Monday, August 26, 2013

உலகெல்லாம் போற்றும் உத்தமனே

உலகெல்லாம்  போற்றும்  
உத்தமனே 




உலகெல்லாம்  போற்றும்
உத்தமனே
உத்தம   ஞானிகள்
உணர்ந்த  தத்துவமே


அண்டங்களை  எல்லாம்
உதரத்தில்  அடக்கிகொண்டாய்  .
ஆலிலைமேல்  அழகிய  பாலகனாக
உருக்  கொண்டாய்

காண்போர்   மயங்கும்  ‘கண்ணன் ”
என்னும்  வடிவு  கொண்டாய்

வெள்ளம்போல்
துன்பம்  வந்திடினும்
வெண்ணையைபோல்  
மனம்  உருகி
பக்தர்களை
தடுத்தாட் கொண்டாய்

அண்ட   சாராசரங்களை  தன்
கட்டுப்பாட்டில்  வைத்திருப்பவனே
கள்ளமற்ற  யசோதை  என்னும்
தாய்க்காக  உரலில் கட்டுண்டவனே


 


கண்ணா  உன்  லீலைகளை
என்றும் என்  நெஞ்சில்
நினைந்து  இன்புறுவேன்

என்ன  சொல்லி
உன்னை   புகழ்வேன்
அடியார்கள்  மீது
நீ  காட்டும்
காருண்யத்தை

என்  எண்ணமெல்லாம்
உன்  நாமம்  நிறைந்துவிட்டால்
வண்ணம்போல்   அல்லவா
வளமான வாழ்வு  மலரும்
என்றுணர்ந்தே  
எந்நேரமும்  செப்புகின்றேன்
உன்  திருநாமம்

Pic.courtesy-google images.

என்றும் துணை வரும் நரசிங்கா

என்றும் துணை வரும் நரசிங்கா 


தூய  பக்தனாம்
 பிரகலாதனுக்காக
தூணிலே அவதரித்த நரசிங்கா

சிதையில் சிக்கிய
சங்கரனை கை கொடுத்தாண்ட நரசிங்கா

சாகா வரம் பெற்று அனைவரையும்
துன்புறுத்திய துஷ்டன்
ஹிரணியகசிபுவை
வதம் செய்த நரசிங்கா

குன்றின்மேல்
உறைபவனே
குன்றுபோல்
குவிந்து கிடக்கும்
அடியார்களின்
 பாவக்குவியல்களை
அகற்றுபவனே

தூய பக்தியுடன்
உன்னை துதிப்போர்க்கு
என்றும் துணை வரும் நரசிங்கா

உன் திருவடிகளை நம்பியே
போற்றி செய்தேன் எந்நாளும் காப்பாய்
எந்த துன்பமும் வாராமல்.

pic.courtesy-google images 

Saturday, August 24, 2013

எதற்கு ?

எதற்கு ?

அகிலமனைத்தும் உன் வடிவாய் இருக்க
அதை உணராது ஆலயங்களில் மட்டும்
நீ   இருப்பதாக கொண்டு வணங்குவது எதற்கு?

உறங்குவதுபோல் உறங்காமல் விழி
மூடியிருப்பதுபோல் பாவனை செய்து
பாம்பணையில்  படுத்துறங்கும்  பரந்தாமனுக்கு
உரக்க வாய்விட்டு கூப்பாடு போட்டு
பிரார்த்தனை  செய்வது எதற்கு?

மூன்று கண்ணையும் மூடிக்கொண்டு எப்போதும்
தியானத்தில் அமர்ந்து மோனத்தில் திளைக்கும்
முக்கண்ணனுக்கு மணியோசை எழுப்பி
மத்தளங்கள் தட்டி பூஜை செய்வது எதற்கு?

அண்டத்தை படைத்தவளாம் அகிலமெங்கும்
நிறைந்தவளாம் ,ஒவ்வொரு உயிருள்ளும்
இருந்து இயக்குபவளாம்   அன்னை பராசக்தியை
அழுது,தொழுது, ஆர்பாட்டமான
பூஜைகள் செய்வது எதற்கு?

பொய்யான  இவ்வுடலில் உறையும் வாலையே
மெய்யான தெய்வம் என்று
வாழையடிவாழையென
வந்துதித்த சித்தர்கள் பலரும்
செப்பிய மொழிதன்னை மறந்து புறவுலகிலே
அவளை தேடி மாய்கிறது மனிதர் கூட்டம்.

இறை வடிவம் இந்தஉடலென்றால்
அதனுள்ளே உறையும்
ஆன்மா இறைவனன்றோ?

வடிவத்தில் செலுத்தும் மனதை
உள்ளே உறையும் ஆன்மா மீது செலுத்துவீர்
அருளையும்  ஆனந்தத்தையும் பெறுவீர்.

நம் இதயத்திற்குள் ஒளிரும்  தெய்வம்
அங்கிங்கெனாது எங்கும் நிறைந்துள்ள தெய்வம்
உள்ளத்தில் உணர்வோடு அன்போடு
அனைத்து உயிர்களிடம் அன்பு காட்டி
நினைத்து போற்றினால்போதும்
அக்கணமே அருள் செய்யும் அந்த தெய்வம். 

Thursday, August 22, 2013

முருகா வந்தருள் தருவாய் உன்னருள்

முருகா வந்தருள் 
தருவாய் உன்னருள் 





இவ்வுலகிற்கு எங்கிருந்து
வந்தேன் நானறியேன்

மீண்டும் எங்கு செல்வேன்
என்றும் நானறியேன்

உறக்கத்திலும் மயக்கத்திலும்
எங்கு சென்றேன்
என்பதையும் நானறியேன்

அன்றாடம் நடக்கும்
இச்செயல்கள்
ஆச்சரியத்தை
அளிக்குதையா முருகையா

அழியும் உடலின் மீது
அடக்கவொண்ணா
மோகம் ஒவ்வொரு கணமும்
அதனால் அடைந்தேன்
பல பல சோகம்

இன்பந்தனை தேடுகின்றேன்
இவ்வுடல்மூலம்
துன்பந்தனைதான்
பரிசாகப் பெற்றேன்

எத்தனைமுறை அடைந்துவிட்டேன்
கணக்கற்ற துன்பங்களை
இந்த உடல்மூலம்

இருந்தாலும் அதிலிருந்து
விடுபட மறுக்குதையா
கந்தையா இந்த பாழும் மனம்

என்ன செய்வேன்
 யாது செய்வேன்
இந்த நச்சு மனதின்
ஆசைகளிலிருந்து விடுபட்டு
மாறாத நிலைத்த இன்பம் பெற

சித்தரும், முத்தரும்
போற்றிப் பணியும் முருகா

பித்தராய் உன் புகழ் பாடி
திரியும் அடியவர்கள்
வணங்கும் வேலவா

என் போல் பக்தர்களுக்கும்
 எளிதில் இறங்கும்
தணிகைநாதா

என்னை விடுவிப்பாய்
உலக மாயையிலிருந்து
இவன் வேண்டுதலை ஏற்று.



நினைத்தாலே இன்பம் தரும் நிர்மலனே

நினைத்தாலே 
இன்பம் தரும்  நிர்மலனே 





சிலையாய்
நின்று அருள்வோனே

மலைமேல் நிற்கும்
வேங்கடவனும் நீதான்
மதில் சூழ் காவிரி  நடுவில்
பள்ளிகொண்ட
அரங்கனும் நீதான்

குருவாயூரில் குழந்தையாய் கையில்
குழலோடு வெண்ணையுடன் காட்சி
தந்தருள்பவனும்  நீதான்.

காண்போரைஎல்லாம்
ரமிக்க  செய்யும் ராமனே
கள்ளமில்லா உள்ளங்களில்
உறையும் தூயவனே

நாமம் சொல்லச் சொல்ல
காமம் அகற்றிடுவாய்
உந்த திருவடியை சிந்திக்க சிந்திக்க
பாவங்கள் களைந்திடுவாய்.

வாடாமலர் மலர் போல் காட்சி தரும்
வானவர்களின் தலைவனே
ஒளியாய் அனைவரின் உள்ளும்
ஒளிரும் ஓங்காரநாதனே

என்றும் உன் நாமம்
என்  நாவில் இருக்கட்டும்

என் கண்கள் உன் அழகிய
திருவடிவை காணட்டும்

திக்கெட்டும் உன் புகழ்
என் செவியில் கேட்கட்டும்.

என் ஜீவன்
உன்னோடு
அயிக்கியமாகும்வரை  

Tuesday, August 20, 2013

முதுமை வந்தால் எனக்கென்ன?

முதுமை வந்தால் எனக்கென்ன? 


முதுமையே
நீ ஒரு முற்றிய கோதுமை 

கோதுமை மாவிலிருந்து என் உயிர் வாழ 
சப்பாத்தியாய் ஆவதுபோல் 
கடினமாய் இருந்த என் மனம் 
அன்பு என்னும் ஈரம் கசிந்து 
வாழ்வின் இன்ப அனுபவங்களின் 
ருசியோடும், துன்ப அனுபவங்களின் காரத்தோடும் 
சுவையாக அல்லவோஆகி விட்டது முதுமையிலே ?

முதுமையில் 
கோதுமை அல்வா போல் 
அல்லவா இனிக்கின்றாய் 
அன்பான சுற்றமுடன்,
அழகியபேரக்  குழந்தைகளுடன் 

அன்பை கொடுத்தால் அது 
பன்மடங்காகப் பெருகும் என்பதை அறிந்து கொள்ளுவீர் 
முதுமைக்காலத்தில் இருப்போரே தெரிந்துகொள்வீர் 

அலுத்து கொள்ளாதீர் 
உங்கள் சுற்றி உள்ளவர்களின் 
பொறுமையை சோதித்து 
முதியோர் முகாமிற்கு
தள்ளிவிட செய்யாதீர். 


முற்றியகதிர்தான் 
விதையை தரும்
மீண்டும் முளைக்க 

முதுமைதான் ஒருவனுக்கு 
அருமையான சிந்தனைகளை தரும் 
தானும் பலன்பெற்று தன்னை 
சுற்றியுள்ளோரும் 
பலமும் பலனும் பெற்று வாழ 
படிப்பினைகளை தரும். 

உடலில் சக்தியில்லாவிட்டாலும்
உள்ளத்தில் சக்தி கொண்டு 
நம்மை நாமே  உணர்ந்து 
கொள்ளும் வழியை  நாடுவோம். 

வயிறு முட்ட முட்ட கண்டதை 
எல்லாம் நிரப்பாதீர்.

நாவிலிருந்து 
யாரையும் புண்படும் 
சொற்களை பேசாதீர். 

உங்களை ஏசினாலும் அதை 
பொருட்படுத்தாதீர். 

முக்தியில் நாட்டம் பெற வைக்கும்
முதுமையை போற்றுவோம். 

மூச்சு நிற்கும் மட்டும் 
முக்தியளிக்கும் 
முகுந்தனை மறவாதீர் 

நம்மையெல்லாம் ஆட்டிவைக்கும் 
சிவனை சிந்தனை செய்வீர் 

வினைகளை எல்லாம் விரட்டியடிக்கும் 
வேலனை மறவாதீர். 

அருகிலிருந்து காக்கும் ஐங்கரனை 
அனுதினமும்வணங்கிடுவீர் 

காண்கின்ற பெண்ணினத்தை 
சக்தியாய் கண்டு வழிபடுவீர். 

பிறர் தாழ்வு அடைய நினையாதீர் 
வாய் நிறைய மனம் நிறைய 
வாழ்த்துவீர் அனைவரையும்.

இருக்கும்வரை இனிக்கும் 
இந்த உலக வாழ்வு. 

அதற்க்கு முயலாது முனகும்
முட்டாள்களை பற்றி நமக்கு 
எதற்கு சிந்தனை? 

வினைகளும் விளைவுகளும்

வினைகளும் விளைவுகளும்





வினைகளும் அதன் விளைவுகளும்தான்
எல்லா உயிர்களையும் ஆட்டிப் படைக்கின்றன

ஏதாவது உடலெடுத்து இந்த உயிர்
இந்த உலகத்தில் வந்ததிலிருந்து
உயிர் அந்த உடலை விட்டு நீங்கும் வரை
வினையாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்
என்பது. இறைவன் வகுத்த விதி.

அது அக்றிணைப் பொருளானாலும்
அதற்குள் இருக்கும் ஆத்ம சக்தி அதை இயங்க செய்துகொண்டுதான் இருக்கும். அல்லது இயங்காமல்  இருக்க செய்து  கொண்டு  இருக்கும்

அப்படி வினைகளை செய்யும் போது
விளைவுகள் ஏற்படுவது தவிர்க்க
முடியாத ஒன்றாகிவிடுகிறது

விளைவுகள் இன்பங்களையும்
துன்பங்களையும் மாறி மாறி ஏற்படுத்துகின்றன.

அதோடு மட்டுமல்லாமல் பிறப்பிறப்பு
 சுழலில் உயிர்களை சிக்க வைத்து விடுகின்றன.

சுழலில் சிக்கிகொண்ட ஜீவன்கள்
காலப்போக்கில் தான்  யார்
என்பதையே மறந்து போகின்றன.

தான் ஆன்மா என்பதையே மறந்து தான்
தங்கியுள்ள உடலே தான் ஆன்மா
என்று அழியும் உடலை நம்பி. ஏமாந்து போகின்றன.

இந்த சுழலிலிருந்து தப்பித்து வெளிவர செய்யும்
முயற்சிகளை ஒரு சில ஜீவன்களே மேற்கொள்ளுகின்றன.

மற்ற கோடிக்கணக்கான ஜீவன்கள்
அதை பற்றிய சிந்தனையே இல்லாமல் கண்டதே காட்சி
கொண்டதே கோலம் என்று பல யுகங்கள் அல்லல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அவ்வபோது இறை  தூதர்களும்,
இறைவனும் இவ்வுலகில் அவதரித்து
ஜீவன்களை கடைதேற்ற முயற்சி செய்தும்
அதை பயன்படுத்திக்கொண்டு விடுதலை
பெறுபவர்கள் மிக சொற்பமே.

இந்த நிலைக்கு முக்கிய காரணம்
இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லை.

வினைகளின் விளைவுகளை
அனுபவித்து தீர்க்கவேண்டும்.
அது பற்றிய பதிவுகளை மனதிலிருந்து நீக்க வேண்டும்.
மீண்டும் வினைகளை சேர்த்துக்கொள்ளாமல்
இருக்கவேண்டும் என்று பகவான்  ரமணர் கூறுகிறார்.
அவர் காட்டும் வழி பாமரர்களுக்கு இயலாத ஒன்று.

அதனால்தான் பகவான் கண்ணனோ
எல்லாவற்றையும் விட்டுவிட்டு
என்னையே நினைத்துக்கொண்டு
என்னை சரணடைவாயாக
நான் உன்னை எல்லா துன்பங்களிலிருந்தும்
விடுவிக்கின்றேன். என்று அறுதியிட்டு கூறுகின்றான்.

தான் என்ற அகந்தையை விட்டுவிட்டு  எளிதான
 இந்த வழியை பின்பற்றி மனிதர்கள்
பிறப்பு இறப்பு சுழலிலிருந்து விடுபட வேண்டும்.
அதற்கு அவன் நாமத்தை விடாமல்
எப்போது உச்சரிப்பதே எளிதான மார்க்கம்.