Monday, July 1, 2013

அழகின் வடிவமே கண்ணா

அழகின்  வடிவமே கண்ணா 






பாற்கடலில் பள்ளி கொண்ட நீ
ஆணவம் கொண்டு அலைந்து
உன் பக்தர்களை துன்புறுத்திய
அரக்கர்களை அழிக்க அவதாரம்
செய்த பரந்தாமா

புறவுலகில் அழிந்த அரக்கர்கள்
மனிதர்களின் அகவுலகில்
புகுந்துகொண்டு அவர்களை
படுத்தும் பாடு நீ அறியாயோ?

ஐம்புலன்கள் என்னும்
கள்வர்கள் நல்லவர்கள்போல்
வேடங்கொண்டு நயவஞ்சகமாய்
உள்ளங்களில் புகுந்தனரே.

அனைவரையும் மயக்கி தங்கள்
வலையில் வீழ்த்தி விட்டனரே
உள்ளே குடிகொண்ட உன்னை
நினைவிலிருந்து அகற்றிவிட்டனரே

உள்ளிருந்து நீ அருள் செய்வதை
அறிய இயலாது சூரியனை
மறைக்கும் மேகங்கள்போல்
இடையே நின்று இன்னல்
செய்கின்றனரே

நாளொரு மேனியும் பொழுதொரு
காட்சியுமாய் காலம் போகிறதே
அலைஅலையாய் வந்து
போகும் எண்ணங்கள்
ஆரா துன்பங்களை
அளிக்கிறதே பரிசாக

உடல்மீதும் உடைமைகள் மீதும்
பற்றுக்கொண்டேன் ,அதை பிறர்
பறித்தால் அகந்தையினால் சினம்
கொண்டு பிறரை அழித்தேன்
நானும் அழிந்தேன்

அகந்தை என்னும் நோய் மனம்
முழுவதும் பரவியதால்
அன்பென்னும் நீர் வற்றி
என் வாழ்வு தரிசாகிபோனதுவே

அரங்கா!கோவிந்தா!கிருஷ்ணா!
முகுந்தா! இராமா!அபயம் அபயம் என்று
அழைக்கின்றேன்.

இப்பிறவி போனால்
இனி உன்னை நினைத்து  பக்தி
செய்யும் வாய்ப்பு அமையுமோ
அமையாதோ நான் அறியேன்.

இச்சிறியேனின் பிழை பொறுப்பாய்
உள்ளதை கொள்ளை கொண்ட கண்ணா
என் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் ஐம்புல
கள்வர்களையும் மாற்று உன் பக்தர்களாக.

அவர்களோடு சேர்ந்து நானும் உன்னை
துதிப்பேன். ஆனந்தமாக வாழ்வேன்
இவ்வுலகில் உன்னோடு
அயிக்கியமாகும் காலம் வரை.






4 comments:

  1. கண்ணன் படம் அழகாக வந்துள்ளது.

    //இச்சிறியேனின் பிழை பொறுப்பாய் உள்ளதை கொள்ளை கொண்ட கண்ணா என் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் ஐம்புல கள்வர்களையும் மாற்று உன் பக்தர்களாக. அவர்களோடு சேர்ந்து நானும் உன்னை
    துதிப்பேன். ஆனந்தமாக வாழ்வேன் இவ்வுலகில் உன்னோடு அயிக்கியமாகும் காலம் வரை.//

    கண்ணனைப்போன்றே அழகான பிரார்த்தனை.

    பகிர்வுக்குப்பாராட்டுக்கள் + நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. இவன் ஒரு கருவியே
      நாம் தரிசனம் செய்வதற்காக
      அவன் வந்துள்ளான். அவன் வடிவம்
      நம் மனம் முழுவதும் நிரம்பட்டும்
      நம் உள்ளம் அனைத்தையும் மறந்து அவன்
      வடிவில் நிலைக்கட்டும்
      சம்சார சாகரத்தில் தத்தளிக்கும்
      அனைவரின் வாழ்க்கையும் ஆனந்த
      சாகரத்தில் மூழ்கட்டும்.

      Delete
  2. /// அகந்தையினால் சினம் கொண்டு பிறரை அழித்தேன்... நானும் அழிந்தேன்... ///

    உணர வேண்டிய வரிகள் ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete