எல்லாம் நம் கையில்தான் உள்ளது.
மலைகள் எப்போதும், மேல் நோக்கியே
வளர்ந்து நிலைத்து நிற்கும்.
அக்னியின் ஜ்வாலைகளும்
எப்போதும் மேல்நோக்கியே செல்லும்
நீர் எப்போதும் கீழ் நோக்கியே செல்லும்
காற்று எப்போதும் வெற்றிடம்
நோக்கியே செல்லும்
ஆகாசம் எனப்படும் வெட்ட வெளி
இல்லாத இடமே கிடையாது.
அந்த வெட்ட வெளிதான் இறைவன்
அதனால்தான் இறைவனை அங்கிங்கெனாதபடி
எங்கும் நிறைந்தவன் என்று அழைக்கிறோம்.
மலைகள் உயர்ந்து நிற்பது இறைவனின்
திருவடிகளை தாங்கதான்
வேங்கட மலைமீது ஸ்ரீனிவாசனும்
சோளிங்கர் போன்ற மலை உச்சியில் நரசிங்கபெருமானும்
திருச்சியில் மலைகோட்டையின் உச்சியில் பிள்ளையாரும்
பழனி உள்ளிட்ட பல மலைகளின் மீது முருகப்பெருமானும்
கைலாய மலைமீது பரமேஸ்வரனும்
சபரி மலையில் அய்யப்பனும்
நந்தி மலையும் சாமுண்டீஸ்வரியும் என
பல தெய்வங்கள் மலையின் சிகரங்களில்
நிலை கொண்டு தன பக்தர்களை
அங்கு வரவழைத்து அருளை வாரி வாரி
வழங்கி கொண்டிருக்கின்றனர்.
அதைபோல்தான் ஜோதி ஸ்வரூபமான
அக்னிபகவானும் திருவிளக்கில் தீபமாய்
எரிந்துகொண்டுபுற இருளை , ஒளியை மனதில்
நினைத்து வணங்குவோருக்கு அக இருளையும்
போக்கி அருள் புரிந்து கொண்டிருக்கிறார்.
நீர் மக்களை தேடி சென்று அவர்களின்
பாவங்களை போக்கி பரிசுத்தமாக்கி
இறைஅருளை பெற மேலிருந்து
கீழ் நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறது.
காற்று பிராணனாக அனைத்து உயிர்களிலும்
வியாபித்து இயங்கி கொண்டிருக்கிறது.
வெட்ட வெளியாக உள்ள இறைவனிடமிருந்துதான்
அனைத்தும் தோன்றுகின்றன,நிலை பெறுகின்றன.
சில காலம் கழித்து வெட்டவெளியில் மறைந்துவிடுகின்றன.
இவை அனைத்தும் இறைவனின் அம்சமாகும், லீலையாகும்
இதை உணர்ந்துகொண்டு, அகந்தையற்று, அன்புடன்
வாழ்ந்து நம் கடமைகளை ஆற்றி இறைவனை நினைந்து
அவன் அருளை பெறத்தான் இந்த பிறவி
நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது .
அதை முழுமையாக பயன்படுத்திகொள்வது
நம் கையில்தான் உள்ளது.
No comments:
Post a Comment