Friday, November 28, 2014

இசையும் நானும் (2)

இசையும் நானும் (2)



 


மவுதார்கனில் அடுத்த பாடல் ஒன்றை
பயிற்சி செய்தேன்.
அம்ருதானந்த மயி  பஜன்
அன்பென்னும் சொல்லுக்கு அம்மா  என்ற பாடல்.
 இணைப்பு கீழே

 https://www.youtube.com/watch?v=UTA774zob70

Saturday, November 22, 2014

மதங்கள் தோன்றியதின் நோக்கம்?

 மதங்கள்  தோன்றியதின் நோக்கம்? 





 காடுகளில் விலங்குகளோடு
விலங்குகளாக
சுற்றித் திரிந்து கொண்டு வாழ்க்கை
நடத்தி வந்தான் மனிதன்  பல்லாயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன்.

பலவிதமான அனுபவங்களை தொடர்ச்சியாகப் பெற்றபின்
விலங்குகளின் வாழ்க்கை  வேறு மனிதப் பிறவி எடுத்த
வாழ்க்கையின்  குறிக்கோள் வேறு என்பதை புரிந்துகொண்டான்.

மனிதனின் வாழ்க்கையை மேலும் செம்மைப்படுத்த
மதங்கள் தோன்றின.

மதக் கோட்பாடுகளை அனுசரித்து உயர்ந்த நிலையை
அடைந்தவர்கள் கோடானுகோடி.

ஆனால் சமீப காலமாக மனிதனை உயர்ந்த நிலைக்கு
கொண்டு சென்ற மதக் கோட்பாடுகளை சரியாக
புரிந்துகொள்ளாமல்தன்  மனம் போன போக்கில்
நடந்துகொண்டு சக உயிர்களை துன்புறுத்தியும், கொன்றும்
இந்த உலகத்தையும் உலக மக்களையும்   மீள முடியா
வேதனைகளுக்கு ஆளாக்கி வருகின்றான்.

இறைவனும், இறை தூதர்களும் பாடுபட்டு உருவாக்கிய
அன்பு மதம் இன்று அழியும் நிலைக்கு வந்துவிட்டது.

ஒவ்வொருவரும் அவரவர் மதம்தான் உயர்ந்தது என்று
தவறாக நம்பிக்கொண்டு மற்ற மதங்களை அனுசரிப்பவர்களை
எதிரிகளாகப் பார்த்து அழித்து வருகின்றனர்.

இந்நிலை தொடர்ந்தால் இந்த உலகமும் அதில் வசிக்கும்
மனிதர்களும் இந்த உலகம் அழியும் முன்பே அழிந்து போவதை
யாராலும் தடுக்க இயலாது.

இறைவன் படைத்த இந்த உலகில் அனைத்தும் அனைவரும்
சொந்தம் என்பதை மறந்து ஒவ்வொரு மனிதனின் மனதிலும்
சுயநலம், பொறாமை ,அகந்தை  ,விருப்பு வெறுப்பு ஆகிய தீய குணங்கள்
கொழுந்து விட்டு எரிவதை நிறுத்தாவிடில் அனைவரும் அழிந்து போவதை நம்மைப் படைத்த இறைவனே வந்தாலும். தடுக்க முடியாது.

மனிதர்கள் மனிதர்களாக வாழ்ந்து, தெய்வ நிலையை அடைவதற்கே தோன்றின மதங்கள்.

யானைபோல் மதம் பிடித்து அலைந்து தன்.  தலைமேல் தானே மண்ணை
அள்ளிப் போட்டுக்கொண்டால் அதனால்  இழப்பு யானைக்கு மட்டுமே என்பதை மத வெறி பிடித்தவர்கள் உணவேண்டும்.






ஒரு வலுவான  யானை எப்படி ஒரு பாகனுக்கு அடங்கி அமைதியாய் அது தன் பணிகளை ஆற்றுகிறதோ  அதுபோல் மனிதர்களும் தன்னைப் படைத்து காக்கும் இறைவனுக்குஅடங்கி நடந்தால். நடந்தால் நன்மை விளையும்.







இல்லையேல் அழிவுதான் .என்பதை உணரவேண்டும்.

படங்கள்-கூகிள்  நன்றி.

Saturday, November 15, 2014

மனம் என்னும் குப்பைத்தொட்டி

மனம் என்னும் குப்பைத்தொட்டி

இந்த உலகத்தில் குப்பைகள்
இல்லா  இடமில்லை

மண்ணில் எந்த குப்பையைப்
போட்டாலும் புவிஅன்னை
அதை உரமாக மாற்றி உயிர்களும்
தாவரங்களும் உயிர் வாழ வகை செய்திடுவாள்

ஆனால் நம் மனதில் குவிந்துள்ள குப்பைகளை
நாம் அறிவதில்லை ,அறிய முடிவதும் இல்லை
அவற்றை அகற்றும் வழியும் தெரியவில்லை

உண்மையை சொல்லவேண்டுமெனில் அதை
அகற்றும் எண்ணமே பலருக்கும் இல்லை.

மாறாக பல ஒவ்வொரு பிறவியிலும் சேர்த்து வைக்கப்பட்ட
குப்பைகள் அப்படியேநம்மோடு  தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன

போதாக்குறைக்கு நம் ஐந்து புலன்கள்  மூலம் ஒவ்வொரு கணமும்
கணக்கின்றி குப்பைகள் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன

எல்லாம் பொய்கள். அவைகள் நம் மனம் என்னும் பொய்கையில்
தங்கி ஊறி அழுகி  நாற்றமெடுத்துக்கொண்டிருக்கின்றன

அதன் வெளிப்பாடுகள்தான் ஆசைகள், கோபம், பயம், விருப்பு வெறுப்பு
வஞ்சகம், சூது, பொறாமை போன்ற செயல்கள்.

நம் உடல் சுத்தத்திற்கு  நாம் செலவு செய்யும் நேரமும் காசும் பல
நூறைத் தாண்டுகிறது தினமும்.

ஆனால் மனதில் குவித்துள்ள
குப்பையை அகற்ற சில நொடிகளைக் கூட நாம் ஒதுக்குவதில்லை.

நாம் பிறரின் வாழ்க்கையையே தான் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்.

நம்  மனதில் இருக்கும், வந்து போகும் எண்ணங்களை
கண்காணிப்பதில்லை .அதனால்தான் நமுடைய ஆன்மீக வாழ்வில்
எந்த முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து பிறவிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

இதற்க்கு முற்றுபுள்ளி இந்த பிறவியிலாவது வைக்கவேண்டும் என்ற
ஒரு எண்ணம் மனதில் விதைக்கப்பட்டால்தான் அது முளைத்து வளரும்.

பகவான் ரமணர் உபதேசித்து நம்மிடையே வாழ்ந்து காட்டினார்.


இக்கணத்திலிருந்தே   நம் மனதில் தோன்றும் எண்ணங்களை
கண்காணிக்க  தொடங்குவோம்.அப்போதுதான் நம் மனதிற்கு
புரியத் தொடங்கும் நமக்கும் மேலே ஒருவன் இருக்கின்றான், அவன் நம்மை கண்காணிக்க தொடங்கிவிட்டான் என்ற எண்ணம் ஏற்படும்.

நாம் ரமணரைப்  போல்   ஆக முடியாது என்ற எண்ணத்தை தூக்கி  எறியுங்கள்.
நாமும் அந்த அற்புத நிலையை அடையவேண்டும் என்று தினமும் எண்ணுங்கள். கண்டிப்பாக நடக்கும் .அதில் எந்தவிதமான ஐய்யமும்
தேவையில்லை 


வள்ளுவர் கூறியுள்ளதுபோல் உள்ளம் வெளுக்க வேண்டுமென்றால்
உண்மை பேசினால்தான் முடியும் வேறு மாற்று வழி இல்லை
என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒரு உண்மையாவது பேசவேண்டும், உண்மையாக நடக்கவேண்டும் என்று ஒரு குறிக்கோள் வைத்துக்கொண்டே செயல்பட்டால்
அது சாத்தியப்படும்

Monday, November 10, 2014

இசையும் நானும் (1)

இசையும் நானும் (1)

இசை என்பதன்   பொருளே
எல்லா உயிர்களுடன்
இசைந்து இன்பமாக வாழ்வதுதான்.

அப்படி இசைந்து போகாதவர்கள்
அனைவரின் வசைக்கு
ஆளாவதைத் தவிர
வேறு வழியில்லை.

அதனால்தான் திருவள்ளுவரும்
ஈதல் இசைபட வாழ்தல் என்று
ஒரு குறளை இயற்றினாரோ
என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த உலகில் இசை பாடுபவர்களின்
கூட்டம் ஒரு பக்கம் பெருகினாலும்
வசை பாடுவவர்களின் கூட்டம்
பலமடங்கு பெருகிவிட்டதால்.
எல்லா ஊடகங்களிலும் அவர்களின்
குரலே ஓங்கி ஒலிக்கிறது.

இசையாக இறைவன் இருக்கின்றான்
அவன் மனதை இசையால் இளக
வைக்க முடியும் என்று அறிந்து கொண்ட
கணக்கற்ற மகான்கள். பாடல்களை
இயற்றி பாடி நமக்கு அளித்திருக்கிறார்கள்

நாமாக புதிதாக ஏதும் செய்யாவிட்டாலும்
அவற்றிக் கற்றும் பாடியும் ஆனந்தம்
அடையலாம் கேட்டு இன்புறலாம்.

பாடுவதைபோன்றே இசைக்கருவிகளும்
முக்கிய இடத்தை வகிக்கின்றன .கைதேர்ந்த
கலைஞர்கள் இசைக்கருவிகளை இசைக்கும்போது
நம் இதயத்தில் அந்த தெய்வீக இசை ஊடுருவி
நம்மை மெய் மறக்கச் செய்து இறைவனிடம்
ஒன்றச் செய்துவிடுகிறது என்பதை யாரும்
மறக்கமுடியாது.

ஆனால் எல்லோருக்கும் இசையைக் கற்கவும்
அதில் உச்ச நிலையை அடையவும் வாய்ப்பு
கிடைப்பதில்லை. இன்று லட்சக்கணக்கான
இசைக் கலைஞர்கள் இருந்தாலும்  இறைவனை
அடைய பயன்படுத்துபவர்கள் மிக சிலரே.

எனக்கும் இசை கற்க வேண்டும் என்ற ஆசை.
ஆனால் அதற்க்கு வாய்ப்பில்லை. அதனால்
இசையைக் கேட்க முயற்சி செய்தேன்.

கற்றிலனாயினும் கேட்க என்றார் திருவள்ளுவர்
நல்ல இசையை கேட்டதினால் அமைதியற்ற
என் மனம் சாந்தியடைந்தது ,மனதில் உள்ள சஞ்சலங்கள்
மறைந்துவிட்டன.

சரி ஏதாவது ஒரு இசைக்கருவியைக் கற்றுக்கொண்டு
அதில் ஏதாவது ஒன்றிரண்டு பாடல்களை இசைத்து
தீரவேண்டும் என்ற வெறி என்னுள் 10வது வயதிலேயே
ஏற்பட்டது. நிற்பதற்கு  கூட நேரமில்லாமல் 60 ஆண்டுகள்
ஓடிவிட்டது. ஆனால். எண்ணங்கள் என்றும் சாவதில்லை.
அதற்க்கு அழிவில்லை.

நான் தேர்ந்தெடுத்த இசைக்கருவி மவுத்தார்கன்
சிறு வயதில் கோயில் திருவிழா சந்தையில் சாக்லேட்
நிறம் பூசப்பட்டு 10 பைசாவிற்கு விற்கப்படும் மவுதார்கன் தான்
என்னுடைய முதல் ஈர்ப்பு . எப்போது கடைக்கு போனாலும் அதைதான் என். கண்கள் காணும் அதை வாங்கக் கூட ஆகையில் காசு கிடையாது.அப்போது.

அதுபோல்  கொட்டாங்கச்சி .வையலின்.அது வாங்கினாலும்
விற்பவன் கையில் இசைக்கும் அற்புதமாய்
என் கையில் வந்தவுடன் கற்றாழை நாரினால் செய்யப்பட்ட
வில் அறுந்துபோய் அபஸ்வரமாய் ஒலிக்கும்,அல்லது மண்ணினால்
செய்யபட்ட அந்த வயலின் உடைந்துபோகும் அல்லது அதன்மேல் ஒட்டப்பட்ட காகிதம் கிழிந்து என் உற்சாகத்தை குழி தோண்டி புதைத்து விடும்.

அவ்வப்போது என் வசதிக்கேற்ப குறைந்த விலையில் கிடைத்த  மவுத்தார்கன்களை வாங்கி பயிற்சி செய்து வந்தேன்.
திரும்ப திரும்ப மூன்று திரைப்பட பாடல்கள்தான் நினைவுக்கு வரும்.
எவ்வளவோ பாடல்களைக் கேட்டும் மற்ற எதுவும் நினைவுக்கு வராது.
இசைக்கவும் முடியாது.

கர்னாடக இசையில் யாரும் அவ்வளவாக மவுத்தார்கனை இசைப்பது கிடையாது.ஏதோ சில திரைப்படங்களின் பத்தோடு பதினொன்றாக அது
பயன்படுத்தப்படும்.

நான் முயற்சி செய்து ஒரு பாடலை பயிற்சி செய்துள்ளேன்.
குறைகள் இருக்கும் .விரைவில் குறைகள் இல்லாமல்
நன்றாக இசைக்க முடியும் என்ற  நம்பிக்கை இருக்கிறது,
இவன் முயற்சிக்கு உங்கள் ஊக்கம் தேவை.

அந்த பாடல். (கண்ணே என் கண்மணியே கண்ணனே  கண் வளராய்.

http://youtu.be/Iqf9V9muMaY

Saturday, November 8, 2014

இறைவா நீ என்னுள் இருப்பதை

 இறைவா நீ என்னுள்  இருப்பதை ...

கணத்திற்கு கணம் மாறும்
குணம் கொண்ட மனம் 

எதிலும்  நிலைக்காது
எங்கோ அலையும்  மனம்

சிலையிலும் நிற்கவில்லை
சிந்தனையிலும் நிலைக்கவில்லை

உலையில் போட்ட  அரிசி போல்
கொதிக்கிறது உள்ளம்

நாள்தோறும்  மன  நிம்மதியை
சிதைக்கவே எப்போதும்
காத்திருக்கும் சுற்றங்கள்

புதை குழியில் எப்போதும்
தள்ளி வேடிக்கை பார்க்கும் புலன்கள்

என்ன முயற்சி செய்தாலும்
உள்ளத்தை விட்டு அகல மறுக்கும்
கடந்த கால கசடுகள்

எதிர்கால கோட்டை கட்டி
அதில் கடந்த கால குப்பைகளை
குடி வைத்து நிகழ் கால
வாழ்க்கை இழக்கும் நிலையை
மாற்றிடுவாய் .

புதிது புதிதாக புத்தகங்களை
படித்து அதில் உன்னை தேடினேன்
புரட்டர்களின் உதவியை நாடினேன்

அந்தோ! இறைவா நீ என்னுள்  இருப்பதை அறியாமல்.
இவ்வளவு காலம்

இனியாவது இருக்கும் ஒவ்வொரு கணமும்
உன்னை நினைத்து உண்மையாய்
வாழ்ந்து உயர்நிலை எய்திட அருள் புரிவாய்.