Saturday, January 28, 2012

தர்மம் என்ற உயர்ந்த பண்பு

தர்மம் என்ற உயர்ந்த பண்பு 
அனைவராலும் கடைபிடிக்கபடவேண்டும்

இந்த உயரிய பண்பைவாழ்வின் எந்நிலையிலும் 
கடைபிடிப்பவர்கள் வெகு சிலரே

படித்தவர்களுக்கும்,பாமரர்களுக்கும்,
ஏழைக்கும்,பணக்காரர்களுக்கும்
கடைபிடிக்கவேண்டிய தர்மம் ஒன்றே

ஆனால் வாழ்வில் இல்லறத்தில்  ஈடுபட்டவர்களுக்கும்,
துறவு வாழ்க்கையை நாடுபவர்களுக்கும் என தனியாக
தர்மங்கள் உண்டு .
அதே போல் ஒவ்வொரு தொழிலில் ஈடுபடுவோருக்கும் 
தனி தனியாக கடைபிடிக்கவேண்டிய தர்மங்களை 
சாஸ்திரங்கள் வரையறுத்து வைத்துள்ளன
முக்கியமாக நேர்மையும் நாணயமும் கடைபிடிக்கவேண்டியவை
 . 
அவைகளை முறையாக கடைபிடிப்பவர்கள் தாங்களும்
நன்மை பெறுவதுடன் இந்த உலகமும் நன்றாக வாழ உதவுகின்றனர்

ஆனால் எந்த தர்மத்தையும் கடைபிடிக்காமல் பலர் இன்று 
தன் மனம் போன போக்கில் அதர்மத்தை தன் உயிர்மூச்சாக கடைபிடித்து
தாங்களும் அழிவு பாதையில் செல்வதுடன்  இந்த சமூகத்தை 
துன்பத்திற்கு உள்ளாக்கி மகிழ்கின்றனர்.
 
எது எப்படி இருந்தாலும் பொதுவான 
சில தர்மங்களை அனைவரும்
வாழ்வில் கடைபிடித்தால் 
வாழ்வு வளமாக இருக்கும்

பசித்தோருக்கு உணவிடுதல்,துன்புற்றோர்க்கு உதவி செய்தல், 
பிறரிடம் அன்பு காட்டி இனிமையாக பழகுதல்,மறந்தும் பிறருக்கு கேடு
நினையாமல் இருத்தல் ,தெய்வத்தை  இகழாமல் போற்றி வணங்குதல் 
தாய் தந்தையரை பேணுதல்,ஒழுக்கமாக வாழ்க்கை நடத்துதல் 
,தீமை பயக்கும் செயல்களை செய்ய அஞ்சுதல் ,
பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காதிருத்தல் , 
போன்ற நற்பண்புகள் அனைவராலும் 
கடைபிடிக்கபடவேண்டியவை.  

Friday, January 27, 2012

ஆன்ம பலம் முன்பு ஆயுத பலம் தோற்றுவிடும்

ஆன்ம  பலம் முன்பு 
ஆயுத பலம் தோற்றுவிடும்

இரண்டாம் உலக போரில் 
ஆயுத பலம் கொண்டு உலகை நாசம்
செய்த பல சர்வாதிகாரிகள் மண்ணோடு
மண்ணாக  போனதை மனித குலம்
மறக்க முடியாது

காந்தி மகானின் ஆன்ம பலம் முன்பு 
வெள்ளையரின் ஆயுத  பலம் 
தோற்றத்தை வரலாறு அறியும்

காந்தியின் வழியில் சென்ற 
தேச பக்தர்களைத்தான்
வெள்ளையர்கள்  தாக்கி
சிறையில் அடைத்தனரே 
தவிர காந்திஜியை 
ஒன்றும் செய்ய இயலவில்லை

மக்களின் கோபத்தை கட்டுபடுத்த காந்திஜியின்
உண்ணாவிரத போராட்டத்தின் மூலம் முடிந்தது 
ஏனென்றால் அவர் என்றும் பிரச்சினைகளை கண்டோ
மரணத்தைகண்டோ  பயந்து எங்கும் ஓடி ஒளியவில்லை 

அனைத்தும் இறைவன் ஆணைப்படிதான் 
இவ்வுலகில் நடைபெறும் என்பதை
 முழுமையாக நம்பியதுதான் 
அதற்க்கு காரணம்.

அவர் தனக்காக வாழவில்லை. 
நாம் நாடு அந்நிய ஆதிக்கத்திலிருந்து 
விடுபட்டு மக்கள் நன்றாக  வாழ வேண்டும் 
என்று மனபூர்வமாக பாடுபட்டார்
இன்றைய அரசியல்வாதிகள் போல் 
மக்களுக்கு சேவை செய்வதாக 
நடித்து  மக்களை ஏமாற்ற வில்லை

அனைத்து மத மக்களையும் 
பிராத்தனை மூலம் ஒன்றிணைத்து 
இந்த வெற்றியை அவர் நிகழ்த்தி  காட்டினார்
  
ஆனால் இன்று நாட்டை ஆளுபவர்கள் வெள்ளையர்கள் 
கடைபிடித்த பிரித்தாளும் சூழ்ச்சியையே கையாண்டு
மக்களிடையே விரோத போக்கை உண்டாகி 
காந்திஜி கனவு கண்ட ராம ராச்சியத்தை 
நடைமுறைபடுத்த தவறிவிட்டனர்.
மற்றும் சமூக அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் 
செயல்களையே செய்து வருகின்றனர்
 
நல்லொதொரு வாழ்க்கை நம் மக்களுக்கு அமைய
காந்திஜி கடைபிடித்து தந்த பாதையையும் 
பிரார்த்தனையும் மக்கள் அனுசரிக்க வேண்டும்

மனம் வெளுக்க  ராம நாமத்தையும் 
வாழ்வு சிறக்க கீதை காட்டும் பலன் 
எதிர்பாராது கடமையாற்றும் பண்பையும் 
அந்த இறைவன்தான்
நமக்களிக்கவேண்டும்  
 

Thursday, January 26, 2012

இறைவன் படைத்த எதுவும் அழிவதில்லை

பரம்பொருளிளிருந்துதான் 
அனைத்தும் வந்தன
பிரளய காலத்தில் அனைத்தும் 
அதிலேயே அணுவாக மாறி
ஒடுங்கிவிடும்

அது எப்போது நடைபெறும் 
என்று யாருக்கும் தெரியாது

அதை அறியாத மூடர்கள் 2012 ஆம் ஆண்டு 
உலகம் அழிந்துவிடும் என்று 
புருடா விட்டுக்கொண்டு 
மக்களை குழப்பி கொண்டிருக்கிறார்கள்
அவர்கள் வாழ்வே இவ்வுலகில்
நிலையில்லாமல் இருக்கும் நிலையை 
அறியா மூடர்கள்

கல்லை சிலையாக மாற்றுபவனும்
அதே சிலையை கல்லாக மாற்றுபவனும்
அந்த இறைவனே 

கல்லை மலைபோல் 
அசையாமல் நிறுத்தி வைப்பவனும் 
கல்லையே காற்றில் பறக்க 
வைப்பவனும் அவனே

மனிதனின்  சக்தியால் 
இந்த உலகத்தை மாற்றிவிடலாம் 
என்று மூடர்கள் நினைக்கிறார்கள்
அந்த சக்தியை மனிதனுக்கு அளித்ததும் 
அந்த இறைவன்தான் என்பதை 
மனிதர்கள் மறந்துவிடுகிறார்கள் 
இறைவனின் துணையின்றி எந்த 
செயலும் முற்றுபெறுவதில்லை 

பிறரின் வாழ்க்கையை சுரண்டி 
ஆடம்பரமாக வாழ்ந்த அரசர்கள், 
சர்வாதிகாரிகளின் பரிதாபகரமான
முடிவுக்கு ஆளான  நிலையை 
ஒரு கணம் சிந்தித்து 
பார்போருக்கு உண்மை விளங்கும்

அதர்மம் பெருகும்போதுதான்
இயற்கை சீற்றங்கள் வருகின்றன 
மனிதர்களை திருத்த வரும் 
அந்த நிகழ்வுகளை எதிர்த்து மனித
குலம் ஒன்றும் செய்ய முடியாது

இறைவனை குற்றம் சொல்வதை விடுத்து
இனியாவது தர்மத்தின்படி வாழ்வை 
அமைத்துகொண்டால் நன்மை விளையும்

இல்லாவிடில் அடி விழத்தான் செய்யும் 
அதை தடுக்க முடியாது 

இனியாவது ஆதிக்க போக்கும் 
பொய்யும் சுயநலமும் 
ஒழியட்டும் .இவ்வுலக மக்கள் 
ஒருவரோடு ஒருவர் அனைத்து 
வேறுபாடுகளையும் 
மறந்து   அன்பினால் இணையட்டும்  


இறைவன் படைத்த எதுவும் அழிவதில்லை
அணுக்களின் கூட்டமாய் விளங்கும் 
எந்த பொருளும் ஒரு வடிவத்தை 
எடுத்து கொள்ளுகிறது
அந்த வடிவம் சிதைந்ததும் 
அது வேறொரு 
வடிவத்திற்கு மாறுகிறது 
இதுதான் உண்மை 

மாற்றம் என்பது இறைவன் வகுத்த விதி 
அதை மாற்ற எந்த கொம்பனாலும் முடியாது.
எனவே இந்த குழப்பங்களுக்கெல்லாம் 
மனதில் இடம் கொடாமல் நம் கடமைகளை 
ஒழுங்காக செய்து, ஒழுக்கமாக வாழ்ந்து 
பிறருக்கு துரோகம் செய்யாமல் 
அனைவர் மீதும் அன்பு செய்து நம்மை 
படைத்த இறைவனை நினைந்து கொண்டு
வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையும் 
ரசிக்கும் .அதற்கு பிறகும் இனிக்கும் 

மோகத்தை கொன்றுவிடு அல்லால் என் மூச்சை நிறுத்தி விடு என்றான் பாரதி

மோகத்தை கொன்றுவிடு 
அல்லால் என் மூச்சை நிறுத்தி விடு 
என்றான் பாரதி 

மோகம் முப்பதுநாள் 
ஆசை அறுபது நாள் என்பது பழமொழி

ஆனால் இன்றைய உலகில் 
பிறக்கும்போது தங்கத்தின் மீது 
தொடங்கிய மோகம்
இறக்கும்வரை முடிவதில்லை
ஆசைகளும் அப்படியே

முக்கியமாக தங்கத்தின் மீதான 
மோகம் குழந்தை பிறந்தவுடன் 
பெயர் சூட்டும்  விழா அன்று கழுத்தில் 
தங்க சங்கிலி,கையிலும் காலிலும் தங்க காப்பு
என உடலில் தவழ ஆரம்பித்துவிடுகிறது

இப்படியாக தங்கத்தின் மீதான மோகம்
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக 
வளர்ந்து கொண்டே போகிறது
அதேபோல் அதன் விலையும் 
பலநூறு மடங்கு உயர்ந்துவிட்டது 

நகை அணியாதவர்கள்  கூட
தங்கள் எதிர்கால பாதுகாப்பிற்கு 
என தங்க காசுகளை வாங்கி சேர்க்கின்றனர்

ஆனால் தங்கம் உண்மையிலேயே 
மனிதர்களுக்கு அழகு சேர்க்கிறதா
அல்லது பாதுகாப்பு அளிக்கிறதா
என்பது கேள்விக்குறியே

முக்கியமாக சமீப காலங்களில்
தங்க நகைகளை குறிவைத்து செயின்
திருடர்களும்,வீட்டில் தனியாக இருக்கும், 
வயதானவர்கள்,பெண்கள், குழந்தைகள்
ஆகியோரும் தாக்கபடுவதும் கொடூரமாக
கொலை செய்யப்படுவதும்
அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டன

வீட்டை பூட்டி சென்றால் வீட்டில் உள்ள 
அனைத்து நகைகளும் கொள்ளையிடப்படுவது
வாடிக்கையான  செயலாகிவிட்டது 

உலகத்தில் திருடர்கள்  சரிபாதி என்றான்
ஒரு கவிஞன் 
அந்த திருடர்களுக்கு மிக சுலபமாக 
பிழைக்க வழி காட்டுகிறது தங்கத்தின் மீது
மக்கள் கொண்டுள்ள மோகம் 
இவைகளை கண்ணுற்ற பின்பும் பெண்களும்
வயதானவர்களும் தங்கத்தின் மீது 
மோகம் கொண்டு அலைவது 
அவர்கள் உயிருக்கு உலை வைக்கும் செயல் என்பதை 
ஏன்தான் உணராது இருக்கின்றனர் என்று புரியவில்லை?
உயிர் போய்விட்டால் தங்கத்தை வைத்துகொண்டு 
என்ன செய்வது என்பதை யாரும் சிந்தித்து பார்ப்பதில்லை  

இனிமேலாவது தனியாக இருக்கும் பெண்கள், வயதானவர்கள் 
தங்கத்தின் மீது மோகம்  கொள்வதை விட்டு விட்டு 
அதற்காக செலவு செய்யும் தொகையை வங்கியில் 
பாதுகாப்பாக வைத்து தங்கள் வாழ்க்கையை 
நோயில்லாமல் மற்றவர்களை அனுசரித்துக்கொண்டு 
அமைதியான மகிழ்ச்சியாக வாழ கற்று கொள்வது நல்லது

இல்லாவிடில் தங்கத்தின் மீது கொண்ட மோகம் 
அவர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் 
சோகம் வருவிக்கும் பொருளாகத்தான் ஆகிவிடும் 
தவறின் அது அவர்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் 
என்பதை இனிமேலாவது உணர்ந்துகொள்ள வேண்டும்

இறைவனின் மீது மோகம் கொண்டால் 
சோகமில்லாமல் வாழலாம்  

Monday, January 23, 2012

ஏமாறுவது எதனால்?


இன்று மனதில் பொய்களையே நிரப்பி
அனைவரையும் ஏமாற்றிக்கொண்டு
உலா வரும் பலர் மற்றவர்களிடம்
கூறுவது என்னவென்றால்
பொய் சொல்லுவது எனக்கு
சுத்தமாக பிடிக்காது என்பதுதான்
அதன் பொருள் என்னவென்றால்
நான் என்றும் அசுத்தமாகதான்
இருப்பேன் என்பதுதான்

இன்று நாள்தோறும் நாளேட்டில் எந்த செய்திகள்
வருகிறதோ இல்லையோ ஒரு தனி மனிதரோ 
அல்லது நிதி நிறுவனமோ அல்லது 
வேலை தேடி தரும் நிறுவனமோ 
பல்லாயிரம்  மனிதர்களுக்கு 
பொய்யான வாக்குறுதிகளை அளித்து 
லட்சகணக்கான ரூபாய்களை 
மோசடி செய்யும் நிகழ்வுகள் நிச்சயம் வரும் 


ஏமாற்றுகாரர்களுக்கு  
ஜாதி, மொழி, மதம்,இனம் 
நாடு என்ற பேதம் கிடையாது 
இந்த விஷயத்தில் மட்டும்தான்
உண்மையான  சமத்துவம் நிலவுகிறது  

பலமுறை ஏமாந்தும் மக்கள் திருந்துவதில்லை
இதற்க்கு காரணம், பேராசையும் 
குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கவேண்டும் 
குறுக்கு வழியில் வேலை தேடவேண்டும், 
என்ற சுயநல எண்ணங்கள்தான் காரணம்
இதை ஏமாற்றுபவர்கள் நன்றாக
பயன்படுத்தி கொள்கின்றனர்

இந்த விஷயத்தில் படித்தவர்களும்
ஒன்றுதான் பாமரர்களும் ஒன்றுதான்

ஆசைப்பட ஆசைபட் ஆய் வரும் துன்பங்கள்
என்று அன்றே திருமூலர் சொன்னதை இந்த 
மனித குலம் என்று உணர்ந்துகொள்ளுமோ?


Sunday, January 22, 2012

சுத்தம்தான் கடவுள்

சுத்தம் சோறு போடும் 
சுத்தமின்மை 
உடலை கூறு போடும் 

சுத்தம் சுகத்தை தரும் 
சுத்தமின்மை 
சோகத்தைதான் தரும்

சுத்தம் இன்பம் தரும் 
சுத்தமின்மை 
துன்பம்தான் தரும்  

சுத்தம் தரும் 
பரிசு நல்வாழ்வு 
சுத்தமின்மையால் 
தரிசாகும் நம் வாழ்வு 

சுத்தத்தை மறந்துவிட்டது
இன்றைய உலகம்
நஞ்சாகிவிட்டது மண்ணும்
நீரும்  காற்றும் ஆகாயமும் 
புறவுலகில் எங்கு நோக்கினும் துன்பம் 
அனைவர் நெஞ்சிலும் வஞ்சம் 
பெருகிவிட்டது சுயநலம் 
அனைத்தும் தனக்கே என்கிறார் 
அகந்தை கொண்டோர் 

விளைவிக்கும்  
உணவுபொருளோ தாராளம் 
ஆனால் உணவு கிடைக்காது 
மடியும் மக்களோ ஏராளம் 

நோய் தீர்க்க மருத்துவர்கள் பல இருந்தும் 
நோய் தீராது மடிபவர்கள் ஏராளம் 

உள்ளத்தில் சுத்தமில்லை 
செய்கையில் நேர்மையில்லை 
பிற உயிர்களிடத்து அன்பில்லை 
அதனால் மனதில் 
யாருக்கும் அமைதியில்லை

 உயிரற்ற பொருட்களை நாடி ஆயுள் 
முழுவதும் நாய் போல் அலைகின்றார்
சேர்த்த பொருளை பாதுகாக்கவே 
அந்த பொருளில் ஒரு பகுதி செலவு செய்கின்றார்
தன் தேவை போக மிகுதியை இல்லாதவருக்கு 
அளிக்க மறுக்கின்றார் 

முதுமை வந்து சேர்த்த பொருளை அனுபவிக்காது 
மரணம் வந்தபின் வேதனையுடன் உயிர் துறக்கின்றார்
மீண்டும் பேயாய் இவ்வுலகில் தான் சேர்த்து வைத்த 
சொத்துக்களை சுற்றியே திரிந்து அல்லபடுகின்றார்
செல்வத்து பயன் ஈதல் என்பதை 
வாழ்வில் கடைபிடிக்காமையால்
பலர் அமைதியை நாடி 
அங்குமிங்கும் ஓடுகிறார் 
கைளில் உள்ளதனைதையும் 
விட்டுவிட்டு 

தன்னிடத்து உள்ளதை
இல்லாதவரிடம் பகிர்ந்து கொண்டால் 
துன்புறுவோரின் துயர் துடைத்தால்
அனைத்துயிர்கள் மீதும் 
அகந்தையின்றி அன்பு செய்தால் 
கிடைக்கும் மன அமைதி என்பதை 
என்றுதான் அறிந்து கொள்வாரோ 
இம்மனிதர்கள் 

சுத்தம்தான் கடவுள் 
புறவுலகில் மட்டுமல்ல 
அகவுலகிலும் சுத்தம்தான்  கடவுள் 

Saturday, January 21, 2012

புத்தரின் அவதாரம் எதற்கு?

புத்தரின் அவதாரம் எதற்கு?

இறைவனை உணருவதற்கு 
இவ்வுலக ஆசைகளை விடவேண்டும் 
ஆசைகள்தான் அனைத்து 
துன்பங்களுக்கும் காரணம் 
என்று புத்தர் வலியுறித்தினார் 

இறைவனை திருப்திபடுத்த
உயிர்களை பலியிடுவது தவறு 
என்பதை வலியுறுத்த 
அஹிம்சையை 
கடைபிடிக்குமாறு போதித்தார்

புலனடக்கம்தான் நம் மனதை 
ஒருமைபடுத்தி இறைவனை 
உணர வழி வகுக்கும் 
என்பதை வலியுறித்தினார் 

துன்பங்களை சகித்து கொள்ளவேண்டும் என்றும்
எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும் 
என்றும் மரணம் உயிர்களை எப்போது 
வேண்டுமானாலும் கொண்டு சென்றுவிடும் என்றும் 
அதற்காக வருந்துவது கூடாது என்பதையும் 
வலியுறித்தினார். 


ஆனால் அவர் இறைவனை பற்றி
எங்கும் தன்னுடைய கொள்கைகளில் 
குறிப்பிடவில்லை  

ஆனால் அவர் மறைவிற்கு பின்
அவர் கொள்கைகள் 
காற்றில் விடப்பட்டன 

மாறாக அவர் உருவத்தையே சிலைகளாக
வடித்து அவரையே கடவுளாக
வழிபடதொடங்கி  விட்டனர் 

அவர் காட்டிய அன்பு வழி ,பிற உயிர்க்கு தீங்கு செய்யாமை 
போன்ற உயர்ந்த கொள்கைகளை புத்த மதத்தை 
பின்பற்றுபவர்களால் கடைபிடிக்கபடவில்லை 

அவர் வலியுறித்திய புலனடக்கம் தற்காப்பு 
கலை பயில்பவர்களுக்கு மட்டும் பயன்படுகிறது. 

எளிதில் கிடைக்குமா ராமபக்தி?




எப்போதும் இந்த உலக வாழ்க்கையிலேயே 

திளைத்து ,கண்டதே காட்சி கொண்டதே கோலம்
என்று இவ்வுலகஇன்பங்களை நாடுவதிலேயே 
காலத்தை கழித்து அதுவே சிறந்ததென்று
நினைப்பவர்களின் மனதில் காரணமின்றி 
ராம பக்தி உண்டாகுமா? 

மனைவி ,மக்கள் ,உறவினர்கள், நண்பர்கள் 
சிறந்த வீடுகள், உடல்வலிமை ,பொன்,பொருள்
பணம் ,புகழ் போன்ற பலவிதமான வசதிகள் நிறைந்த
வாழ்க்கை இவற்றை நிலையற்றவை
என்றுவெறுக்கும் பாக்கியசாலிகளை
தவிரமற்றவர்களுக்கு எளிதில் 
கிடைக்குமா ராமபக்தி?

நல்லோரை தரிசித்து ,அவர்களை வணங்கி 
அவர்களின் அமுத மொழிகளுக்கு செவி சாய்த்து ,
அவர்களின் நல்லுறவை விரும்பி ,அனைத்தும் 
இறைவன் மயமென்று அறிந்து
 மனமார பூஜிப்பவர்களை தவிர 
மற்றவர்க்கு ராம பக்தி 
எளிதில் கிடைத்துவிடுமா? 

நம்மையெல்லாம் இவ்வுலகில் படைத்து
 நடமாடவிட்ட பிரம்மனால் 
துதிக்கபடுபவன் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி

பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காக 
ஆடம்பரத்துடன் பூஜைகளை செய்யாமல்
 மந்திரங்களுக்கெல்லாம் அரசனாக 
விளங்கும் ராம நாமத்தை தன நாவில் 
எப்போதும் இடைவிடாமல் உச்சரிக்கும் 
ஸ்ரீ தியாகராஜா சுவாமிகளை போன்ற
பாக்கியசாலிகளை தவிர மற்றவர்க்கு 
ராம பக்தி எளிதில் கிடைக்குமா? 

Friday, January 20, 2012

உண்மையான இறைவழிபாடு எது?

உண்மையான இறைவழிபாடு எது?

இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் 

ஆம் அது உண்மைதான்

ஆனால் அவன் எங்கு உறைந்திருக்கிறான்?

நம் உள்ளத்தில்தான் உறைந்திருக்கிறான்.

எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை காண நமக்கு வழி தெரியாது
அதை அறிந்து நமக்கு தெரிவித்தவர்களின் சொல்லையும் நாம் கேட்கமாட்டோம். அதன் வழி முயற்சியையும் செய்ய மாட்டோம் 

இந்த உலகத்தை நாம் நம் புலன்களால்தான் காண்கின்றோம், தொடர்பு கொள்கின்றோம் .அதைபோல் புலன்களின் துணை கொண்டு எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை ஏன் காணமுடியவில்லை?

இவ்வுலகில் இறைவனின் வடிவங்கள்தான்
உள்ளனவேதவிர 
இறைவன் அந்த வடிவங்களுக்குள்  
இயங்கும், இயக்கும் சக்தியாக 
இருப்பதை நாம் உணருவதுகிடையாது 

அதை உணர்ந்து கொள்ளும் வரை நாம் தாங்கியுள்ள  இந்த உடலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக கோயில் கோயிலாக இறைவனை தேடிக்கொண்டு அலைவதில் எந்த பிரயோஜனமுமில்லை

நம்முடைய வழிபாடுகளெல்லாம் கடமைக்காக என்று ஆகிவிட்டது

தவறுகள் செய்ய பயபடுவதில்லை ஆனால் தண்டனையை கண்டு பயப்படுகிறோம் 

பாவங்களை செய்ய அஞ்சுவதில்லை செய்த பாவங்களினால் வந்த 
வினைப் பயனை நமக்கு தவறாமல் கொடுக்கும் கிரகங்களை கண்டு அஞ்சுகிறோம் 

பரிகாரம், செய்ய கோயில்கோயிலாக சுற்றுகிறோம், பணத்தை வாரி இறைக்கிறோம் அதற்காகவே நாம் ஆயுள் முழுவதும் பாடுபட்டு பொருள் சேர்த்து செலவு செய்கின்றோம்

யாத்திரை முடிந்ததும் மீண்டும் புலன் வழி இன்பங்களில் மூழ்கி இறைவனை மறந்துவிடுகிறோம் 

இன்று உலகத்தில் லட்சகணக்கான மக்கள் நவக்ரக தலங்களில் கூடுவதே இதற்க்கு சான்று 

பாவங்களை செய்வானேன்? பரிதாபத்திற்குரிய வாழ்க்கை வாழ்வானேன்?

அதனால்தான் பாம்பாட்டி சித்தர் சொன்னார்.'?பாபம் செய்யாதிரு மனமே செய்தால் கோபம் செய்தே யமன் கொண்டோடி போய்விடுவான் என்றார்"

பாவம் மனதில்தான் தொடங்குகிறது.உடல் அதை செய்கிறது. அதனால்தான் இரண்டும் துன்புறுகின்றன இனிமேலாவது மனிதர்கள் திருந்த வேண்டும். 

வருமுன் காப்பவன் அறிவாளி என்றார் அவ்வையார்
வந்த பின் தவிப்பது ஏமாளி.  

தீய எண்ணங்களை தோற்றுவிக்கும் 
அனைத்து இனங்களிலிருந்து நாம்தான் விலகவேண்டும் 
அதுவாக எதுவும் நடக்காது. 

எந்த செலவும் இல்லாமல் நமக்குள்ளேயே இருக்கும் ஒளிவடிவான,நாதவடிவான இறைவனை தரிசிக்க 
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் முயற்சி செய்திருந்தால்
 என்றோ நாம் இறைவனை கண்டு அவன் அருளுடன் 
 நம் வாழ்வை மகிழ்ச்சியாக ஆக்கிகொண்டிருக்க முடியும் 

இனியாவது முயற்சி செய்வோம். 

என் மனம் இறைவனை நோக்கி
செல்ல மறுக்கிறது அது ஏன்?

நம் மனம் எப்போதும் புலன்கள் தரும் 
இன்பங்களையே நாடி வெளியில் 
சென்று கொண்டிருப்பதால் 
 நமக்குள் உறையும் ஆன்மாவாகிய 
இறைவனை அது அறிந்துகொள்ள 
முயற்சிப்பதில்லை 

நாம் புறவுலகில் இன்பங்கள் என்று
 நினைத்து கொண்டிருப்பதெல்லாம்
 உண்மையான இன்பங்கள் அல்ல 
என்பதை நாம் நம் மனதிற்கு புரிய வைக்க வேண்டும் 
.புற உலகில் உள்ள பொருட்களால்தான் 
இன்பத்தை பெற இயலும் என்றால் 
அது எப்போதும் என்னிலையிலும் இன்பத்தை தர வேண்டும். 
இனிப்பு பண்டங்கள் ஒரு மனிதனுக்கு 
 இன்பத்தை தரும் ஒரு பொருளாக இருப்பினும் 
அதுவே அவனுக்கு நஞ்சாக மாறி 
அவன் உயிரை கொன்றுவிடும் அவனுக்கு நீரிழிவு நோய் வந்தால்
 
அழகிய பெண்ணின் உடல் மீது தோன்றும் இன்பம் 
அப்பெண்ணில் உடல் நோய் கண்டோ அல்லது 
வயதாகி முதுமையடைந்தாலோ அக்கணமே 
அகன்றுவிடுவதைபோல் புற இன்பங்கள் நிலையற்றவை
 என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்
  .
அதைபோல்தான் பெண் ,பொன், மண் ஆகிய அனைத்தும் 
.இதிலிருந்து இன்பம் என்பது பொருட்களில் அல்ல
 ,புலன்களின் மூலம் பெறும் இன்பம் உண்மையல்ல,
என்பதை மனதிற்கு புரிய வைக்க வேண்டும். 
பொருட்களின்மீது வைக்கும் பற்றை 
சிறிது சிறிதாக விட்டு விலக வேண்டும்.
 
உண்மையில் நாம் வெளிஉலகில் பெறும் இன்பம்
 என்பது நம் உள்ளத்தில் உறையும் 
ஆன்மாவிலிருந்து பெறப்படும் இன்பமே அன்றி
 வெளியுலகில் பெறப்படுவது அன்று 
என்று பகவான் ரமணர் நமக்கு தெளிவுபடுதியிருப்பதை 
உணர்ந்துகொண்டால் நமக்குள் உண்மையான 
,என்றும் அழியாத, நிரந்தரமான, திகட்டாத பேரின்பத்தை 
அறிந்துகொள்ள முற்படுவோம்

பகவான் ரமணர் காட்டிய வழியில் 
ஆத்ம விசாரணை செய்து வந்தால்
 நமக்கு உண்மை புலப்படும்
பிறகு எந்நிலையிலும் மாறாத 
தெய்வீக இன்பத்தை அடைந்து
 இவ்வுலகிலேயே மகிழ்ச்சியாக வாழலாம். 

Thursday, January 19, 2012

அக வழிபாட்டுக்கும் புற வழிபாட்டிற்கும் என்ன வேறுபாடு?

அக வழிபாட்டுக்கும்
புற வழிபாட்டிற்கும் என்ன வேறுபாடு?


இறைவனிடமிருந்துதான் இவ்வுலகமும் 
அதில் உள்ள அனைத்து பொருட்களும்
உயிர்களும் வந்துள்ளது 

பிரளய காலத்தில் அவை அனைத்தும் 
அவனிலேயே அணுவாக ஒடுங்கிவிடும் 

அனைத்தையும் படைத்த இறைவன் 
ஒவ்வொரு அணுவிற்குள்ளும் ஒளிமயமாக 
சக்திமயமாக இருந்து கொண்டு அதை ஆட்டுவிக்கின்றான் 

அவன் ஒவ்வொரு அணுவிற்குள்ளும் இருந்துகொண்டு 
ஆட்டுவிப்பதால்தான் அவனின்று ஓர் அணுவும் அசையாது
என்று சொல்லபடுகிறது
.
அணுவிற்குள் சக்தி இருப்பதை பகுத்தறிவுவாதிகள்
நம்பும் விஞ்ஞானமும் உறுதி செய்துள்ளது

ஆனால் தான் என்ற அகந்தை கொண்ட ஒவ்வொரு உயிரும் 
அதை மறந்துவிட்டு தன்னால்தான் அனைத்தும் நடைபெறுகின்றன
 என்று தவறாக எண்ணிகொண்டு தன்னை இயக்கும் சக்தி 
இறைவன்தான் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றனர்
.
மனிதனின் சக்தியின் அளவு ஒரு வரையறைக்குட்பட்டது
என்பதை அறிந்திருந்தும் அதை மறைத்து ஆட்டம்போட்டு
நிலை தவறி கீழே விழுந்து துன்பத்திற்கு ஆளாகின்றனர்
 . 
அவ்வாறு இவ்வுலக மாயையில் சிக்குண்ட மனிதர்களை 
மீட்கவே மாபெரும் ஆலயங்களை அந்நாளில்கட்டுவித்தனர்

அதில் இறைவனின் வடிவங்களை நிறுவி 
சிதறிப்போன மனிதனின் மனதினை ஒருமைப்படுத்த ,
பூஜைகள்,பஜனைகள் ,உற்சவங்கள் ,திருதலயாதிரைகள்
என பலவிதமான வழிபாட்டு முறைகளை வகுத்துள்ளனர்
.
புற வழிபாட்டில் மனம் ஒன்றிய பிறகு
நம்முடைய உள்ளத்தில் உறையும் ஆன்மாவாகிய 
இறைவனை தியானம் மூலம் அறிய கூடிய அக வழிபாட்டு 
வழிமுறைகளை வகுத்து தந்துள்ளனர் நம் முன்னோர்கள்
எனவே இரண்டு முறைகளையும் 
நாம் கடைபிடித்து நம்மை படைத்த 
இறைவனை அடையவே நமக்கு மனித பிறவி அளிக்கப்பட்டுள்ளது
என்பதை  உணர்ந்துகொண்டு இந்த உலக மாயையிலே 
முழுவதும் நம்மை மூழ்கடிக்கும் 
சிந்தனைகள் மற்றும் செயல்களிலிருந்து
விலகி நாம் பிறவி எடுத்த பயனை எய்த
முயற்சி செய்ய  வேண்டும் 

Tuesday, January 17, 2012

எந்நிலையிலும், அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது எப்படி?


எதற்க்காக பிறந்தோம் இவ்வுலகில் ?
எதை அடைய பிறந்தோம் இவ்வுலகில் ?


நாம் தாங்கி வந்த உடல்தான் அழியும்.
ஆனால் நம் மனதில் உள்ள எண்ணங்கள் என்றும் அழியாது
அது செயலாக மாறி முடிவு பெறும் வரை

அதனால்தான் நல்ல எண்ணங்களை
 நாம் வளர்த்து கொள்ளவேண்டும்.
நல்லவர்களின் கூட்டுறவை நாடி பெற வேண்டும்
தீய எண்ணங்களை தீ போல் கருதி தள்ளியே நிற்க வேண்டும்

நாம் முற்பிறவியில் விட்டு சென்ற பணிகளை
தொடரவே மீண்டும் பிறக்கிறோம்

சிலர் தமக்கு தீங்கு செய்தவரை பழி வாங்கவே மீண்டும் மீண்டும் பிறக்கின்றனர் 

சிலர் கடந்த பிறவியில் செய்த தவறுகளை
திருத்திக்கொண்டு அடுத்த பிறவியில்
நன்மைகள் செய்து நல்லதொரு
 நிலையை அடைய பிறக்கின்றனர்


பிறப்பதற்கு முன் முன்பு வரை நம் நிலை என்ன?
இறந்தபின் நம் நிலை என்ன?

நமக்கு எல்லாம் உண்டு உடலைத்தவிர
நாம் செய்த நல்வினைகளும், தீ வினைகளின் பதிவுகளும்,
ஆசைகளும் எல்லாம் நாம்மோடு இருக்கும்


உறக்கத்தில்,மயக்க நிலையில்
எல்லாம் மறைந்து போய்விடுகின்றனவே,அது எப்படி?
உறக்கம் வருவதே தெரியாமல்  வருகிறதே?
அதேபோல் விழிப்பதும் விழித்ததும் அனைத்தும் நினைவில் வந்துவிடுகின்றனவே அது எப்படி?

அதுதான் இறைவனின் மாயை
மாயையிலிருந்து விடுபட அவரவர் மன முதிர்ச்சிக்கு
ஏற்ப ஞானம் பெறும் வழிகளை நாட வேண்டும்

அப்படியானால் நாம் காண்பதனைத்தும்
செய்வதனைத்தும் நம் நினைவுகளில்தானா ?
அவைகள் யாவும் உண்மையில்லையா?


ஆம் அனைத்தும் நம் நினைவுகளில்தான் நடக்கிறது
என்ற உண்மையை நம்மால் அறியமுடியாது
நாம் யார் என்று உணரும் வரை

சில சமயங்களில் மட்டும் கனவுகள் ஏன் வருகிறது?
கனவில் எல்லாம் உண்மைபோல் தோன்றுகிறது
விழித்தவுடன் பொய்யாகிவிடுகிறதே அது ஏன்?


நம் மனதிற்கு மூன்று நிலைகள் உள்ளன
ஆழ்ந்த உறக்க நிலை கனவு,விழிப்பு

ஆழ்ந்த உறக்க நிலையில் உடல் உட்பட
அனைத்தும் இருக்கும் ஆனால் எதுவும்
நினைவில் இருக்காது .மனதின் செயல்பாடு
முற்றிலும் அடங்கியிருப்பதால்
கனவுகளும் இல்லை ,விழிப்பும் இல்லை

கனவு நிலையில் மனம் மட்டும் செயல்படும்
விழிப்பு நிலையில் மனமும் உடலும் செயல்படும்
ஆனால் உண்மையில் நாம் விழிப்பு நிலை
என்று நினைத்து கொள்வது
உண்மையில் விழிப்பு நிலை அல்ல
அது ஒரு நீண்ட கனவு அவ்வளவுதான்

உண்மையில் விழிப்பு நிலை என்பது ஆழ்ந்த உறக்கம்
,கனவு, நீண்ட கனவு ஆகிய நிலைகளையும் தாண்டி 
அனைத்தையும் சாட்சியாக நின்று பார்க்கும் ஒரு உணர்வு

அந்த நிலையை அடைய நாம்
பகவான் ரமண மகரிஷி காட்டிய 'நான் யார்'
என்று அவர் அருளியுள்ள அறிவுரைப்படி
முயற்சி செய்தால் அந்த நிலையை
அடையமுடியும். அடைந்தால்
அவரைபோல் நாமும்
 அந்த தெய்வீக ஆனந்தத்தை பெறமுடியும்


உண்பது,இரை தேடுவது,உறவு கொள்வது,சண்டையிடுவது போன்ற விலங்குகள் செய்யும் வேலையை தான் மனிதர்கள்
தினமும் செய்துவருகின்றனர் சிந்திக்கும் வேலையை தவிர


ஒரு சிலர் மட்டும் வேறு விதமாக செயல்படுகின்றனரே அது ஏன்?

கோடிகணக்கான மனிதர்களிடையே
ஒரு சிலர் மட்டும் இவ்வுலகில் தங்கள் சுவடுகளை விட்டு செல்கின்றனர்
மற்றவர்களின் சாம்பல்  கூட நிற்பதில்லையே அது என்?

பிறருக்கு தீங்கு செய்வதையே தொழிலாக
கொண்டுள்ளனர் பல பேர் அது ஏன்?

எதற்கெடுத்தாலும் கவலைப்படுவதே
வாழ்வின் கொள்கையாக வைத்துள்ளனரே பலபேர் அது ஏன்?

பலர் எப்போதும் துன்பத்திலேயே ஆழ்ந்துள்ளனர் அது ஏன்?

சிலர் எல்லாம் இருந்தும் மகிழ்ச்சியாக இல்லையே அது ஏன்?
ஒரு சிலர் எதுவும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கின்றனரே அது எப்படி?

தங்கள் மீதுள்ள குறைகளை காணாது பிறர்மீது குறைகளை கண்டு அனைவரையும் வேதனைபடுத்துவதையே தங்கள் வாழ்வின் குறிக்கோளாய் மனிதர்கள் பலபேர் வைத்திருப்பது ஏன்?

எந்நிலையிலும், அமைதியாகவும்  மகிழ்ச்சியாகவும் இருப்பது எப்படி?

மேற்கண்ட காரணங்களை  மனதில் வைத்து மீண்டும் மீண்டும் சிந்தித்தால் இந்த துன்பங்களிலிருந்து விடுபடும் வழியை மனம் நாடும். நல்லதொரு குருவை நாடினால் வழி பிறக்கும்.


நாடாவிடில் என்றும் துன்பமே
மனித பிறவியில் மட்டும்தான் இது சாத்தியம். 
இப்போது கிடைத்த இந்த வாய்ப்பை விட்டுவிட்டால் 
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் மனித பிறவிக்காக 
காத்தி ருக்கவேண்டுமோ?


அதை அந்த இறைவனே அறிவான் 


Sunday, January 15, 2012























தலையோ  பரட்டை 
கையிலோ  சிரட்டை 
வாயில்  பற்ற  வைப்பதோ  சிகரெட்டை 
விரட்டுவதோ  நம்  மன  இருட்டை 

உடுப்பதோ  கந்தை  துணி 
அழிப்பதோ  நம் அகந்தை  பிணி 

குளிக்காமல்  பல  காலம் இருந்தாலும் 
என்றும் புளிக்காத  தெய்வீக  கள்  அவன் ;

இடி  போன்ற  அவன் சிரிப்பில் 
பொடியாகிபோகும் 
 நம் கவலைகோட்டைகள் 

அவனை  சுற்றி  குவிந்திருக்கும் 
அழுக்கு  மூட்டைகள் 
அவன்  நம்மிடமிருந்து  
அகற்றிய  பாப  மூட்டைகள் 

நினைத்தாலே  முக்தி  தரும்  
அண்ணாமலையான்போல் 
அவன் நாமம்  நினைத்தாலே  
நினைத்த  கணம்  தோன்றி 
விரட்டுவான்  நினைத்தவரின்
துன்பங்களை 

உலகையளந்த  நெடுமால்போல் 
நெடிய  தோற்றம்  கொண்டவன்
அருளை வாரி வழங்கும்  வள்ளலவன்
ஆனாலும் தன்னை பிச்சைகாரன் 
என்று அழைத்து கொள்பவன்  


தன்னை நாடி  வரும்  மக்களை  
அன்பால்  வசியம்  செய்து  
ஆட்கொள்ளும்   ஆற்றல்  படைத்தவன் 

காண்போரை வசீகரிக்கும் 
பார்வை  கொண்டவன்
உள்ளத்தை  கொள்ளை 
கொள்ளும் மாய  கண்ணனவன்  ;

சொல்லிடுவோம்  அவன்
 நாமம் எப்போதும் 
வாழ்ந்திடுவோம்  சுகமாக  
இவ்வுலகில்  வாழும்  காலம் வரை  

யோகிராம்  சூரத்குமார் 
யோகிராம் சூரத்குமார் 
யோகிராம் சூரத்குமார் 
ஜெயகுரு  ராயா 

Sunday, January 8, 2012

சொல்வதொன்றும் செய்வதொன்றும்




 நதிகளை தெய்வம் என்கிறோம்


அதுவும் நதிகளை 
பெண் தெய்வமாக போற்றுகிறோம்

கங்கையை விட புனிதமான காவிரி நதியை
தோற்றுவித்தவர் அகத்திய பெருமான் 

காவிரி நதியினால் பல மாநிலங்கள் செழித்து 
வளர்ந்து வாழுகின்றன 

காவிரின் நடுவில்தான் காக்கும் கடவுளான 
அரங்கன் அரி துயில் கொண்டுள்ளான் 
தெய்வம் அனைவருக்கும் பொது 

அதுபோல் தெய்வீகநதியான  காவிரியும்
அது தொடங்கும் இடத்திலிருந்து 
கடலில் சென்று சேரும் வரை 
அனைவருக்கும் பயன்படவேண்டும்

அவ்வாறு செய்யாமல் 
ஒரு மாநிலம் மட்டும் 
அனுபவிக்க நினைப்பது 
இயற்க்கைக்கு முரணானது
காவிரி நீரினால் நம் அனைவருக்கும்
உணவும் குடிநீரும்,மின்சக்தியும்
கிடைக்கிறது
இந்நிலையில் அதை 
கழிவுநீரையும் ரசாயன மற்றும் 
மல கழிவுகளையும் 
குப்பைகளையும் விட்டு மாசுபடுத்தி 
அதன் புனிதத்தன்மையையும், அதன் 
சுத்தத்தையும் தொடர்ந்து 
அழித்துக்கொண்டுவருவது
மன்னிக்க முடியாத குற்றமாகும்

ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்து 
நதிகளும் இவ்வாறுதான்
அசுத்தப்படுத்தபட்டு வருகின்றன 

பெரும்பாலான மக்களும் 
இது குறித்து விழிப்புணர்வு இல்லாமல்
இருப்பது கண்டிக்கத்தக்கது
நதியை தெய்வமாக பூஜிக்கும் மக்கள்
வாழும் நம் நாட்டில் இதுபோன்ற 
செயல்களில் ஈடுபடுவது 
அரசுகளும் இதில் அக்கறை  
காட்டாமல் இருப்பது
மிகவும் வருந்ததக்கது 

இது போன்ற இந்த அநீதிகளுக்கு 
அனைவரும்  ஒருநாள் 
பதில் சொல்ல வேண்டி வரும்

அப்போது இயற்கை  தரும் தண்டனை மிக 
கடுமையானதாகவும்  கொடூரமானதாகவும்
நிச்சயம் இருக்கும். 

Saturday, January 7, 2012

சொல்வது ஒன்று 
செய்வது ஒன்று 

சொல்வது:
அனைத்து உயிரிலும் வாசம் செய்யும்
வாசுதேவனான நாராயணனை/ஈசனை/ 
பராசக்தியை வணங்குகிறேன்

செய்வது:
உயிரற்ற அவன் வடிவங்களுக்கு 
அனைத்து உணவுகளையும் அளிப்பது
அவன் வாசம் செய்யும் மற்ற உயிரினங்களனைதையும்
பட்டினி போடுவது 

அவன் வடிவங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து 
கோயில் கட்டுவது

அவன் வாசம் செய்யும் கோடிக்கணக்கான ஏழை மக்களை 
வெய்யிலிலும்,மழையிலும், குளிரிலும் வாடி வதங்கி வசிக்க இடமில்லாமல்,வீடில்லாமல் நடைபாதையில் துன்புறுவதை 
கண்டும் காணாமல் இருப்பது

உயிர்களின் உள்ளிருப்பவனை போற்றுவது

அவன் தாங்கியுள்ள வடிவமான மனிதர்களை கொடுமைபடுத்துவது, சிறுமைபடுத்துவது, ஒதுக்கி வைப்பது ,சொல்லால் செயலால் இழிவுபடுத்துவது,போன்ற செயல்களை மன சாட்சியின்றி செய்வது 

இன்னும் எத்தனையோ 
மானிடர்கள் சொல்வதொன்றாகவும் செய்வதொன்றாகவும் 
பொய்களையே பேசி,உண்மையை மறைத்து 
இறைவழிபாடு செய்வதாக தங்களையே ஏமாற்றிக்கொண்டு திரிகிறார்கள்

இவர்கள் திருந்துவது எந்நாளோ? 
 

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தர்களை நினைத்தால்

நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலை கெட்ட மாந்தர்களை
நினைத்தால் 

அனைத்தும்  அவன் செயல் என்பார்
ஏதாவது நடந்துவிட்டால் பிறர் மீது
சுமத்துவார் குற்றம் 
அத்துடன் விடுவாரா அம்மனிதர் 
அனைத்தையும் அடித்து நொறுக்கிடுவார்
அனைவரையும் அல்லல்பட வைத்திடுவார் 
ஓயாமல் புலம்பிடுவார் 
என்றுதான் இவர்கள் திருந்திடுவாரோ 
நடந்தததை ஏற்று இனி   நலமாக 
வாழ வழி தேடுவாரோ 
யாமறியேன் 
  


















ஓம் அகத்தீஸ்வரா  சரணம்

அனைத்தையும்  அறிந்தவனே அகத்தீஸ்வரா
அன்புருவானவனே அகதீஸ்வரா

அகந்தையை அழித்திடுவாய் அகத்தீஸ்வரா
அருளை தந்திடுவாய் அகத்தீஸ்வரா

அவநம்பிக்கையை போக்கிடுவாய் அகத்தீஸ்வரா
அமைதியை தந்திடு அகத்தீஸ்வரா

அன்பு மயமாக்கிவிடு அகத்தீஸ்வரா
ஆதரிதருள்வாய் அகத்தீஸ்வரா

ஆணவத்தை அகற்றிவிடு அகத்தீஸ்வரா
ஆறுதலை தந்திடுவாய் அகத்தீஸ்வரா

ஆபத்பாந்தவனே அகத்தீஸ்வரா
இவ்வுலக வாழ்வுதான் அகத்தீஸ்வரா
நிலையில்லை நிலையில்லை அகத்தீஸ்வரா

இதனாலே உன்னடியை அகத்தீஸ்வரா
இறுகவே பற்றினோம் அகத்தீஸ்வரா

இல்லாதவர்க்கு உதவுவதே அகத்தீஸ்வரா
இறைவனுக்கு செய்யும் சேவை அகத்தீஸ்வரா

இதை எனக்கு உணர்த்திடுவாய் அகத்தீஸ்வரா
இவ்வுலக மோகத்தில் அகத்தீஸ்வரா
மூழ்கிய என்னை மீட்டு காத்திடுவாய் அகத்தீஸ்வரா

பக்தியை தந்திடுவாய் அகத்தீஸ்வரா
பாவங்களை போக்கிடுவாய் அகத்தீஸ்வரா

நம்பிக்கை தந்திடுவாய் அகத்தீஸ்வரா
ஞானத்தினை போதித்திடுவாய் அகத்தீஸ்வரா

மன இருளை போக்கிடுவாய் அகத்தீஸ்வரா
மோனத்தில் ஆழ்த்திடுவாய் அகத்தீஸ்வரா

பொறுமையை அளித்திடு அகத்தீஸ்வரா
பொறாமையை போசுக்கிடுவாய் அகத்தீஸ்வரா

தீமையை விலக்கிவிடு அகத்தீஸ்வரா
தீநட்பை அகற்றிவிடு அகத்தீஸ்வரா

நல்லுறவை நல்கிவிடு அகத்தீஸ்வரா
நன்மை செய்ய பழக்கிவிடு அகத்தீஸ்வரா

நிலையில்லா பொருளைஎல்லாம் அகத்தீஸ்வரா
நித்தியம் என்று நம்பினோமே அகத்தீஸ்வரா

நின்னடியை சரணடைந்தோம் அகத்தீஸ்வரா
நல்வழியை காட்டிடுவாய் அகத்தீஸ்வரா

வாழும் வழி வகையறியோம் அகத்தீஸ்வரா
வழி தவறி வருந்துகிறோம் அகத்தீஸ்வரா

உண்மை வழி உணராமல் அகத்தீஸ்வரா
உளம் நொந்து தவிக்கிறோம் அகத்தீஸ்வரா

பொன் பொருட்கள் இருந்தாலும் அகத்தீஸ்வரா
மனம் எதையோ தேடுவதேன் அகத்தீஸ்வரா

எத்தனை நாள் இப்படியே அகத்தீஸ்வரா
நான்அலைந்து திரிந்திடுவேன் அகத்தீஸ்வரா

பணிந்தோரை காப்பவனே அகத்தீஸ்வரா
பதமலர் பணிந்தோமே அகத்தீஸ்வரா

எங்களை காத்திடுவாய் அகத்தீஸ்வரா
என்றென்றும் உன் நினைவே அகத்தீஸ்வரா

உன் திருவடியை பற்றினேன் அகத்தீஸ்வரா
உண்மையை எனக்கு அகத்தீஸ்வரா
விரைவில் உணர்த்திஅருளிடுவாய்  அகத்தீஸ்வரா

காலம் போய்விடும் அகத்தீஸ்வரா
காலனும் வந்திடுவான் அகத்தீஸ்வரா

ஆன்மாவை உணர்ந்திடவே அகத்தீஸ்வரா
எனக்கருள் செய்திடுவாய் அகத்தீஸ்வரா

மரணபயம் போக்கிவிடு அகத்தீஸ்வரா
மறுபிறவி நீக்கிவிடுஅகத்தீஸ்வரா

போற்றி உன்னை பணிந்தோமே அகத்தீஸ்வரா
போதும் எம்மை ஆட்கொள்வாய் அகத்தீஸ்வரா

இனிமேலும் தாங்கிடோம் அகத்தீஸ்வரா
இக்கணமே இன்னருள் செய்வாய் அகத்தீஸ்வரா


Friday, January 6, 2012

பராசக்திக்கு விண்ணப்பம்




கலைத்தாயே 
...
கலைத்தாயே என்  அறியாமை  களைந்திடவே 
அருள்  செய்வாய் கலைவாணியே  

அறியாபொருளை  அறியும்  அறிவை 
 எனக்கு  நிறைவாய்  தந்திடுவாய்  
அறிவு  தெய்வமே  அபிராமியே 

கலையை  விலையாக்கும்  கற்றவர்கள்  
மத்தியில்  நிலையாய்  நிமிர்ந்து  நிற்க்கும்வழியை 
எனக்கு காட்டிடுவாய்  வடிவுடை  அன்னையே 

நிலையான  பதம்  தேடி  வழி  நாடும் 
எனக்கு பழி  தீண்டா  வழி காட்டிடுவாய் 
அகிலாண்டேஸ்வரி  தாயே 

வெளி  சென்று  வெளிச்சம்  தேடுமெனக்கு 
உட்சென்று  தானே  ஒளிருமொளியைகாணும் 
வழியை  கற்பிப்பாய்  கற்பகவல்லியே 

பிழை  செய்தே  பிழைப்பை  தேடுமென்னை 
பிறருக்கு  நலம்  செய்தே நானுயரும்மார்க்கம் 
உணர்த்துவாய்  பிரமராம்பிகையே 

பிறர்  உயர்வு  கண்டு  பொறாமை  கொண்டு  
பொறுமும்  மக்களிடையே  மற்றவர்
 உயர்வு கண்டு அகமகிழும்பாங்கினை 
அளிப்பாய் ஆனந்த வல்லியே

அனைதுயிர்க்குமஅன்பு  செய்து ஆனந்தம்
அடையும்  பாதையை  விட்டு  
பழியை  தரும்  பாவ  வழியில்  
சென்றிடாமல்  என்னை  
காத்திடுவாய்  பரமேஸ்வரியே

பூக்குவியலின்நடுவில் கருநாகம்  
புகுந்து  உயிருக்கு  ஆபத்தை  விளைவிக்கும்
சில மனிதர்கள் போல் என் உள்ளத்தில் 
புகுந்துவிட்ட தீய எண்ணங்களை அகற்றி 
என்னை காத்திடுவாய் நாகேஸ்வரியே

இன்பத்தை  கண்டு இறுமாப்பு  அடையாமலும் 
துன்பத்தை  கண்டு துவண்டுவிடாமலும் 
செல்வம்   வந்தபோது  செருக்கடையாமலும் 
எந்நிலையிலும்  அறவழிவிட்டு  நீங்காமலும் 
எக்கணமும்  உன்  திருவடி  நினைவு  மறவாமலும் 
கண்ணின்  இமை  போல்  என்னை காப்பாய் 
கருமாரி தாயே


அனைத்துமாய்  இருப்பவளே 
அனைத்தையும் இயக்குபவளே  
அஞ்ஞானத்தை  அழிப்பவளே 
ஆனந்தத்தின் ஊற்றே
ஆதிபராசக்தியே


சற்றே  என் கோரிக்கையை  செவி  மடுப்பாய் 
இந்த  உடலைவிட்டு  உயிர்  நீங்குமுன்னே 
தயாபரியே 

Thursday, January 5, 2012

எல்லா உயிரும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக

எல்லா உயிரும் இன்புற்று வாழ்க 
கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக 
என்று பாடினார் வள்ளலார் 

ஆனால் இன்று என்ன நடக்கிறது?

எல்லா உயிரும் துன்புற்று மடிக என்றும்
விரத நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் 
அகப்பட்டதை எல்லாம் கொன்று 
தின்று வயிற்றை நிரப்பும்
கூட்டம் பெருகிவிட்டது 
 
 இங்கு மட்டும் அல்ல இன்று உலகில் 
அனைத்து பகுதிகளிலும் இதே நிலைமை
 
இயற்கையில் எப்படி மனித மிருகங்கள் வாழ்வதற்கு உரிமை
உள்ளதோ அதேபோல் ஒவ்வொரு உயிரினத்திற்கும் 
வாழ உரிமை உண்டு என்பதை மனிதன் ஏற்றுகொள்வதில்லை 

பிற உயிர்களை கொன்று தின்னும் மனிதன்
இன்று தன் இனத்தை சார்ந்த மனித உயிர்களையே 
தன் சுயனலதிர்க்காக  ஈவு இரக்கமின்றி கொடூரமாக
கொன்று வருகின்றான்

அதனால்தான் இன்று இயற்க்கை தன் நிலை மீறி 
புயலையும், வெள்ளத்தையும், சுனாமியையும், 
தீ விபத்துகளையும் ஏற்படுத்தி மனித பதர்களுக்கு
புரிய வைக்க முயற்சி செய்து 
வருகிறது
ஆனால் மனிதன் அதை புரிந்து 
கொள்ளும்  நிலையில் இல்லை 
என்பது வேதனைக்குரியது
.
அனைவரும் அனைத்து
 உயிர்களையும் வாழ வைக்க 
இயற்க்கை அனைத்தையும்
இலவசமாக அபரிமிதமாக வழங்கியுள்ளது
 
அதை மனிதன் தடுக்க நினைத்தால் 
இயற்க்கை கொடுக்கும் தண்டனை 
இன்னும் மிக கடுமையாக இருக்குமென்பதை 
புரிந்து கொண்டு வள்ளலார் அறிவுரைப்படி 
தன் போக்கை மாற்றிக்கொண்டு அனைவரும்
நன்மை பெரும் வகையில் தன வாழ்வை 
அமைத்துக்கொள்ள வேண்டும் 

Wednesday, January 4, 2012

தன் பொறுப்புகளை நிறைவேற்றாமல் தட்டி கழிப்பவன் இறைவனை என்றும் அடையமுடியாது

கருணை மறந்தே வாழ்கின்றார்
கடவுளை தேடி அலைகின்றார் 
என்ற வரிகளை 
மறக்க முடியுமா?
ஆனால் இன்று என்ன நடக்கின்றது?
தன்னை நம்பி வந்த மனைவியையும்,
குழந்தைகளையும் தவிக்கவிட்டுவிட்டு 
வாழ்வில் பிரச்சினைகளை எதிர்கொள்ள 
பொறுமையும், மன உறுதியும் இல்லாது
குடும்பத்தை நிராதரவாக விட்டு விட்டு 
பொறுப்பற்ற நிலையில் சுற்றி கொண்டிருக்கிறது 
ஒரு கூட்டம் எல்லா ஊர்களிலும்
 
இல்லறமே நல்லறம் என்று 
அவ்வை மூதாட்டி அன்றே கூறியுள்ளாள் 
இல்லறத்தில் இருந்துகொண்டே
 தன் கடமைகளை செய்துகொண்டே 
இறைவழிபாடு செய்து அனேக மக்கள்
 இறைஅருளை பெற்றிருக்கிறார்கள்

தன் பொறுப்புகளை நிறைவேற்றாமல் 
தட்டி கழிப்பவன் இறைவனை
 என்றும் அடையமுடியாது  

Tuesday, January 3, 2012

ஆடம்பரங்களை தவிர்த்து மன திருப்தியுடன் இறை தரிசனம் செய்வது சால சிறந்தது. .

ஆண்டவனை துதிக்க செல்லும்போது 
விலைஉயர்ந்த ஆபரணங்கள அணிவது தேவையா?
ஆடம்பரமாக உடை அணிந்துதான் செல்ல வேண்டுமா?
தற்போது திருவிழாக்களில் 
லட்சகணக்கான மக்கள் கூடுகின்றனர் 
திருவிழாவிற்கு வரும் பக்தர்களில் விலை உயந்த 
ஆபரணங்களை அணிந்து  வருவதால் அவர்களிடம் 
கொள்ளை யடிப்பதற்கென்று திருடர்களும் 
வெளியிடங்களிலிருந்து வந்து
மக்களோடு மக்களாக கலந்துவிடுகின்றனர்
விழாவில் பலர் நகைகளை யும், பணத்தையும் பறி கொடுத்து
மன வேதனைபடுகின்றனர் 
இறைவன் வழிபாட்டில் பக்திதான் முக்கியமே தவிர 
புற வேஷங்கள் தேவையற்றது. 
இதை தவிர்க்க மக்கள் எளிமையாக உடையணிந்து 
ஆடம்பரங்களை தவிர்த்து மன திருப்தியுடன் 
இறை தரிசனம்  செய்வது சால சிறந்தது. 
.

Sunday, January 1, 2012

ஆலயங்களுக்கு செல்வது எதற்க்காக

ஆலயங்களுக்கு செல்வது எதற்க்காக?

ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் வழக்கப்படி
பிரார்த்தனை செய்கின்றனர்.

எல்லாம் வல்லவன் இறைவன் ஒருவனே என்று நினைவுபடுத்திகொள்வதர்க்காக

தான் செய்த பாவங்களை இறைவன் முன்பு
கூறி பாவ மன்னிப்பு  பெறுவதற்காக
மீண்டும் பாவ செயல்களை செய்யாதிருக்க
உறுதி ஏற்ப்பதர்க்காக

தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு
துன்பங்கள் நீங்க, வளமான மகிழ்ச்சியான வாழ்வு
அமைய என பலவிதமான கோரிக்கைகள்
இறைவன் முன்பு வைக்கப்படுகின்றன

சமீப காலமாக உள்ளூர் ஆலயங்களுக்கு செல்வதை தவிர
வெளியூர் ஆலயங்களுக்கு செல்லும் மக்களின் கூட்டம்
ஆயிர கணக்கில் பெருகி வருகிறது
 
கோயிலுக்கு செல்வது எதற்க்காக?
நம் மன அழுக்கை நீக்கி கொள்ளத்தான்

ஆனால் கோயிலுக்கு செல்லும் மக்கள் கோயில் செல்லும், நகரையும், கோயில் வளாகத்தையும், சுற்றுப்புறத்தையும் அசிங்கபடுதுவதுடன், பாழ்படுதுவதையும் குறிக்கொள்ளக கொண்டுள்ளனர்

கோயில் நிர்வாகமோ, அரசு நிர்வாகமோ வருவாயை
சேர்பதிலேயே கண்ணாக இருக்கின்றனவே தவிர மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதிலும் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருப்பதிலும் அக்கறை காட்டுவதில்லை என்பதை கோயில்களுக்கு செல்லும் மக்கள் நன்கு அறிவர்

உணவு கழிவுகள், மனித கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் ,கந்தைகள் என
கோயில் முழுவதும் வெளியிலும் சிதறி பல நாட்கள் அப்படியே கிடக்கின்றன
கழிப்பிட வசதிகள் செய்ய படா மையால் மக்கள் கோயில் சுற்றுபுறத்தை பொது கழிப்பிடமாக ,சிறுநீர் கழிக்கும் இடமாக மாற்றி சுகாதார கேடுகளை ஏற்படுத்துவதுடன் மக்களுக்கு நோய்களை பரப்பும் கூடாரமாகவும் மாற்றிவிடுகிறார்கள்

 இந்நிலை மாற


அரசுகள் நடமாடும் கழிப்பிடங்களை கண்டிப்பாக அமைத்து தரவேண்டும்
இலவசமாக கழிப்பிடமும் ஒவ்வொரு கோயிலிலும் அமைக்கபட்டு முறையாக பராமரிக்கபடவேண்டும்
குப்பைகளை போட குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டு  பராம்ரிக்கபடவேண்டும்

கோயிலுக்கு செல்லும் மக்கள் அங்கு வழங்கும் பிரசாதங்களை உண்டுவிட்டு கைகளை கோயில் தூண்களில் தடவுவதை விட்டு ஒரு கை துடைக்கும் திஸ்ஸுஎ காகிதத்தையோ கையில் கொண்டு செல்ல வேண்டும் அல்லது கோயில் நிர்வாகமே  அதை தரவேண்டும்

குங்குமம்,விபூதி போன்றவற்றை கையில் அளித்தால் மீதியை கோயில் சுவற்றில் தேய்த்து விடுவதால் ஒரு சிறிய காகிதத்தில்தான் இனி குங்குமம் அளிக்கப்படவேண்டும்


சுத்தம்தான் கடவுள் 

அதைவிடுத்து கடவுள் உறையும் இல்லத்தை அசிங்கபடுதுவது 
அவருக்கு செய்யும் அவமரியாதை ஆகும்

கோயில் உண்டியில் காசு போட்டுவிட்டால் கடவுள் அருள் கிடைத்துவிடும் என்று நம்புவது நம்மை நாமே ஏமாற்றும் செயல்

அதைபோல் கோயிலுக்கு நிதி உதவி அல்லது காணிக்கை அளித்துவிட்டு விளம்பர படுத்தி கொள்வதும் அநாகரீகமான செயல்
 
கடவுளுக்கு ஆபரணங்கள் ஏற்கெனவே நிறையவே இருக்கிறது

கோயில் ஒழுக்கத்தை கடைபிடிப்பது, ஒழுங்கை கடைபிடிப்பது மற்றவரையும்,கடைபிடிக்க  செய்வது
அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உதவுவதும் இறைவனுக்கு செய்யும் தொண்டாகும்
 ,
கோயில் நிர்வாகங்களும் காசு ஒன்றிலே குறியாய் இல்லாமல் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவது மற்றும் சுற்றுபுறத்தை தூய்மையாக பராமரித்தலும் அவர்களின் கடமையாகும் 




மெய் என்றால் என்ன?

மெய் என்றால் என்ன? 
மெய் என்றால் உண்மை 
என்று ஒரு பொருள்
மெய் என்றால் நம்முடைய 
உயிர் தங்கியிருக்கும் ஒரு கூடு 
அந்த மெய் எதனால் ஆக்கப்பட்டது? 
பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது
பஞ்ச  பூதங்கள் என்றால் என்ன?

மண்,நீர்,காற்று,தீ ,ஆகாயம் அதாவது வெட்டவெளி 
இந்த உடலை விட்டு உயிர் நீங்கிடின் உடல் அழுகி 
ரசாயன மாற்றமடைந்து அந்தந்த
மூல பொருளில் கலந்துவிடும் 

இந்த உண்மையை 
அறிந்துகொள்வதுதான்
உண்மையான அறிவு
மற்றபடி உலகில்  உள்ள பொருட்களின் 
மூல கூறுகளை 
ஆராய்ந்து அறிந்துகொண்டு 
நாம் இவ்வுலகில்
நலமாக வாழ பயன்படுத்தி கொள்ள
உதவுவது விஞ்ஞானம்

அந்த அறிவு இந்த உடலை விட்டு 
நீங்கியபின் பயன்படாது போகும்

ஆனால் மெய்ஞானமோ
நாம் இவ்வுலகை விட்டு நீங்குவதற்கு
முன்னும், நீங்கிய பின்னும் நமக்கு 
தெளிவும் அமைதியும், ஆனந்தமும் 
அளிக்கும் மார்கமாகும்
 
சித்தர்களும், யோகிகளும்,ஞானிகளும்
இதை தெளிவாக தங்கள் நூல்களிலும்,
தாங்கள் வாழ்ந்த வாழ்க்கை மூலமும் 
மனித குலத்திற்கு வழி காட்டியுள்ளனர்
 
இன்றும் முறையாக அணுகுவோருக்கு
உதவவும் செய்கின்றனர்.