Sunday, September 23, 2012

சுகம் எங்கே இருக்கிறது?

சுகம் எங்கே இருக்கிறது?
ஏது சுகம்?
எது சுகம் ? 
சுகத்தை எப்படி அடைவது?
சுகம் நிரந்தரமாக இருக்குமா?
இப்படியெல்லாம் மனித குலம் 
சுகத்தை தேடி வாழ்நாள் முழுவதும் அலைகிறது

சிலர் எது சுகம் என்றே அறியாமல் 
அதை தேடிக்கொண்டிருக்கிறார்கள் 

சிலருக்கு வாழ்நாள் முழுவதும் அது கிடைப்பதேயில்லை 
சிலருக்கு எப்போதாவது சுகம் கிடைக்கிறது

சிலர் சுகமாக இருப்பதுபோல் வெளியிலிருந்து
பார்ப்பவர்களுக்கு தெரிகிறது ஆனால் அவர்கள் 
உள்ளே மனதில் சோகங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்

சிலர் வெளியில் பார்ப்பதற்கு சுகமாக இல்லை 
போன்று தோன்றும் ஆனால்  அவர்கள் 
தங்களுக்குள் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்

சிலருக்கு சுகம் கிடைத்தாலும் அது நிலைக்காது 
அது உடனே அவரிடமிருந்து பிரிந்து சென்று விடும்

சிலருக்கு சுகம் கிடைத்தாலும் பிறர் 
அவர்களை சுகமாக இருக்க விட மாட்டார்கள்

சும்மா இருப்பதே சுகம் 
என்று சித்தர்கள் சொல்லுகிறார்கள்

சும்மா இருப்பது சுலபமல்ல
உடலால் சிறிது நேரம் சும்மா இருக்கலாம். 
ஆனால் உடல் சும்மா இருந்தால் அது கெட்டுபோய் அழிந்துவிடும். 

மனம் எந்த எண்ணங்கள் இல்லாமல்
இருப்பது மிகவும் கடினமாக காரியம். 
அதை காலி செய்வதற்கு இறைவனின் நாமத்தை 
சொல்லிகொண்டிருந்தால் மற்ற எண்ணங்கள் 
காலப்போக்கில்  மறைந்துவிடும்
பிறகு அதையும் மறந்து நின்றால் 
நம் உள்ளத்தில் நின்றுகொண்டிருக்கும் 
இறைவனை தரிசனம் செய்யாலாம் 

எப்போதும் சுகமாக இருப்பவர் ஒருவர்தான். 
அவர்தான் சுகப்ரம்மம் என்ற சுக மகரிஷி 
இந்த உலகத்திற்கு பாகவதத்தை உபதேசித்தவர்.
அவர் வியாச பகவானின் புத்திரர். 
பிறவியிலேயே பிரம்ம ஞானி. 
ஆனால் பிரம்ம ஞானிக்கு எதுவுமே தேவையில்லை 
அவர் எப்போதும் இடைவிடாத 
ஆனந்தத்திலேயே  மூழ்கியிருப்பவர் 

அப்படிப்பட்டவருக்கும் தான் அனுபவிக்கும் 
ஆனந்தத்தை விட உயரிய ஆனந்தத்தை 
தேடியபோது அவர் கண்டதுதான் பகவான் கண்ணனின் 
லீலைகள் அடங்கிய பாகவதம்.


தேவையற்ற குப்பைகளை நம் புலன்கள் 
நம் மனதிற்குள் கொட்டிகொண்டே இருக்கின்றன .
அந்த குப்பைகள் நாளுக்குநாள் மலைபோல் குவிந்துகொண்டே இருக்கின்றன. அவைகளை அப்புறபடுத்த யாரும் முயற்சிப்பதே கிடையாது .அனைவரும் குப்பை மேட்டில் வீடுகள் கட்டுவதுபோல அந்த குப்பைகளை அப்புறப்படுத்தாமல் ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபடுவதால் அவர்களின் முயற்சிகள் ஒன்றும் பயனளிப்பதில்லை  

அந்த குப்பைகள் அழுகி நாற்றமெடுத்து அதிலிருந்து 
பூச்சிகளும்   கிருமிகளும் உற்பத்தியாகி
நம் மனதையும் உடலையும்
நாசமாகிகொண்டு இருக்கின்றன 

அவைகளை நாசம் செய்ய வேண்டுமென்றால்
பகவான் கிருஷ்ணனை மட்டும் உங்கள் உள்ளத்தில் 
விளையாட விடுங்கள். அவன் உங்கள் மனதில்
 உள்ள அனைத்து அசுரர்களையும் அழித்து 
உங்களுக்கு ஆனந்தமயமான 
வாழ்வை நிச்சயம் அருள்வான் 

பக்தியுடன் எவன் ஒருவன் பாகவதத்தை படிக்கிறானோ 
அவன் இவ்வுலக மாயையிலிருந்து விடுபடுவதுடன், 
நிரந்தரமான சுகத்தை அடைவான் என்பது 
அனுபவித்தவர்கள் கூறும் உண்மை. 

Tuesday, September 18, 2012

தடைகளும் கணபதியும்

தடைகளும் கணபதியும் 

மனிதகணம்,தேவகணம், பித்ருகணம்,
பேய்க்கணம், என பல உயிர்களில் பல பிரிவுகள் அடங்கியுள்ளன. 

ஒவ்வொரு உயிரினங்களும் வெவ்வேறு
சூழ்நிலைகளில் வாழ படைக்கப்பட்டிருக்கின்றன/பழக்கப்படிருக்கின்றன 
அவைகளுக்காக உலகங்களும் இறைவனால்
உருவாக்கப்பட்டிருக்கின்றன

உதாரணமாக தேவகணங்கள் மனிதர்களைப்போல் வாழமுடியாது
அவர்களுக்கு மனிதர்களை போல் பௌதிக உடல் கிடையாது.
ஆனால் மனிதர்கள் இந்த பூமியை தவிர வேறெங்கும் வாழ இயலாது.

இதை தவிர மனிதர்களுக்குள்  தலைக்கனம் என்று ஒன்றும் உண்டு 
அது அவர்களையும் அழிக்கும் அவர்கள் வாழ்கின்ற இந்த உலகையும் 
அழிக்கும். அதை அடியோடு வெட்டி சாய்க்கின்ற  தெய்வம் 
கணபதியே என்பது அனைவருக்கும் தெரியும் 

இதுபோன்ற அனைத்து கணங்களையும் மேய்ப்பதற்கு ஒரு 
தலைவர் உள்ளார். அவர்தான் கணங்களின்  பதி   அதாவது தலைவர்
அவர்தான் கணபதி ,விநாயகர் அதாவது  we நம் அனைவருக்கும் நாயகர் (தலைவர்)  என கொண்டாடப்படுகிறார் .

இந்த உலகம் பஞ்ச பூதங்களின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது 
மனிதர்கள் ஐம்புலன்களின் உதவியால்தான் பார்க்கின்றனர், கேட்கின்றனர், பேசுகின்றனர் மூச்சு நிற்கும் வரை சுவாசிக்கின்றனர், வாய் மூலம் 
மூச்சு முட்டும் வரை வயிற்றை நிரப்பிகொள்கின்றனர் .

எல்லாவற்றிற்கும் ஒரு வரைமுறை, வரையறை உண்டு.
அதை உயிர்கள்  மீறினால் அது அவர்களுக்கும் அழிவு,
அவர்கள் வாழும் இந்த உலகத்திற்கும் அழிவு. 

அதனால்தான் தடைகள் ஏற்படுத்தப்பட்டு 
அனைத்தும் முறைபடுத்தபட்டன. 
தடைகள் நமக்கு நன்மையே புரிகின்றன
விளக்கில் மின் தடை ஏற்பட்டால் 
ஒளி  கிடைக்கிறது
இஸ்திரி பெட்டியில் ஏற்பட்டால் 
வெப்பம் கிடைக்கிறது 
என சொல்லிக்கொண்டே போகலாம். 

சாலைகளில் வேக தடை இருப்பதால் 
பல லட்சக்கணக்கான வண்டியோட்டிகள் 
எமனுலகிர்க்கு அல்ப ஆயுசில்
செல்லாமல் தடுக்கப்படுகிறார்கள். 
ஆனால் அதை மீறியவர்கள் அடிபட்டு 
வாழ்நாள் முழுவதும் துன்பத்தில் கிடக்கிறார்கள்
பலர் அடியோடு இல்லாமல் போய்விட்டார்கள் 

அடிக்கடி மின்தடை ஏற்படுவதால்
நமக்கு கணிசமாக 
மின்கட்டண செலவு குறைகிறது. 

மனிதர்கள் செய்யும், பல செயல்கள், 
பேச்சுக்கள் மனித இனத்திற்கும்,
இவ்வுலகிற்கும் பேரழிவுகள் ஏற்படுவதால் 
அவர்களின் செயல்களை கட்டுபடுத்த 
பல தடை சட்டங்கள் அவர்களாலேயே 
நிறைவேற்றப்பட்டுள்ளன 

ஆனால் அதை மீறி தன்னுடைய MRP RATING ஐ 
உயர்த்திக்கொள்வதிலேயே பல அரசியல் தலைவர்கள்
தங்கள் வாழ்நாளை கழித்துக் கொண்டிருக்கிறார்கள் .
போதாக்குறைக்கு பலரையும் தங்களுடன் சேர்த்துக்கொண்டு 
இவ்வுலகை தினமும் குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள் 

எது எப்படி இருந்தாலும் மனிதன் செய்யும்
எந்த செயலானாலும் நல்லபடியாக தொடங்கி 
தடைகளின்றி முடிவுரவேண்டும் என்று விரும்புகிறான்.
அதற்க்கு அனைத்து இந்துக்கள்  
நம்புவது கணபதியைதான்

அவரும் எளிமையானவர். எல்லோராலும் 
எங்கு வேண்டுமானாலும் அணுகக்கூடிய நிலையில் உள்ளவர்
அன்புடன் எதை அளித்தாலும் ஏற்று மகிழ்பவர்.
ஒன்றும் அளிக்காமல் பார்வையாலே வணங்கினாலும்
வரமளிக்கும் தயை  உடையவர்.அமைதியாக வணங்கினாலும் ஆர்பாட்டத்துடன் ஆடம்பரமாக வழிபாடுகள் செய்தாலும் 
ஏற்றுக்கொண்டு அமைதியாக இருந்துகொண்டு வழிபடுபவர்களுக்கு மனதில் அமைதியையும் ஆனந்தத்தையும் வாரி வாரி வழங்குபவர்  

இறைவன் மதங்களுக்கு அப்பாற்ப்பட்டவர் .எல்லா உயிர்களுக்கும்  பொதுவானவர். சிலர் நினைப்பதுபோல் ஒவ்வொரு மதத்திற்கும் தனி தனியாக கடவுள்கள் இருக்கிறார்கள்,தன்  கடவுள்தான் சக்தி வாய்ந்தவர் என்று நினைப்பதெல்லாம் உண்மையன்று 

நினைப்பவர்க்கு நினைக்கும் வடிவில் தோன்றி 
கடவுளின் சக்தி நலம் தரும். என்பதுதான் உண்மை 
வடிவங்கள் கடவுள் அல்ல. வடிவங்கள் மூலம் நம் மனம் 
கடவுளின் சக்தியை பெறுகிறது .என்பதை புரிந்து கொண்டால் 
மத மோதல்கள் ஒழியும் 
அந்த நிலை என்று வருமோ?

விநாயகர் சதுர்த்தி தினமான இந்நாளில் 
அவரை வணங்கி இன்று உலகமனைத்தும்
மக்கள் நன்றாக அன்போடு, ஆரோக்கியமாக 
மன நிம்மதியுடன் வாழவும் 
அதற்க்கு  தடையாக உள்ளவர்களின் 
மனதில்உள்ள தீய எண்ணங்கள் நீங்கி /
நீக்கி இவ்வுலக வாழ்க்கை
இன்பமாக திகழ மனமுருகி பிரார்த்திப்போம்Saturday, September 15, 2012

அகத்தியர்

அகத்தியர்


                                                                                   
                                                                                    
                                                                                       மனமது செம்மையானால் 
மந்திரம் ஜெபிக்க வேண்டா 
என்கிறார் அகத்தியர் பெருமான்

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் 
மனம் செம்மைப்பட மந்திரம் 
ஜெபிக்க வேண்டும் என்று தெரிகிறது. 

அதே நேரத்தில் மனம் செம்மைபட்டுவிட்டால் 
மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்றும் தெரிகிறது

மனம் செம்மைப்படவேண்டும் என்றால் என்ன?

செம்மைப்படுத்துதல் என்றால் தயார் படுத்துதல் என்று பொருள்
செம்மையாக செய் என்றால் சரியாக செய் என்று பொருள் 
நிலத்தை கொத்தி  உழுது உரமிட்டு நீர் பாய்ச்சினால்
அதில் விதை விதைத்து  பயிரை வளர்த்து 
நல்ல மகசூல் காணலாம் 

மனதை திறம் உள்ளதாக  செய்ய உள்ள 
எண்ணங்களை உருவாக்கும் 
சொல்லே மந்திரம் எனப்படும்

அதனால்தான் மந்திரத்தை
விதை என்று கூறுவர்
ஒரு விதை நன்றாக முளைத்து 
வளர்ந்து பலன் தர வேண்டுமானால் 
நிலம் பண்படுத்தப்பட்டு ,நீர்வசதி,
வடிகால் வசதி,சூரிய ஒளி
வேலி ,பயிரை அழிக்கும் பூச்சிகளிடமிருந்து
 பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் ஒன்றிணையவேண்டும். 

அதைபோல்தான் நம் மனமும் வெறுப்பு, 
பொறாமை அகந்தை ,சோம்பல் 
அவநம்பிக்கை போன்ற தீய குணங்களை நீக்கி 
பொறுமை,நம்பிக்கை, விடாமுயற்சி, 
அன்பு ,பணிவு, துணிவு, போன்ற நல்ல குணங்களை கொண்டு 
முயற்சி செய்தால் மனம் நம் கட்டுபாட்டிற்குள் இருக்கும்.
நாம் நம்முடைய இலக்கை அடைய எளிதாக இருக்கும். 

எனவே மனம் என்னும் நிலத்தை 
செம்மைபடுத்தாமலே
மந்திரங்கள் ஜெபிப்பதும்
ஆன்மீக சாதனைகள் செய்வதும் பலன் தரா
என்பதை சாதகர்கள் உணரவேண்டும்.

ஆனால் இறைநாமத்தை பக்தியுடன் ஜெபித்து வந்தால்
மனதில்உள்ள அழுக்குகள் சிறிது சிறுதாக நீங்கி 
நம் மனம் நம் கட்டுப்பாட்டிற்குள் வரும்.என்பது
ஞானிகள் கண்டு அறிவித்த உண்மை.  

இறைவனை நான் எங்கே தேடுவேன்?

கேள்வி-எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்துள்ள 
இறைவனை நான் எங்கே தேடுவேன்?

பதில்-அவனை வெளியில் தேட வேண்டாம்.
முதலில் அவனை உன்னுள்ளே தேடு.  
உன்னுள்ளே அவனை கண்ட பின் 
அவனை நீ எல்லா இடத்திலும் எல்லா 
உயிரினங்களின் உள்ளும்  காணலாம் 
அப்போதுதான் ஞானிகள் அறிந்து தெளிந்து 
உலகிற்கு அறிவித்தஉபதேசமான 
அனைத்தும் பிரம்ம மயம்  என்ற 
உண்மையை உணரமுடியும் .

அனைத்து நகைகளும் தங்கத்தால் செய்யப்பட்டாலும் 
ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் உள்ளதுபோல் 
இந்த பிரபஞ்சத்தில் பிரம்மத்திலிருந்து உண்டான
ஒவ்வொரு பொருளும் ஒரு பெயர் கொண்டு விளங்கும் 

எப்போது அனைத்து நகைகளின் பெயர்களை மறந்து 
அவைகள் அனைத்தும் தங்கம் என்று மனம் பார்க்க 
கற்றுகொள்ளுகிறதோ அப்போதுதான் 
அனைத்து வடிவங்களும் ஒரே பிரம்மத்தின்
 பல்வேறு தோற்றங்கள் என்று மனம் உணர முடியும்.

பேதங்கள் நீங்கிடின் விருப்பும் இல்லை வெறுப்பும் இல்லை
இரண்டும் இல்லையேல் என்றும் இன்பந்தான் இவ்வுலகில்.  

Friday, September 14, 2012

அஞ்சனை மைந்தனும் ஆத்மராமனும்


அஞ்சனை மைந்தனும் ஆத்மராமனும்
வடிவத்தில் வேறுபடினும்
இருவரும் ஒன்றே

அண்டியவர்களைக் காக்கும் துணிவும்
அடி பணிந்தவர்களிடம் காட்டும்   பரிவும்
ஒருங்கே அமைந்த தெய்வங்கள் இருவரும்

அக்னி தீண்ட இயலா அன்னை சீதையின்
கற்பு கனலின் சக்தியை ராவணன் தன் வாலில்
மூட்டிய தீயை கொண்டு தான் அழிபடாது
இலங்கையை மட்டும் அழித்து உலகுக்கு
உணர்த்தினான் அஞ்சனை மைந்தன்.

தீயில் புகுந்தாலும் தீது நேராது வெளிவருவாள்
என சீதையின் கற்பின்  மாண்பினை  உலகிற்கு
காட்டினான் ஆத்மராமன்.

தன்னை சரணடைந்தவனைக் காக்க தன்
இதய தெய்வத்தையே எதிர்க்க புகுந்தான்
அஞ்சனை மைந்தன்

தன் அன்பு பக்தனுக்காக தன் வில்லிலிருந்து
விட்ட அம்பினை அன்பு மாலையாக
அணிவித்து மகிழ்ந்தவன் ஆத்மராமன்.

அழகின் வடிவம் ,ஆற்றலின் உருவம்,
பணிவின் சிகரம் இருவரும்
பக்தியுடன் பணிந்தோருக்கு பக்கபலமாய்
இருப்பார்கள் எப்போதும்

Thursday, September 13, 2012

சிந்திக்க சில கருத்துக்கள்

சிந்திக்க சில கருத்துக்கள் 


பக்தனின் மனதில் அவநம்பிக்கையை விதைத்து 
அலைக்கழிப்பது வேடிக்கை பார்ப்பது இறைவனின்  லீலை 
ஏது வரினும் அவன் பாதங்களே கதி என்று நம்பி 
அசையா உறுதியுடன் இருப்பது பக்தனின் வேலை 

துன்பங்களும் துயரங்களும் வாழ்வில் இறைவன் 
தோற்றுவிக்கும் தடைகற்கள் அல்ல 
அவைகள் அவன் தன் பக்தனின் நம்பிக்கையின் 
உறுதியை சோதித்து நிறுத்து பார்க்கும் எடைக்கற்கள் 

கல்வி என்பது கோயிலில் குடிகொண்டிருக்கும்
மூர்த்தியை மட்டும் தெய்வமென எண்ணாது
அனைத்துயிர்களிலும் அவனை கண்டு வணங்கி
அவர்களுக்கு அன்புடன்   சேவை செய்வதே. 

நமது உண்மை எதிரிகள்  நமக்கு வெளியே இல்லை
சந்தேகமும் சஞ்சலமும்தாம் நமது உண்மை எதிரிகள்
அவர்கள் நமக்குள் பதுங்கியிருந்து நம்மை இரவும்
பகலும் நம்மை ஒவ்வொரு கணமும் துன்பத்தில் தள்ளுகிறார்கள்  

அலைபாயும் மனதை அடக்க வேண்டுமென்றால் 
வாழ்வில் அலை அலையாய் வரும் துன்பங்களிலிருந்து 
விடுபடவேண்டுமென்றால் அலைகடலின் மேல் துயிலும் 
அரங்கனின் திருவடிகளை அன்புடன் பற்றவேண்டும் 


Wednesday, September 12, 2012

பூமியில் எவருக்கும் இனி அடிமை செய்யோம்

பூமியில் எவருக்கும் 
இனி அடிமை செய்யோம்
பரிபூரணனுக்கே
அடிமை செய்து வாழ்வோம் 
என்று முழங்கினான் பாரதி 
{பாரதி நினைவு தினம்-11/9/2012)

பரிபூரணனுக்கே  அடிமை  செய்து 
பல்லாயிரம் ஆண்டுகள் ஆயினும்
மங்கா புகழுடன் தெய்வமாக 
வணங்கப்பட்டு வரும்  வானர குல திலகம் 
அஞ்சனை மைந்தன், சொல்லின் செல்வன்,
பக்த சிரோமணி ,பஜ்ரங் பலி, 
வெற்றிலை மாலை அணிந்த வெற்றி நாயகன்
ராம நாமம் ஒலிக்குமிடமில்லாம் 
தன்னை மறந்து நர்த்தனமிடும் நாயகன்
ஆஞ்சநேயனின் திருப்பாதங்களை
வணங்குவோம் 
.
அரக்கர்களை அழித்தவன், தன்னை 
அண்டியவர்களை காப்பவன் 
அண்ணல் ராமபிரானின் தூதுவன்
இதயத்தில் சீதாராமனின் காட்சியை என்றும்
நிலைக்க செய்தவன் ,அதை உலகுக்கும் 
திறந்து காட்டியவன். 

பாடுவோம் அவன் புகழ்
அடைந்து மகிழ்வோம் அவனருள்.
ஜெய் மாருதி.!
ஜெய் ஸ்ரீராம் 

Sunday, September 9, 2012

வள்ளலாரின் வழியும் மனிதர்களும்

வள்ளலாரின் வழியும் மனிதர்களும் 

விழி வழி சென்று இறைவனை தேடுங்கள் என்பது 
வல்லாளாரின் வழி

ஆனால் இக்காலத்தில் மக்களை சிந்திக்க விடாமல் 
குழப்பும் ஊடகங்களும்,உண்மையை அறிய விடாமல்
மக்களை தடுத்து அவர்கள் பிடியில் வைத்திருக்கும் 
போலி சாமியார்களும் உண்மையை அறியாது
அனைத்தும் உணர்ந்தவர்கள் போல் பிதற்றிக்கொண்டு 
தமக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு 
உலா வரும் போலி ஆன்மீகவாதிகளும் 
போதாகுறைக்கு நாத்திகவாதிகளும், அரசியல்வாதிகளும் வேறு 
நிறைந்த உலகில் வள்ளலாரின் பாதை எளிதாயினும்
அது கடினமானதாகவே இவ்வுலக மாயையில்
மூழ்கியுள்ள மக்களுக்கு தோன்றும்.
 
அகமும் புறமும் கலந்ததுதான் இவ்வுலக வாழ்வு
விழித்திருக்கும் நேரமெல்லாம் புறத்தே அலையும் மனது 
உறங்கும்போது கனவிலும் புற உலகின் பதிவுகளைத்தான் 
அசைபோட்டுகொண்டிருக்கிறது. 

ஆழ்ந்த உறக்கத்தில் அடையும் அமைதி 
விழித்தவுடன் கண நேரத்தில் மறைந்துவிடுகிறது 
மீண்டும் நாம் நம்மை சுற்றியுள்ள உலகத்தோடு 
நம்மை இணைத்துக்கொண்டு அனைத்தையும் 
மறந்து அதனுடன் ஒன்றி போய் விடுகிறோம் 
 
ஒரு செவிலித்தாய் தன் எஜமானரின் குழந்தையை 
தன் குழந்தை போல் பாராட்டி சீராட்டி வளர்த்தாலும் 
அது தன் குழந்தையல்ல ,அதன் மீது தனக்கு எந்த 
உரிமையும் கிடையாது என்பதை எப்போதும் மனதில் 
கொண்டுதான்செயல்படுவாள்.

ஆனால் மனிதர்கள் அவ்வாறு நினைப்பதில்லை 
இறைவன் கொடுத்த அனைத்தையும் தனதென நினைத்துகொண்டு 
உரிமை கொண்டாடி கிடைத்தால் மகிழ்ச்சியும் இழந்தால் துக்கமும்,பிரிந்தால் துயரமும்,பறித்தால் கோபமும்,வெறுப்பும் கொண்டு வாழ்நாள் முழுவதும் துன்பத்தில் மூழ்கி கிடக்கிறார்கள்.சுயநலத்தின் உச்ச கட்டத்தில் மற்றவர்களின் சொத்துக்களையும் அபகரிக்கவும் செய்கிறார்கள் அகந்தையினால் பிறன் மீது ஆதிக்கம் செலுத்தி பிறரை துன்புறுத்தி மகிழ்கிறார்கள். 

இந்த மாயையிலிருந்து மீள நம் முன்னோர் 
சில வழி முறைகளை வகுத்து தந்துள்ளார்கள் 
 மானிடர்கள் புற உலகில் கோயில்களுக்கு
சென்று இறைவனை வணங்குவதும் 
வீட்டில் பூஜைகள் முதலியவற்றை செய்வதும் 
அகத்தில் இருக்கும் இறைவனை உணர 
வழி வகுக்கத்தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்
.
எனவே அவைகள் பயனற்றவை என்று சிலர் கூறுவதுபோல் 
அந்த வழிபாட்டு முறைகளை ஒதுக்குவது சரியல்ல

ஒவ்வொரு உயிரின் மனமும் பலவிதமான 
அனுபவ நிலைகளை கொண்டது.
அவற்றின் முதிர்ச்சிக்கேற்ப ஞானத்தை 
அடையும் வழிகள் மாறுபடும் 
எனவே வள்ளலார் வழிதான் சிறந்தது மற்ற 
வழிகள் பயனற்றவை அல்லது பலன் தராதவை 
என்று ஒரு சிலர் வாதிடுவது முறையல்ல. 
வள்ளலாரும் உருவ வழிபாடுகள் செய்துதான் 
ஜோதி வழிபாட்டிற்கு சென்றுள்ளார். 

அவரவர் ஒவ்வொரு நிலையையும் அனுபவித்து
கடந்த பின்தான் கடமாகிய இவ்வுடலில்
உறைந்துள்ள இறைவனை அறிய இயலும்
.
பள்ளியில் கோடிக்கணக்கான மாணவர்கள் பயில்கிறார்கள். 
அனைவரும் அறிவாளிகள் ஆகிவிடுவதில்லை 
ஆன்மீக கல்வி பெற்றவர்கள் அனைவரும் 
ஞாநிகளாகிவிடுவதில்லை

படித்தவர்கள் பல விஷயங்களில் முட்டாள்களாகவும்
முட்டாள்கள் பலவிஷயங்களில் படித்தவர்களை விட
திறமை மிக்கவர்களாகவும்  விளங்குகிறார்கள்.  

ஞானத்தை தேடுபவன் அதற்க்கு முன் அவன் 
தன்னை தயார்படுத்தி கொள்ளவேண்டும்
சிலவற்றை கொள்ள வேண்டும் பலவற்றை தள்ள வேண்டும் 

உள்ளத்தில் உண்மை வேண்டும், நம்பிக்கை வேண்டும்,
சிந்தனையில் தெளிவு வேண்டும் .
தெளிந்தபின் மனதில் உறுதி வேண்டும். 
அனைவரிடமும் அன்பு வேண்டும். 

இவை போன்ற அடிப்படை குணங்கள் இல்லாது 
வெறும் புத்தக அறிவை மட்டும் கொண்டும்,
அவர் இப்படி சொன்னார்,இவர் இப்படி சொல்கின்றார் 
என்று ஒவ்வொருவர் சொல்லுவதையும் கடை பிடிக்க 
ஒருவன் தொடங்குவானானால் அவ்வாறு   ஆன்மீகத்தில் 
பிரவேசிப்பவன் இறுதி வரை 
ஒரு வழிப்போக்கனாகத்தான்  இருப்பான்.
வழியை காணமாட்டான்.  
 

.

Saturday, September 8, 2012

கண்ணன் வரும் நேரமிது
கண்ணன் வரும் நேரமிது
உங்கள்  இதய கதவுகளை திறந்து வையுங்கள் 

அதற்க்கு முன் உங்களை அறியாமல் 
உங்கள் இதயத்தில் புகுந்துகொண்டு 
உங்களுக்கு பலவிதங்களில்
தொல்லை கொடுத்து கொண்டிருக்கும் அவநம்பிக்கைகள்,
பேராசைகள், பொறாமை, அகந்தை ,சோம்பேறித்தனம், 
வெறுப்பு,அர்த்தமற்ற கோட்பாடுகள்,
போன்ற கயவர்களை விரட்டுங்கள். 

அதில், அன்பு, பக்தி,நம்பிக்கை ,உண்மை,
நேர்மை ,பணிவு போன்ற நல்ல சிந்தனைகளை இட்டு 
தூய மனதோடு கண்ணனை எதிர்கொள்ளுங்கள்

அவன் அழகு வடிவம் கொண்டவன்.
அவன் அன்பிற்கும் தூய பக்திக்கும் அடிபணிபவன்
பார்த்தால்,நினைத்தால் ஆனந்தம் அளிப்பவன்
அவன் துணை இருந்தால் போதும்  
நம் அறியாமை நம்மை விட்டு ஓடிவிடும்
குழப்பங்கள் தீர்ந்துவிடும் 
.
நாம் பயமின்றி உலகில் வாழ வேண்டுமானால் 
அபயம் தரும் அவன் திருவடிகளை பற்றிக்கொள்ள வேண்டும்
 
அவன் ஏழை பணக்காரன் என்று பார்ப்பதில்லை
 பக்தர்களின் தூய பக்திக்குத்தான் அவன் முதலிடம் தருகிறான். 
பக்தர்கள் அவனை தேடி செல்ல வேண்டியதில்லை
பள்ளத்தை தேடி வரும் நீர்போல் தூய அன்புள்ளத்தை
தேடி அவன் வருகிறான்.
 
பிறந்ததுமுதல் வயிற்று பிழைப்பையே 
கண்ணாக கொண்டு கண்ணனை  
மறந்து பொருள் தேடுவதில் 
காலம் கழித்தது போதும்

மனிதர்களின் உயிர் எப்படி போகும், 
எங்கு போகும், எதன் மூலம் போகும் என்பதெல்லாம்
யாரும்  அறிய இயலா ரகசியம். 

எனவே உடலில் உயிர் இருக்கும்போதே,
மனம் முதலிய கருவிகள் நல்ல நிலையில் 
இருக்கும்போதே கண்ணனை நினையுங்கள் 
அவன்  அருளை பெற விழையுங்கள்.

இறந்த பிறகு ஒரு  ஆன்மா சாந்தி பெற 
மற்றவர்கள் பிரார்த்தித்தால் ஒன்றும் நடவாது. 
அதெல்லாம் ஏமாற்று வேலை.

ஒரு ஆன்மா எந்த குணங்களோடு இறக்கிறதோ 
அந்த  குணங்களை கொண்டுதான்  அதன் அடுத்த பிறவிஇருக்கும் 
நல்ல வாழ்க்கை வாழ்ந்தால் நல்ல பிறவியும் தீய வாழ்க்கை வாழ்ந்தால் 
இழி பிறவியும் தான். கிடைக்கும்  .அதனால்தான் உடலில் உயிர் நீங்குவதற்குள் தவறு செய்பவர்கள் தங்களை திருத்தி கொண்டு நல்லவர்களாக வாழ முயற்சிக்கவேண்டும் 

இறப்பு மட்டும் வாழ்நாள் முழுவதும் தீய செயல்களை செய்து தீயவனாக வாழ்ந்த ஒருவரை புனிதப்படுத்திவிடாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும் 

ஒருவன் உயிரோடு இருக்கும்போதே இறைவன் தன்னுள் உறைவதை உணர்ந்துகொண்டு நல்ல செயல்கள் செய்து நல்லவனாக வாழ்ந்து 
அமைதியையும் குறைவிலா ஆனந்தத்தையும் அனுபவிக்க முயல வேண்டும். 
 

கீதை சிந்தனைகள்


கீதை  சிந்தனைகள் 
நடந்தவையாவும்  நன்மைக்கே 
நடப்பவையாவும்  நன்மைக்கே 
நடக்கவிருப்பதும் நன்மைக்கே 

எதை  இழந்தாய்  ஏன்  அழுது  புலம்புகிறாய் ?
என்ன  கையில்  கொண்டு  வந்தாய் 
இவ்வுலகிற்கு  வரும்போது ?
இப்போது  என்ன  இழந்துவிட்டாய் 
இடிந்துபோய் உட்காருவதற்கு ?

நீ  எதை  உண்டாக்கினாய் 
அதன்  அழிவைக்  கண்டு  வருந்துவதற்கு ?
நீ உருவாக்க  எடுத்துக்கொண்டவை 
இங்கிருந்தே  எடுத்து  கொள்ளபட்டவைகளே 
நீ  பிறருக்கு  அளித்த  பொருட்களும் 
இங்கிருந்து  அளிக்கப்பட்ட  பொருட்களே 
இன்று  உனக்கு  சொந்தமானவை  எதுவாயினும் 
அது  நேற்று  ஒருவரின்  உடைமையாக  இருந்தது  
நாளை  வேறொருவருக்கு  சொந்தமாகிவிடும் 

உண்மை நிலையை  புரிந்துகொள் 
உள்ளத்தில்  அமைதியை  உணர்ந்துகொள் 

மாறிக்கொண்டே  இருப்பது  உலகம் 
அதுபோல்தான்  மாறிக்கொண்டே  இருப்பார்கள் 
தடுமாறும்   புத்தி  படைத்த மனிதர்களும்  

பலனை  எதிர்பாராது  கடமையை  செய்தால் 
ஏமாற்றங்கள்  என்றும்  உன்னை  அணுகாது 

யாகங்களினால்  உலகம்  நன்மை  பெறுகிறது 
ஆனால் தியாகங்களினால்தான் இவ்வுலகம்  
நிலை பெற்று வாழ்கிறது 

பொருட்களின்  மீது  பற்று  வைத்தால் 
என்றும்   துன்பம் 
பற்றுக்களை  விட்டால்  விளையும்  இன்பம் 

பிறப்பும்  இறப்பும்  அனைத்து  உயிர்களுக்கும்  இறைவன்  வகுத்த   விதி 
இதை  உணராது  அழுது  புலம்புவது  என்ன நீதி? 

சுகமும்  துக்கமும்  வாழ்வின்   அங்கம் 
ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல 

இவ்வுலகில்  தோன்றுமனைத்தும்  
மாறிக்கொண்டே  இருப்பன 
நிலையற்ற  நம்  உடல்களைபோல 
நிலையற்ற  உடலைகொண்டுதான்  நிலையான 
இறைவனை  அறிந்து  கொள்ளவேண்டும் 
மாறுகின்ற  மனதை     கொண்டுதான் 
என்றும்  மாறாத  இறைதத்துவத்தை 
புரிந்து  கொள்ள  வேண்டும் .

பிறந்ததும்  குழந்தை  அழுகிறது 
சுற்றம்  சிரித்து  மகிழ்கிறது 
அதே  குழந்தை  இறந்தால்  
அது  அமைதியாய்  இருக்கிறது 
சுற்றங்கள்  அழுகின்றன .
இதுதான்  மாயை  

மாயை  விலக 
மாயக்கண்ணனை  சரணடைவோம்                                                           
மாறாத  இன்ப  வாழ்வு  பெறுவோம் .
உள்ளம் அமைதியாய் இருந்தால்
நம்மை சுற்றியுள்ள உலகமும் நமக்கு 
அமைதியாய் தோற்றமளிக்கும்


Friday, September 7, 2012

கண்ணன் என்னும் கருந்தெய்வம்


இன்று கண்ணன் என்னும் கருந்தெய்வம் 
அவதரித்த நாள் 

கண் படைத்த பயன் அந்த கண்ணனை 
மலர்களால் அலங்கரித்து வெண்ணை, பழங்கள், இனிப்புகளை 
படைத்து வணங்கி அனைவருக்கும் அளித்து மகிழுங்கள் 

கண்களால் அவன் அழகை பருகி பார்த்தனுக்கு 
சாரதியாய் விளங்கிய அவனை உங்கள் உள்ளத்தில் 
வைத்து பூசியுங்கள்.
                                                    
                                                                                                                                                                                                                                  
பாரத போரில் அர்ஜுனனுக்கு வெற்றியை தேடித்தந்த
அந்த கண்ணன் உங்களுக்கும் வாழ்வில் 
வெற்றியை தேடி தருவது சத்தியம் 

விண்ணுலகில் தேவர்கள் மண்ணுலகில் மனிதர்கள்
பாதாள  உலகில் அசுரர்கள் இருக்கையில்
இரண்டிற்கும் இடையில் இருக்கும் இடைகுலமான 
மனித குலத்தில் வந்து நாம் செய்த தவப்பயனால் அவதரித்து 
சுயநல பேய்களை அழித்து, இறைவனின் மகிமையை 
மானிடர்கள் மட்டுமல்ல தேவர்கள்,அரக்கர்கள் அனைவருக்கும் உணர்த்தி 
பக்தர்களை காத்து இறைவனை அடையும் வழியை உபதேசித்து 
அன்பு தெய்வம் கண்ணனின் பிறந்த நாள் . 

தான் அரசனான பின்பும் தன் மாணவ பருவ நண்பனான குசேலனை 
அன்போடு தனக்கு சரிநிகர் சமானமாக அமரவைத்து வரவேற்று அவனுக்கு 
உதவி செய்த பண்பு இக்கால மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். 

தன்னை அண்டியவர்களை காத்தவன், 
மண்டியிட்டவர்க்ளை மன்னித்தவன் 
அவன் பெருமை அறியாது சண்டையிட்டவர்களை அழித்தவன்,
பக்தியோடு சரணடைந்தவர்களை 
ஆதரித்து காத்தவன் .கண்ணபிரான். 

இக்கால ஆட்சியாளர்கள், தீவிரவாதிகள்,
 மத வெறிய்ர்களைபோல் தங்களிடம் உள்ள ஆயுதங்களையும், 
சக்திகளையும்  கொண்டு அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் அரக்க 
மனமுடைய மனிதர்களை போல் அல்லாது 
தன்னுடைய தெய்வீக சக்திகளை அப்பாவி 
மக்களை கொடுமைப்படுத்திய மன்னர்களையும், 
மனிதர்களையும் அழிக்க பயன்படுத்தி நாட்டு மக்கள் 
மகிழ்ச்சியாக வாழ வழி செய்த அன்பு தெய்வம் கண்ணபிரான்.

ஆயிரம் உறவுகள் இருந்தும் தன்னுடைய மானத்தை காத்துக்கொள்ள இயலாத திரௌபதியின் மானத்தை காக்க ஆடை தந்து காத்தவன் துவாரகாநாதன் 

அவன் லீலைகளை கூறும் நூல்களை 
பக்தியுடன் பாராயணம் செய்வீர்
தெளிவான,மனதுடன் அவனை பூசித்து 
அன்போடு அனைவருடனும் மகிழ்ச்சியாக வாழ்வீர். ,
  
 

Thursday, September 6, 2012

செல்வத்தின் பயன் ஈதல்


பிச்சை 

பெரும்பாலும் எதற்கும் வழியில்லாமல் தன்னை தாழ்த்திக்கொண்டு ,
கூனி குறுகி ,பிறர் வீட்டின் முன்போ அல்லது ஒரு மனிதன் முன்போ நின்றுகொண்டு பிச்சை போடு தாயே /மகராஜாவே என்று கேட்டு நிற்ப்பது பிச்சை எனப்படுகிறது. ஆனால் வீட்டில் உள்ளவர்கள் பிச்சை போட்டாலும் போடலாம் ,அல்லது மனம் நோகும் வகையில் திட்டி துரத்தலாம் அல்லது நாயை விட்டு விரட்டவும் செய்யாலாம்/அல்லது காவல்காரனை விட்டு அடித்து துரத்தவும் செய்யலாம் 

பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனே தான் வாமன அவதாரம் எடுத்து மகா பலியிடம் மூன்றடி நிலம் கேட்கும்போது தன் சக்தியெல்லாம் மறைத்துக்கொண்டு குறுகிய குள்ள உருவம் எடுத்துக்கொண்டுதான் பிச்சை கேட்க வந்தார்.

அதிகாரமாக பிச்சை எடுப்பவர்களும் உண்டு பிச்சை எடுக்கும் சாக்கில் கொள்ளையடிக்க நோட்டம் விடும் திருடர்களும் சமூக விரோதிகளும் இன்று நாட்டில் பெருகிவிட்டார்கள். .
 
ஒருவன் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளபடுவதர்க்கு முற்பிறவியில் அவன் செய்த பல தீய செயல்களின் விளைவுதான். நாத்திகர்கள் இதை ஒத்துகொள்ளமாட்டர்கள் அவர்கள் சமூகத்தின் மீதும், அரசின் மீதும் குற்றம் சுமத்துவார்கள். தீதும் நன்றும் பிறர் வாரா என்ற பழமொழி தமிழறிந்தவர்களுக்கு தெரியும் .
அதே நேரத்தில் வாழ்க்கையில் ஆராயாமல் பேராசைப்பட்டு அல்லது மூடத்தனமாக ஏமாற்றுக்காரர்களின் பேச்சை நம்பி அனைத்தையும் இழந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுபவர்கள்தான் அதிகம்.

இயற்கை சீற்றங்களினாலும், போர்களினாலும் அனைத்தையும் இழந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுபவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு

உழைத்து பிழைக்க முடியாத அளவிற்கு  அங்க குறைபாடு உள்ளவர்களும், கடுமையான நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களும், முதுமையடைந்தவர்களும் உடல் ஊனமுற்றவர்களும் குடும்பத்தால் பல்வேறு சூழ்நிலைகளில் கைவிடப்பட்டவர்களும் பிச்சை எடுத்துதான் தன்னுயிரை காப்பற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. 

இன்று பிச்சை எடுப்பது லாபகரமான தொழிலாக மாறிவிட்டது பிச்சைக்காரகள் கூட்டணி அமைத்துக்கொண்டு ஒவ்வொரு பகுதியையும் பாகம் பிரித்துக்கொண்டு பிச்சை எடுக்கின்றனர். தொழில்முறை பிச்சைகாரர்களை பற்றி திரைப்படங்களின் நகைச்சுவை  காட்சிகளாக எடுக்கப்பட்டு அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டப்படுவிட்டார்கள். 

பல காரணங்களினால் நாளுக்கு நாள் பிச்சைக்காரர்களின் கூட்டம் பெருகி கொண்டே போகிறது. அவர்கள் இல்லாத இடமே இல்லை. எங்கு திரும்பினாலும் யாராவது நம்மை சுற்றிநின்று கொண்டு பிச்சை கேட்டு கொண்டு நிற்பது நம் நாட்டில் அதிகரித்துவிட்டது. 

அரசுகளும் பிச்சைக்காரகள் தங்கும் விடுதிகள் அமைத்தும் அங்கிருக்கும் ஊழல் பெருச்சாளிகளின் மெத்தனத்தால் அவைகள் சரிவர இயங்குவதில்லை.

மேலும் இன்று மக்களிடையே புனித தலங்களில் அன்ன தானம் செய்வது,கோயில்களுக்கு சென்றால் அங்கு உட்கார்ந்திருக்கும் ஏழைகளுக்கு பிச்சை போடுவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளமையால். ஏராளமாக பிச்சைக்காரர்கள் அந்த இடங்களில் கூடுகிறார்கள்.
 
இன்று அவர்கள் சமுதாயத்தில் ஒரு அங்கமாக மாறிவிட்டார்கள். அவர்களை மாற்றுவது, அல்லது அவர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவது என்பது இயலாத செயல் ஆகிவிட்டது.
 
ஒருவன் உங்களிடம் பிச்சை கேட்கிறான் என்றால் மானம் மரியாதை,கௌரவம் ஆகியவற்றை விட்டுவிட்டுதான் உங்களிடம் பிச்சை கேட்கிறான். உங்களிடம் இருந்தால் உதவுங்கள். இல்லையேல் அவனை கோபிக்காமல் அனுப்பிவிடுங்கள்.என்று சீரடி  சாயிபாபா கூறுகிறார் 
இறைவன் எல்லா உயிரிலும் இருப்பதால் ஒவ்வொருவனும் பிச்சை இடும்போது இறைவன்  அவன் வடிவில் வந்துள்ளதாக கருதி அன்போடு பிசையிடவேண்டும். அவன் நிலைக்கு தன்னை வைக்காமல் மற்றவருக்கு உதவும் நிலையில் தன்னை இறைவன் வைத்துள்ளானே என்று இறைவனை நன்றியுடன் நினைக்க வேண்டும். அப்போதுதான் அகந்தை விலகி பணிவு தோன்றும். பணிவு இருந்தால்தான் ஆன்மீக முன்னேற்றம் சித்திக்கும்
.  
செல்வத்தின் பயன் ஈதல் என்பது தமிழர் பண்பாடு .
போன பிறவியில் செல்வம் இருந்தும் வறியவர்களுக்கு கொடுக்காதவன்தான் அடுத்த பிறவியில் வறுமையின் கொடுமையை அனுபவித்து திருந்தும் பொருட்டு ஏழையாக பிறவி எடுக்கிறான் என்று சாத்திரங்கள் சொல்லுகின்றன

Wednesday, September 5, 2012

ஏன் இந்த விருப்பும் வெறுப்பும் ?

ஏன் இந்த விருப்பும் வெறுப்பும் ?

எல்லா மனிதர்களும் படைப்பில் ஒன்றுதான் 
தாயின் வயிற்றிலிருந்துதான் வெளிவருகிறார்கள் 
நாயின் வயிற்றிலிருந்து வெளிவருவதில்லை 

ஒரு தாய் தன் மகனை மட்டும் நேசிக்கிறாள் 
அதன் பெயர் பாசம் 

ஒரு அநாதை இல்லம் நடத்தும் ஒரு பெண்மணி 
அங்குள்ள அனைத்து குழந்தைகளையும் நேசிக்கிறாள் 
அது நேசம் அல்லது அன்பு 

பள்ளியில் பல குழந்தைகள் படிக்கின்றனர் 
சில குழந்தைகள் விளையாட்டில் வென்று
 பரிசுகள் பெற்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகின்றன 
விளையாட்டில் தன் குழந்தை தோற்றுபோய் பரிசுகள் 
ஒன்றும் கொண்டு வராமல் போனால் பரிசு பெற்ற 
குழந்தைகளை பாராட்ட முன்வருவதில்லை 
மாறாக வெறுப்பு கொள்கிறாள்.அதன் பெயர் பொறாமை 

ஒருவன் ஒரு பொருளை அடைய முயற்சி செய்கிறான். 
கடைசி நேரத்தில் ஒருவன் தோன்றி 
அதை தட்டி சென்று விடுகிறான் .
அவன் மீது இவனுக்கு வெறுப்பு ஏற்ப்படுகிறது .
அதன் பெயர்  கோபம்,குரோதம் 

ஒரு போட்டி .கடுமையாக இருக்கிறது.
ஒரு கால கட்டத்தில் அதில் பங்கு பெற்றவனுக்கு 
தன்னால் வெல்ல முடியுமா என்ற சந்தேஹம் எழுகிறது 
அதன் அடிப்படை உணர்ச்சி பயம் 


உலகம் முழுதும் மனிதர்களை 
எந்த இனமானாலும், 
ஜாதியானாலும், ஆட்டி படைப்பது 

ஆறு வகை உணர்ச்சிகள்தான் .
அவை காமம்(ஆசை)குரோதம்(கோபம்)
மோஹம் (ஈர்ப்பு) லோபம் (கஞ்சத்தனம்),
மதம்(திமிர்/அகந்தை)
மாச்சர்யம்(பொறாமை/அழுக்காறு) ஆகியன 

இவைகளில் எந்த உணர்ச்சி இருந்தாலும் மனிதர்கள் பாதிக்கப்படுவார்கள். அது எல்லை மீறும் போது 
அவர்கள் சமூகத்தில் ஆபத்தானவர்களாக 
மாறிவிடுகிறார்கள் அவர்கள் மற்றவர்களையும்
அழித்து தாங்களும் தங்கள் முடிவை 
தானே தேடிக்கொள்கிறார்கள்

அதனால் நாம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி 
மனதில் நம்பிக்கையையும், உழைப்பையும் அதிகப்படுத்தி 
அனைவருடனும் அன்போடு பழக முயற்சித்தால் 
இவ்வுலகம் நன்றாக இருக்கும்.

விருப்பையும் வெறுப்பையும் நாம்
கட்டுப்படுத்த தவறி விட்டால்
 நம் வாழ்க்கை சோகத்தில்தான் முடியும்.

இதை பொறுப்பில் உள்ளவர்கள் முக்கியமாக 
கவனத்தில் கொள்ள வேண்டும் ஏனென்றால் 
அவர்கள் பின்னால் எதையும் ஆராயாமல் 
அவர்கள் தலைவர் செய்வதை,கூறுவதை 
அப்படியே செயல்படுத்தும் ஒரு கூட்டம் 
இருக்கிறது என்பதை அவர்கள் 
நினைவில் கொள்ள வேண்டும் 

அவ்வாறு செய்கிறார்களா என்பது கேள்விக்குரியது  

Tuesday, September 4, 2012

அன்பே வடிவான இறைவனை அனுதினமும் வழிபட்டுவந்தால் அனைத்து நலன்களும் விளையும்

ஆன்மீகத்தில் உள்ளவன்
கடவுளை நம்புகிறான்

தன்னை நாத்திகன் என்று
அழைத்து கொள்பவன்
கடவுளை நம்ப மறுக்கிறான்.

ஆத்திகன் என்றாலும் நாத்திகன் என்றாலும்
உடலில் உயிர் இருந்தால்தான்,
அறிவில் தெளிவு இருந்தால்தான்
செயல்பட முடியும்  என்பதை மறுக்க முடியாது

உடலில் உயிர் இருந்தாலும்
கோமா நிலையில் இருப்பவனுக்கு
எதுவும் தெரியாது

இந்த உடல் இயங்க ஒரு சக்தி தேவை .
சக்தி இருந்தாலும் அதை நெறிபடுத்த
பிறிதொரு சக்தி தேவை .
ஒவ்வொரு வகை செயலுக்கும்
வெவ்வேறு அளவில் சக்தி தேவைப்படுகிறது.
அந்த சக்தி நமக்குள் இருக்கிறது
.நாம் அனைவரும் அந்த சக்தியை உணருவதில்லை
.அந்த சக்திதான் கடவுள் .

அதை உணர்ந்துகொண்டு
அதன் போக்கிற்கேற்ப நாம் வாழ
கற்றுகொண்டோமானால் நமக்கு துன்பமில்லை .

அதை விடுத்து தன்னால்தான்
அனைத்தும் நடைபெறுகிறது என்ற அகந்தை
நம்முள் தலை தூக்கினால் எல்லாம் தலைகீழாக மாறிவிடும்

புறத்தே கோயில்களும் அதனுள்ளே வடிவங்களும்
நம் உடலாகிய  கோயிலில் அகத்தே உறையும்
கடவுளின் சக்தியை நாம் உணர வழி வகுக்கும்
சாதனங்களாகும்.

சாதனங்களின் துணை கொண்டு
சாதனை செய்தால் வேதனைகள் தீரும்
போதனைகளை கடைபிடித்தால் வாதனைகள் தீரும்

பாலில் நெய் இருந்தும் பாலை கடையாமல்
வெண்ணை எடுத்து,அதிலிருந்து நெய் எடுக்க முடியாது
பகலில் விண்மீன்கள் இருந்தும்
பகலில் விண்மீன்களை காண இயலாது
உட்கொண்ட உணவு எவ்வாறு சத்துக்களாக மாறி உடலில் ஒவ்வொரு அணுக்களுக்கும் செல்கிறது என்பதை அறிய முடியாது
அதை போலதான் எத்தனையோ விஷயங்கள் நம் உடலிலும்
நம்மை சுற்றியுள்ள உலகிலும் ஏராளமாக இருக்கின்றன

எல்லாவற்றையும் படைத்து ,காத்து,
அழித்து,மறைத்து தன்னுள் ஒடுக்கி கொள்கின்ற
கடவுளின் மகிமையை யாரும் எளிதில் அறிய முடியாது

உயிருள்ள உடலின் இயக்கங்களை
அறிய உயிரற்ற கருவிகளை பயன்படுத்த வேண்டிய
துர்பாக்கியத்தில் இன்றைய மருத்துவர்கள் உள்ளனர்


எனவே கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை
என்ற வாதங்களை ஒதுக்கிவிட்டு நம்பிக்கையுடன்
அன்பே வடிவான இறைவனை அனுதினமும்
வழிபட்டுவந்தால் அனைத்து நலன்களும் விளையும் 

Saturday, September 1, 2012

தெய்வம் நின்று கொல்லும்


தெய்வம் நின்று கொல்லும் 
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று 

ஆனால் இன்று குழந்தைகள் படும் பாடு 
மிகவும் கவலைக்குரியது மட்டுமல்லாமல் 
வேதனைக்குரியதும் ஆகும் 

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் 
அவர்களை குடும்பத்தின் வறுமை கருதி 
வேலைக்கு அனுப்புவதும் 
அல்லது அவர்கள் அனாதையாய் போய் அவர்களை 
சுற்றங்கள் கவனிக்காத நிலையில் வேறு
வழியில்லாமல் வேலைக்கு போவதும் 
இன்று உலகளாவிய பிரச்சினை ஆகிவிட்டது. 

ஆனால் அதே நேரத்தில் குறுக்கு வழியில் 
பணக்காகாரர்கள்  ஆக  நினைக்கும் 
குறுகிய நோக்கம் கொண்டகொடியவர்கள் 
பெரியவர்களை வேலைக்கு வைத்தால் 
அதிக கூலி கொடுக்கவேண்டும், மற்றும் பல தொழிலாளர்யூனியன் 
அரசு குறுக்கீடு போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் 
என்பதற்காக மிக குறைந்த ஊதியத்திற்கு 
சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி
அவர்களை கொத்தடிமைகளை போல் நடத்துவதுடன் 
அவர்களின் எதிர்காலத்தையும்  சிதைக்கின்றனர். 

அவர்களின் சுயமரியாதை, கல்வி, சுதந்திரம் மறுக்கபடுகிறது. 
படிப்பறிவில்லாத அவர்களை சமூக விரோதிகள் பயன்படுத்தி கொண்டு 
சமூகத்தில் கொலை, கடத்தல், கொலை போன்ற செயல்களை அரங்கேற்றிவருகிரார்கள். 

ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான் குழந்தைகள் காணாமல் போவதும் 
அவர்களின் நிலை பற்றி மற்றவர்கள் கவலைபடாமல் இருப்பதும் 
வாடிக்கையான செயலாகிவிட்டது

சமீப காலமாக பள்ளி செல்லும் குழந்தைகளை 
கடத்தி பணம் பறிக்கும் கும்பல்களும் பெருகிவிட்டன. 

கடத்தப்பட்ட சிறுவர்கள்,குழந்தைகள், பாலியல் தொழிலுக்கும்,
திருட்டு குற்றங்களுக்கும், பிச்சை எடுப்பதற்கும் பயன்படுத்தி 
ஆதாயம் தேடும் சமூக விரோத கும்பல்கள் இன்று நாட்டில் பெருகிவிட்டன
இன்று அதை போன்றவர்கள் ஒருங்கிணைந்து தேசிய அளவிலும் உலக அளவிலும் கொடிய செயல்களை அரங்கேற்றி கொண்டிருகின்றனர் 

 சிறுவனாகிய பிரகலாதனுக்காக வைகுண்டத்தில் பள்ளி கொண்ட பெருமான் நரசிங்கபெருமனாய் அவதரித்து ஹிரண்ய கசிபுவை வயிற்றை கிழித்து கொன்று தன் பக்தனை காப்பாற்றியதைபோல நிச்சயம் ஒருநாள் அபலை குழந்தைகளின் வாழ்வை சீரழிக்கும் ஒவ்வொரு மனிதனும் 
அது போன்ற கொடுமையான தண்டனையை அடைவான் என்பது உறுதி 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

எல்லா மனித உயிர்களும் ஒரு தாயின் கர்ப்பத்திலிருந்துதான் 
வெளி வருகிறது 

அதேபோல் எல்லா உயிர்களும் இவ்வுலகில் அதன் வாழ்வு முடியும்போது அதன் உயிர் விண்ணிற்கும் உடல் மண்ணிற்கும் தான் செல்கிறது 

ஆனால் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்தில்தான் அனைத்து சீர்கேடுகளும் மனித மனங்களில்  புகுத்தப்பட்டு மனிதர்களில் ஒரு பகுதியினர் ன் குட்டிகளை தானே கொன்று தின்னும் சில விலங்குகளை போல் மாறி மனித குலத்தை  துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்

வறியவனின் பிறப்பு பகலில் காண இயலா விண்மீன் போன்றது

செல்வ குடியில் பிறப்பவனுக்கு பகலிலேயே விண்மீன்கள் ஜொலிக்கின்றன 

வறியவனின் குழந்தை மரக்கிளையில் கட்டிவைத்த தன் தாயின் கிழிந்த புடவையில் இயற்க்கை சூழலில் துயில்கிறது 

செல்வ செழுப்பின் பிறந்த குழந்தையோ குளிர் சாதன அறையில் தங்க தொட்டிலில் துயில்கிறது

இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம் .மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேற்றுமைகள் போல். 

குழந்தைகளை சுற்றி உள்ளவர்கள்தான் ஆர்பாட்டம் செய்கிறார்களே ஒழிய அந்த குழந்தைக்கு எதுவும் தெரியாது அது வளர்ந்து தன்னை சுற்றியுள்ள உலகையும் மனிதர்களையும் புரிந்து கொள்ளும்வரை .

குழந்தைகளுக்கு நாம் உயர்வு தாழ்வை பற்றி போதிக்காத வரை எல்லா குழந்தைகளும் அன்பாகத்தான் பழகும் .

அவர்களில் மனதில் பாகுபாடு,வெறுப்பு ,பொய்மை ,பொறாமை ,போன்ற நஞ்சுகளை மனித சமூகம் விதைக்காமல் இருந்து அன்பை,நேர்மை,ஒழுக்கம் ஆகியவைகளை மட்டும் போதித்தால் போதும். இந்த உலகம் இன்ப பூமியாக மாறிவிடும்

இறைவன் படைக்கும் போது அனைவரையும் ஒன்றாகத்தான் படைக்கிறான் 
அழிக்கும்போது ஒன்றாகத்தான் அழிக்கிறான் .

நாம் அனைவரும் அவனின் படைப்பை ஒன்றாக காணும்போது தான் சுயநலம் விலகும்.பொதுநலம் தலை தூக்கும் .துன்பம் தொலையும்.இன்பம் விளையும்.