Wednesday, March 12, 2014

ஆசைப்பட ஆசைப்பட ஆய்வரும் துன்பம்

ஆசைப்பட ஆசைப்பட ஆய்வரும் துன்பம்

பிறக்கும்போது
எந்த ஆசைகளும் இல்லை

ஆனால் இறக்கும்போது
மட்டும் எண்ணிலடங்கா
ஆசைகளுடன் ஏன் 
இந்த உலகை விட்டுப் போகவேண்டும்?

அழுதுகொண்டே  பிறந்தோம்.
ஆனால் எதற்கு அழுதுகொண்டே
இந்த உலகை விட்டுப் போகவேண்டும்.

நாமும் சிரித்த முகத்துடன், நம்மை சுற்றியுள்ளவர்களின் முகத்திலும் சிரிப்பை வரவழைத்து விடைபெற முயற்சி செய்யலாம் அல்லவா?

இந்த உடல் வளரும்போது ஆசைகள்
ஒவ்வொன்றாக நம்மைப் பற்றிக் கொள்கின்றன

சிறிது காலத்திற்குப் பிறகு மனம் ஒவ்வொன்றாக
கணக்கற்ற ஆசைகளை பற்றி கொண்டு விடுகிறது.

சிறிது காலம் கழித்து ஆசைகள் நம்மை
நாய்கள் போல் அங்குமிங்கும் அலைய வைக்கின்றன

பல ஆசைகள் நம்மை பேய்போல் பிடித்து ஆட்டுகின்றன

ஆசைகளால் நம்முடைய சமநிலையை இழக்கின்றோம்.
ஆசைவயப்பட்ட மனம் நம்மை பலவிதமான
துன்பங்களுக்கு ஆளாக்குகிறது.

இன்பத்தை தேடி அலையும் நாம் துன்பத்தைத்தான்
பரிசாகப் பெறுகிறோம்.

கண நேரமே தோன்றி மறையும் இன்பத்திற்காக ,பல மணி  நேரம், பல நாட்கள், இன்னும் சில இன்பங்களுக்காக பல ஆண்டுகள் கூட பாடுபடவேண்டியுள்ளது

அப்படி பாடுபட்டுக் கிடைத்த இன்பமும் நிலைப்பதில்லை.

நாம் விரும்பி பெற்ற பொருள்  ஒன்றை மற்றவர்
குறை சொன்னால் அந்தக் கணமே அந்த பொருளினால்
அடைந்த இன்பம் நம்மை விட்டு விலகி ஓடுகிறது.

ஆசைகளினால் நாம் படும் துன்பம் சொல்லி முடியாது.

ஆசைகளை நிறைவேற்ற நாம் செய்யும் முயற்சிகளில்
தடைகளும், அதற்காக போராடுவதால் எதிரிகளையும்,
பொறாமைக்காரர்களையும் நாம் எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

வெற்றி பெற்றால் இன்பம், தோற்றால் துன்பம்.

இப்படி இன்பமும் துன்பமும் மாறி மாறி நம்மை
துன்புறுத்திக் க்கொண்டிருக்கின்றன.

அதனால் நாம் மன நிம்மதி இழந்து  தவிக்கின்றோம்.

மன நோய்களுக்கு  ஆளாகின்றோம்
.
மனம் நலம் கெட்டால்   உடல்நலமும் கெடுகிறது.

இன்று இந்த உலகில் மன  நலம் கெடாதவர்களையும் , உடல் நலம்கெடாதவர்களையும் விரல் விட்டு எண்ணி விடலாம்.

பிறக்கும்போது ஆசைகளின்றி பிறந்ததுபோல
இறக்கும்போது மனதில் உள்ள எல்லா ஆசைகளையும் நீக்கிவிட்டு அமைதியானமனதுடன் இருக்க  பயிற்சி செய்யவேண்டும்.




அதற்கு  ராம நாமம் ஜபம் செய்தால் மற்ற
எல்லா ஆசைகளும் மறைந்து அவன் மீதுள்ள ஆசை
மட்டும் நிற்கும்.மனம் அமைதி அடையும்

முடிவில் எந்த ஆசையும் இல்லா
அமைதியில் நிலைத்து நிற்கமுடியும்.

அதனால்தான் திருமூலர்  அன்றே எழுதி வைத்தார்.

ஆசைப்பட ஆசைப்பட ஆய்வரும் துன்பம் என்று.

ஆசைப்படாமல் இருக்கமுடியாது..
ஆசைகளைக் குறைத்துக்கொள்வோம்.
மன நிம்மதியோடும்
உடல் நலத்தோடும் வாழ்வோம். . 

3 comments:

  1. தேவைப்படாத ஆசைக்கு என்றும் ஆசை தேவைப்படாது...! ஆனால் அந்த தேவை என்பதை அறிந்து உணர்வதற்கு ஆசை தேவைப்படும்...!

    ReplyDelete
  2. உறவில் ஆசை, நட்பில் ஆசை. உறவுகளின் தேவைக்காகப் பொருளின் மீது ஆசை... தொடர் சங்கிலி! ராம நாமம் இதையெல்லாம் அறுக்கும் என்ற எண்ணம் வந்தவன் பாக்கியவான். பயமில்லாமல் மரணத்தை வரவேற்பவர் யார்?

    ReplyDelete
    Replies
    1. மரணம் தனக்கல்ல
      உடலுக்குத்தான் என்பதை உணர்ந்தவனுக்கு
      மரணம் அச்சத்தை தராது

      மற்றவர்கள் அதைக் கண்டு பயந்து
      நடுங்குவதை தவிர வேறு வழியில்லை.

      Delete