முருகா
அடியவர்களின்
நெஞ்சங்களை தேடிவா
ஓடி வா இக்கணமே
சங்கரனின் நெற்றி
கண்ணில் உதித்தவா
சக்தியின் புதல்வா
ஆனைமுகனின் சோதரா
மாலின் மருகா
வள்ளி மணாளா
அன்பு செய்யும் அடியார்களின்
நெஞ்சங்களில் உறைபவா
ஓம் சரவணபவா ஓம் சரவணபவா
என்னும் மந்திரத்தில் ஒளிர்பவா
ஞான கனியான உனக்கு தேவையற்ற
மாங்கனி கிடைக்காமல் போனமையால்
பொய்க்கோபம் கொண்டு கயிலை மலையை
விட்டு வண்ண மயிலேறி உலகை வலம் வந்தவா
அடியவர்களுக்காக அருள் செய்ய
மலைகள்மீது ஆறு படை வீடுகளமைத்து
அதில் சிலையாய் நின்றவா
சூரனை வதைத்தவா,
தேவர்களை காத்தவா
குறவள்ளியை மணந்தவா
அன்பெனும் பிடிக்குள்
அகப்படும் அழகா
செந்தூர் வேலா வா
கந்தா வா
கடம்பா வா
கார்த்திகேயா வா
முத்துக்குமரா வா
முக்திக்கு வித்தாகும்
முருகா வா
அஞ்ஞானத்தை அகற்ற வா
மெய்ஞானத்தை அளிக்க வா
துன்பம் தீர்க்க வா
துயர் துடைக்க வா
உன்னை வாழ்த்தி
வணங்கும்
அடியவர்களின்
நெஞ்சங்களை தேடிவா
ஓடி வா இக்கணமே
தி.ரா.பட்டாபிராமன்
No comments:
Post a Comment