கண்ணன் துதி
கண்ணன் என்னும்
கருந்தெய்வம்
காசினியில் உள்ளோரை
காக்க வந்த தெய்வம்
விண்ணையும் மண்ணையும்
அளந்த தெய்வம்
பிரகலாதனுக்காக
தூணை பிளந்து வந்து
பாதகன் ஹிரணியனை
மாய்த்த தெய்வம்
மனித குலத்தை வதைத்திட்ட
அரக்கர் கூட்டத்தை
வேரறுக்க கால் கடுக்க
தரணியில் ராமானாய் அவதரித்து
தன் பாதம் நோக நடந்து
பக்தர்களை காத்த தெய்வம்
அரவணையில் அசையாது
அரிதுயில் கொண்ட தெய்வம்
அரங்கத்தில் கோயில் கொண்டு
அடியவர்களை காக்கும் தெய்வம்
ஆயர்பாடியில் கண்ணனாய் வந்து
ஆநினம் மேய்த்த தெய்வம்
கள்ளமற்ற வெள்ளை உள்ளம்
கொண்ட ஆய்ச்சியர்களின்
அன்புக்கு அடிமையாகி
அவர்கள் தந்த வெண்ணையை
உண்டு மகிழ்ந்த தெய்வம்
மண்ணை வாயிலிட்டு
உண்ட தெய்வம்
கண்டித்த யசோதை
அன்னைக்கு அகிலமும்
தான்தான் என காட்டி
அசத்திய தெய்வம்
பக்தி கொண்ட பாண்டவருக்காக
பரிந்து பேச பாதகன் துரியோதனன்
மாடம் சென்ற தெய்வம்
ஏழை குசேலனை எதிர்கொண்டழைத்து
அவன் தந்த பிடி அவலை உண்டு
அவன் குலத்தின் மிடி அகற்றிய தெய்வம்
அறியாமை என்னும் இருளகற்றி
மரணமிலா பெருவாழ்வு வாழ
வழிகாட்டும் நூலாம் கீதையை
மனித குலத்திற்கு அளித்த மாசற்ற தெய்வம்
அனைத்துமாய் ஆன தெய்வம்
ஆயிரம் நாமங்கள் கொண்ட தெய்வம்
ஆபத்திலே அபயம் என்று
அழைப்போருக்கு ஓடிவந்து
அபயக்கரம் நீட்டும் தெய்வம்
தாய் தேவகியை சிறை வைத்த
மாமன் கம்சனை
வதைத்த தெய்வம்.
மீண்டும் தாயின் கற்பத்தில் சிக்கி
துன்புறாமல் காக்கும் தெய்வம்
தன்னை வணங்கா கோகுல மக்களை
மழை வெள்ளத்தில் அமிழ்த்தி
துன்பத்திர்க்காளாக்கிய மக்களை
குன்றை குடையாய் பிடித்து காத்து ரட்சித்து
மதிகெட்ட இந்திரனின்
அகந்தை கெடுத்த தெய்வம்.
அல்லல் போக்கும் தெய்வம்
ஆனந்தம் தரும் தெய்வம்
துயர் துடைக்கும் தெய்வம்
மாளா பிறவியறுக்கும் தெய்வம்
அன்பு தெய்வம்
அருள் தெய்வம்
கற்றோரின் செருக்கறுக்கும் தெய்வம்
காமத்தை தணிக்கும் தெய்வம்
அன்புடையார்க்கு கட்டுண்ட தெய்வம்
திக்கற்றோர்க்கு தீனபந்துவாய்
விளங்கும் தெய்வம்
கல்மனதை கரைக்கும் தெய்வம்
அலை பாயும் மனதை அடக்கும் தெய்வம்
அஞ்சேல் என்று அபயமளிக்கும் தெய்வம்
அஞ்ஞானத்தை அகற்றும் தெய்வம்
பிணி போக்கும் தெய்வம்
பக்தருள்ளத்தில்
பீடு நடை போடும் தெய்வம்
வரம்பில்லா
வரமருளும் தெய்வம்
ஓராயிரம் நாமம் கொண்ட தெய்வம்
ஒருமையுடன் நினைந்து அழைப்போர்க்கு
ஓடி வந்து அருள் செய்யும் தெய்வம்
ஓங்கார பொருளான தெய்வம்
ஆங்காரம் அகற்றும் தெய்வம்
நினைக்க நினைக்க செவியில்
ரீங்காரம் செய்யும் தெய்வம்
கண்ணா மாசற்ற மனதுடன்
உன் பெருமை பேச
வகைஅறியா இச்சிறியேன்
நின் மலரடியை
சரணடைந்தேன் கோடி முறை
என் மனத்தில் என்றும் நீங்காது நின்று
மன இருளகற்றி இகபர சுகமருள்வாயே
கண்ணன் திருவடிகளே சரணம்
Pic-google-images
No comments:
Post a Comment