Thursday, January 24, 2013
சங்கடங்களை அழிக்கும் ஸ்ரீ கணேசர்(பகுதி-2)
சங்கடங்களை அழிக்கும்
ஸ்ரீ கணேசர்(பகுதி-2)
ஒருவன் எந்த செயலை செய்ய முற்படும்போதும்
தடைகள் ஏற்படுவது இயற்கை
தடைகளுக்கான காரணங்களை கண்டுபிடித்து
தொடர்ந்து அந்த செயலை முடிக்க நடவடிக்கை
மேற்கொள்ளுபவனே அறிவாளி.
அவனே வாழ்வில் வெற்றி பெறுகிறான்.
பொறுமையில்லாதவனும் விடாமுயற்சி
இல்லாதவனும் தடையை கண்டு சோர்ந்து
போய் உட்கார்ந்துவிடுகிறான்.
சிலர் தடைகள் ஏற்பட்டுவிட்டதே என்று
எல்லோரிடமும் புலம்பி திரிகின்றனர்.
இந்த உலகில் தடைக்கு காரணம் அவர்கள்தான்
என்பதை உணராது பிறர் மீது குற்றம் சுமத்தி
வீட்டையே ரணகளம் ஆக்குகின்றனர்.
இன்னும் சிலரோ மனம் உடைந்து
தன் உயிரையே மாய்த்துக்கொள்ளுகின்றனர்.
இப்படியாக செயலில் தடை ஏற்படுவதை
அவரவர் மன பக்குவத்திற்கு ஏற்ப அணுகுகின்றனர்.
மின்னோட்டத்தில் தடை ஏற்படுவதால்தான்
மின் விளக்கு ஒளிர்கின்றது.
அதில் ஏற்படும் தடையின் அளவை பொறுத்து
அதன் ஒளி குறையவோ கூடவோ செய்கிறது.
சாதாரண இரும்பு தகடு சாணைகல்லில்
உரசும் தடையை பொறுத்து கூர்மை பெறுகிறது.
ஓடும் நதியில் தடைகள் அணைகள் மூலம்
ஏற்படுதுவதால்தான் நீர் தேங்குகிறது.
பயிர் வளமும் நில வளமும் மேம்பாடு அடைகிறது.
தடைகளை நமக்கு பயனுள்ளதாக
மாற்றிகொள்வது எப்படி என்று சிந்திக்கவேண்டும்.
அறிவுள்ள மனிதன் தடைகற்களை
தன் வெற்றி படிக்கட்டாக மாற்றி கொள்கிறான்.
அறிவற்றவனோ அந்த தடைகற்களை
தனக்கு அளிக்கப்பட்ட சமாதி கற்களாக கருதிகொள்கிறான்
அறிவுள்ளவன் ஒரு செயல் தடைப்பட்டவுடன்
தடை எதனால் வந்தது, தன் முயற்சியில்
அல்லது திட்டமிடுதலில் ஏதாவது குறைபாடா
என்று யோசிக்கிறான்.
விடை காண்கிறான்.
அறிவற்றவனோ எதை பற்றியும்
யோசிப்பது கிடையாது.
அவனுக்கு தெரிந்ததெல்லாம்
அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு
வேறு ஒரு செயலை செய்ய ஓடிவிடுவதுதான்.
அங்கும் அவன் வெற்றி காண்பதில்லை.
அவன் வாழ்வில் தோல்விகள்தான் நிறைந்திருக்கும்.
அவன் எப்போதும் விதியையும்
பிறர் மீது பழியையும் சுமத்தி கொண்டு இருப்பான்.
எனவே தடைகள் என்பது பலவிதமான
வாய்ப்புக்களை நமக்கு அள்ளித்தரும் சுரங்கம்.
சிறிது பொறுமையாக சிந்தித்தால்
நம் வாழ்க்கை எங்கோ கண்காணாத
உயரத்திற்கு நம்மை கொண்டு சென்றுவிடும்.
மனம்கலங்கினால். அது நம்மை
குழப்ப சேற்றில் தள்ளி நம்மை துன்பத்தில்
ஆழ்த்திவிடும் என்பதை உணரவேண்டும்.
பலமுறை தோல்விகளை சந்தித்தவன்தான்
நிரந்தர வெற்றியாளன் ஆகிறான்.
தோல்வியே சந்திக்காதவன் காற்றடித்தால்
கவிழ்ந்து நீரில் மூழ்கிபோய்விடும்
காகித கப்பல் போன்றவன்.
(இன்னும் வரும்)
.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment