Monday, December 15, 2014

ஆண்டாள் காட்டும் அருட்பாதை (2)


 ஆண்டாள் காட்டும் அருட்பாதை (2)

  


வையத்து  வாழ்வீர்காள்  நாமும்  நம்பாவைக்கு (ச் )

செய்யும்  கிரிசைகள்  கேளீரோ  பாற்கடலுள்

பைய (த்   )  துயின்ற  பரமனடி  பாடி

நெய்யுண்ணோம்  பாலுண்ணோம்  நாட்காலே  நீராடி

மையிட்டு  எழுதோம்  மலரிட்டு  நாம்  முடியோம்

செய்யாதன  செய்யோம்  தீக்குறளை (ச்  ) சென்றோதோம்

ஐயமும்  பிச்சையும்  ஆந்தனையும்  கை  காட்டி

உய்யுமாறெண்ணி  உகந்தேலோ ரெம்பாவாய்
.


 நாம் பிறந்த இந்த பூமி
அனைவருக்கும்  சொந்தம்

யாரும் வானத்தில் பிறப்பதில்லை.

மனிதர்கள் எந்த மதத்தைச்   சார்ந்தவாராய் இருப்பினும்
மண்ணில்தான் பிறப்பெடுக்க வேண்டும்.
மண்ணுக்குள்தான் போக வேண்டும்.

இருந்தாலும் இந்த உண்மையை
எல்லோருக்கும் தெரிந்தும்
ஏற்றுக்கொள்வதில்லை.

அவரவர் அவரின் கொள்கைகள்தான் உயர்ந்தது,
என்று வீண் வாதம் செய்கின்றனர்.
அதிலேயே மூழ்கி வீணே மடிந்து போகின்றனர்.

ஆனால் பூமிதேவியாகிய ஆண்டாள்
அனைத்து  உயிர்களையும்
தன் குழந்தைகளாகத்தான் பாவிக்கிறாள்.

அனைவரும் இந்த உலகத்தில்
பிறவி எடுப்பது வாழ்வதற்காகவே

அதுவும் வாழ்வாங்கு வாழ்வதற்காகவே.

ஆனால் மனிதர்கள் நடந்துகொள்ளும் விதம்
அதற்க்கு மாறாகவே உள்ளது

இந்த உலகில் பெரும்பாலான மனிதர்கள்
தான் மட்டும்தான் வாழவேண்டும்
என்று நினைக்கிறார்கள்.

சிலர் தான் வாழ பிறரை அழிக்கிறார்கள்.

நல்ல உள்ளம், அன்புள்ளம் கொண்டவர்கள் மட்டும்தான் தானும் வாழ வேண்டும் தன்னைப்போல மற்றவர்களும் வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் இறை நினைவிலே தன்னை ஆட்படுத்திக்கொண்ட
ஒருவர் தன்னை பற்றி சிந்திப்பதேயில்லை.

மற்றவர்களின் நலனைப் பற்றியே எப்போதும் சிந்திக்கின்றனர்.

அவர்களின் எண்ணத்தினால்தான்
இந்த உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது.
அவர்கள் தெய்வமாகவே  போற்றப்படுகிறார்கள்.

நாம் அப்படி இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
பிறருக்கு கேடு.  செய்யாமல் இருந்தால் போதும்.

அந்த எண்ணமே  நம்மை அடுத்த  உயர்ந்த நிலைக்கு
நம்மை  அழைத்துச் செல்லும்.

ஆண்டாள் இந்த உலகில் வாழுகின்ற
அனைவருக்கும் சொல்லுகின்றாள்.




பெண் குழந்தைகளை நாம்  போற்றவேண்டும்.
அவர்களை நாம் மதிக்க வேண்டும்.
அவர்களுக்கு நாம் எந்த விதமான
தீங்குகளையும் செய்யக்கூடாது.

ஏனென்றால் அவள்தான் உயிர்களை
பெற்றெடுக்கும் தாயாகிறாள்.

தன் உதிரத்தை பாலாக கொடுத்து வாழ வைக்கிறாள்.
அவள் தன்னை  மறந்து தன் குழந்தைகளுக்காகவும்,
கணவனுக்காகவும், சுற்றங்களுக்காகவும்,
இந்த  சமூகத்திற்காகவும் தன் இறுதி மூச்சு வரை
தியாகம் செய்கிறாள்.

அதனால்தான்பரமசிவன்
பார்வதிக்கு  தன்  உடலின் பாதியைத் தந்தான்.
பிரம்மனோ கலைமகளை தன் நாவில் வைத்தான்,
பரந்தாமனோ இலக்குமியை தன்  இதயத்தில் வைத்தான்.


அதனால்தான் ஆண்டாள் சொல்லுகிறாள்.

நாவில் சரஸ்வதி குடியிருப்பதால்
அந்த நாவைக் கொண்டு தீய சொற்களை பேசக்கூடாது
அதைக்கொண்டு பரந்தாமனின் புகழ் பாடி
நன்மையை அடையவேண்டும் என்று சொல்லுகிறாள்.




பெண்களை காம எண்ணங்களோடு பார்க்கக்கூடாது
என்பதற்காக புற அழகு பூச்சுக்களை இந்த உத்தமமான மாதத்தில் விட்டொழித்து இறை சிந்தனையோடு இருந்து உயரிய நிலையை அடையுங்கள் என்கிறாள். ஆண்டாள்.





ஐயம் என்பது நாம் பிறருக்கு அளிப்பது .
அவ்வை பிராட்டி நாம் உணவை உண்பதற்கு முன்
பசித்த ஒருவருக்கு அளித்தபிறகுதான் உண்ணச் சொல்கிறாள்.
வள்ளுவனோ தனக்கு கிடைத்த உணவை நம்மை சுற்றியுள்ள
உயிர்களுக்கும்   அளித்து எஞ்சிய உணவை உண்ணச்  சொல்கிறார்.
பசித்த உயிருக்கு உணவளிப்பது அந்த பரந்தாமனுக்கே அளிப்பது
என்று திருமந்திரம் கூறுகிறது.
பிரம்மச்சாரிகள், துறவை மேற்கொண்டவர்கள் மட்டும்தான்
பிச்சையெடுத்து உண்ண  வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இரண்டு செயல்களையும் முறையாக செய்து ஒவ்வொருவரும்
உய்யும் வழியை நாட வேண்டும்.

நாம் அனைவரும் இறைவன் உகக்கும் செயல்களை செய்ய வேண்டும்.
அப்போதுதான் உண்மையான மகிழ்ச்சியை அடைந்து இன்புற முடியும்.


இந்த இரண்டாம் பாசுரத்தில் ஆண்டாள் கூறிய உட் கருத்தை நினைவில் கொண்டு நம்மை உயர்த்திக் கொள்ளவேண்டும் பிறர் மகிழ்ச்சியில்தான் தங்களின் மகிழ்ச்சி அடங்கியுள்ளது என்பபதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.




Sunday, December 14, 2014

ஆண்டாள் காட்டும் அருட் பாதை (1)


ஆண்டாள் காட்டும் அருட் பாதை (1)





கோவிந்தனுடன் கலந்துவிட்ட
கோதை மொழிந்த திருப்பாவைதன்னை
அதிகாலை தன்னில் துயிலேழுந்து
அரங்கனின் சன்னதிதியில்
அவனடியார்களோடு   கூடி
ஆனந்தமாய் இசைப்போர் வாழ்வில்
அற்புதங்கள் நிகழும் அவனருளும் கிடைக்கும்
நோய்க்கு  இடமில்லா நல்வாழ்வு அமையும்
சான்றோர்களின் வாழ்வே இதற்க்கு  சாட்சி

அரங்கனின் அடியார்கள்  ஆவலுடன்
எதிர்பார்த்த மார்கழி திங்கள் வந்துவிட்டது
அனைவரின் மனதிலும் பக்தி பரவசத்தை
ஏற்படுத்த 16.12.2014 அன்று.

கடந்த ஆண்டு கோதையின் அருளினால்
அருட்பாவை தந்த திருப்பாவைக்கு இவன்
புரிந்துகொண்ட வகையில் கண்ணனின்
அருளைப் பெறுவது பற்றி எழுதினேன்.

 31.12.2014 அன்று  காலையில்  காலன் என் காலை பற்றி
என் காலத்தை முடிக்க பற்றினான்.

ஆனால் நானோ அவன் இரு பாதங்களைப் பற்றிய
பக்தன் என்பதை அவன் மறந்து போனான் போலும்!

கோதையின் பாசுரங்களுக்கு விளக்க உரை எழுதி வந்த இவனை
அந்த கோதை போற்றும் கண்ணன் கண்ணிமைக்கும்  நேரத்தில் உயிரைக் காப்பாற்றினான்.

விபத்திலிருந்து மீண்ட மூன்றாம் நாளே மற்ற பாசுரங்களுக்கும் விளக்க உரையை எழுதி முடிக்கும் பாக்கியத்தை  பாக்கிய லக்ஷ்மி கோதை  அளித்தாள்

தரணியில் எத்தனையோ பேரறிஞர்கள், ஆசான்கள் திருப்பாவைக்கு உரை செய்துள்ளனர். அவர்களிடையே இந்த மூடனின் முயற்சியையும் .நல்ல உள்ளங்கள்,பல ரசித்தன பாராட்டின .நன்றிகள் அவர்களுக்கு

ஓராண்டு  ஓடிவிட்டது.காலில் பட்ட அடி என்னை முடவனாக்கிவிடுமோ என்று பயந்தனர் என்மீது பாசம் கொண்டோர்.

ஆனால் நம்பியவர்களை நட்டாற்றில் விடுபவனல்லவோ நம் நாராயணன் இன்று இவன் நடக்கின்றான் மெதுவாக. விரைவில் முன் போல் நன்றாக நடப்பேன். நம்பிக்கை எனக்கிருக்கிறது  .தும்பிக்கையான்  அதை நிலை நிறுத்தவேண்டும். சக்திஅருளும், சங்கரனின் ஆசியும், குகனின் சக்தியும் துணை நிற்க வேண்டும்.  

இவ்வாண்டும் கண்ணுக்கு இனியானை,  கருத்துக்கு பொருளாய் உள்ளானை சிந்திப்பது பெரு  மகிழ்ச்சியை தரும்  என்ற காரணத்தினால் எழுத உள்ளேன்.

பக்தர் குழாம் பரமனைப் பாடி
பரம சந்தோசம் அடைந்திடவே
பாரெங்கும் எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்ந்திடவே
அன்பு நெறி தழைத்திடவே
அனைவரும் அரங்கனின் திருவடிகளில்
பிரார்த்தனை செய்வோமாக.




முதல் பாசுரம்.

மார்கழித்  திங்கள்
மதி  நிறைந்த  நன்னாளால்
நீராடப்  போதுவீர் !
போதுமினோ,  நேரிழையீர்!
சீர்மல்கும்  ஆய்ப்பாடிச் 
செல்வச்  சிறுமீர்காள்!
கூர்வேல்  கொடும்  தொழிலன்
நந்தகோபன்  குமரன்
ஏரார்ந்த  கண்ணி
யசோதை  இளஞ்சிங்கம்
கார்மேனி  கதிர்  மதியம்
போல்  முகத்தான்  நாராயணனே
நமக்கே  பறை  தருவான்
பாரோர்  புகழப்  படிந்தேலோ  எம்பாவாய்

மழைக்காலம் முடிந்தது.
காணுமிடமெல்லாம். பச்சை மா மலைபோல்
படுத்திருக்கும் பரந்தாமனின் தோற்றத்தை
நினைவு படுத்தும் பசும் புல்வெளிகள்.

நிரம்பி நிற்கும் நீர் நிலைகள்
அதைக் காணும் நம் மனமும்
மகிழ்ச்சியால் நிரம்பி தளும்பும்
இன்ப அலைகள்.

ஆதவன் எழும் முன்னே யாதவனின் தலைவனாக
விளங்கிய மாதவனை கோயிலில் கண்டு தரிசித்து
அவன் புகழ் பாடி பரவசமூட்டும்  மார்கழி மாதத்தின்
பனி படர்ந்த காலை வேளை .

பிறவியெடுத்த நாம் பிறவிப்பயனை அளிக்கும்
பிரம்மனும் ஆராதித்த பேரருளாளனை   கண்டு
தரிசித்து அவன் புகழ் பாடாவிடில் முகத்தில்
அவன்  நமக்கு அளித்த கண்கள் எதற்கு?

பிறர் முன் நடித்து நடித்து நாம் யார் என்பதையே
மறந்துபோனோம்.பல பிறவிகளில்

இப்பிறவியிலும் அந்த தவற்றைச்
செய்யலாமா?

நம்மையெல்லாம் உய்விக்கவே அவனே
மார்கழி மாதமாக ஆனான் .அப்படியிருக்க
அவனை அதிகாலையில் தொழாது உறங்குவதால்
யாது பயன்?

இறந்த பிறகு ஒன்றும் செய்யாமல்
மறு பிறவி கிடைக்கும் வரை வீணே
உறங்கத்தானே போகிறோம்?

அதிகாலைக் குளிரில் ஆனந்தமாக நீராடி அவன் நினைவாய்
புற சின்னங்கள் தரித்து அவன் குடி கொண்டுள்ள கோயிலுக்கு சென்று
வழிபட புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

அவன் கதிர் மதியம் போன்றவன் என்கிறாள் ஆண்டாள்

 நாம் குளிரில் நடுங்கி அங்கு சென்றால் அவனைக் கண்டதும் உடலில் வெப்பம் உண்டாகியதால் குளிர் அகன்று விடும். அவன் மதி போன்ற முகத்தை கண்டதும் உள்ளம்  குளிர்ந்துவிடும்.

நாராயணன் மட்டும் தான் நாம் கேட்பதை
எல்லாம் தருவான்  என்கிறாள் ஆண்டாள்.

மற்ற தெய்வங்கள் எல்லாம் அவரவர்கள்  சக்திக்கும்
 எல்லைக்கும் உட்பட்ட வரங்களை மட்டும்தான் தர  இயலும்.

ஆனால் நாராயணன் மட்டும்தான் கொடுப்பதற்கென்றே தன்னை ஆட்படுத்திக்கொண்டிருகிறான். அதற்காக ஒரு முழு மாதத்தையே ஒதுக்கி விட்டான். அப்படியிருக்க நாமெல்லாம் அந்த வாய்ப்பை  பயன்படுத்திக்கொள்ள வேண்டாமா?

நம் மூச்சு காற்றுள்ளவரை அவன் நாமத்தை ஓதி வந்தால்
நஞ்சைக் கக்கும்  அரவத்தின்மேல் சயனம் கொண்டிருக்கும் நம்
பெருமான் நம் நெஞ்சில் தேக்கி வைத்துள்ள
நச்சுக்களை நீக்கி விடுவான்

விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்த நாம்
அந்த மண் மடந்தையாம் கோதை நமக்கு தந்த
அருட்பாவையை பாடி அரங்கனின் அருளைப் பெறுவோம்
வாருங்கள். அனைவரும்.

படங்கள்-நன்றி-கூகிள்

Wednesday, December 10, 2014

இறைவன் ஒருவரே

இறைவன் ஒருவரே
 
 

உலகில் பல மதங்கள் உள்ளன.


தரணியில் தன்னைப் படைத்தவன்
ஒருவன் இருக்கின்றான் அவனை
உணர்ந்துகொண்டு உய்ய வேண்டும் என்பதற்காக
பல தீர்க்கதரிசிகளால் அந்தந்த  கால் நிலைக்கேற்ப
வடிவமைக்கப்பட்டு மக்களிடையே புகுத்தப்பட்டன.

மனிதர்கள் தனியாக வாழாமல் ஒரு கூட்டமாக
சேர்ந்து வந்தால் ஒரு பாதுகாப்பாக இருக்கும் என்பதை உணர்ந்த நிலையில் மதம் அவர்களுக்கு இணைக்கும் பாலமாக அமைந்தது.

ஆனால்  அதுவே காலபோக்கில் ஒரு கூட்டம் மற்ற மதத்தை
பின்பற்றியவர்களை தங்கள் கூட்டத்தில் சேர்ப்பதற்கும், எதிர்ப்பவர்களை அழித்து ஒழிக்கும் ஆதிக்க மனப்பான்மையை  வளர்த்து இன்று இந்த உலகம் மத வெறியர்களின் கையில் சிக்கிசின்னா பின்னமாகி  கொண்டிருக்கிறது.

அதனால் இன்று உலக அமைதி கேள்விக்குறியாகிவிட்டது.
பண்பும், அன்பும் ,மற்றவரோடுஇசைந்து  வாழும் இனிய குணமும் ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலிருந்தும்  எங்கோ போய்விட்டது.

மத மாற்றங்கள் எந்த பயனையும் விளைவிப்பதில்லை.
அது மனிதர்களை ஒரு குறிப்பிட்ட வளையத்திற்குள்  சிக்க வைத்து விடுகிறது

உடைகளை மாற்றிக்கொண்டாலும், புற சின்னங்களை மாற்றிக்கொள்வதாலும் பலன் ஏதும் விளையப்போவதில்லை.

எந்த மதத்தை சார்ந்தவர் எனினும் எல்லோருக்கும் ஒரே இறைவன் ஒன்றே என்ற சீரடி சாயி பாபாவின் கொள்கை ஒவ்வொருவரின் மனதிலும் பதிந்தால்தான் வேற்றுமை எண்ணங்கள் ஒழியும்.மற்ற மதத்தினரை வெறுப்புடன் பார்க்கும் எண்ணம் விலகும்.

அதிலிருந்து அவர்கள் வெளி வருவது மிகவும் கடினம்

நம்மைப் படைத்த இறைவன்தான் தீய எண்ணம் கொண்டவர்களின் இதயத்தில் அன்பை விதைக்க வேண்டும். இல்லாவிடில் மனித குலத்தின்
துன்பங்களுக்கு தீர்வு இல்லை.

பகவத் கீதைக்கு அரசின் அங்கீகாரம் எதற்கு?

பகவத் கீதைக்கு அரசின் அங்கீகாரம்  எதற்கு?




பகவான் கண்ணன் இந்த உலக மக்களுக்கு அளித்த
பகவத் கீதைக்கு அரசின் அங்கீகாரம் எதற்கு?

தேவையற்ற கூச்சல்களும்
குழப்பங்களும் தேவையில்லை.

மனம் போன போக்கில் எவர் எதை
வேண்டுமானாலும்
சொல்லிக் கொண்டு திரியட்டும்.

அடுத்த நாள் அவர்கள்  மற்றொரு பிரச்சினையைத்
தூக்கி கொண்டு அலையட்டும்.

கீதை எல்லா நோய்க்கும் மருந்து. 

உடலில் பற்றிய பிணிக்கும், உள்ளத்தில்
கணக்கற்ற பிறவிகளாக நம்மை
பற்றிக்கொண்டு தொடர்ந்து துன்பத்தில்
வைத்துக்கொண்டிருக்கும் பிணிகளையும் ஒருசேர
ஒழிக்கும் தன்மை கொண்ட அற்புத மருந்து
என்றும் குறையாத நிறைவான் ஆனந்தத்தை
அளிக்கும் மருந்து.

நோய் தீரவேண்டும் என்ற வேட்கை கொண்டவன் 
அதை நாடி நலம் பெறட்டும். 

மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் போகட்டும்.

எல்லாவற்றிக்கும் நேரம் காலம் வரவேண்டும்.
அப்போதுதான் எதுவும் பயனளிக்கும்.

பல நூறு சுலோகங்களைக் கொண்ட கீதைக்கும் காலம் காலமாக
எத்தனையோ ஆசிரியர்கள்விளக்கம் எழுதி வைத்திருக்கிறார்கள்.
இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் எழுதுவார்கள்.

எல்லாவறையும் படித்து புரிந்துகொண்டு
அதன் உண்மைகளை மனதில் கொண்டு
செயல்படுத்தியவர்கள் மிக சிலரே.

அதைப் பற்றியெல்லாம் பாமரர்களாகிய
 நாம் ஏன் கவலைப்படவேண்டும். ?

கீதை வலியுறுத்துவது இரண்டே கொள்கைகள்தான். 

ஒன்று கடமையை.செய். பலனை எதிர்பாராதே.

இரண்டு. கடைபிடிக்க வேண்டிய தர்மங்கள் கோடி கோடி.

அதை எவராலும் முழுமையாக கடைபிடித்தால் இயலாது.
அதனால் பகவானையே எப்போதும் நினைவில் கொண்டு
அவன் சார்பாக நல்ல செயல்களைசெய்துவந்தால்  போதும்
நான் அவர்களை காப்பாற்றுகிறேன்
என்ற பகவானின் உறுதி மொழி.

இந்த இரண்டையும் நாம் நம் இறுதி காலம் வரை
செய்து வந்தால் போதும்.
இகத்திலும் பரத்திலும்
இன்ப நிலை சத்தியம்.மட்டுமல்ல
சாத்தியமும்கூட 

அரங்கனும் அரக்கனும்

அரங்கனும் அரக்கனும் 






அரங்கனும் அரக்கனும்
இருவருக்கும் ஒரே ஒரு எழுத்துதான்
வித்தியாசம் .அவ்வளவுதான்

ஆனால் செயலில்தான் பெருத்த
வேறுபாடு

அரக்கன் என்பவன் பிறருக்கு
துன்பம் இழைப்பதையே தன்
கொள்கையாகக் கொண்டு
செயல்படுபவன்.

அரங்கனோ அரக்கர்களிடம்  சிக்கி
அல்லல்படுபவர்களை அக்கறையோடு
காப்பாற்றி அரக்கர்களை அழிப்பதையே
தன் உயிர் மூச்சாக கொண்டவன்

உண்மை என்னவென்றால்  அரங்கனும்
அரக்கனும் ஒரே வீட்டில்தான்
வாழ்கிறார்கள்.

அரங்கன் வீட்டின் உள்ளே இருக்கிறான்.
அரக்கன் துவார பாலகன் என்ற பெயரில்
அவன் வீட்டின் வெளியே
காவலுக்கு நிற்கின்றான்.

வைகுண்டத்தில் பரந்தாமனின்
குடிலுக்கு வெளியே காவல் காத்து வந்த
ஜெய  விஜயர்கள்தான் பூலோகத்தில்
ராவணன், சிசுபாலன், போன்ற
அரக்கர்களாய் பிறவி எடுத்து, பிறரை
துன்புறுத்தி பின் அரங்கனின் கையால்
மாண்டனர்.

அதுபோல்தான் நம் இதயத்தின்  உள்ளே
அரங்கன் பள்ளி கொண்டு உள்ளான்.
அவன் வாயில் காப்பாளர்களாக
நல்ல எண்ணங்களாகிய
ஜெயா விஜயர்கள் உள்ளார்கள்.

அந்த வாயில் காப்பாளர்களின் உள்ளத்தில்
அகந்தை குடி கொண்டதும்
அவர்கள் அரக்கர்களாக மாறி பல தீமைகளை
இழைக்கத் தொடங்குகிறார்கள்.
அரங்கனாகிய இறைவன் தண்டனை
அளித்ததும் திருந்தி நல்லவர்களாக
ஆகி விடுகிறார்கள்.

அதுபோல்தான் நாமும் நம் இதயத்தில்
அகந்தை குடி கொள்ள அனுமதித்தால்
நாமும்  அரக்க குணம் கொண்டவர்களாக
மாறி பிறரை துன்புறுத்தி நாமும்
துன்பத்திற்கு ஆளாக நேரிடும்

அவ்வாறு நேராமல் நாம் விழிப்பாக
இருந்துகொண்டால்  நாம் இறைவனின்
அருள் பெற்று  இன்பமாக வாழலாம்.

Sunday, December 7, 2014

எங்கும் நிறைந்தவன் நரசிங்கன்








 எங்கும்  நிறைந்தவன் நரசிங்கன்


​எங்கும்  நிறைந்தவன்
நரசிங்கன்

என்னுள்ளத்தில் என்றும்
குடிகொண்டவன் .

மிடி தீர்ப்பவன்

அடியார்களை கண் இமைபோல்
கருத்தோடு காப்பவன்

ஏற்றம் தருபவன்

எண்ணுவோருக்கு எழிலாய்
காட்சி தருபவன்

என்றும் அவன் பாதம்
சரணங்களே. 

Saturday, December 6, 2014

கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்.

கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்.



மாலையில் இருள் சூழ்ந்தால்
காலையில் கதிரவன் உதயமாகின்றான்
அதை விரட்டிட அனுதினமும்

ஆனால் மனிதர்களின் மனதில்
இருள்  சூழ்ந்தால் அதை
விரட்டுபவர் யார்?

மனதில் சூழ்ந்துவிட்ட இருளை
விரட்ட மாகேசன் ஒருவனைத் தவிர
வேறு யாரால் இயலும்?

இந்த உண்மையை அறிந்த நம் முன்னோர்கள்
காட்டிய வழி ஒளியாய்  விளங்கும்
இறைவனை தரிசித்து வழிபடுவதே

மதங்கள் பலவாயினும் மனிதர்கள்
அனைவருக்கும் ஒளி   ஒன்றே
இந்த உண்மையை  உணர்ந்தோர்
இன்பம் அடைவார்.

 மற்றோர் தானும் துன்பத்திற்கு  ஆளாகி
 இந்த உலகத்தின் அமைதியையும் குலைக்கின்றார்.

அனல் கொதிக்கும் மனமுடையோர் நெஞ்சில்
அன்பு புனல் பாயட்டும் இந்நாளில் அனைத்து
உலக மாந்தரும் அமைதி பெற.

கார்த்திகை தீப நன்னாளில் தீபம் ஏற்றி
வழிபாடு செய்து புறத்தே காணும் ஒளியை
நம் அகத்தே கண்டு ஆனந்தம் பெறுவோம்.