அனுபவ ஞானம்
இரையும் அவனே
இறையும் அவனே
பாம்பும் அவனே
அதற்க்கு இரையாகும்
தவளையும் அவனே
இப்படிதான் அனைத்தும்
அவன் படைப்பில்
நம் முன்பு விளையாடுகிறான்
ஒன்றை கொடுக்கிறான்
ஒன்றை எடுக்கிறான்
கேட்டதனைத்தையும் கொடுக்கின்றான் சில நேரம்
பல நேரம் கேளாமலேயே அனைத்தையும் நம்மிடமிருந்து
பறித்து நம்மை பரிதவிக்க விடுகின்றான் .
மதியை மயக்குகிறான்
பிறகு நம் விதியை எழுதுகிறான்
போதுமான மனம் இன்றி
பத்தாது பத்தாது இன்னும் வேண்டும் என்றால்
பொட்டென்று அனைத்தையும் போட்டு உடைத்து நொறுக்குகின்றான்
வேண்டியபோது தருவதில்லை
அவன் தரும்போது அது நமக்கு
தேவைப்படுவதில்லை
சக்கரத்தை கையில் ஏந்திய அவன்
நாம் சக்கரைக்காக ஏங்குகையில்
அவன் தருவதில்லை
அவன் தரும்போது நமக்கு வரும்
சக்கரை நோயினால்
அது பயன்படுவதில்லை.
அவனுடைய சங்கின் நாதம்
நம் செவிகளில் விழுவதில்லை
நாம் கண்டுபிடித்த கருவிகள் போடும்
இரைச்சல்தான் எங்கும் நம் காதை பிளக்கிறது
இறைவா உன் நோக்கம் எனக்கு புரியவில்லை.
உன்னை புரிந்துகொள்ள பலர் கூறும் வழிகளாலும்
நீ எனக்கு புலப்படவில்லை
எனினும் அனுபவத்தால் ஒன்றை அறிந்து கொண்டேன்.
எதை நீ தருகிறாயோ அதை முழு ,மனதுடன்
ஏற்றுகொண்டால் அதுவே சொர்க்கமாகும்.
நீ கொடுத்ததை விடுத்து பிறிதொன்றை
நாடினால் நாம் தேடுவதனைத்தும் நரகமாகும்.
என்பதே அது.
ஐயா! தங்களின் இந்தப் படைப்பை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்! வாருங்கள் ஐயா வலைச்சரத்திற்கு!
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2012/12/blog-post_18.html
ReplyDeleteதங்களின் பரந்த மனப்பான்மைக்கு
Deleteசிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
நன்றிகள் பல