Wednesday, February 13, 2013

நேரமில்லை என்று சொல்லாதீர்


நேரமில்லை என்று சொல்லாதீர் 

நில உலகில் ஜனித்து நினைவு 
வந்த நாள் முதல் உன்னை 
நினைக்க நேரமில்லை

நிலாவிற்கு விண்வெளிக்கலம் 
செலுத்தி மனிதனை 
அனுப்பிய செய்தியை ஆண்டாண்டு 
காலமாய் நினைவில் வைத்து 
அசை போடும் மனம் 

நிலாவை தன் தலையில் சூடிய 
சந்திர சேகர பெருமானை நினைக்க நேரமில்லை. 

காலையில் கணைஇருளை நீக்கி ஒளி தந்திடும் 
சூரியனை  பற்றி ஆராய்ச்சிகள் செய்கிறோம்

ஆனால் சிவ பெருமானின் வலது கண்ணாக 
விளங்கும் சூரிய நாராயணனை சிந்தனை 
செய்து வணங்க நமக்கு நேரமில்லை 

உடலில் சக்தியை கூட்ட கண்டவைகளைஎல்லாம் 
வயிற்றில் தள்ள நேரம் இருக்கிறது

ஆனால் உண்மையில் அனைத்திலும் சக்தியாய்
விளங்கும் பரா சக்தியை நினைக்க நேரமில்லை. 

அன்பில்லாமல் மனதை 
கல் போல் வைத்துக்கொண்டு 
கற்சிலைகளை கடவுள் என்று 
போற்றி கொண்டாடி
காலத்தை போக்குகிறோம். 
அன்பே சிவம் என்பதை அறியாது 

தூணிலும் இருப்பான் துரும்பிலும் 
இருப்பான் கண்ணுக்கு 
தெரியாத எறும்பிலும் இருப்பான்  
அந்த பரமன் என்று வேதாந்தம் 
மட்டும் நினைவில் உண்டு

ஆனால் பிற உயிர்களை
துன்புறுத்தும் போதும் 
பிறர்  மனதை காயபடுத்தும்போதும்
அந்த நினைவு நம் மனதை 
விட்டு மறையும் மாயம் ஏன்?

பால் கார்ட் வாங்க மறப்பதில்லை 
நம்மையெல்லாம் கருவிலிருந்து காத்து வரும்
பாற்கடலில் பள்ளி கொண்ட 
பரந்தாமனை மட்டும் மறப்பதேன்?

அர்த்தநாரீஸ்வரனாக இறைவனை
வணங்குகிறோம் கோயிலில் 

ஆனால் பெண்ணை துன்புறுத்தும் போது 
மட்டும் அவன் நினைவு இல்லை  

இன்னும் கணக்கற்றவைகளை ,
சாரமற்ற தகவல்களை நினைவு 
வைத்திருக்கும் மனிதர்களுக்கு 
அனைத்திற்கும் சாரமாய் விளங்கும் 
சாரநாத பெருமானை பற்றிய நினைவு
மட்டும் வர ஏனோ மறுக்கிறது

கேளாமலேயே பல கோடி இன்பம் தந்துள்ள 
அந்த தயா சாகரனை நினைக்க நேரமில்லை

கேடிகளின் சரிதத்தை தினம் தினம் படிக்கிறோம், 
வாழ்வில் அவர்கள்போல் நடிக்கிறோம்,
முடிவில் நோயிலும் கவலையிலும் 
சோகத்திலும் வாழ்வை முடிக்கிறோம்.

நினைத்தாலே இன்பம்தரும் நிர்மலனை
நினைக்கும் சக்தியை நமக்கு 
தந்த நிர்விகாரனை
மறந்து வாழ்ந்தது போதும்
பட்ட துன்பங்கள் போதும்

கண நேரத்தில் தோன்றி
மறையும் இன்பங்கள் போதும்

காலமெல்லாம் நம்முள்ளே ஆன்மாவாய் 
குடிகொண்டு நம்மையெல்லாம் காத்து அருளும் 
கமலனாபனை, கருணாகர சாகரத்தை, 
முக்கண்ணியை, முருகனை, கணநாதனை.
எப்பேரிட்டு அழைத்தாலும் 
எப்போது வேண்டுமானாலும் 
அழைத்தாலும் விரைந்து வந்து காக்கும் 
வெங்கடேசனை மறவாதீர்,மறவாதீர். 

மழை துளிகள் இடையே 
பறக்கும் கொசு போல் உங்கள் மனம் 
இந்த உலக ஆசைகளிடையே 
இறைவன் நினைவோடு பயணிக்கட்டும்


















நேரமில்லை என்று சொல்லாதீர் 
நினைவு தப்பிடில் அனைத்தும் வீண் 
என்பதை நினைவில் கொள்வீர்

2 comments:

  1. சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete