அபிராமி அந்தாதி (15) (பாடல்(8)
அபிராமி அந்தாதி (15)
அபிராமி அந்தாதி (15)
பாடல்:8
8: சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே
பரம்பொருளை சத்தியம் சிவம் சுந்தரம்
என்று அழைக்கிறோம்.
சத்தியம்தான் கடவுள்.
அதற்குத்தான் உண்மையில் சக்தி இருக்கிறது.
அதுதான் இந்த அண்டத்தைப் படைக்கிறது. நிலை நிறுத்துகிறது. வாழ்விக்கிறது. முடிவில் தன்னுள் இழுத்துக் கொள்ளுகிறது.
அது இந்த உலகில் தீமைகள் உச்ச கட்டத்தை அடையும்போது அதன் ஆணிவேரை அறுத்தெறிய மட்டும் வெளிப்படும். அதன் வேலை முடிந்தவுடன் அது தன்னை மறைத்துக்கொள்ளும்.
அப்படித்தான் இந்த உலகில் தீயவர்களின் செயல்கள் அளவில்லாது பெருகி உயிர்களை வாட்டியபோது ராமனாக ,கண்ணனாக ,மற்றும் கணக்கற்ற மகான்களாக இந்த உலகில் தன்னைதோற்றுவித்துக்கொண்டு
தீமைகளை கட்டுபடுத்தியதும் தன்னை மறைத்துக்கொண்டது.
சத்தியமே இவ்வுலகில் தோன்றும்போது அதன் அடிப்படைக் குணமான அன்பையும் இணைத்துக்கொண்டே இவ்வுலகில் தோன்றுகிறது.
இரண்டும் இருக்கும் இடத்தில் அழகு தானே மிளிரும்.அதற்கு தனியாக புற பூச்சுக்கள் தேவையில்லை.
ஆனால் மனிதர்கள்தான் தங்களை அழகுபடுத்திக்கொள்ள பலவிதமான முயற்சிகளை செய்ய வேண்டியுள்ளது.ஆனால் சத்தியத்தை தன்னுள்ளே உணர்ந்தவர்களுக்கு அவர்கள் எப்படி காட்சியளித்தாலும் அவர்கள் எப்படி இருந்தாலும் எந்நிலையில்இருந்தாலும் அவர்களின் முகத்தில் செயல்பாடுகளில் ஒரு அழகு வெளிப்படும்.
அவர்களின் பார்வையில் ஒரு ஒளி இருக்கும்.
அது அவர்களை காண்பவர்களின் ஆன்மாவையே ஊடுருவும். அவர்கள் பேசவேண்டியதில்லை. அவரை சந்திக்க வருபவர்களும் எதுவும். கேளாமலே அவர்களின் சந்தேகங்கள் விலகிவிடும்.
அலைபாயும் மனது தானே அடங்கி ஒடுங்கி காணாமல் போய்விடும்.
மனிதர்கள் அழகை மதிப்பிடுவது புலன்களின் உதவி கொண்டுதான். அது ஒருவரையறைக்குட்பட்டதுதான்.
ஒருவருக்கு அழகாக தோன்றுவது
மற்றவருக்கும் விகாரமாகத் தோன்றும்.
ஆனால் தெய்வீக மனிதர்களிடம் தோன்றும் அழகு அனைவரையும் வசீகரிக்கும். தெய்வீக அழகுடன் இந்த உலக அழகு எதையும் ஒப்பிடமுடியாது .
பகவான் ரமணரின் மற்றும் மகாத்மா காந்தியின் முகத்தைக் காணும்போது இந்த உண்மை புலனாகும்.
அதனால்தான் தியானத்தில் அன்னையைக் கண்ட அபிராமி பட்டர். அபிராமியை சுந்தரி என்று அன்போடு அழைக்கிறார்.
அதுவும் எல்லோருக்கும் இறைவனாம் ஈசனின் துணைவியே ,செந்நிற மேனி கொண்டவளே,
மகிஷன் என்னும் எருமைக்கு இரண்டு கொம்புகள் முளைத்திருப்பதுபோல் எனக்கு நான் எனது என்னும் இரண்டு தீய குணங்கள் தோன்றி.என்னை பாடாய் படுத்துகின்றன.
அறியாமையின் உச்ச கட்டத்தில் மூர்க்கத்தனமாய்
பல தீமைகள் செய்து. படைத்த உன்னையே எதிர்க்கத் துணிந்த அந்த அசுரனை அழித்தவளே, என்னுளே புகுந்துகொண்டு என்னைப் பாடாய் படுத்தும் அகந்தையை அழித்து என்னை காப்பாற்றுவாயாக என்று வேண்டுகிறார் பட்டர்.
பாற்கடலைக் கடையும்போது நச்சுப்பாம்பு வெளியிட்ட நஞ்சை தன் கண்டத்தில் அடக்கிக்கொண்ட நீல கண்டனிடமிருந்து நஞ்சை தன்னுள் வாங்கிக்கொண்டு நீல நிறமாய்க் காட்சி தந்த நீலியே
அண்டங்களையும் உயிர்களையும் நீ ஈன்றெடுத்தாலும் என்றும் கன்னியாய் விளங்குபவளே
மண், பெண், பொன், புகழ் என்னும் சங்கிலித் தொடர்கள்போல்
என்னைப் பிணைத்திருக்கும் பாச விலங்குகளை அறுத்தெறி என்று வேண்டுகிறார்.
தாயே நீதான் அனைவருக்கும்
அபயமளிக்கும் ஆனைமுகனின் தாய்
அனைத்து துன்பங்களிலிருந்தும் காக்கும்
அபயக் கரத்தைக் கொண்டவள்
கேட்ட வரமனைத்தும் அருள்பவள்
உயிர்களிடம் அன்பு கொண்ட மென்மையான இதயம் கொண்டவள்.
நீதான் எப்போதும் என் உள்ளக் கருத்தாய் விளங்குகிறாய்.
மலர் போன்ற உன் திருவடிகளையே என் பற்றுக்கோடாகக் கொண்டுவிட்டேன் என்கிறார். பட்டர்.
நாமும் அன்னையை நம்புவோம் நலம் பெறுவோம்.
நான் + எனது... நீங்கி விட்டால்... நீக்கி விட்டால்... எல்லா அழகும் வந்து விடும் என்பதை அருமையாக சொன்னீர்கள் ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
அன்னையை நம்புவோம்
Deleteநலம் பெறுவோம்.