Monday, December 23, 2013

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(9)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(9)



ஆண்டாள் அருளிய 
ஒன்பதாவது பாசுரம். 


செல்வச் செழுப்பில் மூழ்கி அதில் 
சுகம் கண்டுவிடும் மனம் இறைவனை 
மறந்து உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறது 

எட்டு நாட்களாக ஆண்டாள் அனுதினம் 
அனைத்தையும் மறந்து உறக்கத்தில் 
ஆழ்ந்துபோகும் உயிர்களை எழுப்பி 
அறியாமை என்னும் உறக்கத்திலிருந்து 
இறைவனின் பெருமைகளை கூறி 
அதை அதிலிருந்து விடுவித்து 
காப்பாற்ற முனைகிறாள். 


இறைவன் நாமத்தை செவிமடுக்காது, 
அவனைப்பற்றிப் பாடாது, 
அவனை சிந்திக்காது ,
கோடி முறை இந்த 
உடலில் துன்பங்களை அனுபவித்தும், 
இன்னும் அதிலிருந்து விடுபடும்
சிந்தனையே இல்லாது 
கதவை அடைத்துக்கொண்டு 
உறங்கிக் கிடக்கும் நம் போன்றவர்களை
 காப்பாற்றி கரை சேர்க்கத்தான் 
ஆண்டாள் நம் மீது கொண்ட 
அபரிமிதமான கருணையினால் 
வந்து நம்மை எழுப்புவதை கருத்தில் கொண்டு 
தோழியை,உறக்கத்திலிருந்து
விடுபட்டு வந்து கதவை திறக்க மாட்டாயோ 
என்று அன்போடு அழைக்கிறாள்.  




மாமியை அழைத்து நீங்களாவது 
அவளை கொஞ்சம் உறக்கத்திலிருந்து 
எழுப்பக் கூடாதா? என்று கேட்கிறாள்.

மாமாயனே,மாதவனே, வைகுந்தனே, 
என்று பகவானின் நாமங்கள் சொல்லாமல் 
அவள் ஊமையாகி விட்டாளோ ?

அன்றி நான் இத்தனை நாட்கள் 
அவளுக்கு சொன்ன வார்த்தைகள் 
அனைத்தும் செவி மடுக்க   முடியாதபடி 
செவிடாகி விட்டாளோ ? 

வேறு யாராவது அவளுக்கு நீண்ட 
உறக்கத்தில் ஆழும்படி மந்திர பிரயோகம் 
செய்து விட்டார்களோ  என்றும் கேட்கிறாள். 

நம்முடைய உயிர் 
ஒரு 9 ஓட்டைகள் உள்ள ஒரு மாடம். 

இதன் உள்ளே ஆன்மாவாகிய 
வள்ளல் வாசுதேவன் 
நம் இதயத்திற்குள் நின்றுகொண்டு 
ஒளி  வீசுகின்றான் 


அவன் துணை கொண்டுதான்
நாம் புற உலகில் புலன்கள் மூலம். 
அனைத்தையும் கண்டு இன்புறுகின்றோம் 
அனைத்து சுகங்களையும் அனுபவிக்கின்றோம் 

அந்த நிலையற்ற இன்பத்திலேயே மயங்கிப்போய் 
இந்த சுகங்களுக்கு காரண கர்த்தாவான 
கண்ணனை  மறந்து உலக மோகத்திலே 
மூழ்கிவிடுகின்றோம். 

புற உலக இன்பங்களை அடைய உதவும் 
இந்த உடலை ஒரு ஓட்டை மாடம் என்று 
வர்ணிக்கிறார் தொண்டரடிப் பொடி  ஆழ்வார்.

இது எப்போது
வேண்டுமானாலும் விழுந்துவிடும்,

இந்த உயிரும் ஏதாவது 
ஓட்டை வழியாக வெளியேறிவிடும். 

அப்போது இதுவரை
அனுபவித்த சுகங்கள் 
எதுவும் நமக்கு கிடைக்காது 
இருளில்தான் கிடக்கவேண்டும். 

ஏன் இருளில் கிடக்க வேண்டுமென்றால் 
இந்த .உயிர் உடலில் இருக்கும்போதே 
ஒளி வடிவான எம்பெருமானை வணங்கி, 
அவன் புகழைப் பாடி, அவன் நாமங்களை 
திரும்ப திரும்பச் சொல்லி,
நம்முள் நமக்காக எந்நேரமும் 
அருள் செய்யக் காத்திருக்கும் 
மோகனக் கண்ணனை 
உள்ளத்தில் காண வேண்டும். 

அப்படிக் காணாவிடில் நம் உள்ளம் 
இருளைதான் காணும் 
அதில் ஒன்று தெரியாது. 
இறைவனும் காட்சியளிக்கமாட்டான் 

இருட்டில் வழி தெரியாமல்
திண்டாடி அழத்தான் வேண்டும்

அதனால்தான் கண்களில்ஒளி இருக்கும்போதே 
அந்த கண்ணனின் வடிவத்தை நம் மனதில் 
நிலை நிறுத்திக்கொள்ளவேண்டும்

கண்ணனின் தாள்களை கெட்டியாகப் 
பிடித்துக்கொள்ளவேண்டும் .
அதைத்தான் யோகிகளும், 
முனிவர்களும் கண்டு அனுபவிக்கிறார்கள்.

இந்த உடலில் உயிர் உள்ளபோதே 
அந்த மாறா இன்பத்தை, 
அள்ள அள்ளக் குறையா தேனமுதமான 
கண்ணனின் நாமத்தை நினைந்து நினைந்து 
அவனை நம்முள் உறையும் 
அந்த ஸ்ரீனிவாசனை
 நம் வசப்படுத்தி இன்புறவேண்டும்.என்று அவர்கள் 
நமக்கு வலியுறுத்துகிறார்கள்  

அவன் நாமம்தான் நம்  
உயிரின் உயிர் காக்கும் கருவி. (life jacket)

அதை அணிந்து கொண்டால் 
நம் உடல் பிறவிக் கடலில் மூழ்காது காக்கும் கவசம். 
என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். 

பெருங்கடலில் உள்ளகணக்கில்லா  நீர்த்துளிகள்போல்
எண்ணற்ற நாமங்கள் கொண்டவன் அந்த எம்பிரான்.

அவற்றில் ஆயிரம் நாமங்கள் 
அதிலிருந்து கிடைத்த நன் முத்துக்கள். 

ஒவ்வொன்றும் முழுமையான 
ஒளி  வீசும்,முத்துக்கள் 

முத்துக்களிலே  பேதம் இல்லை.

ஒரே ஒரு முத்தை மாலையில் கோத்து  அணிந்தாலும், 
அல்லது அனைத்து முத்துகளையும்ஒன்றாக சேர்த்து  மாலையாக கட்டி அணிந்தாலும் ஒன்றுதான்.
இருந்தாலும் குறிப்பாக மூன்று  நாமங்களை 
இந்த பாசுரத்தில் ஆண்டாள் குறிப்பிடுகிறாள்.

மாமாயன்-நம்மை மாயையில் தள்ளுபவன். அதே நேரத்தில் அவன் திருவடிகளே கதி என்று அவன் காலைப் பிடித்துக்கொண்டால்  அந்த மாயையிலிருந்து நம்மை விடுவித்து அவனோடு சேர் த்துக்கொள்பவன் 

மாதவன்-மாபெரும் தவம் செய்தால்தான் அடையக் கூடியவன்.
ஆனால் மார்கழி மாதத்தில்  மட்டும்  நாம் தவம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. உறக்கத்தை விட்டு அதிகாலையில் எழுந்து  நீராடி 
அவன் கோயிலுக்கு சென்று கண்ணா,நாராயணா, உன் திருவடிகளே கதி என்று சரணாகதி செய்தால் போதும் .அவன் அருள் எளிதாகக் கிடைத்துவிடும் 

வைகுந்தன்-அப்படி செய்பவர்களுக்கு மீண்டும் பிறவிக்கடலில்  விழாமல் நிரந்தரமாக அவன் திருவடிகளில் தங்கி இன்புறும் வகுந்த வாசத்தினை அளிப்பவன் 

புறத்தே கோயிலில் அவனை தினமும் சென்று வணங்கினால் நம் உள்ளத்தில் தோன்றி   அருள் செய்ய வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறான் என்பதை நமக்கு உணர்த்தத்தான் ஆண்டாள் இந்த புவியில் அவதரித்தாள்

அவன் அன்பை விட அவள் அன்பிற்கு ஈடு இணை எது?
நிச்சயம் கிடையாது. 

ஆனால் அவள் உபதேசங்கள்  இந்த உலகம் அவள் ஏதோ ஒரு பிரிவினருக்கு மட்டும்தான் உரியது   என்று எண்ணி அவள் பெருமையை உணராமல் மயக்கத்திலும் உறக்கத்திலும் ஆழ்ந்து கிடக்கிறது

என்னே பேதைமை! 

அண்ட  சராசரங்களை ஆளும் அந்த அரங்கனையே 
தன்னுடைய பக்தியினால் கட்டிப் போட்டவள் அல்லவா!

நமக்கெல்லாம் அந்த பரம்பொருளை எளிதாக அடையும் 
வழியைக் காட்டியவளல்லவா !

அவள் திருநாமம் ஒன்றே போதும் .
நம்மை பற்றியுள்ள அனைத்து பற்றுக்களும் 
காய்ந்த ஈர மணல்போல் தானே 
நம்மை விட்டு உதிர்ந்துவிடும்
கோதை அனுதினமும்
நாம் படும் வேதைகளைப் போக்க வந்தவள் 

வேதங்களால் போற்றப்படும் 
வித்தை (விதையை) 
வறண்டு போன நம் மனதில்
விதைக்க வந்தவள் 

பக்திப் பயிரை வளர்க்க வந்தவள்

பவக் கடலிலிருந்து 
நம்மையெல்லாம் மீட்க வந்தவள்  

நாம் செய்த பாவங்களை எரித்து 
தீயில் தூசாகும் வழியைக் காட்டித் தந்தவள் 

இவ்வுலக பந்தங்களை இறை நாமத்தின் 
துணை கொண்டு எளிதாக அகற்றும்
வழியைக்  காட்ட  வந்தவள். 

அவள் நாமத்தை  சொல்வதும் 
அரங்கனின் நாமத்தை சொல்வதும் ஒன்றுதான் 


அரங்கனிடம் கலந்துவிட்ட  அவள் 
மீண்டும் நமக்காக ஆண்டுதோறும்
மார்கழி மாதத்தில் அவதரிக்கின்றாள்

அகந்தையினாலும் 
அறியாமையினாலும் அவதிப்படும்
நம் போன்ற மக்களை கடைதேற்ற.

ஓங்கி உலகளந்தவன் புகழ்போல் 
அவள் புகழும் ஓங்கட்டும் 

இன்னும் வரும்  

Pic-courtesy-google images. 

2 comments:

  1. அருமையான பாசுரம் + விளக்கங்கள் + படங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete