Thursday, May 2, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (35)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள் (35)






இராமா !
யார் உன் திருமந்திர மகிமை 
அறிவார் இவ்வுலகில்?

(கீர்த்தனை-ஏமந்துநே விசித்திர முநு(2)-ராகம்-ஸ்ரிமணி-(மேள-2)-தாளம் ஆதி )

இவ்வுலகில் மாந்தர் பேசும் 
விசித்திர மொழிகளை 
என்னவென்பேன்?

உன் திருமந்திரத்தின் மகிமையை 
அறியமுடியாமல்  அற்பர்களைபோல்  
உன்னுடன் உரையாடுகிறார்கள்!

தாமச குணம் நிறைந்த 
தத்துவங்களைப் பேசி 

காமத்திற்கு அடிமைகளாகி 
நெஞ்சில் கருணையின்றி உலகில் 
இங்குமங்கும் திரிந்து வயிற்றை 
நிரப்பிக்கொண்டு தாமே பெரியோர்கள் 
என்று பெருமைகொண்டனர்.

மிக அருமையான கீர்த்தனை.
உலகில் உள்ள அனைத்து மந்திரங்களும் 
ஒரு பலனை எதிர்பார்த்து 
ஓதப்படுபவையே அன்றி. 
முக்தியை அளிக்கக்கூடியவை அல்ல

ஏனென்றால் அந்த மந்திரங்களுக்குரிய 
தெய்வங்களுக்கு உரிய சக்திகளுக்குடைய 
பலன்களையே அவர்கள் அளிக்க இயலும்.

இதை அறியாது அனைத்திற்கும்  
மூலமான ராம மந்திரத்தின் மகிமை அறியாது
அவைகளுடன் ஒப்பிட்டு பேசுவது விசித்ரமாக 
உள்ளதாக ஸ்வாமிகள் எள்ளி நகையாடுகிறார்.

ஒரு உண்மையான ராமபக்தன் 
மனதில் எந்த சலனத்திற்க்கும் ஆட்படாதவன் .
எந்த ஆசாபாசங்களுக்கும் அடிமையாகாதவன்.
உள்ளத்தில் கருணை நிறைந்தவன்.
தனக்கு தீமை செய்பவரையும் கூட 
தவறாக கொள்ளாத பண்பு உடையவன்.

மொத்தத்தில் அவனுக்கு எல்லாம்
ராம நாமம்தான்  
வேறெந்த சிந்தனையும் அற்றவன்

அதைபோன்ற ஒரு நிலையை 
அடைவது மிக துர்லபம்.

ஊண் மறந்து,உடலை மறந்து ,
தன்னை மறந்து ராம நாமத்தில் மூழ்கி 
தன் உடல்மீதே கறையான் புற்று வைத்தது கூட
அறியாது பக்தி செய்த வால்மீகி  
மகரிஷி போன்றவர்களுக்குத்தான்
அந்த ராம நாமத்தின் 
மகிமை அறிய இயலும்.

தன்னுடைய கோடிக்கணக்கான 
ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை 
முழுவதும் தர்மம் செய்துவிட்டு.
ராம நாமத்தை பாடிக்கொண்டு சென்ற
புரந்தர தாசர் போன்ற மகான்களுக்குதான் 
அந்த மந்திரத்தின் ருசி தெரியும்.

தன்னுடைய உடலின் ஒவ்வொரு அணுவிலும் 
மூச்சிலும், பேச்சிலும், சிந்தையிலும்,  
இராம நாமத்தை நிறைத்துக்கொண்டு 
இதயத்தில் அவன் வடிவத்தை எப்போதும்
 கண்டு ஆனந்தித்துக் கொண்டிருக்கும் 
அனுமனுக்கு இராம நாம மகிமை தெரியும். 

இந்த உலக மோகத்தில் சிக்கி திரியும் 
மனிதர்களுக்கு அதன் 
மகிமையை அறிய இயலாது என்பது
இந்த கீர்த்தனையின் சாரம்.

 .

3 comments:

  1. எவ்வளவு அழகான விரிவான விளக்கம் ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்....

    புரந்தர தாசர் மகான் பற்றியும் பகிரலாமே...

    ReplyDelete
    Replies
    1. முயற்சி செய்கிறேன்.

      Delete
  2. //தன்னுடைய கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை
    முழுவதும் தர்மம் செய்துவிட்டு.ராம நாமத்தை பாடிக்கொண்டு சென்ற
    புரந்தர தாசர் போன்ற மகான்களுக்குதான் அந்த மந்திரத்தின் ருசி தெரியும்.//

    பாண்டுரங்கா .... பண்டரிநாதா .... விட்டல் விட்டல் ! ராம ராம ராம ராம ராம ! ‘)

    ReplyDelete