Monday, September 29, 2014

என்னை சிவனைப் போல் செய்திடுவாய்

என்னை சிவனைப்  போல் செய்திடுவாய் 

என்னை சிவனைப் போல் செய்திடுவாய் 



என்ற வரிகளை தினமும் காதில் கேட்கிறோம்.

எங்கு என்று பலருக்கு தெரிந்திருக்கலாம் 

ஆம் கந்த  குரு கவசத்தில் முருகபெருமானுக்கு 

வைக்கப்படும்  வேண்டுதல்களில் ஒன்று. 

ஏன் நாம் சிவனாக வேண்டும்? 

ஏன் மற்ற கடவுள்களைப் போல் ஆகக்கூடாது ?

இந்த கேள்வி எனக்கு வந்தது. 

ஜீவனாகிய நமக்குள் இறைவன் ஜீவ ஒளியாக இருக்கின்றான்.

அந்த ஒளியின் சக்தியினாலேயே இந்த உடலும் உள்ளமும் இயங்குகிறது. 

அந்த உண்மையை நம்மால் உணர இயலாது அந்த ஒளியை பல 

தீய குணங்கள் மறைத்துக்கொண்டிருகின்றன மேகங்கள் ஆதவனை 

மறைத்துக்கொண்டிருப்பதைபோல் .

மேகம் விலகினால் ஆதவன் ஒளி  வீசுவதுபோல்  நம்முள் 

இருக்கும் அந்த ஒளியும் நம் பார்வையில், வாக்கில் ,செயலில் 

ஒளி  வீசத் தொடங்கும். 

அதற்க்கு மாயையில் மூழ்கியுள்ள ஜீவனாகிய நாம் சிவமாக வேண்டும். 

நம்மால் என்ன முயற்சி செய்தாலும் அந்நிலையை அடைய முடியாது 

அதற்க்கு ஞான பண்டிதனான முருகனை நாம் சரணடையவேண்டும். 

சிவம் என்றால் அவம் பேசாதவன், நம்மை மயக்கி பாவங்களை நம்மை 

செய்யத் தூண்டி நம்மை இறைவனை அடைய இயலாதபடி நம்மை தொடர்ந்து 

பிறப்பு இறப்பு சுழலில் தள்ளும் காம க்ரோதாதிகளை வென்றவன். எப்போதும் 

எல்லா நிலைகளிலும் சம நிலையில் இருப்பவன்,பயமற்றவன், விருப்பு 

வெருப்பற்றவன் எல்லா  உயிர்களிடத்தும், அன்பு பூண்டவன், அனைத்தையும் 

மற்றவர்களுக்காக தியாகம்  செய்யக்கூடியவன் போன்ற பண்புகள் 

இருந்தால்தான் ஒரு ஜீவன் சிவனாகமுடியும். பரம்பொருளை 

அடையமுடியும். , 




நம்மை அந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முருகனை அனுதினமும் வேண்டுவோம். 

Saturday, September 27, 2014

குறை ஒன்றுமில்லா கோவிந்தன்

குறை ஒன்றுமில்லா கோவிந்தன்






நிலமகளும் நீர்மகளும் அருகிருக்க 
குன்றின் மேல் நின்று கண்குளிர
காட்சி தரும்  கருணை தெய்வம் 
குறை ஒன்றுமில்லா கோவிந்தன்

மறைகள் போற்றும் மாலவன்
நம் குறைகளைக் காணாது செய்து
நம்மை உயர்நிலைக்கு கொண்டு
செல்லும் தூயவன்

அடியார்க்கு அடியவன்  அனைத்து
உயிர்க்கும் ஆதாரமானவன்
அன்போடு அழைத்தால் அக்கணமே
வந்து காப்பவன்

மனதில்நிறைந்துள்ள பொய்யும்
புரட்டையும் விரட்டி விட்டு
புரட்டாசி மாதம் தன்னில் அவன்
நாமம் சொல்லி அவனின்
தரிசனம்  கண்டு ஆனந்தம்அடைவோம்

கோவிந்தன்  நாமம்  சொல்லி கொண்டு
திருப்பதிக்கு பாத யாத்திரை சென்றால்
உடலின் எடையும் குறையும் மனதைக்
கப்பியுள்ள இறுக்கமும்  நீங்கும்

வேங்கட மலையின் உச்சியில் நிற்பவனும்
அனலாய் நம் உடலில் பரவி நம்
உடலுக்குள் இருந்துகொண்டு நம்மை
வாழ்விப்பவனும் அவன்  ஒருவனே.

நம் உயிர்க்கு ஆதாரமாய் விளங்கும்
பாதார விந்தனின் பாதங்களை
எந்நேரமும் சிந்திப்போம் .என்றென்றும்
இன்பமாய் இவ்வுலகில் வாழ்வோம்.



Thursday, September 25, 2014

நானொரு விளையாட்டு பொம்மையா?

நானொரு விளையாட்டு பொம்மையா?

நானொரு விளையாட்டு பொம்மையா 
என்ற இந்த பாடலை பாடாத 
கர்நாடக இசைக் கலைஞர்களோ 
கேட்காத  ரசிகர்களோ இருக்க முடியாது 




தேவி மீது  நவரச கன்னட ராகத்தில் அமைந்துள்ள 
இந்த கீர்த்தனையை இயற்றியவர் 
பாபநாசம் சிவம் அவர்கள். 

பாடுபவர்களும் தாங்கள் பட்ட  ஏதாவதொரு 
துன்பத்தை நினைத்துக்கொண்டு 
அந்த கீர்த்தனையை உயிரோட்டமாக 
பாடி ரசிகர்களை ஆட்டி வைப்பார்கள். 

அவர் ஏராளமான கீர்த்தனைகளை 
தமிழில் இசை உலகத்திற்கும் 
திரைப்படங்களுக்கும் 
இயற்றி தந்துள்ளார். 

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் 
எவ்வளவு திறமைகள் வாய்த்திருந்தாலும் 
ஏதாவது ஒரு பிணியினால் அவதிபட்டுதான் 
ஆக  வேண்டும் என்பது கர்ம விதி 

அதுபோல் ஆஸ்துமா நோயினால் பாபநாசம் சிவன் அவதிபட்டார் 
இருந்தாலும் ஆத்மாவை பீடித்துள்ள அஞ்ஞானம் என்னும் 
பிணியை நீக்க கடும் பனியிலும் மார்கழி மாத பஜனையில் 
கலந்துகொண்டு பாடல்களை பாடுவாராம். 

எனவே துன்பப்பட்ட பாபநாசம் சிவன் தேவியை நோக்கி நான் 
ஒரு விளையாட்டு பொம்மையா என்று பாடியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

கொஞ்சம் சிந்தித்துப்பார்த்தால் பரமசிவனே பாபநாசம் சிவன் மூலமாக இந்த கீர்த்தனையைப் பாடியிருப்பானோ என்று தோன்றுகிறது.

எப்படி என்றால் சிவபெருமான் பார்வதியைக் கைபிடித்ததிலிருந்து 
பட்ட துன்பங்களை நாம் நோக்கினால் இந்த உண்மை புரியும்.

இருந்தாலும் துன்பங்களை தரும் தேவி நம்முடைய நன்மைக்காகத்தான் 
அவைகளை தருகிறாள் என்பதே உண்மை. அவள் தரும் இன்பங்கள் கோடி கோடி .அதனால் அவள் தரும் துன்பங்களைப் பொருட்படுத்தாமல் 
அவள் நமக்கு தந்துள்ள நன்மைகளைக் கருதி அவளை பூஜிக்கிறோம். 

நம்மை  விளையாட்டு பொம்மைகளாய் ஆட்டி வைக்கும் தேவியை   
நாமும் அவள் வடிவங்களை பொம்மைகளாக்கி பூஜை செய்து மகிழும் 
நாளே நவராத்திரி என்றால் மிகையாது. 




இந்த ஒன்பது நாட்களும் அனைவரின் வாழ்விலும் இன்பமும் மகிழ்ச்சியும் 
பெருகி ஆண்டு முழுவதும் நிலைத்து நிற்கட்டும். 

பாடல் இணைப்பு:
https://www.youtube.com/watch?v=kONiLaz2Z5M

Saturday, September 20, 2014

நினைவுள்ள வரை என் நெஞ்சில் இருக்கட்டும் உன் நாமம்

நினைவுள்ள வரை என் நெஞ்சில் 
இருக்கட்டும் உன் நாமம்


எங்கும் நிறைந்தவனே எழில் 
வடிவம் கொண்டவனே

அண்டத்து உயிர்களைக் காக்கும்
ஆதவனின் ஒளியாய் இருக்கின்றாய்


பரம பக்தன் பிரஹலாதன்  
வேண்டுகோளை ஏற்று  பாரினில் 
நரசிங்கனாய் அவதரித்து
ஆணவம் கொண்டு அலைந்த
ஹிரணியனை வதம் செய்தாய் 



எங்கும் நிறைந்தவனே எழில் 
வடிவம் கொண்டவனே கண்ணின் 
ஒளியாய் திகழும் கண்ணனே 





சொல்ல சொல்ல திகட்டாது உன் நாமம் 
சொல்லிக்கொண்டே இருந்தால் போதும் 
என்றும் எமை அண்டாது காமம் 

கர்ம வலையில் சிக்கித் தவித்த 
எமக்கு எளிதில் விடுபடும் 
வழியைக் காட்டினாய் 

பற்றின்றி செயல்பட்டால் பாவ புண்ணியங்கள்  
உம்மை பற்றாது என்று பார்த்தன் மூலம்
பாரதப் போர் தொடங்கு முன்பு பறை சாற்றினாய்

உன் திருவடியைப் பற்றியவர்க்கு
இகத்திலும் பரத்திலும் பயமில்லை ,
நிலையான இன்பமுண்டு 
என்றுரைத்தாய். 

நினைவுள்ள வரை என் நெஞ்சில் 
இருக்கட்டும் உன் நாமம்

.உந்தன்  கவின் வடிவினைக் கண்டு ஆனந்தம் 
அடையட்டும் என் கண்கள் .கண்ணில் 
ஒளியிழந்தாலும் இதயத்தில் ஒளியாய் 
நிலைத்து நீங்காஇன்பம்  தந்திடுவாய் 

Thursday, September 18, 2014

குண்டு சட்டியில் எவ்வளவு காலம் குதிரை ஓட்டுவது?




குண்டு சட்டியில் எவ்வளவு காலம் 
குதிரை ஓட்டுவது?

ஆம்.கை தவறி விழுந்தால்
சுக்கல் சுக்கலாக உடைந்துபோகும்
இந்த உடல் என்னும் குண்டு சட்டியில்
எத்தனை பிறவிகள் மனம் என்னும் குதிரை மீதேறி
செக்கு மாடுகள்போல்  சுற்றிக்கொண்டிருப்பது?




இதிலிருந்து வெளிவரவேண்டாமோ?

விடுதலை பெற்று  நிலையான இன்ப துன்பம் கடந்த
எல்லையில்லா ஆனந்தத்தில் திளைக்க வேண்டாமோ?

அதைப் பற்றிய சிந்தனைதான் இந்த
பதிவு.

அவரவர் மனம்தான் அவரவர்களுக்கு
அவரவர்களின்  உலகமாக தோற்றமளிக்கிறது.

மனதில் எண்ணங்கள் இல்லாவிடில்
உண்மையான உலகம் என்ன என்பது புரியும் .

ஆனால் உலகத்து மோகத்தில் மூழ்கியுள்ள
 மக்கள் அவரவர் எண்ணங்களை விட்டு வெளியே வருவதேயில்லை.
சோகம் அனுபவிப்பதையே சுகம் என்று எண்ணிக்கொண்டு
குண்டு சட்டியில் குதிரை ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.


இறைவன் ஒவ்வொரு முறையும் நாம் இருக்கும்  குண்டு சட்டியை (உடலை)உடைக்கிறான். அப்போது உண்மை புரிகிறது. 


அனால் அந்த உண்மை மின்னல்போல் உடனே மறைந்துவிடுகிறது 

நம்முடைய மனதில் எண்ணங்கள் அப்படியே இருப்பதால் அதிலிருந்து வெளிவர முயற்சி செய்ய மீண்டும் மற்றொரு குண்டு சட்டியை அளிக்கிறான்.

 முட்டையை  உடைத்துக்கொண்டு பறவை வெளிவருவதுபோல் நாமும் கணக்கற்ற பிறவிகளாக  நாமே  நாமே சுற்றிக் கட்டிக்கொண்ட கோட்டையை உடைத்தெறிந்துகொண்டு விடுதலை பெறும்  வரையில் இந்த குண்டு சட்டிக்குள்தான் கிடந்தும் துன்பம், வேதனைகள், சோதனைகள், போன்ற தீயில் வறுபடத்தான்  வேண்டும். பஞ்ச  பூதங்களால் துன்பத்து ஆளாகித்தான் தீரவேண்டும்.

குண்டு சட்டியை உடைத்துக்கொண்டு வெளியே வரும் சுதந்திர காற்றை சுவாசித்து ஆனந்தமாக் வாழும் வழியை நாடுவோம்.

படங்கள்-நன்றி google



Tuesday, September 9, 2014

கண்ணா கண்ணா என்று

கண்ணா கண்ணா என்று


கண்ணா கண்ணா என்று
அவன்  காலடியில் விழுந்தபின்
கள்ள மனமே கன்னா பினனா
என்ற சிந்தனைகள் உன் உள்ளே
புக இடம் தரலாமோ?

உண்மைப் பொருள்
அவனென்று உணர்ந்தபின்
தோன்றி மறையும் உலகப்
பொருட்கள் மீது மோகம்
கொண்டு விலங்குகள்போல்
அங்குமிங்கும் வீணே
அலைவது முறையாமோ?

காக்கும் கடவுளாம் கண்ணன்
அருகிருந்தும்
சூதும் வாதும் வேதனை செய்யும்
என்ற தர்மம் அறிந்திருந்தும்
சூதாடி அனைத்தையும் இழந்து
அல்லல்பட்ட தருமரைப் போல்
மனமே நீ இருக்கலாமோ?

வாழ்க்கைப் போரில் வாகை சூட
கண்ணனின் கீதை வழி காட்ட
நமக்கிருந்தும் அதை நாடாது
போதையில் ஆழ்த்தி நரகத்தில் தள்ளும்
பேதைகள் கூறும் மொழிகளை நாடி
மோசம் போகலாமோ?

அனைத்தும் அவனே என்றான் கண்ணன்
ஆனால் நாமோ அனைத்தும் எனதே
என்று வீணே என்று கோட்டை கட்டி
அரிதான மனித பிறவி கிடைத்தும்
அவன் புகழ் பாடாது
அவன் அருளை நாடாது அனைத்தையும்
கோட்டை விடுவது அறியாமையன்றோ?



குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்டவன் 
ஊழல் செய்யும் பேர்வழிகளை கூண்டோடு அழிப்பவன் 
செந்தழல்போல் துன்பம் தரும் இவ்வுலக துன்பங்களை நீக்குபவன் 
அழியாப் பதம் தந்து ஆனந்தத்தில் திளைக்கச் செய்பவன் 
என்றும் அவன் புகழ் பாடு மனமே !

அனைத்தும் அவன் மாயை என்றாலும்
நம்மை  மாயையிலிருந்து விடுவிக்கும்
அந்த மாயவன், மாலவன், மாதவன்,
முகுந்தன், கண்ணனின்  நாமம் சொல்லுவோம்
மூச்சிருக்கும் வரை பேச்சிருக்கும்வரை

தாபங்கள் அகல,பாபங்கள் அழிய 
தடைகள் நீங்க என்றும் அவன் தாள்களை
மறவாது பற்றி உய்வோம்.