Tuesday, August 21, 2018

இறைவன் இருக்குமிடம் எது?

இறைவன் இருக்குமிடம் எது? 

இறைவன் இருக்குமிடம் எது என்று கேட்டால்
உடனே அனைவரும் கையை காட்டுவது
ஆலயங்களைத்தான்..

ஆலயங்கள் என்பது நம் உடலின்
உள்ளே இதயத்தில் வாசம் செய்யும்
இறைவனை புறத்தே உணர்த்தும்
சின்னம் .அவ்வளவுதான்.

ஆனால் காலப்போக்கில் இந்த
உண்மை மறக்கடிக்கப்பட்டது.

இன்றும் அதே நிலைதான்.

ஆன்மாக்கள் லயமாகும் இடம்தான்
ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.

ஆலயத்தின் உள்ளே நுழையும் முன்பு
நாம் அணிந்துள்ள தோல் செருப்புக்களை
கழட்டி வெளியில் விட்டுவிட்டு
சொல்லுகிறோம்.

எதற்க்காக?

நம்முடைய உயிர் தங்கியுள்ள உடல்
தோலினால் மூடப்பட்டுள்ளது

காலில் அணியும் செருப்பை வெளியே விடுவதைபோல் நாம்
நம்முடைய உடல் அபிமானத்தை விட்டுவிட்டு
ஆலயத்தினுள் நுழையவேண்டும் என்பதையே இந்த செய்கை
உணர்த்துகிறது.

ஆலயத்தில் நுழைந்தவுடன் நாம் ஆண்
பெண் என்ற இன பாகுபாட்டை மறந்து
மனதை சிதறடிக்காமல் இறை சிந்தனை
ஒன்றையே மனதில் கொள்ளவேண்டும்.

உள்ளே சென்றவுடன் உலக விஷயங்களை பற்றி
சிந்திப்பதோ அல்லது பேசுவதோ கூடாது.

அடுத்து பலிபீடம் அருகே சென்றவுடன் நம் மனதில் உள்ள அனைத்து  தீய மற்றும் சுயநல எண்ணங்களை விட்டுவிட்டு.இறைவனை மட்டும் எண்ணியபடி கருவறைக்கு நுழையவேண்டும்.

இறைவனின் வடிவத்தில் மனதை நிலை நிறுத்தி தீபம் காட்டும்போது அந்த தீப  ஒளியில் கவனத்தை  நிலை நிறுத்தி பழகவேண்டும்.

வீடு திரும்பியதும்  சில நிமிடங்கள் அந்த காட்சியை நினைவு படுத்தி பார்க்கவேண்டும்.

இவ்வாறு செய்துவந்தால் நம் மனம் இறை சிந்தனையில் நிலைபெற்று நமக்கு நன்மை பயக்கும்.

இன்று ஆலயவழிபாடு என்பது நம்முடைய கால அட்டவணையில் ஒரு சில நிமிட நேரமே நடக்கும் ஒரு சடங்கு. அதுவும் மன  ஒருமைப்பாடு இல்லாமல் செய்யப்படுவது.

மனம் இறைவனோடு ஒன்றாமல் அவனை எப்படி அடையமுடியும்?

ஆனால் இன்று அங்குதான் எல்லா உலக விவகாரங்களையும்
விலாவாரியாக விவாதித்து தெய்வீக சூழலையே
கெடுத்துக்கொண்டிருக்கிறோம்.

காசில்லாதவன் கடவுளானாலும்  கதவை சாத்தடி  என்ற திரைப்பட பாடல் உண்மையாகிவிட்டது.

இன்று ஆலயங்கள் காசு வசூல் செய்யும் இடமாகவும்  பணம்,பட்டம்,பதவி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தனி மரியாதைகள் அளிப்பதும்,
அர்ச்சனைக்கு கட்டணம், அர்ச்சகர் தட்டில் கட்டணம்,உண்டியில் காசு,கட்டளை கட்டணம் ,பிரசாதங்கள்  கட்டணம், ஆன்மீகம் என்ற பெயரில் ஏராளமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் என
ஆலயங்களின் நோக்கமே போய்விட்டது.

அடுத்து விளம்பரங்கள் வேறு. இந்த ஸ்வாமி வர ப்ரஸாதி. இங்குவந்து அந்த மாலை போட்டால், அபிஷேகம், செய்தால் இது கிடைக்கும் அது கிடைக்கும் என்று  அனைவரையும் வேண்டுதல்களை செய்யுமாறு தூண்டப்படுவதும்  சர்வ சாதாரணம்.

இந்த உலகில் அனைவரும் விதியின் கைப்பாவைகள். அதை யாரும் மாற்றமுடியாது.

கடமை தவறியவனுக்கு கடவுள் அருள் என்றும் கிட்டப்போவதில்லை.

அதற்காக நான் கடமையை செய்வேன் கடவுளை வணங்கமாட்டேன் என்பதும் சரியான  வாதம் அல்ல

நம் புலன்களுக்கு கடவுள் புலப்படவில்லை என்பதால் அந்த புலன்களை இயக்கும்  சக்தியான கடவுளை மறுப்பது சரியான வாதம் இல்லை.

அதனிடையே நாம் இறைவனை வணங்கி அவன் அருள் பெறுவதை எந்த சக்தியும் தடை செய்ய போவதில்லை.

நம் உடலாகிய ஆலயத்தில், உள்ளம்  என்னும் கோயிலில் நம் இதயத்தில் இருக்கும் இறைவனை கொண்டு வந்து நிறுத்தி நாம் அவனை உணர்ந்து கொள்ள வழி வகுக்கும் புற  வெளிப்பாடே ஆலய தரிசனங்கள்.

புற  வழிபாட்டின்  இந்த உண்மையை உணர்ந்துகொண்டு  நம் அக வழிபாட்டினையும் செய்தால் நன்மை விளையும்.

ஆலயங்களை  சுத்தமாக வைத்திருப்பதைப்போல நம் உள்ளத்தையும் சினம், பொறாமை,கருமித்தனம், அகந்தை போன்ற தீய குணங்களை அகற்றி
இறைவன் குடிகொள்ளும் இடமாக மாற்றவேண்டும்.

இல்லாவிடில் தெய்வம் அங்கு குடி கொள்ளாது. ஜீவன் சிவனை உணர்ந்துகொள்ள முடியாது.

அவ்வாறு  நாம் நம் உள்ளே இருக்கும் இறைவனை உணர்ந்துகொண்ட பின்புதான் எல்லா உயிரிலும் இருக்கின்ற இறைவனை உணர முடியும், விருப்பு வெறுப்பின்றி அன்பு செலுத்த முடியும்.

கவலைகளிலிருந்து விடுபடமுடியும். பிறவி பிணி தீரும். 

No comments:

Post a Comment