பிறவியை பெருங்கடல் என்கிறார் திருவள்ளுவர்
பெருங்கடல் என்றால் ஆழம் காணமுடியாதது
ஆபத்துகள் நிறைந்தது
கரையை விட்டு புறப்பட்டால் மறு கரையை காண்போமா
அல்லது நடு கடலில் மூழ்கி விடுவோமா என்று யாருக்கும் தெரியாது
கடலில் திமிங்கிலங்களும்,சுழல்களும் ,சுறாக்களும் போன்ற
எண்ணற்ற பேராபத்துக்கள் நிறைந்துள்ளது
அதைபோல்தான் நம் வாழ்க்கையும்
நாம் நம் ஆயுட்காலத்தில் உறக்கத்தில் தினமும்
அனைத்தையும் மறந்து கிடக்கிறோம்.
அப்போது நம் உடலையும்,உயிரையும்,உடைமைகளையும்
பாதுகாப்பது யார்?
ஆனால் நாம் விழித்திருக்கும் நேரம் நம்முடைய உடலையும்,உயிரையும் ,உடைமைகளையும் மற்றவர்களிடமிருந்து பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொள்ளுகிறோம்
சில நேரங்களில் நம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தடம் புரண்டு விடுகின்றனவே,
அது ஏன் என்றுயாரும் நினைத்து பார்ப்பதில்லை
நம்முடைய சக்தியையும் மீறி எதோ ஒரு சக்தி நம்மை ஆட்டி படைக்கிறது
என்பதை ஏற்று கொள்ள மறுக்கிறோம்
நமக்கு அனைத்து வசதிகளிருந்தும் நம்மால் எதுவும் செய்ய முடியாமல் வாய் மூடி மெளனமாக இருக்கிறோமே அது ஏன்?
நமது தேவைக்கு மீறி நாம் சேகரிக்கும் பொருட்கள் நமக்கு நிச்சயம் பயன்படாது
ஒரு சிறு குண்டூசி உட்பட
நாம் எவ்வளவு எச்சரிக்கையாய் இருந்தாலும்,
விபத்துக்கள் ஏற்படுகின்றன,நோய்கள் வருகின்றன.மரணம் வருகிறது நம்மால் ஒன்றும் தடுக்கமுடியவில்லையே
நாம் மயக்கத்தில் அல்லது உறக்கத்திலே இருக்கும்போது
நம்மை காப்பற்றிகொண்டிருக்கும் கடவுள் மீது நமக்கு
ஏன் நம்பிக்கை வருவதில்லை?
எல்லாவற்றிற்கும் காரணம் அகந்தை
அகந்தை இருக்கும் இடத்தில,காமம் இருக்கும்,மோகம் இருக்கும்,
கோபம் இருக்கும்,கர்வம் இருக்கும்,பொறாமை இருக்கும்,
இவ்வளவு நல்லவர்களை நம் கூட்டாளிகளாக வைத்து கொண்டிருந்தால்
நமக்கு நன்மைகள் எப்படி கிடைக்கும்?
அகந்தை இருக்கும் வரையில் நமக்கு மன அமைதி கிடைக்காது
அகந்தை இருக்கும் வரையில் பிறர் மீது அன்பு செலுத்த முடியாது
நம்மிடம் உள்ளதை இல்லாதவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது
இறைவன் மீது பக்தி செலுத்த முடியாது
இறைவனின் மீது நம்பிக்கை வராது
நம்முடைய வழிபாடுகள் எல்லாம் போலியாகத்தான் இருக்கும்
சாத்திரங்களை தினமும் படிப்பதாலோ,தோத்திரங்களை சொல்லி வழிபாடு செய்வதாலோ,தினமும் ஆலயங்களுக்கு சென்று வருவதாலோ
எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை
இன்று வழிபாட்டு தலங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது
மக்கள் கோடிகணக்கில் பணத்தை கொட்டுகின்றனர்
மத(பாதகர்கள்) போதகர்கள் இறைவனை பற்றி வாய் கிழிய பேசி மக்களை
மூளை சலவை செய்கின்றனர்
சொகுசு கார்களில்உலா வரும் காவிகள் கடவுளை கண்டதாக
பிதற்றி மக்களை மயக்கி காசு பார்கின்றனர்
தம் உயிரை காப்பாற்றிக்கொள்ள வக்கில்லாமல் ஆயுதம் தாங்கிய காவலாளிகளை துணைக்கு வைத்துகொண்டிருக்கும் இந்த போலிகள் தங்களிடம் வருபவர்களை காப்பாற்றுவதாக சத்தியம் செய்கின்றனர்
அவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி,தங்களின், செல்வம், மானம் மரியாதையை அனைத்தையும் அவர்களிடம் ஒப்புவித்து மக்கள் ஏமாந்துபோகின்றனர்
பாமரன் ஏமாந்தால் பரவாயில்லை
ஆனால் மேதாவிகள் என்றழைக்கபடுபவர்களும் இந்த வலையில் வீழ்வது வேதனைக்குரியது
நம் உள்ளமே கோயில்
அந்த கோயில்தான் இறைவன் உறையும் இடம்
அந்த இடத்தில கள்ளம் இருந்தால் அவன் எவ்வாறு அங்கு இருப்பான்?
அங்கு ஆசைகள் என்னும் பேய்கள் எப்போதும் எதையாவது நாடி அங்கும் இங்கும் அலைந்துகொண்டு கூச்சல் போட்டுகொண்டிருந்தால் மனசாட்சியான
இறைவனின் குரல் நமக்கு எப்படி கேட்கும்?
பிறர் உயர்வு கண்டு மகிழாமல் அழுக்காறு என்னும் அசுத்தம் கலந்த ஆறு ஓடி கொண்டிருந்தால் அந்த உள்ளத்தில் அமைதி எங்கு தவழும்?
உள்ளத்தில் உள்ள துர்நாற்றம்தாம் உடலில் துர்நாற்றமாக வீசுகிறது
இந்த உடலுக்குள் செல்லும் எதுவும் எந்த வழியாக வந்தாலும்
அது சகிக்க முடியாத நாற்றம் வீசுகிறது.
அந்த நாற்றத்தை மறைக்கவே நாம் பல்லாயிரம் ரூபாய்களை
ஆயுள் முழுவதும் செலவழிக்கிறோம்.
முடிவில் மரணத்திற்கு பிறகு நாற்றம் தங்க முடியாமல்
மண்ணில் புதைத்தோ அல்லது எரித்தோ அந்த உடலை அப்புறபடுத்துகிறோம்.
பிறரை வஞ்சித்து அளவுக்கு மீறி சொத்து சேர்த்து ,
அதர்மவழியில் வாழ்க்கைவாழ்ந்து
சூது நிறைந்த மனம் கொண்டு நிம்மதியற்ற வாழ்வு வாழும் மனிதர்கள்
இவைகளிலிருந்து விடுபடவேண்டுமென்றால் இறை நாமத்தை அல்லும் பகலும் ஓதிக்கொண்டே இருக்கவேண்டும் .
அதற்காக எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருந்துகொண்டு பொறுப்பற்ற முறையில் ஊர் சுற்றுவது அல்ல
நம் கடமைகளிடையே தான் அதை செய்ய வேண்டும்
நாம் நம்மை அறியாமல் மூச்சு விட்டுகொண்டிருப்பதைபோல
அப்போது மனதின் இரைச்சல் அடங்கி
இறைவனின் இனிய நாதம் கேட்கும் .
நாதம்தான் தான் இறைவன்.
இந்த மாற்றம் வெளியில் மட்டும் நிகழ்ந்தால் பயனில்லை
நம் உள்ளத்தில் இந்த மாற்றம் நிகழ வேண்டும்
விழித்துகொள்ளாவிடில் நஷ்டம் நமக்குதான்
,
No comments:
Post a Comment