருணையாலல்லவா?
களங்கமற்றவனே!

தாய் ,தந்தை , தோழர்கள்,மற்றோர், செல்வம்,பொன், குரு ,தெய்வம் ,முதலியன நீயே என்று நான் தினந்தோறும் கோரும் மொழிகளே என் அணிகளாகும்

போகங்களை நான் அனுபவிக்கும்பொழுதும் என் புத்தி உன்னிடமே லயிக்கிறது

இத்தியாகராஜன் இதயத்தில் பிரம்மானந்தம் பிறக்கிறது .

மிக அருமையான கீர்த்தனை  ஒரு ராம பக்தன் கைகொள்ளவேண்டிய முறைகளை அருமையாக விளக்கியிருக்கிறார் ஸ்வாமிகள்.

பகவானின் கருணை இருந்தால்தான் 
ஒரு பக்தனின் மனம் அவன் திருவடிகளை நாடும்.
அவன் திவ்விய வடிவத்தை விரும்பும்.
அவன் திருநாமங்களை ஜபிக்க 
அவன் நாவு விரும்பும். 
அனைவரையும் பகவானின் வடிவங்களாக 
கருதும் பிரம்ம பாவம் சித்திக்கும். 
எந்த செயலை செய்யும்போதும், 
போகங்களை அனுபவிக்கும்போதும் 
அவன் புத்தி இறைவனிடமே லயித்து நிற்கும். 

இந்த அற்புதமான நிலையை 
அடைய இராம பக்தன் பாடுபடவேண்டும். 

 

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(45)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(45)






















இரகுராமா என்னை காப்பது 
உனக்கு ஒரு பாரமா?

கீர்த்தனை-(271)- ப்ரோவ பாரமா -ரகுராம -ராகம் -பஹூதாரி (மேள-28)-தாளம்-ஆதி

இரகுராமனே !

புவனங்களனைத்திலும்
நீயே நிரம்பியிருந்தும்
இத்தியாகராஜன் ஒருவனைக்
காப்பது  உனக்கு  பாரமா!

ஸ்ரீ வாசுதேவ !
அண்டகோடிகளை உன்
வயிற்றினுள் அடக்கவில்லையா?

ஒருமுறை தேவர்களுக்காக மனமிரங்கி
சமுத்திரத்தில் மந்தர கிரியையும்
மற்றொருமுறை கோபியருக்காக
கோவர்த்தன  கிரியையும் நீ தங்கவில்லையா?

கருணாகரா!

ஸ்ரீமான் நாராயணன் தேவர்களும், அசுரர்களும்
அமிர்தம் வேண்டி பாற்கடலை மகேந்திரமலையை
மத்தாக கொண்டு கடையும்போது பாரத்தினால்
அது கடலில் மூழ்கிவிட அதை ஆமையாக
வடிவெடுத்து அந்த மலையின் அடியில் சென்று
அதை தூக்கி நிறுத்தியதையும்,
கண்ணனாக அவதாரம் செய்தபோது
இந்திரனின் அடாத செயலால் விடாது
பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்திலிருந்து
கோபியர்களை கோவர்த்தனகிரியை தூக்கி
அவர்களை காத்தது போன்ற
அரிதான செயல்களை அனாயாசமாக
செய்த உனக்கு என்னை போன்ற
ஒரு பக்தனை காப்பது எப்படி பாரமாகும்
என்கிறார் ஸ்வாமிகள்.

பக்தனை காப்பது 
பகவானுக்கு ஒரு பாரமில்லை. 
அவனின் அருளை பெறுவது
நம்முடைய உறுதியான 
பக்தியில்தான் இருக்கிறது. 

எல்லாம் அவன் செயல்


எல்லாம் அவன் செயல் 



எல்லாம் அவன் செயல் 
என்று இரு என்கிறார்கள்
அப்படியானால் மனிதர்களுக்கு இறைவன் 
மூளையையும், அறிவையும் எதற்கு அளித்திருக்கிறார்?

எல்லாம் அவன் செயல் என்றால்
எதுவும் செய்யாமல் சோம்பேறியாய் திரிவது
என்று பொருள் கொள்ளக்கூடாது

அவரவர்க்கு என விதிக்கப்பட்ட கடமைகளையும்,
அவரவர்க்கு என அமைந்த கடமைகளையும்,
அவரவர்கள் ஏற்றுக்கொண்ட தார்மீக கடமைகளையும்.
அகந்தைஇன்றி செவ்வனே செய்வது
என்று பொருள் கொள்ள வேண்டும்

இந்த உலகில் அனைத்தையும் படைத்து
அதனுள் ஆத்மாவாய் இருந்து
இயக்குபவன் இறைவனே.

இந்த உலகில் நாம் எதையும் புதிதாக
உற்பத்தி செய்யும் தகுதியோ அல்லது
அறிவோ நமக்கு கிடையாது.

ஏற்கெனவே இறைவனால் உண்டாக்கப்பட்டு
இருக்கும் பொருட்களை இடம் மாற்றிவைத்து
புதிதாக பொருட்களை தயார் செய்வதாக
அகந்தையினால் ஆட்டம்
போட்டுக்கொண்டிருக்கிறோம்.

நாம் ஒரு விதையை விதைத்தால் 
அது முளைத்து வளர்ந்து பலமடங்கு 
பலன்களை தருவதுடன் மீண்டும் தொடர்ந்து 
பலன் தர  வித்துக்களை தருகிறது. 

இதில்  நம்முடைய பங்களிப்பு 
ஒன்றும் இல்லை. இதைபோல்தான் 
அனைத்து செயல்களும். 
இறைவன்  அனைத்தையும் நமக்காக 
அவனே  செய்து விடுகிறான் 
என்பதை  உணர வேண்டும். 

இயற்கையின் சக்திகளுக்கு எதிராக 
போராடும் சக்தி நமக்கு கிடையாது. 
ஆனால் அந்த இயற்கையின் சக்திகளை
 நாம் பயன்படுத்திக்கொள்ள மட்டும் 
நமக்கு அனுமதி உண்டு 

ஆனால் நாம் இயற்கை சக்திகளை
 நாம் தேவைக்கு மேல் பயன்படுத்துகிறோம்,
அனைவருக்கும் கிடைக்கவேண்டுய சக்திகளையும்,
பொருட்களையும் சுயநலத்தால்
அனைத்தும் நமக்குதான் என்று எடுத்துக்கொண்டு
மற்றவரை துன்பத்திற்கு ஆளாக்குகிறோம்.

 அதனால்தான்  ஒரு சிலரின் தவற்றால்,
சுயநலத்தால் அனைத்து உலக மக்களும்
 பாதிக்கப்படுகின்றனர்.
அதனால் அனைவரும் துன்பப்படுவதுடன்,
 மன நிம்மதியின்றியும். நோய்வாய்ப்பட்டும் ,
 பசி பட்டினியுடனும்  மனித குலம்
அல்லல்படுகிறது.

எனவே அனைத்தையும் இறைவன்தான்
 இயக்குகிறான் என்பதை அறிந்துகொண்டு 
,நாம் இறைவனின் கருவிகளே என்று 
உணர்ந்துகொண்டு நாமும் நலமாக வாழ்ந்து
,நம்மை சுற்றியுள்ள உலகத்தையும் நலமாக
 வாழ செய்யவேண்டும். 

அந்த அறிவை பெறுவதற்காகதான்
இறைவன் மூளையையும் அறிவையும்
அளித்திருக்கிறானே ஒழிய. அகந்தை கொண்டு
அதை சுயநலத்திற்கு பயன்படுத்த அல்ல
 என்று புரிந்துகொள்ளவேண்டும்.

Pic-courtesy-google images

Tuesday, May 14, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்.(44)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்.(44)




இராமா என்னை காக்க நீ
என்ன யோசனை  செய்கிறாய்?

கீர்த்தனை-(126)-ராகம்-கிரணாவளி (மேள-21)-தாளம்-தேசாதி

நீ என்னயோசனை செய்கிறாய் ?
நீ என்னை காக்க விரும்பினால்
உனக்கு எதிராக பேசுபவர்  யாருமில்லை  .
நீ கொடுத்த வாக்கைதவற விடக் கூடாது
கோடி தெய்வங்களுள்  உயர்ந்தவன் நீ
சுத்த வீரர்களுள் பின் வாங்காதவனென்றும்,
இரண்டு விதமாக பேசுபவனல்லன்னென்றும்,
அண்டங்களனைத்தையும் பாலிப்பவனென்றும்
மகா முனிவர்கள் உன்னை வருணித்துள்ளனர்


இந்த கீர்த்தனையில் ஸ்வாமிகள் 
ஒரு பக்தனுக்கு இறைவனின் அருளை 
பெற தாமதம் ஏற்பட்டால் ஏற்படும் 
தாபத்தை விளக்குகிறார்.

இராமபிரானை, விபீஷணன் தன்னுடைய
மூத்த சகோதரனான இராவணன் செய்த
அடாத செயலை பொறுக்காமல் அவனிடமிருந்து
விலகி வந்து அடைக்கலம் கேட்ட போது
அங்கிருந்த அனைவரும் அவனுக்கு அடைக்கலம்
தரக்கூடாது என்று கூறினர்.

அப்போது இராமபிரான் தன்னிடம்
அடைக்கலம் தேடி வந்தவர் யாராயினும்
அடைக்கலம் தருவது தன்னுடைய தீர்மானமுடிவு
என்று கூறி அடைக்கலம் தந்தருளினான்.

ஆனால் தனக்கு அடைக்கலம் தர எதிர்ப்பு
 யாரிடமிருந்தும் இல்லை .
இந்நிலையில் தன்னை காப்பாற்றுவேன்
என்று வாக்களித்த இராமபிரான்.சொன்ன
சொல்லை தவறக்கூடாது என்று
ஸ்வாமிகள் கூறுகிறார்.

ஏனென்றால் இராமபிரானை குறிப்பிடும்போது
அவனை ஒரு சொல்.ஒரு வில். ஒரு. இல்
என்றே வர்ணிப்பது வழக்கம்

ஒரு பக்தன் சுவாமிகளை போன்று
இறைவனிடம் உறுதியான அசையமுடியாத
 நம்பிக்கை கொள்ளவேண்டும்

அப்போதுதான் அவன் அருள் கிடைக்கும் என்பது
இந்த கீர்த்தனையின் கருத்தாக கொள்ளலாம்

Monday, May 13, 2013

காண்பதெல்லாம் கண்ணனே


காண்பதெல்லாம் கண்ணனே 

















விண்ணில் எங்கோ
மறைந்து கிடந்தவன்
விண்ணோர்
தலைவனாய் விளங்குபவன்

வேத மறைகளுக்கும்
எட்டாப் பொருளானவன்

ஒருகணமும் அவனை
மறவாது நினைத்து
துதிக்கும் அடியார்களின்
உள்ளத்தில் உறைபவன்

பக்தரின் கண்களுக்கு
புலப்படும் விதமாய்
கண்ணனாய் ஆகி
களிப்பூட்டியவன்

காதலால் கசிந்துருகிய
கோதையின்
வடிவிலே
கலந்துவிட்டவன்.

மாலன், மாயவன்,மணிவண்ணன் ,
நேயன்,நிமலன்,நிர்க்குண பிரம்மன்
,நீர்வண்ணன்,நெடுமால்,
அடியவர்களின் ஆதாரம்
சோதிவடிவானவன்,
கண்ணனை பணிவோம்.


ஊனிலும்உயிரிலும்
கலந்து விட்ட அவனை
உள்ளுணர்வால்
உணர்ந்து தெளிவோம்.

மாலவனின் கருணை பாரீர். !


மாலவனின் கருணை பாரீர். !




வலுவடைகிறது மகாசேன் புயல்: 
தமிழகத்தில் மழை வாய்ப்பு-செய்தி 

மாலவனின் கருணை
அனைவர்க்கும் கிடைக்கட்டும்

மழையாய் பொழிந்து
நீர் நிலைகள் நிரம்பட்டும்.
மின் உற்பத்தி பெருகட்டும்.

காற்றென வேகமாய் வந்து
கடலுக்குள் சென்றிடாது
சில நாள்  நிலைத்து நின்று
நிதானமாக பெய்து
மண் மாதாவின்
வயிறெல்லாம் நிரம்பட்டும்
பயிர்வளம் செழித்து
மக்கள் வயிறெல்லாம் நிரம்ப

எத்தனையோ தவறுகள் நாங்கள்
செய்திடினும் பிழைபொறுத்து
எங்கள் கோரிக்கையை
ஏற்றிடுவாய் .அனைவரையும்
காக்கும் பரம்பொருளான கண்ணா !

Pic.courtesy-google images.

முகிலும் முகில் வண்ணனும்


முகிலும் முகில் வண்ணனும் 





















பரந்து கிடக்கும் வானிலே
பஞ்சு பொதி போல் பால் போல்
வெண்மை கொண்ட மேகங்கள்
ஆதவனின் ஒளியினிலே
அழகாய் தோன்றி நிற்கும்.

வெள்ளை நிற மேகங்கள் 
நமக்குணர்த்தும் 
பாடம் கேளீர் 

உள்ளம் வெண்மையாக இருந்தால் 
உள்ளம் லேசாகி வெள்ளை மேகங்கள் 
விண்ணில் மிதப்பதுபோல் 
நாமும் இன்பத்தில் மிதக்கலாம் 

நம் தலைமேல் பிரகாசிக்கும் 
ஜோதிஸ்வரூபனின் 
துணையோடு 

வெள்ளைமேகங்கள்
ஆதவனை மறைத்தால்
இவ்வுலகம் குளிரும்
கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு
நம்மையெல்லாம் வா வா என்று நம்மை அழைக்கும்
கண்ணனின் திருவடிவை கண்டால் நம் மனமும் குளிரும்.


யாதவனாக  இவ்வுலகில் வந்துதித்து
அனைத்துலகத்தையும்ஆட்கொண்ட
 அந்த  ஆதவனை, மாதவனை,மதுசூதனை
குழற்கற்றை முகத்தில் தவழ்ந்து
மயிர் பீலியுடன் குழலூதி அனைவரின்
உள்ளம் கவர்ந்து காட்சி தந்த
கருமைநிற கண்ணனை நாம்
கருமுகில் வண்ணனாகவல்லவோ
கண்டு வணங்குகிறோம்.

கணத்திற்கு கணம்  உருமாறும்
காட்சி காண்போர் மனதில்
களிப்பூட்டும்

காற்றினால் அசையும் மேகங்கள்
கலையும் சிலநேரம்
ஆங்காங்கே
பிரிந்து தனியாக மிதக்கும் மேகங்கள்
அதே காற்றினால் ஒன்று கூடும்  சிலநேரம்

நம் மனதிலே அங்காங்கே பொதிந்து 
கிடக்கும் ஆயிரமாயிரம் எண்ணங்கள்
காற்றினிலே வரும் கண்ணனின் 
கீதத்தை செவி மடுத்தால் ஒன்றாகி 
அவன்திருவடியை சரணடையும்  

ஆதவனின் ஒளியால்
ஒளிரும் மேகங்கள் போல்
யாதவனாகிய கண்ணனில் அருளால் தான்
நாம் உயிர் வாழ்கிறோம்.
என்ற எண்ணமதை சிந்தித்து
அவனை நினைத்து கொண்டு
நம் கடமைகள் செய்தால் போதும்.
அனைத்தும் சித்திக்கும்
இவ்வுலக வாழ்வும் தித்திக்கும்.


கண்ணனே கார்மேகமாய் வருகின்றான்
அமுதமென மழையை பொழிகின்றான்
அனைத்துயிரும் வாழ

அவனை நாம் மனதில்
இருத்திக்கொண்டால் போதும்

நம்மை வினைகள் வாட்டுவதை
நிறுத்தி கொண்டுவிடும்.உள்ளத்தில்
உற்சாகம் மழையென
பொழிய தொடங்கிவிடும்.



Sunday, May 12, 2013

மனமிரங்கினான் மாலவன் குளிர் மழையாய் பொழிந்தான்



மனமிரங்கினான்  மாலவன் 
குளிர் மழையாய் பொழிந்தான்  


ஆழி மழைக்கண்ணா


ஆழி மழைக்கண்ணா 



6.5.2013 அன்று ஒரு பதிவிட்டேன்

அனைத்துயிரும் வாழ மழை வேண்டி
மாலவனை சரணடைந்து 
பிரார்த்தனை செய்ய கோரி.

பின்நூட்டமிட்டவர் இருவர்மட்டுமே 
திருச்சியிலிருந்து ஒருவரும், 
திண்டுக்கல்லிலிருந்து ஒருவரும். 

13.5.2013 இரவு வானம் குளிர்ந்து 
மழையாய் பொழிந்தது. 


மனமிரங்கினான்  மாலவன் 
குளிர் மழையாய் பொழிந்தான்  

கத்திரி வெய்யிலுக்கு 
கத்திரி போட்டான். 

கனலோனின் அனலும்
தணிந்தது சற்றே 
நேற்றிரவு ஆழி போல் மின்னி 
வலம்புரி சங்கம்போல் 
இடிமுழக்கம் செய்து 
வர்ஷித்துவிட்டான்

வறண்ட நிலத்தில் குளிர்ந்த 
நீரூற்று போல் பொழிந்தான்.
இன்னும் பொழிந்துகொண்டிருக்கின்றான்

என்னே அவன் கருணை. !

நீர் நிலையெல்லாம் நிரம்பி,
பயிர்களும்,உயிர்களும்
துன்பமின்றி வாழ மீண்டும் 
அவன் தாள் சரண் புகுவோம். 

நல்லார் ஒருவர் பிரார்த்தனையை ஏற்று
இறைவன் அனைவருக்கும் அருள். செய்யட்டும்.


.