ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை (பாசுரம்(22)
பாடல்-22
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற்க் கீழே
சங்கம் இருப்பார்ப்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப் போல
செங்கண்சிறுத் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தால்போல்
அங்கண் இரண்டுங் கொண்டெங்கள்மேல்
நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்
விளக்கம்
இந்த பரந்த பூமியை ஆண்ட அரசர்கள்
தங்களுக்கு மேம்பட்டவர்கள் யாரும் இல்லை என அகந்தை கொண்டு பிறரை துன்புறுத்தி வாழ்ந்து வந்தனர்
.அந்த கொடியவர்களை
நீ அழித்த பிறகு மற்ற அரசர்கள் உன் பெருமையை உணர்ந்து உன் மீது அன்பு
மிகக்கொண்டு கூட்டம் கூட்டமாக வந்து உன்னை தரிசிக்கக் உன் வாசலில் காத்துக்
கிடக்கின்றனர்.
அவர்களைப் போல் நாங்களும்
உன்னை தரிசிக்க உன் கோயில் வாசலில்
காத்துக் கிடக்கின்றோம்.
நீ சிறிய மணி இனிமையாய்
மென்மையாய் ஒலிப்பதுபோல்
ஆதவனின் வருகையைக் கண்டதும்
தாமரை மொட்டு மெதுவாக
அழகாக மலர்வதுபோல்
உன் சிவந்த கண்களை திறந்து
எங்களை கடாட்சிக்க மாட்டாயா?
என்று நம் சார்பாக ஆண்டாள்
தாமரைபோன்ற கண்களை உடைய
அரங்கனை வேண்டுகிறாள்
ஆதவனைப்போல் வெப்பம் கொடுத்து வாழ வைக்கும் ஒளியோடும் குளிர்ச்சியாக
தோன்றி இதம் தரும் முழு நிலவின் காந்தியுடனும் நீ உன் திருக்கண்களைத்
திறவாயாக
அப்படி நீ உன் திருக்கண்களை திறக்கும்போது
உன் கனிவான பார்வை எங்கள் மீது விழுந்தால்
அறியாமையினால் நாங்கள்
பல பிறவிகளில் சேர்த்து வைத்து
எங்களை அழுத்திக் கொண்டிருக்கும்
பாவ சுமைகளும் பிறருக்கு துன்பம் இழைத்ததினால்
அவர்கள் எங்களுக்கு இட்டசாபங்களும் அழிந்துவிடும்.
எப்படி ஒளி பரவும்போது இருள் நீங்குகிறதோ
அதுபோல் பல பிறவிகளில் நாம் சேர்த்து
வைத்த தீய வினைகளும் சாபங்களும்
பகவானின் பார்வை பட்ட மாத்திரத்தில்
தீயில் விழுந்த பஞ்சுபோல்
எரிந்து காணாமல் போய்விடும்.
தீயில் புடம்போட்ட தங்கம் போல்
நம்முடைய ஜீவன் தூய்மையாகிவிடும்.
இதயத்தின் உள்ளே
ஒளிந்துகொண்டிருக்கும் பகவான்
நம் உள்ளத்தில் வெளிப்படவேண்டுமேன்றால்
உள்ளத்தில் தூய்மை வேண்டும்
.வாக்கினிலே இன்சொல் வேண்டும்.
பார்வையிலும் சொல்லிலும்
தீயைக் கக்கும் சினத்தை
விட்டொழிக்கவேண்டும்.
இதெல்லாம் நடக்கவேண்டுமென்றால்
தான் என்னும் அகந்தையை விட்டொழிக்கவேண்டும்.
ஒன்றை விட்டால்தான் ஒன்று கிடைக்கும்
துளசிமாலையை அணிந்து கொண்டு
நம்மை கடாட்சிக்கக் காத்திருக்கும்
எம்பெருமானைக் கண்டு தரிசித்து
அவன் வடிவம் நம் மனம் முழுவதும் நிரப்பவேண்டும்.
அவன் வடிவம் நம் மனம் முழுவதும்
நிரம்பிவிட்டால் காண்பதனைத்தும்
நமக்கு அவன் வடிவமாகவே காட்சியளிக்கும்.
அந்நிலையை அடைய நாம்
அவன் திருவடிகளையே ஆதாரமாக பற்றுவோமாக.
அருமையான படங்களோடு கருத்துக்கள் அனைத்தும் சிறப்பு ஐயா...
ReplyDelete