Friday, January 24, 2014

அபிராமி அந்தாதி (5)(காப்புச் செய்யுள் )

அபிராமி அந்தாதி (5)

காப்புச் செய்யுள் 

தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை 
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற 
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே- 
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. --- காப்பு




எந்த ஒரு செயலையும்
தொடங்க வேண்டுமென்றால்
அதற்கு உடல் ஒத்துழைக்க வேண்டும்

மனம் ஒத்துழைக்க வேண்டும்.

ஐம்புலன்களின்
வெளிப்பாடான உடலும்
அதை இயக்குகின்ற சக்திகளும்
ஒன்றுபடவேண்டும்.

அப்போதுதான் எந்த செயலும்
முழுமை அடையும்
வெற்றி பெறும் .

 தில்லையாகிய சிதம்பரத்தில் கோயில் கொண்ட
சிவ  பெருமானின் தலையில் வீற்றிருக்கிறாள்
தாரையாக ஓடிக்கொண்டிருக்கும் கங்கை

கொன்றை மலரை சூடிக்கொண்டிருக்கும்
அவன் கழுத்தில் செண்பக பூவினால்
தொடுக்கப்பட்ட மாலை அழகுடன் விளங்குகிறது.



சிவமும் சக்தியும் ஒன்றென
உலகிற்கு உணர்த்தும் வண்ணம்
அவன் உடலில் பாதியாக
விளங்கும் உமையாள்
உலகேழையும் தோற்றுவித்ததோடு
முழு முதற் கடவுளாக விளங்கும்
கணபதியையும்
மகனாகத் தோற்றுவித்தவள்



பஞ்ச பூதங்களின் வடிவமாக
காட்சி தரும் கணபதியின்
அருளை வேண்டி
அபிராமி பட்டர்  அந்தாதியை
இயற்றத் தொடங்குகிறார்.

அபிராமியின் வடிவழகையும்
அடியார்களின் மீது அவள்காட்டும்   அருளையும்
விளக்கி அன்னை மீது  தான் இயற்றும்
அந்தாதி பாடல்கள் எப்போதும் தன்  நினைவில்
நின்று துதிக்க அருள் செய்யுமாறு
வினாயகப் பெருமானை வேண்டுகிறார்
அபிராமி பட்டர்.

படிக்கவும் பாடி மகிழவும்
அழகிய தமிழ் சொற்களால் கட்டப்பட்ட
கட்டுரைகள் கொண்டது
அபிராமி அந்தாதி.

நாமும் மனம் ஒன்றி  அந்தாதிப் பாடல்களை
அனுதினமும் அபிராமியின் முன்பு பாடி  அனைத்து
நலன்களையும்  பெற ஆனைமுகனை வேண்டுவோம்.




No comments:

Post a Comment