நாடி வருவேன் அனுதினமும்...
ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன்
இடையர் குலத்தை
இந்திரனிடமிருந்து
காக்க கையில்
கிரி ஏந்திய ஹரி கேசவா
இவ்வுலகில்
மானிட பிறவியெடுத்து
இந்திரிய கூட்டத்திடம் சிக்கி
அல்லல்படும் என்னைக் காக்க
என்று மனம் கனிய போகிறாய்?
அடங்காது திரியும்
மனம் என்னும் புரவியின் பின்னே
சென்றதனால் என்னை பற்றிக்கொண்டது
மாளாத பிறவி என்னும் கொடுமை
அதன் கடுமை தாங்காது மாறி மாறி
அடைந்தேன் பலவித துன்பங்கள்
கண்டுகொண்டேன் பரந்தாமா !
துன்பம் துடைக்கும் உன் பாவன நாமம்
உன்னை தேடி வரும் என்னை காக்க
நீ ஆடி வருவாயோ,இல்லை பாடி வருவாயோ
இல்லை ஓடி வருவாயோ நானறியேன்
கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும்
உணவளிக்கும் தாயன்பனே
திடமான பக்தியின்றி கல்போன்ற
என் மனதில் உறைந்திருக்கும்
உயிரான எனக்கும் உன்னை அறிந்து
உய்யும் ஞானம் அளித்தருள்வாய்.
பாடி பரவுவேன் பலமுறை நாள் முழுதும்
நாடி வருவேன் அனுதினமும் என்
உள்ளத்தில் உறையும் உன் சன்னதிக்கு
உந்தன் அருள் கிட்டும் வரை
No comments:
Post a Comment