Sunday, August 31, 2014

விநாயகரின் வடிவங்கள் (8)

விநாயகரின் வடிவங்கள் (8)

நான் வரைந்த விநாயகர்
வடிவங்களிலே மிகவும்
பிடித்தது இந்த விநாயகர்.
நல்ல அம்சமாக . வந்துள்ளது


Saturday, August 30, 2014

சீ !போடா நாயே !

சீ !போடா நாயே !

சீ !போடா நாயே !
என்ற வார்த்தைகளை சொல்பவனுக்கும்
அதைக் கேட்பவனுக்கும் BP உடனே எகிறும்.

ஏன் அப்படி நாய்மேல் அவ்வளவு வெறுப்பு?

சொல்பவனுக்கும் தெரியாது.கேட்பவனுக்கும் தெரியாது
மொத்தத்தில் அந்த சொல் மற்றவர்களை இழிவுபடுத்த
பயன்படும் சொல்லாக நினைக்கிறார்கள்.

வெறுப்பின், சினத்தின் உச்சகட்டம் அது.

சொல்பவனுக்கு தன்  எதிரியை மட்டம் தட்டி விட்டதாக
ஒரு இறுமாப்பு

எதிரிக்கோ தான் மிகவும் அவமானப்பட்டுவிட்டதாக
நினைத்து சொன்னவனை எப்படியாவது பழி வாங்கவேண்டும் என்று
மனதில் சபதம் செய்துகொள்கிறான்.

உண்மையில் நாய்போல் மனம் அங்கும் இங்குமாக காரணமின்றி அலைவதால் மனதை நாயுடன் ஒப்பிடுகிறார்கள்.

ஒரு எண்ணத்தை பிடித்துக்கொண்டால்  அது நிறைவேறும்வரை அதை விட மறுப்பதால் அதை பேயுடனும் ஒப்பிடுகிறார்கள் .பேயாய் உழலும் சிறுமனமே என்று பாரதியார் பாடுகிறார்.

தியாகராஜ சுவாமிகளும் பல கீர்த்தனைகளில் மனதிற்கு உபதேசம் செய்கிறார்.

மனமே உனக்கிதமாய் ஒரு வார்த்தை சொல்கிறேன் கேட்டுக்கோ என்று ஒரு கீர்த்தனை அழகாக பாடுவார். தண்டபாணி தேசிகர்

மனம் என்பது கடந்த கால எண்ணங்களின் தொகுப்பு .அவ்வளவுதான்.
நாம் எப்போதும் நிகழ்காலத்தில் வாழ விரும்புவதில்லை. கடந்த கால எண்ணங்களிலேயே இருக்கின்றோம். நிகழ் காலத்தில் கூட கடந்த கால  சம்பவங்களை இணைத்து பார்த்துக்கொண்டு நிகழ்காலத்தை கோட்டை விடுகிறோம்.

அதனால்தான் பகவான் ரமணரும், ஓஷோவும் மனதை அழிக்கச் சொன்னார்கள். அதற்கு பல வழிகளை சொல்லிவைத்தார்கள்.

நாயை குளிப்பாட்டி வைத்தாலும் அது நடு  ரோட்டில்தான் போய்  நிற்கும் என்பதுபோல் நம் மனமும் எவளவு உபதேசங்களைக் கேட்டாலும் மீண்டும் மீண்டும் அதன் போக்கிலேதான் போய்க்கொண்டிருக்கிறது

நம்மை இழிவான செயல்களைச் செய்ய தூண்டும் அந்த அடங்காத மனத்தைத்தான் உண்மையில் நாம் "போடா நாயே" என்று விரட்டவேண்டுமே ஒழிய சக மனிதர்களை இழிவுபடுத்த அந்த சொல்லை பயன்படுத்துவதை விட்டுவிட வேண்டும். .நாய்போல் அலையும் நம் மனதை
நாயை தன்  வாகனமாக  வைத்திருக்கும் பைரவரிடமோ

நான்கு வேதங்கள் நாய் வடிவத்தில் இருக்கும்தத்தாத்ரேயரிடமோ ஒப்படைத்துவிட்டால் நலம் பெறலாம்.  

விநாயகரின் வடிவங்கள்(7)

விநாயகரின் வடிவங்கள்(7)


விநாயகருக்கு பிரபை அமைக்காமல்
இதுவரை செய்து வந்தேன் . அது ஒரு குறையாக
பட்டதால் பிரபையுடன கூடிய ஒரு விநாயகரை செய்தேன்.

அந்த வடிவம் கீழே


விநாயகரின் வடிவங்கள்(6)

விநாயகரின் வடிவங்கள்(6)

விநாயகர் வடிவங்களிலே
வலம்புரி விநாயகருக்கு ஒரு
விசேஷ பெருமை உண்டு.

எனவே வலம்புரி விநாயகரை
வடிவமைத்து வணங்கவேண்டும் என்று என்பது
என் நெடுநாளைய விருப்பம்.

வளமான வாழ்வு அமைய
வலம்புரி விநாயகர் செய்து பூஜை செய்தேன்.
வலையுலக நண்பர்களும் இந்த படத்தை
ஆராதித்து வளமான வாழ்வு பெற வேண்டுகிறேன்.

அந்த படம் கீழே.விநாயகரின் வடிவங்கள்(5)

விநாயகரின் வடிவங்கள்(5)

சிறிய வடிவில் செய்த விநாயகரை சற்று
பெரிய அளவில்  செய்ய முயற்சி செய்தேன்.

வலம்புரி விநாயகர் நலம் புரிவார்
இடம்புரி விநாயகர் . இடர் தீர்ப்பார்
என்பார்கள். .

இடம்புரி  விநாயகர் செய்து
பூஜை செய்தேன். கூடவே இரண்டு
யானைகளையும் செய்து வைத்தேன்.
மிக அழகாக இருந்தது

அந்த வடிவம் கீழே.Friday, August 29, 2014

விநாயகரின் வடிவங்கள்(4)

விநாயகரின் வடிவங்கள்(4)

மாக்கல் , காகிதம்,மெழுகு,சாக்பீஸ் , ஆகியவற்றில்
விநாயகரை செய்து, வரைந்து அழகு பார்த்தாகிவிட்டது
இனி அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போது
மாத்திரை பாயிலில் செய்யலாம் என்று தோன்றியது
செய்து முடித்ததும்  ,வெள்ளிபோல் மின்னியது.

சரி இனிமேல் டின் பாயிலில்  செய்யலாம் என்று 1983ஆம்
ஆண்டு  தொடங்கினேன்.செய்து பல நூறு நபர்களுக்கு 
பரிசாக வழங்கினேன். வினாயகரில் தொடங்கி லக்ஷ்மி, ஆஞ்சநேயர், கருமாரி, ஒப்பிலியப்பன்,  ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம், முருகன் , வள்ளி தெய்வயானை ,பத்ராசலம் ராமர், குருவாயூரப்பன் என பட்டியல் நீண்டுகொண்டே போயிற்று.

அவற்றில் சில பார்வைக்கு


இன்னும் பல விநாயகரின் வடிவங்கள் வரும். 

விநாயகரின் வடிவங்கள்(3)


விநாயகரின் வடிவங்கள்(3)

கணபதியின் வடிவத்தை
காகிதத்தில். மெழுகில்
வடித்தாகிவிட்டது அடுத்து
சாக்க்பீசில் முயற்சி செய்தேன்.

ஒரு முழு சாக்பீஸை எடுத்து
அதில் ஒரு அங்குல அளவில்
விநாயகர் வடிவத்தை வடித்தேன்.
37 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரமாக
ஒரு பெட்டியில் வைத்திருந்தேன்.

அந்த வடிவம் கீழே.
Thursday, August 28, 2014

விநாயகரின் வடிவங்கள் (2)

விநாயகரின் வடிவங்கள் (2)

விநாயகரின் மீது உள்ள ஈடுபாட்டினால்
மெழுகில் விநாயகர் உருவத்தை செய்து
அழகு பார்க்க மனம் தூண்டியது.

குண்டூசியை வைத்துக்கொண்டு மெழுகில்
விநாயகரின் வடிவத்தை செதுக்கினேன்.

கண்டாலே இன்பம் தரும்
விநாயகனை வணங்கி  மகிழ்வோம்.ஒரு அங்குலமே உயரம் உள்ள விநாயகர் விநாயகரின் வடிவங்கள் (1)


விநாயகரின் வடிவங்கள் (1)

சிறு வயது முதல் விநாயகரின் மீது
ஒரு ஈடுபாடு உண்டு. முதலில் காகிதத்தில்
பேனாவினால் வரைய தொடங்கிய நான்
எதைப் பார்த்தாலும் அதில் விநாயகரின் வடிவத்தை
வரையலாமே என்று தோன்றியது.

அந்தக் காலத்தில் வீட்டில் மாக்கல்  இருக்கும்.
தாயம் விளையாட தரையில் கட்டம் வரைவதற்கு.

அப்படிப்பட்ட மாக்கல்லில் விநாயகரையும் லக்ஷ்மியையும்
உருவாக்கினேன் . 34 ஆண்டுகளுக்கு முன்பு. அதை இத்தனை ஆண்டுகள்
பத்திரமாக பாதுகாத்து வைத்தேன் . விநாயகர் சதுர்த்தி இன்று வணங்கி மகிழ்வோம்.


ஸ்ரீ கணேச சரணம்

ஸ்ரீ கணேச சரணம்

கணங்களின் தலைவனே
கஷ்டங்களை கண நேரத்தில்
காணாது செய்பவனே

நினைத்த மாத்திரத்தில்
இன்பம் தரும் நிர்மலனே

அன்போடு அளிக்கும்
அருகம்புல்லையும் ஏற்பாய்
அறுசுவையுடன் படைக்கும்
மோதகங்களையும் ஏற்பாய்

அரசமரத்தடியில் ஏகாந்தமாய்
வீற்றிருப்பாய் ,ஆலயத்திலும்
அனைத்து   பரிவார தேவதைகளுடனும்
கோயில் கொண்டு அருள் செய்வாய்.

வேதத்தின் உட்பொருளே
பேதமில்லா பரம்பொருளே
ஞானமில்லா இச்சிறியேனையும்
ஆதரித்து அருள்வாய்

Monday, August 25, 2014

தயா ஸ்ரீனிவாசா தயை புரிவாயே

தயா ஸ்ரீனிவாசா தயை புரிவாயே

தயா ஸ்ரீனிவாசா 
தயை புரிவாயே 

தரணியில் எங்கும்
அரக்கர் கூட்டம் தடையின்றி பெருகி
தறிகெட்டு அலைகிறதே (தயா)
                                               ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


சகிப்பு தன்மையின்றி சகட்டுமேனிக்கு
அப்பாவி மக்களுக்கு கடுந்துன்பம்
விளைவிக்கின்றாரே  (தயா)

ஆணவம் மிகக் கொண்டு
எதிர்த்தவரைஎல்லாம்
அழித்து ஒழிக்கின்றாரே (தயா)

அன்பின்றி அவனியில்
அனைவருக்கும் அல்லல் இழைத்து
அமைதியைக் குலைக்கின்றாரே (தயா)

மனித சமூகம் நன்மை பெற்று
நலமாய் வாழ வழி வகுக்கும்
சாத்திர விதிகளை புறக்கணித்து
படுகுழியில் வீழ்கின்றாரே(தயா)

உன்னை அறியும் உண்மையாம்
வழிதனை உதறித் தள்ளிவிட்டு
பொய்ம்மையாம் பாதையில்
சென்று வழி தவறிப் போகின்றாரே(தயா)

உலகைக் காக்கும் உத்தமனாம்
உன் திருவடிகளை மறந்து எத்தர்கள்
பேசும் பேச்சை நம்பி உன்னை ஏசிப் பேசி
ஏமாந்து  போகின்றாரே (தயா)

அவனியில் அனைவரும் அன்பால் இணைந்து
பண்புடன் வாழ்ந்து இன்பமாய் வாழ இறைவா
கருணை செய்திடுவாயே  (தயா)

Sunday, August 24, 2014

கேள்வி பிறந்ததுஅன்று. பதில் கிடைத்தது இன்று

கேள்வி பிறந்தது அன்று ..
பதில் கிடைத்தது இன்று 

ஆதி  சங்கரர் அடிஎடுத்துக் கொடுத்தார்
நானே பிரம்மம் என்று

பிரம்மம்தான் சத்தியம்
மற்றவை எல்லாம் மாயத்தோற்றம் என்றார்.

ஜீவனும் பிரம்மமும் ஒன்றே
என்றார்.

அதைத் தொடர்ந்து பல ஆசார்யர்கள்
அதை மறுத்து பல கொள்கைகளை
மக்கள் மத்தியில் பரப்பினார்கள்.

இன்றும் அவைகள் தொடர்ந்து கொண்டே
இருக்கின்றன வாழையடி வாழையாக

நானே பிரம்மம் என்பதை அருமையாக
பொறுமையாக தெளிவாக அனைவரும்
அறிந்து கொள்ளும் வகையில்
'நான் யார் " என்ற தத்துவத்தை தானே
உணர்ந்து அதன் வழி நின்று நமக்கெல்லாம்
வாழ்ந்து காட்டிய பெருமை

Photo


பகவான்
ரமணரையே சாரும்.

எதையும் வெறுக்காமல் ,ஒதுக்காமல்
இருக்கும் இடத்திலேயே கடமைகளை
செய்துகொண்டு இறை நிலையில் வாழலாம்
என்று எளிய தமிழில் உபதேசங்களை
தந்தார் பகவான் ரமணர்.

மனதில் எண்ணங்கள் எங்கிருந்து வருகிறது  என்பதை 
விசாரித்தால் போதும் உனக்கு பிரம்மத்தை 
அறிந்திட "விசா "கிடைத்துவிடும் என்ற 
ரகசியத்தை போட்டு உடைத்தார். 

அவர் தாள் பணிவோம்
அவர் காட்டிய வழியில் சென்று
அரிதாய் கிடைத்த பிறவியை
பயனுள்ளதாக்குவோம்.

ஜெய் ஸ்ரீ ரமணாSaturday, August 23, 2014

இரக்கம் வராமல் போனதற்கு என்ன காரணம்?

இரக்கம் வராமல் 
போனதற்கு என்ன காரணம்?

இரக்கம் வராமல்  போனதற்கு என்ன காரணம்?
சுவாமி என்று சிவபெருமானிடம் கேட்கிறார்
ஒரு பாடல் மூலம் கோபாலக்ருஷ்ண பாரதி


தி.ரா.பட்டாபிராமன் 

இந்த பாடலை  பாடகர்களும், பாடகிகளும், பாகவதர்களும்
அவர்களுக்கே உரிய குரலில் அற்புதமாகப் பாடி
நம் மனதை  உருக வைக்கின்றனர்.

அது இருக்கட்டும். நம் மீது இறைவன் இரக்கம்
காட்டாமல் இருக்க  என்ன காரணம் இருக்க முடியும்?

இறைவன் இரக்கமே உருவானவன்.
அவன் எப்படி அவன் படைத்த படைப்புகள் மீது
இரக்கம்  காட்டாமல் இருக்க முடியும். ?

இந்த பிறவியை அளித்ததே
அவன் கருணைதான்.

பிறவி எடுப்பதற்கு  முன்பே நமக்கு உணவுக்கும்,
வாழ்வாதாரத்திற்கும் ஏற்பாடுகள்  செய்தும் விடுகின்றான்.

அவனை நினைக்க மனதையும்
கொடுத்துவிடுகின்றான்.

எல்லாம் அவன் நமக்கு நாம் கேளாமலேயே அளித்தும் நாம்தான்
அதை உணரவில்லை. உணரவும் முற்படுவதில்லை.

தில்லை அம்பல நடராஜனையும் திருப்பதி வாசனையும்
திரிபுரசுசுந்தரியையும் மனம் ஒன்றி நினைப்பதில்லை.

இறைவன் நம் மீது இரக்கம்  காட்டவில்லை என்று நாமாகவே 
தவறாக கற்பித்துக்கொண்ட எண்ணம்தான் காரணமே யன்றி 
இறைவன் மீது எந்த தவறும் கிடையாது. 

ஒரு மரக்கட்டை இருக்கிறது.
அதில் மின்சக்தி பாயுமோ?
பாயாது என்று அனைவருக்கும் தெரியும்.

ஆனால்  அதே மரக்கட்டையில்
ஈரம் இருந்தால் மின்சக்தி பாய்கிறது.

கல்லில் மின்சக்தி பாயுமோ ? பாயாது
அதில் இறையுருவை வடிவமைத்தும்
பால்.தயிர், பழங்கள், இளநீர் போன்ற
 நீர் சம்பந்தப்பட்ட பொருட்களால் திருமஞ்சனம் செய்யும்போது
இறை சக்தி அதனுடன் கலந்து நமக்கு அருள் செய்கிறது.

நம் மனம் தான் என்ற அகந்தையினால் கல்போன்று இறுகிப்போய்,உலர்ந்த மரக்கட்டை போல் ஆகிப்போய் இரக்கம் , அன்பு, பரிவு, தியாகம், போன்ற  பண்புகள் இல்லாமல் ஈரமற்று இருந்தால் அதன் வழியாக இறை சக்தி எப்படி வெளிப்படும் என்பதை உணர்ந்துகொண்டு நாம் நம்மை மாற்றிக்கொண்டால் இறைவன் நம் மீது காட்டிக்கொண்டிருக்கும் இரக்கத்தை உணர்ந்து அனுபவிக்கமுடியும். 

முயற்சி செய்வோம் மனதில் இறைவனைத் தவிர அனைத்து எண்ணங்களும் நீங்கும்வரை. இறுதி மூச்சு உள்ள வரை.

பாடலை கேட்டு  உருக: இணைப்பு
https://www.youtube.com/watch?v=4gpqCPYYXnk&hd=1

Wednesday, August 20, 2014

பகவான் கண்ணன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறான்?

பகவான் கண்ணன் நம்மிடம் 
என்ன எதிர்பார்க்கிறான்? 

பகவான் நம்மிடம்
என்ன எதிர்பார்க்கிறான்?

கடையிலிருந்து வாங்கி
வைத்த வெண்ணையா?
அல்லது எண்ணையில் பொறித்த
தின்பண்டங்களா ?

அவை எல்லாம்
நமக்குத்தான் .

அவன் பேரைச்சொல்லி
நாம் சாப்பிடத்தான்
சாப்பிடும்போதாவது
அவன் நாமத்தை நாம் உச்சரிக்க
நம் முன்னோர்கள் செய்து வைத்த ஏற்பாடு

கன காம்பரதாரி கண்ணன் நம்
தூய உள்ளத்தைத்தான் கேட்கிறான்

அவனிடம் காட்டும்  அன்பை நம்மை
சுற்றியுள்ள அனைத்து உயிர்களிடமும்
காட்டவேண்டும் என்று எதிர்பார்க்கிறான்

பரிபூரண சரணாகதியைதான்
எதிர்பார்க்கிறான்

அது இருந்தால்போதும் 
 மற்றவையெல்லாம்
தானே நம்மிடம் வந்து சேரும்

Tuesday, August 19, 2014

வருவாய் வருவாய் வடிவழகன் கண்ணா

வருவாய் வருவாய் 
வடிவழகன் கண்ணா 

தருவாய் தருவாய்
தடையில்லா ஆனந்தம்
தரணியில் உள்ள
மாந்தர்கள் அனைவருக்கும்

வசுதேவர் தேவகி மைந்தனாய் நடுநிசியில்
சிறையில் பூத்த ஒளி சுடரே

கோகுலத்தில் யசோதை நந்தகோபன்
மகனாய் வலம் வந்து லீலைகள்
புரிந்த அழகுத் தெய்வமே


மதம் என்னும் பேய் பிடித்து
அலைகின்றார் மக்கள். அன்பின்றி
அனைவருக்கும் ஆற்றொணா
 கொடுமைகள் செய்கின்றார்.

அன்பின்றி ஆணவத்துடன் நடக்கின்றார்
பண்பின்றி பாதகங்கள் செய்கின்றார்.

எத்தனையோ  கோடி இன்பங்கள் நீ 
அளித்திருந்தும் வாழ்நாள் முழுவதும்
அழுது புலம்பித் திரிகின்றார்.

அனைவருக்கும் நல்ல புத்தி கொடு
தீமைகளை எதிர்த்து ஒழிக்க சக்தி கொடு

உந்தன் திருவடியில் என்றும்
மாறாத பக்தி கொடு.

மணம்  வீசும் மலர்களால்
உன்னை அலங்கரித்தேன்அறுசுவை பண்டமும் இனிய
கனிகளும்உனக்களித்தேன்.

உந்தன் அழகு திருமுகத்தை
கண்டு உளம் களித்தேன்.

கண்ணா நீ என்றென்றும்
என் இதயத்தை விட்டு
நீங்காதிருந்து இன்பம் தருவாய். 

Sunday, August 17, 2014

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா

அகந்தை வடிவாம் கம்சன் என்னும்
அரக்கனால் சிறை வைக்கப்பட்ட
வசுதேவர் தேவகி போன்ற
ஆன்மாக்களை விடுவிக்க காண்போர்
உள்ளம் மகிழும் கண்ணனாய்
சிறையில் வந்துதித்த நாரணனே

உனக்கு வணக்கம்


ஒருத்திமகனாய்ப்  பிறந்தாய்
ஓரிரவில் ஒருத்தி மகனாய்
கோகுலத்தில் ஒளிந்து வளர்ந்தாய்
அதுபோல் இவனுள்ளத்திலும்
ஒளிந்துகொண்டாய் ஏன்
இன்னும் வெளிப்படாமல் இருக்கின்றாய் ?ஆவினங்களை மேய்த்தாய்
கள்ளமில்லா ஆயர்குல மக்களுடன்
கலந்து உறவாடி  மகிழ்நதாய்

வெண்ணையை உண்டாய்

கோகுலத்து மாதரிடம் லீலைகள் செய்தாய்
வெள்ளையான மனம் இருந்தால்
வேங்கடவா உன் அருள் பெறலாம்
என்பதை அன்றே காட்டினாய்

அண்டமெல்லாம் உன்னில் அடக்கம் என்று
அனைவருக்கும் காட்டிடவே
மண்ணையும் உண்டாய் முன்பொருநாள்
மண்ணையும் விண்ணையும்
அளந்த எம்பிரான் என்றென்றும்
எமைக் காத்திட வாராய் இந்நாளில்


நஞ்சைக் கக்கி ஆயர்களை துன்புறுத்திய  
காளிங்கன் என்னும் நச்சுப் பாம்பை அடக்கிவைத்தாய்
அதுபோல் அகந்தை  என்னும் அரவத்தால்
அல்லல்படும் இவனையும் ஆட்கொள்ள வாராய்
எல்லாம் உனதாய் இருக்க அனைத்தும் தனதென்று 
ஆணவத்துடன் அலைந்த திரிந்த  கௌரவர் கூட்டத்தை
ஒழித்தாய். நீயே கதியென்று உன்னைச் சரணடைந்த
பாண்டவர்களின் பக்கம் நின்றாய்.

அஞ்ஞானம் ஒழிந்திட ஆனந்தம் மலர்ந்திட
அற்புதமாய் கீதையை அளித்தாய்
உன்னை போற்றி துதித்து உய்ய ஆயிரம்
நாமங்கள் எங்களுக்கு அளித்தாய்

கண்ணா உன் பெருமை அளவிடலாமோ!
கண்ணா உன் கருணைக்கு நிகருண்டோ!


காலமெல்லாம் உன் புகழ் பாடுவேன்
எந்த பிறவி எடுத்தாலும் உன் காலடியில்
என்றென்றும் கிடப்பேன் உன்னோடு
அயிக்கியமாகும் வரை

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா

  (ஓவியங்கள்-தி ரா பட்டாபிராமன்)

Tuesday, August 12, 2014

எதைத் தேடுவது?

எதைத் தேடுவது?

எல்லோரும் கூறுவார்கள்
பொருளைத்தான்  தேடவேண்டும் என்று.

சரி எந்த பொருளைத் தேடுவது?

இல்லறத்தான் தேடும் பொருள் ஒன்று

அந்த பொருள் இல்லாதவனுக்கு இந்த
உலக வாழ்க்கை ஒரு சுமை

அதனால்தான் பொருளில்லார்க்கு உலகம் இல்லை
என்றார் திருவள்ளுவர்

ஆனால் அந்த பொருள் மட்டும் தேடுவதுதான்
மனிதப் பிறவியின் நோக்கமா என்றால் இல்லை
என்றுதான் சொல்லவேண்டும்.

நேற்று ஒருவருக்கு சொந்தமான பொருள் சில காலம் நமக்கு சொந்தமாகலாம்.நாளை அது வேறு ஒருவரின் உடைமையாகிவிடும்.

அல்லது அழிந்துவிடும், அல்லது கள்வரால் அபகரிக்கப்பட்டுவிடும்.

அதனால்தான் மனிதன் அடைய வேண்டிய பேறுகளில்
பொருளை இரண்டாவதாக வைத்து வீடு பேற்றை நான்காவதாக
முறைப்படுத்தி வைத்தார்கள்  நம் முன்னோர்.

அதும் பொருளை நேர்மையான அற வழியில் ஈட்ட வேண்டும் என்றும்
ஈட்டிய பொருளை அற வழியில் பயன்படுத்தவேண்டும்,

அப்படி வாழ்க்கையை நடத்தினால் கிடைப்பதுதான் இன்பம் என்றும்.
அதை அடுத்து உலக பொருளின் மீது மோகத்தைக் குறைத்து
பரம் பொருளின் மீது நாட்டத்தை செலுத்தவேண்டும்.

ஈட்டிய பொருளை இல்லாதார்க்கு ஈவதே
உண்மையான இன்பம் என்றார்கள்.

எல்லாவற்றையும் தனக்கென வைத்திருப்பவன்
அடையும் இன்பம் போலியானது

ஆனால் இன்று மனிதர்கள் இந்த உலகத்தை விட்டு நீங்கும்வரை அழியும் பொருட்கள் மீது மோகம் கொண்டு அலைவதால் அவர்களுக்கு சோகம்தான் மிஞ்சுகிறது

மக்களின் வாழ்வில் திருப்தி என்ற எண்ணம்  அறவே இல்லாமல் போய்விட்டது.

இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழும் எண்ணம் இல்லை
பிறர் மெச்ச வேண்டுமென்று  பாடு பட்டு சேர்த்த பணத்தை வாரி இறைக்கிறார்கள்.

அளவுக்கு  அதிகமாக ஆசைகளை வளர்த்துக்கொண்டு
அல்லல்  படுகிறார்கள்

மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தையும்  ஒரு சிலரே
சுருட்டிக்கொண்டதால் இன்று உலகில் போட்டியும், பொறாமையும், வறுமையும், குற்ற செயல்களும், ஆதிக்க வெறியும், போராட்டங்களும் பெருகிவிட்டன

மக்கள் மனதிலும் அமைதி இல்லை,
அவர்களை ஆளுபவர்களின்  மனதிலும் அமைதியில்லை.

உலகத்தில் நல்ல பண்புகள் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் வளரவேண்டும். அப்போதுதான் அந்த மக்கள் இருக்கும் நாடும் ,இந்த உலகமும் நன்றாக இருக்கும்.

மனங்களில் பேராசை ஒழியவேண்டும், அன்பு பெருகவேண்டும்.
வெறும் வெற்றுக் கூச்சல்கள் போடும் மத பிரசாரங்களால் எந்த நன்மையையும் ஏற்படப்போவதில்லை.

மதங்களின் உண்மையான கோட்பாடுகளை பிறரை இகழாவண்ணம்
கடைபிடிப்பதில்தான் இந்த உலக அமைதி இருக்கிறது

இறைவனைப் பற்றி வாய் கிழிய பேசுவதால் எந்த பயனும் இல்லை

இறைவன் அளித்த எல்லா நலன்களும் இந்த பூமியில் உள்ள அனைவருக்கும் சொந்தம்,அது தனக்கு மட்டும்தான் உரியது என்ற ஆதிக்க எண்ணம் ஒழியவேண்டும்.

அது நடவாதவரை. இந்த உலகில் அமைதி என்பது கானல் நீரே. 

Friday, August 8, 2014

வளங்களை அள்ளித்தரும் வரக்ஷ்மியே வந்திடுவாய் !

வளங்களை அள்ளித்தரும் 
வரக்ஷ்மியே வந்திடுவாய் !

பால் பாயிண்ட் ஆர்ட் -தி .ரா.பட்டாபிராமன் 

அலைகடலில் வந்துதித்த 
ஆதி லக்ஷ்மியே  வருவாய் 
அடுத்தடுத்து வாழ்வில் 
அலை அலையாய் 
இன்பங்கள் பொங்கி வரவே !

இல்லத்தில் தானிய மணிகள் 
நிரம்பி வழிந்து அனைவருக்கும் 
வயிறார உணவு கிடைக்க 
வழி வகை செய்யும் தானிய 
லக்ஷ்மியே வந்து நிலையாய் 
தங்கிடுவாய் 

அச்ச உணர்வகற்றி ,ஆனந்தமாய் 
வாழ்ந்திடவே மனதில் 
பயமற்ற நிலையை அளிக்கும் 
தைர்ய லக்ஷ்மியே என்றும் என் 
உள்ளத்தில் நிரந்தரமாய் இடம் கொள்வாய் !

ஓவியம்-தி.ரா . பட்டாபிராமன் 

தாமரைப்பூவில் அமர்ந்தவளே 
தாமரைக் கண்ணனின்  இதயத்தில் உறைபவளே  
தடைகளை எல்லாம் தகர்ப்பவளே 
தாழ்வில்லா வாழ்வை அளிப்பவளே 
தஞ்சம் அடைந்தேன் உன் பொற்பாதம் 
தயை புரிவாய் உளம்  கனிந்து 


ஆனந்தமாய் வாழவும் 
அறம் வளர்த்திடவும் அனைத்து 
அயிச்வர்யங்களையும் தந்திடும் 
கஜ லக்ஷ்மியே வந்திடுவாய் 
மெட்டல் பாயில் ஆர்ட் -தி ரா.பட்டாபிராமன் 


மாயக்கண்ணனின் வடிவாம் 
மழலை செல்வங்களைத் தந்து 
வாழ்வை  முழுமை அடையச் 
செய்யும் சந்தான லக்ஷ்மியே 
அனைவர்க்கும் உன் அருள் கிடைக்கட்டும் 

எடுக்கும் செயலில் எல்லாம் 
வெற்றியை குவித்திடவே 
விஜய லக்ஷ்மியே வந்திடுவாய் 
என்றும் என்னோடு நிலைத்திடுவாய் 

கலக்கமுறா வாழ்வருளும் 
கல்வி செல்வத்தை தந்து தன்னை  உணரும் ஞானம் 
பெற வழி காட்டும் வித்யா லக்ஷ்மியே 
வருக! வருக! வருக! 
பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை 
என்னும் பழியைப் போக்க என்னோடு 
எப்போதும் நீ நிலைத்து நிற்பாய்  
நல்லதோர் அறங்களைச் செய்து 
நன்மைகள் பெறவே 

Thursday, August 7, 2014

காண்போரை மயக்கும் கண்ணன்


காண்போரை மயக்கும் கண்ணன் 

ஒளிப் பிழம்பாய் இருக்கும் இறைவனை
நம்முடைய ஊனக் கண்களினால்
காண இயலாது

தன்  பக்தர்களின் மேல் அளவுகடந்த
அன்பு கொண்ட பரந்தாமன் வர்ணிக்க இயலாத
வடிவழகனாக  திருக்கோயில்களில்
காட்சி தந்து நம்மையெல்லாம்
மகிழ்விக்கின்றான்.

நம் மனதின் தாபம் போக்கி
அறியாமையினால் செய்த பாபம் போக்கி
இறையடியார்களின்  பெருமை உணராது
அவமதித்ததின்  விளைவாக அடைந்த சாபம் போக்கி
வேதனை நீக்கி நன்மைகளை அளிக்கும்
பரந்தாமனின் வித்தியாசமான் வடிவம்
கர்நாடக மாநிலத்தில் உள்ளது.

ஒரு கையில் அபய  ஹஸ்தமும், மறு கையில் வரத  ஹஸ்தமும் 
கொண்டு பொதுவாக காட்சி தரும் பரமன் இங்கு சங்கும் சக்கரமும் கையில் ஏந்தி காட்சி தருகின்றான்.
அவன் மீது கொண்ட அபரிமிதமான பக்தியினால்  அவனோடு கலந்துவிட்ட ஆண்டாளின் வடிவம் அற்புதம். கல்லிலே வடிக்கப்பட்ட உயிரோவியம்
கண்டு இன்புறவேண்டும்.

மேற்படி படங்களுக்கான இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

https://plus.google.com/u/0/101778389614258257071/posts/BzWP1FdpuNg?cfem=1&pid=5843266241727684674&oid=101778389614258257071

Friday, August 1, 2014

வாழ்க்கை என்னும் நாடகம்

வாழ்க்கை என்னும் நாடகம் 

அனைவரின் வாழ்க்கையும்
ஒரு மெகா முடிவில்லாத தொடர்.

அந்த தொடரின் துவக்கம் மற்றும்
முடிவு யாருக்கும் தெரியாது.

அதை  எழுதிய எழுத்தாளருக்கும்
அதை இயக்கும்  இயக்குனருக்கு மட்டுமே தெரியும்.

அதில் நடிக்கும் பாத்திரங்களுக்கும் தெரியாது.
இயக்குனர் எந்த பாத்திரத்தை
நடிக்க சொல்லுகிறாரோ அதை ஒழுங்காக
தத்ரூபமாக செய்வது மட்டும்தான்
நம் கடமை.

அதை விடுத்து அவரின் உத்திரவுக்கு
மாறாக நாம் செயல்பட்டால் அந்த தொடரிலிருந்து உடனடியாக நீக்கப்படுவோம். அதுதான் விபத்து போன்றவற்றால்
ஏற்படும் மரணம் போன்றவை.

பாத்திரத்தை நிறைவாக செய்தால் அந்த தொடர் முடிந்ததும்
அடுத்த தொடரில்  வேறு நல்ல பாத்திரம் நமக்கு கிடைக்கும்.

இந்த வாழ்க்கை தொடரில் நாம்
சில நேரங்களில் நடிகர்களாக இருக்கிறோம்.
பல நேரங்களில் பார்வையாளர்களாக் இருக்கிறோம்.

வாழ்க்கை என்னும் மெகா தொடரில்
நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் யாரும் அறியாமலேயே ஒரு குறிப்பிட்ட சம்பவங்களை மட்டும் பார்த்துவிட்டு இயக்குனரை குறை சொல்வதிலேயே பலர் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர் இவ்வுலகில்.

மேலும் நாம் நமக்கு கொடுத்துள்ள பாத்திரத்தை சரியாக செய்யாதது மட்டுமல்லாமல் பிறரையும் அவர்கள் பாத்திரத்தை செய்ய விடாமல் தலையிட்டு நாடகத்தின் போக்கில் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம். அதனால்தான் அதுபோல் செய்பவர்களின் வாழ்க்கையில் இறைவன் குறுக்கிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இந்த சூழ்நிலைக்கும் நாம்தான் காரணமேயன்றி இறைவன் பொறுப்பல்ல என்பதை பொறுப்பற்று பேசும் மக்கள்உணரவேண்டும்.இந்த உலகத்தில் ஒவ்வொரு செயலின் பின்னால் அந்த செயல் நிகழ்வதர்க்குரிய காரணம் ஒளிந்துகொண்டிருக்கிறது
என்பதை ஞானிகளைத் தவிர மற்றவர்கள் உணர்வதில்லை.

அதனால்தான் இந்த உலகில் இத்தனை குழப்பங்கள். இந்த உண்மையை உணர்ந்துகொண்ட காரணத்தினால்தான் ஞானிகள் அமைதியாக இருக்கிறார்கள். மற்றவர்கள் கொதிக்கிறார்கள் மற்றும் குதிக்கிறார்கள். பிறகு அடங்கி போகிறார்கள்.

எனவே நடிகர்களாகிய நாம் நமக்கு இயக்குனராகிய இறைவன் நமக்களித்துள்ள பாத்திரத்தை ஒழுங்காக செய்தால் அது போதும். நமக்கு அடுத்த தொடரில் நல்ல பாத்திரம் கிடைக்கும்.

அதை விடுத்து இயக்குனராகிய இறைவனின். ஆணைக்கு மாறாக செயல்பட்டால். துன்பம்தான் விளையும்.