Monday, December 22, 2014

ஆண்டாள் காட்டும் அருட்பாதை (8)

ஆண்டாள் காட்டும் அருட்பாதை(8)

கீழ்வானம் வெள்ளென்று 

எருமை சிறு வீடு மேய்வான் பரந்தன காண் 

மிக்குள்ள  பிள்ளைகளும் போவான் 

போகின்றாரைப் போகாமல் 

காத்துன்னைக் கூவுவான் வந்து நின்றோம் 

கோதுகலமுடைய பாவாய்  எழுந்திராய் 

பாடிப் பறை கொண்டு மாவாய்ப்  பிளந்தானை 

மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச்  

சென்று நாம் சேவித்தால் ஆவாவென்றாராய்ந்

தருளேலோ ரெம்பாவாய்  


கீழ் வானம் வெளுத்துவிட்டது 
ஆதவன் உதிக்கப் போகிறான்.
உலகை கவ்விய இருள் அகலப்போகிறது. 

ஆதவன் உதித்ததும் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் 
தங்கள் பணியைச் செய்ய புறப்பட தயாராகின்றன.
அவர்களை ஆதவன் எதுவும் சொல்வதில்லை 
ஆனால்  தானாகவே இந்த உலகம் இயங்கதொடங்கிவிடுகிறது. 

ஆனால்அவ்வாறு செய்யாமல் சோம்பி படுக்கையிலே 
படுத்து உறங்குபவர்களும் இந்த உலகில் உண்டு.

அதற்காகவா நம்மை இறைவன் படைத்தான்?
அதை உணர்த்தும் முகமாகத்தான் ஆண்டாள் உறங்குபவளை 
மற்ற தோழியருடன் வந்து தூங்குபவளை எழுப்புவதைப்போல் 
நம்மையெல்லாம் இந்த பாசுரத்தின் மூலம் எழுப்புகிறாள்

நாம் இறைவனிடம் எண்ணற்ற கோரிக்கைகளை வைக்கின்றோம்.
அனைத்தும் நிறைவேறுவதில்லை. 

நாம் எண்ணும்  எண்ணங்களில் எவை நமக்கு நன்மை பயக்கும் அல்லது தீமை விளைவிக்கும் என்று நமக்கு தெரியாது. 

அதனால்தான் ஆண்டாள் கண்ணனிடம் எங்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து 
அவற்றில் எங்களுக்கு எது நன்மை பயக்குமோ  அவைகளை அருள வேண்டும் என்று வேண்டுகிறாள்.

சிறு தெய்வங்களை வழிபட்டு  அற்ப பலன்களை யாசிப்பதை விடுத்து 
கம்சன் ஏவிய மல்லர்களை கொன்றவனும், தேவர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் தேவாதி தேவனான கண்ணனை நாம் வணங்க வேண்டும் என்று இந்த
எட்டாவது பாசுரத்தில் வலியுறுத்துகிறாள்.




எட்டேழுத்தை மந்திரமாக உடைய நாராயணனை வணங்குவோர் எட்டமுடியாத வெற்றி எதுவும் இல்லை.
நாம் நம் கோரிக்கை எதுவாயினும் இறைவனின் விருப்பத்திற்கு 
விட்டு விட வேண்டும். 

அவ்வாறு விட்டுவிட்டால் கிடைப்பது எதுவாயினும் இறைவனின் அருட்ப்ரசாதமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிடும். 

நமக்கு எது நன்மை பயக்கும் என்பதை நம்மை படைத்த 
அவனே நன்கறிவான் என்ற கருத்தை ஆண்டாள் தெளிவுபடுத்துகிறாள். 

வீணான கவலைகள் அகன்றுவிடும். என்றார் சரணாகதி  தத்துவத்தின் பெருமையை இந்த பாசுரத்தில் கூறுகிறாள். 


1 comment: