Tuesday, March 5, 2013

மாணிக்க வீணையேந்தும் மாதே கலைவாணி



மாணிக்க வீணையேந்தும் 
மாதே கலைவாணி 


கலைமகளே
அறிவு கண்களை
திறப்பவளே

அனைத்தையும்
அறிய வைப்பவளே

அஞ்ஞானத்தை
அகற்றுபவளே

அற்றம் காக்கும்
அறிவினை தருபவளே

கற்றவனுக்கு
சென்றவிடமெல்லாம்
சிறப்பை பெற்று தருபவளே

கற்றதனால் கர்வம்
கொண்டு அலைபவரை
கல்லானை கொண்டு
அடக்குபவளே

காலத்தால் அழியா
கல்வி செல்வம் தருபவளே

கருத்தில் வைத்தேன்
உன்  வடிவம்
சிலையாய் இருக்கும்
உன் தாள்களில்
என் தலையை வைத்து
வணங்குகிறேன்
என் உள்ளத்தில்
அகந்தை தோன்றாது
அனுதினமும் உன்
திருவடியை சிந்தித்து
வாழ அருள்புரிவாயே.

ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே
என்ற பாடலை பாடாத
இசைக்கலைஞர் யார். ?

வெள்ளை தாமரை பூவிலிருப்பாள்
வீணை செய்யும் ஒலியிருப்பாள்
என்ற பாரதியின் பாடலை
இசைக்காதவர் யார்?

மாணிக்க வீணையேந்தும்
மாதே கலைவாணி
என்ற பாடலை பாடிய சுசீலா
அவர்களின் குரலின்
மயங்காதவர் யார்?

வாணி வந்தருள்வாய்
நீ,மாணிக்க வீணாள் மரகத மகுட தாரிணி
என்ற பாடலை வாணி ஜெயராமை தவிர
வேறு யாரால் இவ்வளவு
இனிமையாக பாடமுடியும்?

மாமவது ஸ்ரீ சரஸ்வதி என்ற பாடலை
மகாராஜபுரம் சந்தானம் அவர்களை தவிர
வேறு யாரால் பாடமுடியும்.
என்ன கம்பீரம், என்ன இனிமை.
பல நூறு முறை கேட்டிருப்பேன்.
இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
அற்புதம். தங்கு தடையின்றி இசைவெள்ளம்.

எனக்கு எட்டு வயதிருக்கும் (1957)
மதுரைக்கு சென்றிருந்தேன்
அப்போது சித்திரை
பொருட்காட்சி நடந்துகொண்டிருந்தது

அந்த பொருட்காட்சியில்
சுமார் பதினைந்து அடி உயரம் இருக்கும்
ஒரு அழகான சரஸ்வதியின்
சிலை அமைத்து.
அவளின் கண்விழிகள்
அசைவதுபோல் செய்திருந்தார்கள்.
வீணையின் மீது  விரல்கள் நகர்ந்து
நகர்ந்து வீணையை மீட்டுவதுபோல்
அமைத்திருந்தார்கள்.
கூடவே வீணையின் ஒலியும்
ஒலிக்குமாறு மின் இணைப்பு
கொடுத்திருந்தது
பார்க்க மிக அழகாக இருந்தது.

அந்த உருவம் என் மனதில்
அப்படியே பதிந்துவிட்டது.

அனேக ஆண்டுகள் கழித்து
அவளின் உருவம் வரையும்
வாய்ப்பு கிட்டியது.

இப்படி பெருமைக்குரிய
கலைமகளை நான்
வரையாமல் இருக்கலாமோ?

இப்போதில்லை
அப்போதே வரைந்தேன். எப்போது.?

31 ஆண்டுகளுக்கு முன்பு

அந்த படம் இதோ.

























எங்கள் வீட்டில் ஒவ்வொரு ஆண்டும்
சரஸ்வதி பூஜையில் ஆராதிக்கப்பட்டு வரும் 
அன்பு தெய்வம் 
அருளை வாரி 
வாரி வழங்கும் தெய்வம் இவள்

5 comments:

  1. 31 ஆண்டுகள் முன்பு....!!!!!

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. தலைவணங்குகிறேன் கலைமகளின் அருளுக்கு

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் கேட்டதெல்லாம் தருவாள்
      உங்கள் நம்பிக்கை நியாயமாகவும்
      உறுதியாகவும் இருந்தால்

      Delete