Sunday, September 9, 2012

வள்ளலாரின் வழியும் மனிதர்களும்

வள்ளலாரின் வழியும் மனிதர்களும் 

விழி வழி சென்று இறைவனை தேடுங்கள் என்பது 
வல்லாளாரின் வழி

ஆனால் இக்காலத்தில் மக்களை சிந்திக்க விடாமல் 
குழப்பும் ஊடகங்களும்,உண்மையை அறிய விடாமல்
மக்களை தடுத்து அவர்கள் பிடியில் வைத்திருக்கும் 
போலி சாமியார்களும் உண்மையை அறியாது
அனைத்தும் உணர்ந்தவர்கள் போல் பிதற்றிக்கொண்டு 
தமக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு 
உலா வரும் போலி ஆன்மீகவாதிகளும் 
போதாகுறைக்கு நாத்திகவாதிகளும், அரசியல்வாதிகளும் வேறு 
நிறைந்த உலகில் வள்ளலாரின் பாதை எளிதாயினும்
அது கடினமானதாகவே இவ்வுலக மாயையில்
மூழ்கியுள்ள மக்களுக்கு தோன்றும்.
 
அகமும் புறமும் கலந்ததுதான் இவ்வுலக வாழ்வு
விழித்திருக்கும் நேரமெல்லாம் புறத்தே அலையும் மனது 
உறங்கும்போது கனவிலும் புற உலகின் பதிவுகளைத்தான் 
அசைபோட்டுகொண்டிருக்கிறது. 

ஆழ்ந்த உறக்கத்தில் அடையும் அமைதி 
விழித்தவுடன் கண நேரத்தில் மறைந்துவிடுகிறது 
மீண்டும் நாம் நம்மை சுற்றியுள்ள உலகத்தோடு 
நம்மை இணைத்துக்கொண்டு அனைத்தையும் 
மறந்து அதனுடன் ஒன்றி போய் விடுகிறோம் 
 
ஒரு செவிலித்தாய் தன் எஜமானரின் குழந்தையை 
தன் குழந்தை போல் பாராட்டி சீராட்டி வளர்த்தாலும் 
அது தன் குழந்தையல்ல ,அதன் மீது தனக்கு எந்த 
உரிமையும் கிடையாது என்பதை எப்போதும் மனதில் 
கொண்டுதான்செயல்படுவாள்.

ஆனால் மனிதர்கள் அவ்வாறு நினைப்பதில்லை 
இறைவன் கொடுத்த அனைத்தையும் தனதென நினைத்துகொண்டு 
உரிமை கொண்டாடி கிடைத்தால் மகிழ்ச்சியும் இழந்தால் துக்கமும்,பிரிந்தால் துயரமும்,பறித்தால் கோபமும்,வெறுப்பும் கொண்டு வாழ்நாள் முழுவதும் துன்பத்தில் மூழ்கி கிடக்கிறார்கள்.சுயநலத்தின் உச்ச கட்டத்தில் மற்றவர்களின் சொத்துக்களையும் அபகரிக்கவும் செய்கிறார்கள் அகந்தையினால் பிறன் மீது ஆதிக்கம் செலுத்தி பிறரை துன்புறுத்தி மகிழ்கிறார்கள். 

இந்த மாயையிலிருந்து மீள நம் முன்னோர் 
சில வழி முறைகளை வகுத்து தந்துள்ளார்கள் 
 மானிடர்கள் புற உலகில் கோயில்களுக்கு
சென்று இறைவனை வணங்குவதும் 
வீட்டில் பூஜைகள் முதலியவற்றை செய்வதும் 
அகத்தில் இருக்கும் இறைவனை உணர 
வழி வகுக்கத்தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்
.
எனவே அவைகள் பயனற்றவை என்று சிலர் கூறுவதுபோல் 
அந்த வழிபாட்டு முறைகளை ஒதுக்குவது சரியல்ல

ஒவ்வொரு உயிரின் மனமும் பலவிதமான 
அனுபவ நிலைகளை கொண்டது.
அவற்றின் முதிர்ச்சிக்கேற்ப ஞானத்தை 
அடையும் வழிகள் மாறுபடும் 
எனவே வள்ளலார் வழிதான் சிறந்தது மற்ற 
வழிகள் பயனற்றவை அல்லது பலன் தராதவை 
என்று ஒரு சிலர் வாதிடுவது முறையல்ல. 
வள்ளலாரும் உருவ வழிபாடுகள் செய்துதான் 
ஜோதி வழிபாட்டிற்கு சென்றுள்ளார். 

அவரவர் ஒவ்வொரு நிலையையும் அனுபவித்து
கடந்த பின்தான் கடமாகிய இவ்வுடலில்
உறைந்துள்ள இறைவனை அறிய இயலும்
.
பள்ளியில் கோடிக்கணக்கான மாணவர்கள் பயில்கிறார்கள். 
அனைவரும் அறிவாளிகள் ஆகிவிடுவதில்லை 
ஆன்மீக கல்வி பெற்றவர்கள் அனைவரும் 
ஞாநிகளாகிவிடுவதில்லை

படித்தவர்கள் பல விஷயங்களில் முட்டாள்களாகவும்
முட்டாள்கள் பலவிஷயங்களில் படித்தவர்களை விட
திறமை மிக்கவர்களாகவும்  விளங்குகிறார்கள்.  

ஞானத்தை தேடுபவன் அதற்க்கு முன் அவன் 
தன்னை தயார்படுத்தி கொள்ளவேண்டும்
சிலவற்றை கொள்ள வேண்டும் பலவற்றை தள்ள வேண்டும் 

உள்ளத்தில் உண்மை வேண்டும், நம்பிக்கை வேண்டும்,
சிந்தனையில் தெளிவு வேண்டும் .
தெளிந்தபின் மனதில் உறுதி வேண்டும். 
அனைவரிடமும் அன்பு வேண்டும். 

இவை போன்ற அடிப்படை குணங்கள் இல்லாது 
வெறும் புத்தக அறிவை மட்டும் கொண்டும்,
அவர் இப்படி சொன்னார்,இவர் இப்படி சொல்கின்றார் 
என்று ஒவ்வொருவர் சொல்லுவதையும் கடை பிடிக்க 
ஒருவன் தொடங்குவானானால் அவ்வாறு   ஆன்மீகத்தில் 
பிரவேசிப்பவன் இறுதி வரை 
ஒரு வழிப்போக்கனாகத்தான்  இருப்பான்.
வழியை காணமாட்டான்.  
 

.

1 comment:

  1. /// படித்தவர்கள் பல விஷயங்களில் முட்டாள்களாகவும், முட்டாள்கள் பலவிஷயங்களில் படித்தவர்களை விட திறமை மிக்கவர்களாகவும் விளங்குகிறார்கள். ///

    உண்மை தான் சார்... சிறப்பான பல உண்மை கருத்துக்கள்...

    ReplyDelete