Monday, September 30, 2013

மாயவன் கண்ணனை வேண்டிடுவோம்

மாயவன் கண்ணனை 
வேண்டிடுவோம்

மாளாப்  பிறவியை வேரறுக்க
மாயவன் கண்ணனை



வேண்டிடுவோம்

மனம் ஒன்றி
மாதவம் செய்தால்
மாதவன் அருளைப் பெற்றிடலாம்

ஓராயிரம் நாமங்கள் கொண்டவனாம்
அன்பினால்அதில் ஒரு நாமம்
சொன்னால் கூட போதும்
சித்தம் மகிழ்பவனாம்

கல்லிலும் இருப்பான்
நாமகளின் சொல்லிலும் இருப்பான்
 புல்லிலும் இருப்பான்
நெஞ்சார நினைப்பவர்க்கு
நிழலாகவும் இருப்பான்

நான்மறைகளுக்கு
எட்டாப் பொருளானான்

நாலாயிரம் பாடிய ஆழ்வார்களின்
உள்ளம் வசமானான்

தூணிலும் இருப்பான்
துரும்பிலும்  இருப்பான்
பூக்கும் அரும்பிலும் இருப்பான்.
ஊர்ந்து செல்லும்
எறும்பிலும் இருப்பான்.
எல்லா உயிர்களின்
இதயத்திலும் இருப்பான்.

கண்ணார காண்பதற்கு கவின்மிகு
வடிவமாகவும் தோன்றுவான்.



நான்கு கரம் கொண்டவன்
சக்கரத்தை கையில் ஏந்தியவன்
சடுதியில் சங்கடங்கள் தீர்க்க

சங்கினால் சங்கை தீர்ப்பான்
பாவம் போக்கும் கங்கையானான்

உன்னை போற்றி துதிப்பவர்க்கு
வாழ்வில் தாழ்வுண்டோ ?

உன்னை தூற்றி பிதற்றுபவர்க்கு என்றும்
வாழ்வில் மகிழ்ச்சியுண்டோ ?

அன்போடு உன் திருவடியில்
 மலரிட்டால் போதும்
அருளோடு பொருளும்
அகலாது நிற்கும்

உண்ணும் எதையும் உனக்கு சமர்ப்பித்து
அடியவர்க்கு உணவிட்டு உண்டால்
உண்டாகும் மகிழ்சிக்கு ஈடேது?

எல்லாம் உனதென்றும்,
யாதும் உன் செயலென்றும்
அறிந்துகொண்டேன்
அகந்தை விட்டேன்.
சிந்தையில் நிறைவு கொண்டேன். 

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(5)

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(5)

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(5)

ஒளிவு மறைவின்றி
செயல்பட்டான் பரதன்.

அனைவரின் முன்பாக இராமனை மீண்டும்
நாட்டிற்கு வந்து அரசாள வேண்டினான்.

ஆனால் இராமனோ தந்தை சொல்
 மிக்க மந்திரமில்லை என்ற வாக்கை
மெய்பிக்கும் வகையில் அவன்
வேண்டுகோளை மறுத்துவிட்டான்.
அவன் தாயின் விருப்பப்படி 14 ஆண்டுகள்
அயோத்தியை ஆட்சி செய்யுமாறு அறிவுறுத்தினான்.

அப்போது பரதன் நான் நாட்டை
உங்கள் சார்பாகத்தான் ஆட்சி புரிவேன் என்றும்
தன்னால் அரசாட்சியை ஏற்ற்றுகொள்ள
 இயலாது என்று கூறினான்.

அவன் இராமன் ஸ்ரீமன் நாராயணனின்
அவதாரம் என்பதை அறிந்திருந்தான்போலும்.

அதனால்தான் இராமபிரானின் பாதுகைகளை
அளிக்குமாறும் அதற்க்கு பட்டாபிஷேகம்  செய்து
அவன் சார்பாக அவனும் மரவுரிக்கோலம்
தரித்து நாட்டை ஆள்வதாக வேண்டினான்.





எப்போதும் அனைவரும் இறைவனின்
 கையை வணங்குவதில்லை.

இறைவனின் திருவடிகளைதான்
வணங்குகின்றனர்.

திருவள்ளுவரும் பிறவிப் பெருங்கடலை
கடக்க உதவுவது இறைவனின் திருவடிகளே
என்று அறுதியிட்டு கூறியுள்ளார்.

அதனால்தான் இறைவன்
திருவடி சம்பந்தம் பெற்ற
பாதக்குறடுகளை அளிக்குமாறு
பரதன் வேண்டினான்.



பாதக்குறடுகளை பாதுகை என்று
அழைக்கக் காரணம். அது
அடியவர்களை பாதுகாக்கும் கை.

மேலும் அதற்க்கு பாத ரட்ஷை
என்றும் பெயர் உண்டு.
அது வணங்குபவர்களை எல்லா
ஆபத்திலிருந்தும் காப்பாற்றும் ரக்ஷையாக ,
கவசமாக விளங்குகிறது.

அதனால்தான் சுவாமி வேதாந்த தேசிகன்,
பாதுகைகள் மீது அதன் மகிமையை விளக்கும்
வகையில் பாதுகா சகஸ்ரம்  என்று 1000 பாடல்களை
இயற்றியுள்ளதே அதன் பெருமைக்கு சான்று.

பரதன் பாதுகைகளை பெற்றுக்கொண்டு
நாட்டின் எல்லையில் அதற்க்கு முடிசூட்டி
அவனும் தவக்கோலத்தில் நின்று
நல்லாட்சி 14 ஆண்டுகள்  செய்து
இராமனின் வரவிற்காக காத்திருந்தான்.



இந்த தியாகத்தால்தான் ஆயிரம் ராமர்கள்
ஒன்று சேர்ந்தாலும் ஒரு பரதனுக்கு ஈடாக மாட்டார்கள்
என்று அவன் புகழ் பெற்றான்.

பரதனைப் போல் மக்கள் முன்பாக
ஒரு செயலைச் செய்யாமையால்
இராமபிரான் பெருந்துன்பம் அடையநேர்ந்தது
. (இன்னும் வரும்)

pic.courtesy-google images.

Sunday, September 29, 2013

கண்ணன் என்னும் திருவடிவம்

கண்ணன் 
என்னும் திருவடிவம்

காண்போர் மயங்கும்
ஒரு வடிவம்




அதுதான் கண்ணன் 
என்னும் திருவடிவம்

நான்மறைகள் போற்றும்
நாயகன் அவன்
நல்லோர்கள் நாடும்
தூயவன் அவன்

உலகம் யாவையும்
படைத்தவனவன்

உயிர்கள் யாவினும் உள்ளொளியாய்
இருந்து இயக்குபவனவன்

மலரும் அவனே,அதிலிருந்து
வீசும் நறுமணமும் அவனே

பரிதியாய் பாரில் ஒளி
வீசுபவனும் அவனே

வணங்கும் பக்தரின் மனதில்
தங்கி அருள்பவனும் அவனே

விண்ணோர்
வணங்கும் பாதன்

வியக்கவைக்கும் செயல்களை
ஆற்றும் லீலாவிநோதனவன்

அன்பாய் அவன் திருவடியில்
மலரிட்டால் ஆனந்த
வாழ்வருளுவான்

பசித்தோர் பிணி தீர்ப்பவனை
பாசத்தோடு பக்கத்திலிருந்து காப்பான்

வாடுபவரின் வாட்டம் போக்கும்
உள்ளங்களை உலகம் போற்ற
உயர்த்தி வைப்பான்.

எண்ணமெல்லாம்
நீ நிறைந்துவிட்டால்
வண்ணமயமாய் வாழ்வு
அமைய தடையேது? 

Saturday, September 28, 2013

கண்ணா உன் குழலோசை காதில் கேட்டேனம்மா

கண்ணா உன் குழலோசை 
காதில் கேட்டேனம்மா

கண்ணா உன் குழலோசை
காதில் கேட்டேனம்மா
என் மனதில் இருந்த குழப்பமெல்லாம்
அக்கணமே அகன்றதம்மா



ஆதிசேஷம்   குடை பிடிக்க
அடைமழையில்
அவனிக்கு கண்ணனாய்  வந்தாய்




அகிலத்து
மாந்தரெல்லாம் இன்புறவே

பாலை கடைந்தெடுத்து வந்த
வெண்ணையினை பலமுறை உண்டு
தீர்த்தாய் உன் அண்ணன் பலராமனுடன்



வீட்டில் உண்டது போதாதென்று
அயலார் வீட்டிலும் வெண்ணை திருடி
தின்றாய், ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானாய்

உன்னை ஏசியவர்களை உன்னை
உள்ளன்போடு அனைத்தையும்
விடுத்து நேசிக்கும்படி செய்தாய்




ஆடல்வல்லான் ஆடிய நடனம்போல்
கோபர்களுக்கு துன்பம் தந்த காளிங்கனின்
தலைமீது நடனமாடி அவர்கள் இடரைத் தீர்த்தாய்



ஐவர் பாண்டவர் நலன் காக்க பாதகரிடம்
தூது சென்றாய் ஐம்புல  கள்வரிடம்
அகப்பட்டுக்கொண்ட
என்னை காக்க உன்னிடம் தூது
செல்ல யாருளர்?

உந்தன் நாமம் சொல்ல சொல்ல
அகன்றிடும் காமம்

அபயம் தந்திடும் உந்தன் வடிவம்
காணக் காண மாயமாய்
 மறைந்திடும் மரணபயம்

பக்தியினால் பாடி
உன்னை அடைந்தாள் மீரா



பாசுரங்களினால் உன்னை பாடி
உன்னில் கலந்தாள்  ஆண்டாள்



உள்ளத்தில் உன்னை
நினைத்து விட்டால்
கள்ளப் புலனைந்தும்
காணாமல் போய்விடும்
என்றுணர்ந்தேன் ,

எந்நேரமும் உன் நாமம் செப்புகின்றேன்
குறைவில்லா  ஆனந்தம் பெற்றேன்.

pic. courtesy-google images.


வேய்ங்குழலில் வேணுகானம் இசைக்கும் வேணுகோபாலனே

வேய்ங்குழலில் 
வேணுகானம்   இசைக்கும் 
வேணுகோபாலனே 




வேதங்களும் காண இயலா
திருவடிகளை உடையவனே

உடையவர் போற்றி கொண்டாடிய
சம்பத்குமாரனே

கோகுலத்தில் கோக்களை மேய்த்து
கோபர்களுடன் கூடிக் களித்தவனே

கோபியர்களின்தூய  பக்திக்கு
அடிமையானவனே

அதர்மத்தை அழித்து அஞ்ஞானத்தை
அழிக்கும் ஆத்மா போதமளிக்கும்
கீதையை அளித்தவனே

ஆடாது அசங்காது உன் திருவடிவம்
என் நெஞ்சை விட்டு அகலாது
நின்றருள வேண்டுகிறேன்.

நினைத்தாலே இன்பம் தரும் நின் வடிவம்
உன் நாமம் உரைத்தாலே தொலையும்
அனைத்து  பாவங்களும் அக்கணமே

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!

ஆலயம் என்றால் என்ன?

ஆலயம் என்றால் என்ன?

ஆலயம் என்றால் ஆன்மாக்கள்
லயமாகும் இடம் என்று பொருள்

இந்த உடலே தேஹாலயம்
என்றுதான் அழைக்கப்படுகிறது.
இந்த உடலுக்குள்தான்
ஆன்மா உறைகிறது.

அதைப்போல் ஒவ்வொரு
உயிரிலும் ஆன்மா உறைகிறது

அதை வெளிப்புறமாக உணர்த்தும்
முகமாக ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன .

வெளிப்புறத்தில் செல்லும் மனதில்
தோன்றும் எண்ணங்களை உட்புறமாக
 திருப்பிவிடும் வகையில்
ஒவ்வொரு ப்ராகாரமாக  கடந்து உள்ளே
 கருவறைக்குள் சென்று  இறைவடிவத்தை
மங்கிய விளக்கொளியில் எல்லாவற்றையும்மறந்து
மனதை ஒருமைப்படுத்தி இறைவனை வணங்குவதுபோல்,
வெளிப்புறம் செல்லும் நம் மனதின் எண்ணங்களை நிறுத்தி
மனதை நம் இதயத்தில் உறையும் ஆன்மாவை
உணர வழி வகுக்கிறது ஆலயவழிபாட்டு முறைகள்.





இந்த பாவத்தோடு தினமும் ஆலயத்திற்கு
சென்று இறை வடிவத்தை தரிசித்து,மனதை
ஒருமுகப்படுத்திவந்தால் நம் இதயத்தில்
உறையும் ஆன்மாவாகிய இறைவனை
தரிசித்து உய்யலாம்.

அதனால்தான் ஆலயத்தை ஆன்மாக்கள்
லயமாகும் இடமாக அறிவித்தார்கள்.

அங்கு ஆண் , பெண், விலங்குகள்,
 உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள், வறியவர்கள்,
செல்வந்தர்கள், அரசர்கள், என எந்த வேறுபாடுகள்
ஏதும் இல்லாமல் அங்கு வரும் அனைவரும்
ஆன்மாக்களே என்ற எண்ணத்துடன்
சென்று. வழிபாடு செய்வதே
உண்மையான வழிபாடு,




அதை விடுத்து அதை கேளிக்கைக்கூடமாக
ஆக்கி வருவது ,வியாபார நோக்கத்திற்காக
பயன்படுத்துவது போன்றவை ஆலயவழிபாட்டு முறைகள்.
உண்மை தத்துவத்திர்க்கே எதிர்மாறான செயலாகும்
என்பதை அனைவரும் உணரவேண்டும்.

pic. courtesy-google images.

Thursday, September 26, 2013

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(4)

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(4)

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(4)



காக்கும் தெய்வம்
ஸ்ரீமன் நாராயணன்தான்
அவனியில் அல்லல்படுவோரை காக்க
வந்த தெய்வம் இராமன் என்பதை
அறிந்தவள் கைகேயி.

அவன் அயோத்தியில் முடி சூட்டிக்கொண்டு
அமர்ந்துவிட்டால் அவதார காரியம் என்னாவது?

அவன்  வருகைக்காக வனத்தில் முனிவர்களும்,
தவசிகளும், ரிஷிகளும் ,பல இடங்களில் பக்தர்களும்
ஆவலுடன்  காத்துக் கிடக்கிறார்கள்.

மக்களை பலவிதங்களில் துன்புறுத்திக்கொண்டிருக்கும்
அசுரர் கூட்டத்தை வதைத்து மக்களைக் காப்பாற்றவேண்டும்.

தர்மத்தை சிதைத்து அதர்மவழியில் நடந்துகொண்டிருக்கும்
ஆட்சிகளை ஒழித்து நீதியை நிலைநாட்ட வேண்டும்.
அகற்றவேண்டும்.

இதனால்தான் அவள் அவனை நாட்டை விட்டு
வெளியேற்ற முடிவெடுத்தாள்



எண்ணி துணிக கருமம் என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க
அவள் முடிவில் உறுதியாய் இருந்து அதை நிறைவேற்றினாள்

பரதனும் தன்  குழப்பத்தை விட்டுவிட்டு தந்தை
தசரதன் ஈமகிரியைகளை முடித்துவிட்டு.
மக்களுக்கு தான் அரச பதவியில் அமர விருப்பமில்லை என்பதை
மக்களுக்கு தெரிவித்து தன்  மேல் உள்ள  பழியை நீக்க
அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளலானான்

அவன் கானகத்திற்கு சென்றுவிட்ட
இராமனைதேடி அவனை சந்தித்து அவனை
வற்புறுத்தி நாட்டிற்கு அழைத்துவந்து மீண்டும்
அரசனாக்க முயற்சி செய்ய முடிவு செய்தான்.

அதற்க்கு அவன் அங்கே தனியே செல்லவில்லை.

தன் தாயார்கள், மந்திரிகள், குருநாதர்கள்,
மக்கள் பிரதிநிதிகள், தன்  படைகளுடன் சென்றான்.



ஒரு அரசன் முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது
அனைவரும் அறிய செய்தால்தான் பின் பிரச்சினைகள்
எதுவும் எழாது என்பதை அவன் அறிந்திருந்தான் .

தான் மட்டும் தனியாக இராமனை சந்திக்க சென்று,
இராமன் வர மறுத்திருந்தால்
அதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்..

அவனை சந்தேகக்
கண்கொண்டுதான் பார்த்திருப்பார்கள்.

அதைத் தவிர்ப்பதற்காகவே அவன்
அனைவரையும் அழைத்து சென்றான்.

அனைவரின் முன்பாகவே இராமனை மீண்டும்
நாட்டிற்கு வந்து அரசை ஏற்றுக்கொள்ளுமாறு
அழைத்து தன் மீதுள்ள பழியை தீர்த்துக்கொண்டான்.
 (இன்னும் வரும்)

Pic-courtesy-google images. 

Tuesday, September 24, 2013

சிந்தனைக்கு சில கருத்துக்கள்

சிந்தனைக்கு சில கருத்துக்கள் 






இறைவன்
சன்னதியில் நிற்கும்போது
எதையும் யோசிக்காதீர்கள்
அவனை மட்டும் நேசியுங்கள்
கற்பூர ஜோதி காட்டும்போது
கண்களை மூடிக்கொள்ளாதீர்கள்

நமக்கு காணும் ஒளி  தந்த
இறைவனின் வடிவத்தையும்
அவனைக் காட்டும் ஒளியையும்
கண்ணார தரிசித்து மகிழுங்கள்.

இதயம் என்பது எப்போதும்
இயங்கிகொண்டிருக்கும் சக்தி உறையும் இடம்

அதை நம்மை இயங்கவிடாமல் முடக்கி போடும்
கவலைகள், அவநம்பிக்கை, போன்ற
தீய சக்திகள் தங்க இடம் அளிக்காதீர்கள்.

உடலில் உயிர் தங்க வெப்பம் தேவை
அது இருக்க வேண்டிய இடத்தில
இருக்க வேண்டிய அளவு இருக்கவேண்டும்.
அது குறைந்தாலோ அல்லது அதிகமானாலோ
உடலை உயிர் உடலை விட்டு பிரிந்துவிடும்.

மரணம் ஒரு மனிதனை
உடனே கொன்றுவிடும்
ஆனால் பயமும் கவலையும் மனிதர்களை
சிறிது சிறிதாகக் கொல்லும் கொடிய நோய்

தீ அனைத்தையும் எரித்து சாம்பலாகிவிடுவதுபோல்
பொறாமை  என்னும் தீ மனிதர்களின்மனத்தில்
பற்றிவிட்டால்  அது சிறிது சிறிதாக அவன்
வாழ்வையும் அவனை சுற்றியுள்ளவர்களின்
வாழ்வையும் ஒரு சேர அழித்துவிடும்.

இந்த உடல் பிறவிக்கடலை கடக்க
இறைவன் வழங்கிய அதி அற்புதமான சக்தி
 மற்றும் வசதிகளுடன் கூடியது.
அதை ஓட்டுபவனாக
அவனே அதனுள் இருக்கிறான்.

அவன் துணையை  நாடாமல் ,
அவன் கூறும் வழிகாட்டுதலைப் புறக்கணிப்பவர்கள்
வழி தவறி குழியில் விழுவதை யாரும் தடுக்கமுடியாது. 

Sunday, September 22, 2013

அட்சதையின் மகிமை

அட்சதையின் மகிமை 

அட்சதை என்றால் என்ன என்று
 பல பேருக்கு தெரியாமல் இருக்கலாம்

தெரிந்தவர்களும் அதன் மகிமையை உணராது
அதன் முக்கியத்துவத்தை உணராது
நடந்து கொள்கிறார்கள்.

பொதுவாக திருமணங்களில் மணமக்கள் மீது
திருமாங்கல்யம் முடியும்போது அனைவரும்
எழுந்து நின்று அவர்கள் கைகளில் கொடுக்கப்பட்ட
 மஞ்சள் கலக்கப்பட்ட அரிசியை
மணமக்கள் மீது தூவி ஆசிர்வதிப்பார்கள்.

அதுவும் கல்யாண மண்டபத்தின் கோடியில்
 உட்கார்ந்துகொண்டு இருக்கும் ஒருவர்
ஒருவர் என்ன பல பேர்களும் இருக்கின்ற இடத்திலிருந்தே
அட்சதையை தூக்கி பலம் கொண்ட
மட்டும் வீசி எறிவார்கள்.

அது மணமக்கள் மீது சத்தியமாய்  விழாது

 இடையில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள்,
 நின்றுகொண்டிருப்பவர்கள் தலையில் போய்தான் விழுந்து,
அப்படியே தரையில் விழுந்து அனைவரின் காலில் மிதிபட்டு  மாவாயப்போய் முடிவில் குப்பையை சென்றடையும்.

அட்சதையை வீசியவர்கள்
 தாங்கள் ஏதோபெரிய சாதனையை செய்து விட்டதைப் போல்.
அடுத்து மொய் எழுதும் படலத்திற்கு தயாராவார்கள்.

இன்னும் ஒரு சிலர் மணமக்கள்
அருகில் சென்று நின்றுகொண்டு திருமாங்கல்யம் முடியும் நேரத்தில் அட்சதையை போட்டு வாழ்த்துவார்கள்.

அவர்கள் வீசும் அட்சதையிழ்மனமக்களின்
மீது விழுமா என்பது கேள்விக்குறியே.

ஏனென்றால் மணமக்களை சுற்றி. வீடியோ ,
மற்றும் புகைப்படம் எடுக்கும் கூட்டம் நின்று கொண்டிருக்கும்.
விழும் அட்சதைகளில் 99 விழுக்காடுகள் அவர்கள் தலையில்தான் விழும்.

அட்சதை என்பது ஒரு மங்கலப்பொருள். 

அது எவர் கையிலிருந்து அளிக்கப்படுகிறதோ 
அதைபொருத்து அதன் சக்தி இருக்கும். 

ஒரு மகான்களில் கையிலிருந்து ஆசீர்வாதம் செய்து, 
உரிய மந்திரங்களை சொல்லி தூவபபடுவது . மிகவும் சக்தி வாய்ந்தது. அவைகள் நலன்களை அளிக்கும். பலன்களை தவறாது அளிக்கும்.

அதைப்போல் பெற்றோர்கள், பெரியவர்கள், தூய்மையான ஏனம் உடையவர்கள், வேத விர்ப்பன்ன்னர்கள், ஞானிகள் மடாதிபதிகள் ஆகியவர்களை வணங்கும்போது அட்சதை தூவி ஆசிர்வதிப்பார்கள்.





அதை பய  பக்தியோடு நம்முடைய அங்கவஸ்திரத்தில் பெற்றுக்கொண்டு நம் தலையின் மீது வைத்துகொண்டு,வீட்டில்  கொண்டு வைத்தோமானால் அது நம்மை அனைத்து. துன்பங்களிலிருந்தும் பாதுகாப்பதோடு, வளங்களையும் அளிக்கும்.

இப்படிப்பட்ட மகிமை பொருந்திய அட்சதையை, 
அதன் உண்மையறியாமல் அனைவர் கையிலும் கொடுத்து அவமரியாதை செய்வதை நிறுத்தவேண்டும் என்றும், மணமகள் அருகில் வைத்து அட்சதை போடா விரும்புபவர்கள் மட்டும் மணமக்களை  ஆசீர்வதிக்கலாம் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே தினமலர் நாளிதழில்  என் கருத்தை  தெரிவித்தேன்  

ஆனால் இன்று வரை அது கடைபிடிக்கபடாமல் ஒரு மங்கலப் பொருளை. அனைவரில் காலடியில் பட்டு வீணாகுமாறு செய்வது  தொடருவது வேதனைக்குரியது.

AATCHADAI - is a mixture of tumeric-coloured rice and flowers. Rice is our staple food. As a cereal it drops on the ground, shoots and regrows. The bud of a flower-tree blooms / blossoms and emits a pleasant smell. A mixture of this when sprinkled over the newly-weds indicates the acceptance by the well-wishers wishing the couple a long, fragrant and productive life.http://skumaran1980.blogspot.in/2011/04/wedding-in-hindu.html

Saturday, September 21, 2013

எப்படி சரணாகதி செய்வது?

எப்படி சரணாகதி செய்வது?

சினம் எங்கே இருக்கிறது?

சினம் மனதில்தான் இருக்கிறது.
சினம் எங்கு முதலில் தோன்றுகிறது.
எண்ணத்தில்தான் தோன்றுகிறது.
எண்ணம்தாம் உடலில் செயலாக வெளிப்படுகிறது.
சினம் தோன்றுவதற்கு அடிப்படை காரணம் என்ன?

நான் என்ற அகந்தைதான் சினத்தின் ஆணிவேர்.
ஆணிவேரை அழிக்காமல் சினத்தை அழிக்கமுடியாது

நான் என்ற அகந்தையை அழிக்காமல்
மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவது
என்பது ஒரு போலியான செயல்.

நான், எனது என்ற இரண்டு எண்ணங்கள்
நம் மனதில் இருக்கும் வரை சினத்தை
அழிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.

நான் என்ற எண்ணத்தை  விடுவதற்கு
அனைவரிடமும் பணிவு வேண்டும்.

நம்மை படைத்து  நம்மை காத்து இயக்கும்
பரம்பொருளிடம் சரணாகதி செய்யவேண்டும்.

பலர் அறிய வணங்குவதாலோ,
பலர் முன்னிலையில் நான் இறைவனிடம்
அனைத்தையும் விட்டுவிட்டேன் என்று
விளம்பரப் படுத்திக் கொள்வதினாலோ பயனில்லை.

பட்டினத்தார் ஒரு கோயில் வாயிலில் உட்கார்ந்திருந்தார். அந்த வழியாக ஒரு திருடன் ஓடி வந்தான். அவனை காவலர்கள் துரத்தி வந்துகொண்டிருந்தனர். அவன் கொள்ளைஅடித்த பொருளை அங்கு தியானத்தில் அமர்ந்திருந்த பட்டினத்தாரின் காலடியில் போட்டுவிட்டு மறைந்து கொண்டான். வந்த காவலர்கள். பட்டினத்தாரை விசாரித்தனர். அவர் தியானத்தில் இருந்தமையால் பதில் ஏதும் சொல்லவில்லை. காவலர்கள்.  அரசனிடம் அவரை அழித்து சென்றனர். அரசன் அவரை கழுவிலேற்றுமாறு உத்தரவிட்டான்.

கழுவேற்றுவது என்பது ஒரு கொடிய தண்டனை. நன்றாக கூர் சீவப்பட்ட மரத்தில் எண்ணெய்  தடவி அதன் மீது குற்றவாளிகளை ஆசனவாயிலில் சொருகிவிடுவார்கள். சிறிது சிறிதாக உடலின் உள் அந்த கழுமரம் இறங்கும் அந்த கொடுமையான வழியில் குற்றவாளி துன்பப்பட்டு உயிருடனேயே பலநாள் துன்பப்பட்டு இறப்பான்

ஆனால் அந்த துன்பம் அவரை ஒன்றும் செய்யவில்லை.
அந்த உலர்ந்துபோன கழுமரம் துளிர்த்தது .எப்படி?
அரசன் வியந்து மன்னிப்பு கோரினார்.

என் செயலாவது ஒன்றும் இல்லை
என்று பட்டினத்தார். இறைவனிடம் சரணாகதி செய்ததுதான்.

சரணாகதி என்பது எந்த சூழ்நிலையிலேயும் 
இறைவன் மீதுள்ள நம்பிக்கையை இழக்காமல் இருப்பது. 

அது நம்மால் முடியுமா?

அது நிச்சயம் நம் போன்று மன உறுதியற்ற
மனிதர்களுக்கு சாத்தியம் இல்லை.

ஒரு தெய்வத்திடம் கோரிக்கை வைத்து நிறைவேறவில்லை என்றால் மற்றொரு தெய்வத்தை நாடுகிறோம் .

இன்னும் சிலர் மதம் மாறுகிறார்கள்.

இன்னும் சிலர் கடவுளே இல்லை என்று
நாத்திகவாதிகளாகிவிடுகிரார்கள் .
கடவுளை கண்டபடி ஏசி திரிகிறார்கள்.

இறைவனிடத்தில் நம்பிக்கை வேண்டும்.
 எந்த நிலையிலும் இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும், ஏமாற்றங்கள் வந்தாலும் எல்லாம் இறைவன் கொடுத்ததே என்று அமைதியாய், பிறரை பழிக்காமல் இருந்தால் இறைவனை நிச்சயம் காணலாம்.   

Friday, September 20, 2013

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(3)

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(3)

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(3)




கைகேயியை கட்டிய
கணவரும் புரிந்துகொள்ளவில்லை

பெற்ற மகனும்
புரிந்துகொள்ளவில்லை

அவள் நாட்டின் மக்களும்
புரிந்துகொள்ளவில்லை

அவளை கண்டபடி
சொல்லம்புகளால் துளைத்தார்கள்.

அவள் பொறுமை காத்தாள்
ஏனென்றால் அவளை முக்கியமாக
இரண்டு பேர்கள் அவள்
நோக்கத்தை புரிந்துகொண்டாதனால்.

யார் அந்த இரண்டு நபர்கள்?

ஒன்று இராமனின் தாய் கெளசல்யாதேவி
மற்றொரு நபர் நம் கதாநாயகன் இராமபிரான்.

அவள் உத்தரவைக் கேட்டதும் இராமபிரான்.மிகவும்
மகிழ்ச்சியடைந்தான்.

தாயே  நீங்கள் கட்டளையிட்டால்
நான் உங்கள் உத்தரவை மீறுவேனா என்று கேட்டான்.

ஒரு நாட்டில் யார் எவ்வளவு
அதிகாரம் பெற்றவர்களாய் இருந்தாலும்
உத்தரவுகள் அதற்க்கென்று உரிய அதிகாரிகளால்தான் பிறப்பிக்கப்படவேண்டும் என்று பல
ஆயிர ஆண்டுகளுக்கு முன்பே வரைமுறை
 உள்ளதை புரிந்துகொள்ளவேண்டும்.

இன்றைய ஜனநாயகத்தில்
முதலமைச்சர் சர்வ அதிகாரம் பெற்றிருந்தாலும்
ஆணைகள் ஆளுநர் பெயரிலேயே வெளியிடப்படுவதும்
மைய்ய அரசில்  பிரதம மந்திரி சர்வ வல்லமை படைத்தவராயினும் ஜானாதிபதியின் பெயரில் ஆணைகள் வெளியிடப்படுவதையும்
கருத்தில் கொள்க.

கௌசல்யா தேவியும்
கைகேயியின் கருத்துக்கு மறுப்பு சொல்லவில்லை.
மாறாக வனத்தில் எப்படி வாழ்க்கை நடத்தவேண்டும்
என்று இராமனுக்கு அறிவுரைகள் சொல்லி அனுப்புகிறாள்.

கைகேயியை முதலில் உணர்ச்சி வசப்பட்டு
கோபத்தில் பேசிய பரதனும் தன தாயையும்
மிஞ்சிவிட்டான். அவன் நடத்தையினால்.



அவன் தன்  அண்ணன்தான் அரசாளவேண்டும்,
அவன் தலைமையில்தான் பணியாற்றவேண்டும்
என்ற உறுதியில் சிறிதும் மாறாமல் இருந்தமையினால்
அரசை  பதவியை ஏற்க   மறுத்து,
இராமனிடம் சென்று பதவியை ஏற்றுகொள்ள
வற்புறுத்த கானகம் செல்கிறான்.





ஏனென்றால் ஒருதரம் பதவியில் அமர்ந்துவிட்டால்
மீண்டும் அந்த பதவி மீது மோகம் ஏற்ப்பட்டு
அண்ணன் 14 ஆண்டுகள் கழித்து திரும்பி வரும்போது
மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு துரியோதனன்
இழைத்த அநீதிபோல் பதவியை தர மறுக்கும்
எண்ணம் ஏற்பட்டுவிடும் என்பதை உணர்ந்தே
அவன் அவ்வாறே செய்திருப்பான் போலும்

(இன்னும் வரும்)

pic. courtesy-google.

Thursday, September 19, 2013

கூற்றுவன் யார்?

கூற்றுவன் யார்?

கூற்றுவன் என்றால் யார்
என்று பாமர மக்களுக்கு தெரியாது.



ஓரளவிற்கு தமிழ் கற்றவர்கள்
கூற்றுவன் என்றால் யமன் என்று சொல்லுவார்கள்.

சீர்காழி பாடிய நாள்" என் செய்யும் என்ற" பாடலை கேட்டவர்கள் " கொடும்கூற்று என் செய்யும் என்ற" வரிகளை கேட்டிருப்பார்கள்.

அந்த பாடலில் குமரேசனின் இரு பாதங்களை என்றும் நினைவில் கொள்பவர்களை கூற்று ஒன்றும் செய்யாது என்று வரும்.



அது சரி கூற்று என்றால் உண்மை என்று பொருள்.

உண்மைதான் கடவுள்.
பொய் என்பது அவன் விரிக்கும் மாயை.
ஆசைகளில்  மூழ்கிய மனம்  தானே
வலியச் சென்று விழும் வலை. தான் மாயை

மாயை என்றால் என்ன?

இலாத ஒரு பொருளை இருப்பதாக நினைத்துக்கொண்டு
அதிலேயே மூழ்கிவிடுவதுதான் மாயை. எப்படி?

பசியோடு இருப்பவன் நன்றாக அறுசுவை
உணவை உண்பதாக பகற்கனவு காண்பது  போலத்தான்.

கனவிலே தூங்கிவிடுவதும் உண்டு.
அதுதான் சிலருக்கு உறக்கத்திலேயே மரணம்.
அவர்கள் மரணமடைந்து அவர்கள்
உடல் மண்ணுக்கு போய்  விட்டபின்பும்
தூக்கம் கலையாத உயிர்கள் உண்டு.
 உறக்கம் கலைந்ததும் தான் தங்கியிருந்த
உடல் இல்லாது ஆவியாய் அலைவதும் உண்டு.

நாம் இந்த உலகத்திற்கும் வந்த நோக்கம் என்ன?

மீண்டும் இந்த உடல் என்னும் கூட்டிற்குள் அகப்படாமல் தப்புவதற்கான வழி வகைகளை மேற்கொள்ளுவதற்காக தான் இறைவன் நமக்கு இந்த உடலை அளிக்கிறான்.

கடலை கடக்க படகு உதவுவதுபோல் பிறவிப் பெருங்கடலை கடக்க இந்த உடலையும் கிடைத்தர்க்கரிதான  இந்த மனித பிறவியையும் இறைவன் தன் பெருங்கருணையினால் நமக்கு அளிக்கிறான்.

படகு பத்திரமாக கரைசேர வழி காட்ட
அவன் நம் இதயத்துள்ளே வாசம் செய்கிறான்.

அனால் நம் இறுதிவரை அவன் உள்ளே
இருப்பதை அறிவதுமில்லை.

அறிந்து தெளிவதுமில்லை.

மாறாக அவனை மறுப்பதற்கான
,மறப்பதற்கான முயற்சிகளை இடைவிடாது செய்துகொண்டு
முடிவில் மறலியின் வாய்க்குள்  போய்  விழுந்து அல்லபடுகிறோம்.



மாயை நீங்க மாயவனை சரணடைவோம்.



மகாதேவனின் தாள்களை பற்றிடுவோம்,
மாலின்     மருகனின் புகழ் பாடுவோம்.

அவ்வாறு செய்தால் முற்றிய  பழம்
 மரத்திலிருந்து தானாகவே விழுவதுபோல்
நம்முடைய ஆன்மா இந்த உடலிருந்து
எந்த துன்பமின்றி இறைவனின் அடி
சேர்ந்து மாறா இன்பம் பெரும்.   

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(2)

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(2)

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(2)

கைகேயி இராமனை அழைத்தாள் .





உனக்கு அரசர் ஒரு கட்டளை பிறப்பித்திருக்கிறார். 
உன் தம்பி பரதன் ஆழி சூழ் உலகெல்லாம் ஆள  வேண்டும். நீதாழிரும் சடைகள் தங்கித் தாங்கரும் தவம் மேற்கொண்டு பூமி வெம் கானகம் நண்ணிப் புண்ணியத்துறைகள் ஆடி ஏழ் இராண்டில் திரும்பி வரவேண்டும் என்றாள் 

ஒவ்வொரு மனிதரையும் இந்த லகில் வாழும்போதும், இந்த உலகை விட்டு செல்லும்போது அவனுடன் கூடவே சென்று அவனை காப்பாற்றுவது அவன் செய்யும் புண்ணிய செயல்களே என்பது உண்மை. 

அதை அறிந்துதான் கைகேயி இராமனை  புண்ணியத்துறைகள் சென்று நீராடுமாறு பணிக்கின்றாள். 

இந்த உத்தரவைப் அரசர் 
பிறப்பிக்க செய்ய வைத்தவளே அவள்தான். 

அவளால் அந்த உத்தரவை பிறப்பிக்க 
அவள் மனம் ஒப்பாது.

 ஏனெனில் அவள் தன்  மகன் பரதனை விட 
அதிகமாக இராமனை நேசிப்பவள் அவள்.

இராமனும் அவளை தன்  
தாயைப் போல் அவளை நேசித்தான்.   

ஆனால் விதி விளையாடிவிட்டது. 
அவள் உலகோர் பழிசொல்லுக்காளாகிவிட்டாள்  

இராமன் மீது பாசம் கொண்டவர்களின் 
இழி சொல்லுக்கும் ஆளாகிவிட்டாள் 
என்ன செய்ய?

இராமனோ தந்தை சொல்லையும் மீறவில்லை
தன் தாயைப் போல் அளவற்ற அன்பு காட்டிய 
கைகேயியின் சொல்லையும் மீறவில்லை. 

ஒரு அரசால் தான் பட்டமேற்பதர்க்கு முன்  
பல அனுபவங்களை பெறுதல் அவசியம் 

அவன் நாடு முழுவதும் சுற்றவேண்டும்.
ஒவ்வொரு பகுதியையும் அறிந்துகொள்ளவேண்டும்

மக்களின் நிலை பற்றி அறிந்துகொள்ளவேண்டும்.அவர்களின் பிரச்சினைகளை பற்றி நன்கு தெரிந்து கொள்ளவேண்டும்.

பல அனுபவங்களைப் பெறவேண்டும். 

போர்த் திறனில் பயிற்சி பெற வேண்டும்.




இதெல்லாம் ஒரு அரசனாக 
பொறுப்பேற்றுவிட்டால்   
எதுவும் நிகழாது. 

அவன் என்று சென்றாலும் 
அவன் அரசனாகத்தான் பார்க்கப்படுவான். 

அவனுக்கு உண்மை நிலவரம் தெரிய 
வாய்ப்பு எழாமலே  போய்விடும்.

அந்த காரணத்தினால்தான் 
துறவுக் கோலத்தில் செல்லுமாறு 
அவனுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அப்போதுதான் நடுவுநிலையாக   நின்று மக்களோடு பழகி  பிரச்சினைகளை அறிந்து கொள்ள இயலும்.  

அனுபவங்களை பெற்ற ஒருவனால்தான் 
திறம்பட அனைவருக்கும் நன்மை ஏற்படும் 
வகையில் ஆட்சி நடத்த முடியும். 

மக்களோடு பழகாமலேயே ,நாட்டின் உண்மை நிலவரங்களை அறியாமலேயே ஆட்சியில் அமர வைப்பது சரியாக அமையாது என்பதை உணர்ந்தே இராமனை கைகேயி தன்  கணவன் தசரதன் மூலம் இந்த உத்தரவைப் பிறப்பித்தாள் .

ஏனென்றால் பாசத்தில் மூழ்கியிருந்த தசரதனுக்கு அந்த உத்தரவை பிறப்பிக்கும் மனநிலை கிடையாது என்பதை அவள் 
நன்றாக உணர்ந்திருந்ததே அதற்கு காரணம். 

இந்த உண்மை புரியாமல் காலம் காலமாக இந்த உலகம் கைகேயி மீது பழி சுமத்தி அவளை வசை பாடிக் கொண்டிருக்கிறது. இனியாவது அந்த போக்கு மாறவேண்டும். 

(இன்னும் வரும்)