Friday, April 18, 2014

இறைவா நீ இல்லாத இடம் எது?

இறைவா நீ இல்லாத இடம் எது?

ஆம் நீ இல்லாத இடமே இல்லை.

ஆனால் அதை எனக்குதான்
உணர முடியவில்லை

நீ எப்போதும் உன்னை வெளிக்காட்டிக் கொண்டே இருக்கிறாய்,
நான் இங்கே இருக்கிறேன், இதிலே இருக்கிறேன்  என்று

நான்தான் அறிவில்லாமல் உன்னைத்
தவிர அனைத்தையும் அறிந்து கொள்கிறேன்.

கண்ணெதிரே நீ காட்சி கொடுத்தாலும்.
அதை கண்டு கொள்வது கிடையாது.

எதைத் தட்டினாலும் அதிலிருந்து
ஒலியாய் வெளிப்படுகிறாய்

எதை எதனுடன் உரசினாலும்
அதிலிருந்து வெப்பமாய், ஒளியாய் வெளிப்படுகிறாய்.

எல்லாவற்றிலும் நீராய் நிறைந்திருக்கின்றாய்

எல்லாவிடத்திலும் ஆகாசமாய் பரவியிருக்கிறாய்.

அதில்தான் அனைத்தும் வெளிப்படுகின்றன,
வளர்கின்றன. ஒருநாள் அதிலேயே மறைந்துவிடுகின்றன.

புலன்களுக்கு தெரிவதைத்தான் நான் காண்கின்றேன்.

புலன்களுக்குப் பின்னால்  நீ தான் இருந்து
அனைத்தையும் காண்கின்றாய், இயக்குகின்றாய்.
இருந்தும் அதை அறிய இயலாது என் அகந்தை தடுக்கிறது.
என் கவனத்தை  திசை மாற்றுகிறது.

என்னுள்ளே இருக்கும் உன்னை விடுத்து
மண்ணையும், பெண்ணையும், பொன்னையும்
நாடிதான் மனம் செல்கிறது. பிறந்தது முதல் மரணம் வரை.

வடிவத்தைத்தான் நான் காண்கின்றேன் ,
அதன் பெயரைத்தான் அறிகின்றேன்.
அதன் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும்
உன்னை என்றுதான் அறிவேனோ.?


அனைத்தும் ராம நாமத்தில் அடக்கம் என்பதை
 உணர்ந்தே அல்லும் பகலும் அதையே சொல்கின்றேன்.

அருகிலேயே அகத்தின் உறையும் உன்னை என்று உணர்வேனோ?


2 comments:

  1. தெய்வத்தை நேரில் சந்திக்க விழையும் ஒரு பக்தனின் குரலாக 'கலியுகக் கண்ணன்' என்ற திரைப்படத்தில் ஒரு பாடலின் நடுவே ஒரு வசனம் வரும். "கண்ணா... நீ வேற நான் வேறன்னு நினைச்சப்ப நீ வந்தே... நீ என் நெஞ்சுக்குள்ளேயே இருக்கறப்ப எப்படி வருவே..?"

    ராமனாயிருந்தாலென்ன, கிருஷ்ணனாயிருந்தாலென்ன!

    ReplyDelete
  2. எல்லாவற்றிக்கும் அகந்தையே காரணம் என்று புரிகிறது ஐயா...

    ReplyDelete