உலகை ஆளும் உத்தமனே !
உலகளந்த பெருமாளே
உந்தன் பாதம் சரணடைந்தோம்
உலகில் அமைதியை தந்தருள்வாய் (உலகை)
தர்ம வழி நடந்து நாம் அதைகாத்து வந்தால்
அந்த தர்மமே நம்மையெல்லாம் காக்கும்
என்று உணர்த்த ராமனாக அவதாரம்
செய்த தெய்வம் நீயல்லவோ !
அவரவருக்குரிய கடமைதனை
தவறாது செய்து தன்னை நினைப்பவர்தம்
வாழ்வை வளமாக்குவது தன் கடமையென்று
கண்ணனாய் அவதரித்து காட்டி தந்தவனும்
நீயேயன்றோ.! (உலகை)
அரக்க குணம் கொண்டோர் மிகுந்து விட்ட
இவ்வுலகில் அடியவர்கள் படும் துன்பம்
மிகுந்துவிட்டதைக் கண்டும் அரங்கா !
நீ இன்னும் கொடுமைகளைக் களைய
மனம் கொள்ளாதிருப்பது முறையோ?
பக்தர்களின் குறைகளைக் கண்டும்
காணாதிருப்பது சரியோ?
பாதகர்களை அடக்கி ஒடுக்க
காலம் தாழ்த்துவது தர்மமாகுமோ? (உலகை)
நன்றி மறவா குணமும் அனைவரின்
நலம் நாடும் எண்ணமும்
நாரணா !உந்தன் பெருமையை எந்நேரமும்
எண்ணி மகிழும் வாழ்க்கையும்
தந்தருள் செய்திடுவாய் (உலகை)
No comments:
Post a Comment