Thursday, April 14, 2016

எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும்

எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் 

நம் இதயத்தினுள்ளே ஒளிந்து கொண்டு
ஓயாமல் நம்மை இயக்கிகொண்டிருக்கும்
இறைவனை உள்ளே சென்று காணாது
உலகம் முழுவதும் சுற்றி திரிந்து
தேடுவதால் பயன் ஏது ?

தன் வடிவாய் மனிதனை படைத்தவனுக்கு
வடிவங்கள் சமைத்து வாழ்நாள் முழுவதும்
வழிபாடு செய்வதால் மட்டும் அவனைக்
காணுதல் எளிதாமோ ?

வடிவமற்ற பரம்பொருளுக்கு வடிவம்
கொடுத்தோம் தவறில்லை .

தான் கொடுத்த வடிவம்தான்
உயர்ந்த தெய்வம் என்றும் மற்ற
வடிவங்கள் தாழ்ச்சி  என்று
ஏற்ற தாழ்வுகள் கற்பித்து அறியாமையில்
உழலும் மூடர்களை என்னவென்று சொல்லுவது?

வெட்ட வெளியிலிருந்து தான்  அனைத்தும்
உருவாகி மிதக்கின்றது சில காலம்
நாம் வாழும் உலகம் உட்பட

பிறகு மறைந்து வேறொரு உருவெடுக்கிறது
முடிவில்லா இந்த செயற்பாட்டில் பின்
உள்ளவனின் நினைவொன்றே போதும்
நிலையான இன்பம் அடைய

நிலையில்லா உலகில்
நாம் உருவாக்கும் சிலைகளும்
தப்புமோ அழிவிலிருந்து  ?
அவைகளை வழிபடும் நாமும்தான் ?

இந்த உலகில் அனைத்தும் நாம் இன்பமாக
வாழ இறைவனால் அளிக்கப்பட்டவையே

அதை அனைவரும் தனக்குமட்டும்தான்
சொந்தம் என்று உரிமை கொண்டாடுவது
அறிவீனம் .

அதனால்தான் நாம் அனைவரும்
அடைகின்றோம் ஒவ்வொரு கணமும்
சொல்லொணா துன்பங்கள்.

இருப்பதை கொண்டு இன்புறுவதில்லை
அனைத்தையும் தரும் தில்லை நாதனையோ
நம்முள் இருக்கும் திருவரங்கத்தானையோ
நினைப்பதில்லை.

நம்மோடு சேர்ந்து அழியும் பொருட்கள் மீது
நாட்டம் கொண்டு வாழ்நாள் முழுவதும்
வாட்டம் கொண்டு அழிகின்றோம்.

எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் என்று
நினைப்போம் .

யாருக்கும் மனதாலும் தீங்கு நினையோம்.
பிறர் தரும் தொல்லை பொறுப்போம்

எல்லையில்லாத பரம்பொருளை சரணடைந்து
அன்பால் அனைவரும் இணைந்து ஆனந்தமான
வாழ்வு வாழ்வோம் 





No comments:

Post a Comment