Friday, December 26, 2014

ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை (பாசுரம்(12)

 

ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை  (பாசுரம்(12)



பாடல்-12
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிறங்கி 
நினைத்து முலைவழியே நின்று பால் சோர 
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்  
பனித்தலை வீழ நின் வாசற்க்கடைப் பற்றிச் 
சினத்தினால் தென்னிலங்கை கோமானை செற்ற 
மனத்துக்கினியானை பாடவும் நீ வாய் திறவாய் 
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் 
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய். 

பாடல் விளக்கம் 
இளங்கன்றுகளுடைய எருமைகள் பால் கறப்பார் இன்றி  
சுரந்தபால் மடியில் சேர்ந்துவுடன் கன்றுகள் தாயை நினைத்து குரல் எழுப்பியவுடன் தாய் எருமை தன்  கன்றுகளுக்கு அதை கொடுக்க நினைத்த மாத்திரத்தில் அதன் முலையில் பால் சுரந்து கொட்டகை முழுதும் தரையில் சிதறி சேறாகிவிடும். அப்படிப்பட்ட கால்நடை செல்வங்களை பெற்ற குடும்பத்தில் உள்ளவளே ! நாங்கள் அதிகாலைப் பனி எங்கள் தலைமீது விழ உன் வீட்டு வாசலில் காத்துக்கிடக்கிறோம் கோயிலுக்கு சென்று காமத்தினால் தவறிழைத்த இலங்கைக்கு அரசனான ராவணனை  அழித்த ஸ்ரீ ராமனை.நம் அனைவரின் மனதுக்கினியானை பாடவும் உன் பேருறக்கத்தை  விட்டு எழுந்து வா என்கிறாள் ஆண்டாள் இந்த பாசுரத்தில் 


இந்த பாசுரத்திலும் ஆண்டாள்
 உயிர்களின் உறக்கத்தை பற்றிதான் பேசுகிறாள். 

கன்றுகளின் குரலைக் கேட்டவுடன்.
 தாய் எருமை கன்று தன்  அருகில் இல்லாவிட்டாலும் அதை நினைத்த மாத்திரத்தில் பாலை சொரிகிறது தாய் எருமை. 

அதுபோல்தான் நாம்  இறைவனை 
நினைத்தவுடன் நாம் எதுவும் கேளாமலேயே 
அனைத்து இன்பங்களையும் தருகிறான்.

நம் மனதிற்கு ஆறுதல்  தருகிறான்
 துன்பங்களைப் போக்குகிறான் 

ராமாயணத்தில் வரும் சீதை பாத்திரம் 
என்பது நம்முடைய ஆன்மாவைக்
 (ஜீவாத்மா)குறிக்கும் 

பத்து தலை ராவணன் என்பது
 பத்து இந்திரியங்களைக் குறிக்கும் ஞானேன்ந்திரியங்கள் 5 கர்மேந்திரியங்கள் 5

காம வயப்பட்ட இந்திரியங்கள்  
ஆன்மாவை இறைவனிடமிருந்து பிரித்துவிடுகிறது

இறைவனிடம் இருக்கும்போது ஜீவனுக்கு 
அவன் மகிமை தெரிவதில்லை 

இறைவனை மறந்து உலக பொருட்களின் மீது 
ஆசைவயப்பட்டு துன்பத்தில் 
சிக்கிகொள்ளுகிறது ஜீவன் 

 இறைவனைப் பிரிந்தவுடன்தான்
 தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்து 
அவனுக்காக ஏங்குகிறது. 

அதை உணர்ந்த ஸ்ரீராமன் ராவணனை
(இந்த உலக விஷயங்களில் கொண்டுள்ள 
பற்றுக்களை அழித்து)  அழித்து சீதையை(ஜீவாத்மாவை தன்னிடம் சேர்த்துக்கொள்கிறான்)  மீட்கிறான் 
 ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைக்கும் பாலமாக குருவாக 
                                     ஆஞ்சநேய மூர்த்தி விளங்குகிறார்.

இந்த உலக சுகத்தில் மூழ்கி 
பகவானை மறந்து கிடக்கும் ஜீவனை ஸ்ரீராமனின்
 பெருமைகளைக் கூறி எழுப்புகிறாள் 
இந்த  பாசுரத்தில் ஆண்டாள் 

நாமும் உறக்கத்தை ஒழித்து 
 ராமனின் பேரை சொல்லுவோம் 
நம் மனதில் உள்ள
 ஆசைகளை வெல்லுவோம் 

1 comment: