Saturday, February 1, 2014

விடுதலை வேண்டாமோ?

விடுதலை 
வேண்டாமோ?

எங்கிருந்து வந்தேன்
என்று தெரியாது?

இவ்வுலகில் பிறந்து சில காலம்
வாழ்ந்த பிறகு எங்கே செல்வேன்
என்றும் தெரியாது


இப்படி எத்தனை பிறவிகள்
எடுத்தேன் என்றும்
நான் அறியேன்

இன்பத்தில் சில காலம்
துன்பத்தில் சில காலம்
துக்கத்தில் சிலகாலம்
தூக்கத்தில் பல காலம்
ஏக்கத்தில் சிலகாலம்

ஏமாற்றத்தில் சில காலம்
ஏளனத்தில் சில காலம்

பிறரை துன்புறுத்தி
இன்புற்றது சில காலம்

சிலருடன் சேர்ந்து மகிழ்ச்சியில்
வாழ்வது சில காலம்
பிரிந்த சோகத்தில்  சில காலம்

என்னவென்றும் ஏதென்றும்
அறியாது மடமையில்
வாழ்ந்தது  சில காலம்

எல்லாம் அறிந்ததுபோல்
எல்லோர் முன்பும் ஏதேதோ
பிதற்றி திரிந்தது சில காலம்


உறங்குவதும் விழிப்பதும்
உண்பதும் உறவு கொள்வதும்
வீண் வெட்டிக் கதைகள் பேசி
உழன்றது பல காலம்.

எதற்கெடுத்தாலும் நான்
நான்  என்று நொடிக்கொருமுறை
உச்சரிக்கும் இந்த நாவு

அதை அடக்காவிடில்
அது நம்மை வாங்கிவிடும் காவு
நமக்கு அளித்துவிடும் சாவு


எல்லாவற்றையும்
எனது எனது என்று
எடுத்துக்கொண்டு
எக்காளமிடும் மனது

எதுவும் உனதில்லை
நான் என்று நீ நினைப்பது
நீயில்லை  என்று நம் செவியில்
அடிக்கடி மெல்லிய குரலில்
ஒலிக்கும் அந்தராத்மா



ஓவியம்;தி.ரா.பட்டாபிராமன் 

அதை கேட்க மனமில்லாது
மயக்கத்தில் சிக்கிக் கொண்டு
 நம்மை மண்ணைக்
கவ்வ வைக்கும் மண், பெண் , பொன் , புகழ்
பின்னே ஓடும் நமக்கு ஏது
அதன் குரலைக் கேட்க நேரம்?

இப்படியே வாழ்க்கைப் பயணம்
ஓடுகிறது நம்முடைய எண்ணங்கள்
பின்னால் அது ஓயும் வரை

நாம் பிறந்தது முதலே நம்மைத்
தொடரும் மரணத்தை அறியாது
புலன்கள் பின்னே
ஓடிக்கொண்டிருக்கிறோம்

காலம் கடக்கிறது
புலன்கள் ஒடுங்கும்போது தான்
நம் ஓட்டம் நிற்கிறது .

திரும்பிப் பார்க்கிறோம்
அதற்கெனவே காத்திருந்த
காலன் நம்மை விழுங்கி விடுகிறான்.

பயணம் முடிந்த பின்  மீண்டும்
உறக்கம் என்னும் மரணம்
மீண்டும் அதே காட்சிகளைக்
காண பிறவி என்னும் விழிப்பு

பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இடை இடையே வந்து
போகும் காட்சிகளை எவ்வளவு பிறவிகள்தான்
அறியாமையால் கண்டுகொண்டிருக்கப்போகிறோம் ?

இன்ப துன்பங்களை
அனுபவித்தவன் யார்
என்ற கேள்விகள் எழுவதேயில்லை?

இப்போது அவன்
எங்கே சென்றுவிட்டான்?

எப்போது உண்மையில்
இக்காட்சியை காணுபவன்  யார் என்று
அறியப்  போகிறோம்?

அப்போதுதான்
நமக்கு விடுதலை

அதுவரைக்கும் வீணர்களாய்
தறுதலைகளாகக் தான்
துன்பங்களிலும்



துயரங்களிலும் சிக்கி இடிபட்டு
இந்த உலகில் அலையத்தான் வேண்டும்

5 comments:

  1. வேண்டவே வேண்டாம் மறுபடியும் இப்பிறப்பு...!

    ReplyDelete
  2. தடுக்க என்ன முயற்சி செய்தீர்கள் DD

    ReplyDelete
  3. ஆன்மீக நாட்டம் என்பதே கட்சி பிறவியில்தான் வரும் என்று சொல்கிறார்கள். அதையே எப்படிக் கண்டு பிடித்தாகள் என்றும் தெரியவில்லை! நிலையில்லாதவற்றை இன்பம் என்று எண்ணி பின்னே ஓடும் வாழ்க்கையில்தான் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete


  4. மன்னிக்கவும். 'கடைசி' கட்சி ஆகிவிட்டது!

    ReplyDelete
    Replies
    1. இதில் மன்னிக்க என்ன இருக்கிறது ?
      கட்சி அரசியலிலும் உண்டு
      ஆன்மீகத்திலும் உண்டு.
      அதனால்தான் இரண்டிலும் சேர்ந்த
      யாரும் உருப்படுவதில்லை.
      அந்த கட்சியிலும்
      கோஷ்டி மோதல்கள் உண்டு.
      தொண்டர்களை மோதவிட்டுவிட்டு
      அதன் தலைவர்கள்
      குளிர் காய்கிறார்கள்.

      Delete