Monday, December 30, 2013

புத்தாண்டு 2014 வருக வருக

புத்தாண்டு 2014 வருக வருக 


இந்த புத்தாண்டு முதல் அனு  தினமும் 
ஏழுமலையானை நினையுங்கள் 

ஏழுமலையானை நினைக்க நினைக்க 
வாழ்வில் ஏற்றம்தான் எப்போதும் 




(வலை நண்பர்களுக்காக திருவேங்கடவனின் படத்தை விசேஷமாய் வரைந்தேன் )

அனைவருக்கும் அவன் இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியான வாழ்வும், வாழ்வில் முன்னேற்றங்களும், அவன் திருவடிகளில் மாறாத பக்தியும் அருள பிரார்த்திக்கிறேன் )

புத்தாண்டே வருக 
புதிய சிந்தனைகளைத் தருக 

இரவு முழுதும் கூத்தடித்து 
இறைவனை மறந்து 
கும்மாளம் போடும் 
மேலை நாட்டு 
கலாச்சாரம்  தவிர்த்திடுவோம் 

காலமெல்லாம் நம்மை 
கண்ணிமை போல் காக்கும் கற்பகக் களிறை
நினைவில் வைத்து வணங்கி 
புத்தாண்டை தொடங்குவோம் 






நம்மை வாட்டிவரும் 
வினையெல்லாம் 
மீண்டும் வாராமல் செய்யும் 
வேலனை துதிப்போம் 
























ஆண்டின் தொடக்கத்தை 
நம்மை எல்லாம் ஆட வைத்து 
அருள் செய்யும் ஆடல்வல்லானின் 
புகழை அதிகாலையில் பாடி 
மன நிறைவுடன் புத்தாண்டை 
வரவேற்போம் 




வாழ்வைதந்து வளம் தந்து வல்லபம் கூட்டும் 
முக்கண்ணி நம் முன்னே இருந்து எப்போதும் நம்மை எல்லாம் நம்மையெல்லாம் காக்கட்டும் 





















மார்கழி மாதத்தை
புனித மாதமாய் அறிவித்த 
மாலவனின் புகழைப் பாடி 
மகிழ்ச்சியோடு வரவேற்போம் 

ஆண்டின் கூட்டு தொகையோ 7
நல்லிசையின் சுரங்களோ 7

ஆதார சக்திகளாய் 
விளங்கும் சப்த மாதாக்களோ 7

இறைவனின் ஆணைப்படி 
இவ்வுலகை ஆளும் ரிஷிகளோ 7

உயிர்கள் வினைப்படி பிறந்து 
இன்ப துன்பங்களை
அனுபவிக்கும் பிறவிகளோ 7 























கண்ணனின் லீலைகளை 
விவரிக்கும் சப்தாகமோ 7

வைகுண்ட வாசன் 
வாசம் செய்யும் மலைகளோ 7 



ஏழுமலை இருக்க நமக்கு 
எதற்கு மனக்கவலை ?

திருப்பதி வாசன் 
திருவோடு விளங்கும் ஈசன் 
அடியவர்களின் நேசன் 

புத்தாண்டு நாளின் தொடக்கத்திலிருந்தே 
அவன்நாமம் சொல்லுவோம். 
அவன் புகழைப் பாடுவோம். 
ஆண்டு முழுவதும் அல்லல் இல்லா  வாழ்வை 
பெற்று ஆனந்தமாய் வாழ்வோம். 


ஹனுமத் ஜெயந்தி (1.1.2014)

ஹனுமத் ஜெயந்தி (1.1.2014)



Art-T.R.Pattabiraman 

அஞ்சனை மைந்தன் 
அடியவர்களின் நேயன் 

ஆற்றல் மிக்கவன்
ஆறுதல் தருபவன்

நெடியோனின் பக்தன் 
கொடியோரை வதைப்பவன் 

வாயு குமாரன் 
வாதை தீர்ப்பவன் 

புலன்களை வென்றவன் 
புகழ்ச்சிக்கு அடிமையாகாதவன் 

பணிவுடன் இருப்பவன்
துணிவுடன் செயல்படுபவன் 

அன்னை சீதையின் 
சோகம் போக்கியவன்

தன்னை நாடிவருபவர் 
ரோகம் நீக்குபவன் 

ராம நாமத்தை 
நெஞ்சினில் கொண்டவன் 

பஞ்சு போல் காற்றில் 
பறந்து கடலைக் கடந்தவன்  

வாலியின் தம்பிக்கு 
வாழ்வளித்தவன் 

வணங்குவோருக்கேல்லாம் 
வரங்களை அள்ளித் தருபவன் 

ஆதவன்போல் ஒளி வீசுபவன் 
முழு நிலவு போல் 
குளிர்ந்த பார்வையுடைவன் 

வாலையின் சக்தியை தன் 
வாலில் கொண்டவன். 

வாழ்த்தி பாடினால் 
வளம் கொண்ட
வாழ்வை அருள்பவன் 

காண்பார் யாரையும் 
கரம் கூப்புவான் 
அவர்களின் இதயத்திலே 
உறையும் 
ஆத்ம  ராமனை கண்டு 

புத்தியையும் தருவான்
சக்தியையும் தருவான் 
துணிவையும் தருவான் 

பயமற்ற வாழ்வும் தருவான் 
வாக்கு வன்மையையும் தருவான் 

அன்போடு அவன் நாமம் சொல்லி
பணிவோடு அனுதினமும் 
வழிபடுவோர்க்கே 

ஜெய் மாருதி 

Sunday, December 29, 2013

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(18)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(18)


பாடல்-18

உந்து மதகளிற்றன்  ஓடாத தோள்வலியன் 
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் 
கந்தம் கமழும் கழலீ 
கடை திறவாய்!
வந்தெங்கும்  கோழி அழைத்தன காண் 
மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் 
கூவின காண் 
பந்தார் விரலி !உன் மைத்துனன் பேர்பாடச் 
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப 
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.  


விளக்கம்

இந்த பாடலுக்கு விரிவான 
விளக்கம் தேவையில்லை ஆண்டாள்
சென்ற பாசுரத்தில் கண்ணனின் குடும்ப உறுப்பினர்களையும்
கண்ணனையும்  துயில் எழுப்பினாள் 
இந்த பாசுரத்தில் நந்த கோபாலனின் மருமகளான நப்பின்னையை எழுப்புகிறாள் .இதற்காகவா ஒரு பாசுரம் எழுதியிருப்பாள் ஆண்டாள் என்று நினைக்கத் தோன்றுகிறது. 


இதுகாறும் உலக போகங்களிலே சுகம் கண்டு
இறைவனை மறந்து உறங்கி கிடந்தோம்.

நம்முடைய இந்த அவல நிலையைக் கண்டு
பொறுக்காமல் நம் மீது இரக்கம் கொண்டு
நம்மை அறியாமையிலிருந்து நம்மை
விடுவிக்க பெரும் முயற்சி செய்து
அதில் சிறிது வெற்றி பெற்றாள் ஆண்டாள்



.நம்மை தமோ குணத்திலிருந்து
விடுவித்தாள்

நம்மை எல்லாம் அழைத்துக்கொண்டு
கண்ணன் அறிதுயில் கொண்டுள்ள கோயிலுக்கு
அவனை தரிசனம் செய்ய நம்மையெல்லாம் அழைத்து செல்கிறாள்.



ஆனால் அங்கு கண்ணனைச் சுற்றி இருப்பவர்கள்.
தாங்கள் கண்ணனிடம் இருக்கிறோம். அதனால் அவர்கள் கண்ணனைக்  கண்டு விட்டோம், அவனோடுதான் நாம் இருக்கிறோமே  என்று மீண்டும்தமோகுணத்தில் ஆழ்ந்து  அவனை மறந்து, அவன் பெருமைகளைப் பாடி இந்த புனித மார்கழி மாதத்தில்
புண்ணியத்தை தேடாது உறங்கிக் கிடக்கின்றனர்.

அர்ச்சாவதாரமாக காண்போர்
கண்ணை விட்டு அகலாத நம்முடைய
ஊனக் கண்களுக்கு புலப்படும் வகையில் ஜீவர்கள் மீது கருணை கொண்ட அந்த கரும் தெய்வமான கண்ணன் வடிவத்தை தரிசனம் செய்ய சென்றால் அவன் மகிமையை உணராது அவனைச் சுற்றியுள்ளவர் உறங்கி கிடப்பதை  இந்த பாசுரத்தில் ஆண்டாள் சுட்டி காட்டுவதோடு மட்டுமல்லாமல் அவர்களையும் உறக்கத்திலிருந்து எழுப்புகிறாள்.


எழுப்புவதுமட்டுமல்லாமல்
 தாங்கள் கண்ணனை தரிசிக்க வந்துள்ளோம்

 நீங்களும் உறக்கத்தை விட்டு எழுந்து உண்மையை உணர்ந்து எங்களுடன் வாருங்கள் என்று அவர்களுக்கு
சொல்லாமல் சொல்லி உணர்த்துகிறாள்.

ஒரு ஜீவன் பகவானைப் பற்றிய சிந்தனையே இல்லாது மூடராய் கிடக்கும் தமோ குணத்திலிருந்து விடுவிக்கபட்டாலும் இன்னும் பல படிகளைக் கடந்துதான் பகவானை அறிந்துகொள்ள இயலும்.

தமோ குணத்தைக் கடக்கவேண்டும்.
கடந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்யாவிடில்  மீண்டும் தமோ குணத்தில் ஆழ்ந்து உணர்ச்சிகளுக்கும் புலனின்பங்களுக்கு  அடிமைகளாய் போய்விட நேரிடும்.

மனம் என்னும் குதிரையை
நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.

கட்டுப்பாட்டை இழந்துவிட்டால்
அது நம்மை மீண்டும் படுகுழியில் தள்ளிவிடும். ஆபத்து உண்டு.

 அதனால்தான் நல்ல சத்சங்கத்தை விட்டு
எக்காரணத்தைக் கொண்டும் நாம் அகலக்கூடாது.



முக்தியில் பல நிலைகள் உண்டு

முதலில் பகவானுக்கு அருகில் செல்லும்
 நிலையான சாமீப்ய நிலையை அடையவேண்டும்.
 பல கோடி சூரிய பிரகாச நிலைக்கு மேம்பட்ட நிலையில்
அவனை ஜீவன்கள் தரிசனம் செய்ய இயலாது.

 பாரதப் போரின் போது அர்ஜுனனுக்கு
கீதோபதேசம் செய்யும் கண்ணன் அதில்
தன்னுடைய அகண்ட தரிசனத்தை விவரித்தான்
அதைக் காண அர்ஜுனன் விரும்பினான் .



அப்போது கண்ணன் ஒரு வரையறைக்கும் 
அழிவுக்கும் உப்பட்ட இந்த புலன்களைக் கொண்டு
அந்த  தரிசனத்தை நீ காண இயலாது என்றான்

அதற்கு உனக்கு விசேஷமான
அருட்பார்வை வேண்டும் என்கிறான்.

அதற்க்கு நம் அகந்தையை அடியோடு
விட்டுவிட்டு அவன் அடியவர்களோடு சேர்ந்துகொண்டு அவன் திருப்பாதங்களை சரணடையவேண்டும்.

இந்த பூவுலகில் கண்ணன் அவதரித்தபோது
அவனோடு இருந்தவரெல்லாம் அவன் தெய்வீக மகிமைகளை யறியாது அவனை தங்களில் ஒருவர் என்றே நினைத்தனர்.



பகவானான கண்ணனும் தன்னுடைய
மகிமைகளை மறைத்துக்கொண்டு அவர்களோடு
தானும் ஒருவராக வாழ்ந்து காட்டினான்

அதனால்தான் கண்ணனோடு
இருந்தவர்களும் கண்ணனின் மாயையினால்
நம்மைப்போல்தான் நடந்துகொண்டனர்
என்பதை இந்தபாசுரத்தில்
ஆண்டாள் நமக்கு தெரிவிக்கிறாள்.

படங்கள் -நன்றி-கூகிள்


Saturday, December 28, 2013

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(17)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(17)


பாடல் 17 

அம்பரமே தண்ணீரே சோறே அறம்  செய்யும் 
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் 
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே 
குலவிளக்கே எம்பெருமாட்டி யசோதாய் எழுந்திராய் 
அறிவுறாய்அம்பறைமூடறுத்தோங்கி உலகளந்த உம்பர் கோமானே 
உறங்காது எழுந்திராய் செம்பொற்க் கழலடிச் செல்வா  
பலதேவா உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்   

விளக்கம்
ஆடை,தண்ணீர்,உணவு  ஆகியவற்றை கொடையாக அளிக்கும் 
எம்பெருமான் கோபாலனின்  தந்தையே எழுந்திராய் 
ஆயர்குலவிளக்கான கண்ணனின் தாயே யசோதையே எழுந்திராய். 
மூவடியால் உலகையெல்லாம் அளந்த தேவர்களின் தலைவனே நீயும் உறக்கம் நீங்கி எழுந்திராய் 




செம்பொன்னால் ஆன கழலை அணிந்த பலராமனே 
நீயும் துயில் நீங்கி எழுந்திராய் என்று அனைவரையும் தன தோழிகளுடன் சென்று ஆண்டாள் எழுப்புகிறாள். 


அனைவருக்கும்
 தந்தை இறைவன் தான் 

அவன்தான் நமக்கு வேண்டிய உடை>உணவு>நீர் 
> அனைத்தையும் தருகிறான் 

உயிர்கள் வாழ உணவைத் தருபவள்
 பூமகளாகிய புவிமாதா 

நீரைத் தருபவனோ நீர்வண்ணனாகிய 
ஆழி மழைக் கண்ணன் 

அனைத்து உயிர்களுக்குள்ளும் 
ஆன்மாவாய் இருப்பவன் 
ஆத்ம ராமானாய்  இருப்பவன் 
ஆனந்தம் தருபவன் பரம்பொருளாகிய கண்ணனே. 

அவன் உறங்குவதுமில்லை
விழிப்பதுமில்லை

உறங்குவதும் விழிப்பதும் 
ஜீவர்களுக்குத்தான் 

கண்ணனையும் தங்களைப் 
போல்தான் உறங்குகிறான்> விழிக்கிறான் 
 என்று அறியாமையினால் ஜீவர்கள்  நினைக்கின்றனர். 

மூன்று உலகம் என்பது நம்முடைய
 மனதின் மூன்று நிலைகளைக் குறிக்கும்

ஒன்று நாம் விழித்திருந்து 
உலக செயல்களை செய்வதாக
 எண்ணும் நிலை.

இரண்டாவது உறங்கும்போது 
கனவு காணும் நிலை. 

மூன்றாவது கனவுகளற்ற ஏதும் 
அறியாது மயங்கிக் கிடக்கும் நிலை.

இதில் முதல் நிலையான்  
விழிப்புநிலையும் ஒரு நீண்ட 
கனவின் பார்ப்பட்டதே என்பதே உண்மை நிலை.

இந்த மூன்று நிலைகளுக்கு 
 அப்பால் ஒரு நிலை உள்ளது. 

அந்த நிலையில்தான்
 நம்முடைய ஆன்மா உள்ளது.

அதுதான் எப்போதும் உறங்காது 
விழித்திருந்து இந்த மூன்று நிலைகளையும்
 சாட்சியாக இருந்து காண்கிறது.

மனம் கூட விழிப்பு மற்றும் 
கனவு நிலைகளை கடந்து ஆழ்ந்த உறக்கத்தில் 
ஆன்மாவிடம் தான் தங்குகிறது 

அது ஆன்மாவிடம் உள்ளபோது
எந்த சலனமும் இல்லாது 
அமைதியாய் இருக்கிறது. 

அதை விட்டு வெளிவரும்போதுதான் 
விருப்பு வெறுப்புகளும்>காம க்ரோதாதி 
உணர்ச்சிகளும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன 

நம் மனம் ஆன்மாவிலேயே 
லயித்திருந்துவிட்டால். நாம் 
எந்த சூழ்ந்லையிலும் அமைதியாக் 
ஆனந்தமான மன நிலையில் இருக்கலாம். 

அதற்குதான் நாம் நமக்குள்
 அந்தர்யாமியாக விளங்கும் கண்ணனை>
 நம் இதயத்திற்குள் ஒளி வீசும் வாசுதேவனை
>பரப்ரம்மமாகிய ராமனை 
நாம் சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும்.



அதற்கு உறக்கத்தை> இந்த உலக 
பொருட்களின் மீதுள்ள மயக்கத்தை தாண்டி
 நாம் நமக்குள்ளே செல்லவேண்டும்.  

Thursday, December 26, 2013

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(16)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(16)


பாடல் -16

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே
கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே  
மணிக்கதவம் தாள் திறவாய் 
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலேழப்ப் பாடுவான் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா  நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய். 

விளக்கம் 
ஆயர்குல மக்களின் தலைவனான நந்தகோபனின் மாளிகை காவலனே மணிகள் ஒலிக்கும் இந்த கதவைத் திறப்பாயாக மாயவனும் கார்மேகவண்ணனுமான கண்ணன் எங்களை இன்று சந்தித்து அருள் தருவதாக கூறியுள்ளான்.அவனை எழுப்புவதற்கு மனதையும் உடலையும் சுத்தமாக்கிகொண்டு வந்துள்ளோம்.  இந்த நோன்பு காலத்தில் 
முதன் முதலாக அவனைக் காண வந்துள்ள எங்களை தடுத்துவிடாதே .கதவைத் திறப்பாயாக. என்று ஆண்டாள் பாடுகிறாள். 


கரைப்பார் கரைத்தால்
 கல்லும் கரையும் என்பார்கள். 

ஆண்டாள் ஒரு வழியாக ஆயர்குல பெண்களை உறக்கத்திலிருந்து  எழுப்பி 
அறிதுயில் கொண்டுள்ள கண்ணனைக்  
காண அழைத்துச்  செல்கிறாள்.

சென்று கண்ணன் உறங்கும் மாளிகை
 காவல்காரனை கதவை திறக்க வேண்டுகிறாள்

.நாங்கள் மனதையும் உடலையும் 
சுத்தமாக்கிகொண்டு வந்துள்ளோம்
 எங்களைத் தடுக்காதே என்றும் வேண்டுகிறாள். 


மனம் ஒரு அதிசய சக்தி 
.அதில் எண்ணங்கள் தோன்றும் இடமும்
 இந்த உடலில் பிராணன் தோன்றுமிடமும் 
ஒன்றே என்கிறார் பகவான் ரமணர்.

அதனால்தான் மனமடங்கினால் 
  பிராணன் நம் வசப்படும்

பிராணனை கட்டுப்படுத்தினால்
 மனம் வசப்படும். 


ஆனால் இரண்டையும் வசப்படுத்துதல் 
என்பது மிகக் கடினமான செயல். 
அது யோகிகளுக்கே கைவரும். 

நம் போன்ற பாமரர்கள் தகுந்த ஆசானின்றி 
அதற்க்கு முயற்சி செய்தால் 
விபரீத  விளைவுகள் ஏற்படும் .
சில நேரங்களில் உயிருக்கு அபாயம் நேரிடும்.

உடல் தூய்மை நீரால் அமையும் 
உள்ள தூய்மை வாய்மையால் 
காணப்படும் என்று வள்ளுவர் தெரிவிக்கிறார். 



வாய்மையை கடைப்பிடிப்பது 
என்பது மிகவும் அரிதான பண்பு. 
அது மகாத்மா காந்தி போன்ற 
 யுக புருஷர்களுக்கே சாத்தியம்  

அதனால்தான் ஆண்டாள் 
மிக எளிய வழியை நமக்கு காட்டி தந்துள்ளாள்.





 நம் மனதை கண்ணனின் திருவடிகளில் 
ஒப்படைத்துவிட்டால்> தான் என்ற அகந்தையை விட்டுவிட்டு
 கண்ணன் விட்ட வழி என்று 
அவன் திருவடிகளில் சரணடைந்துவிட்டால் 
ஒரே நேரத்தில் மனமும் அடங்கும்
 பிராணனும் நம் வசப்படும். 

அவன் லீலைகளை பற்றிபேசுவதாலும் 
பாடுவதாலும்> சிந்திப்பதாலும்
 மனம் அமைதி அடைந்து எளிதாக
 அவன் திருவடிகளில் ஒடுங்கிவிடும். 
அதை அடக்கும் வேலை நமக்கு இல்லை.



மாடுகளையும் கன்றுகளையும்
 மேய்த்தவன் மாடுபோல் அடங்கா திரியும்
 நம் மனதையும் மாற்றி 
அவன் வழிக்குக் கொண்டுவருவான்



 அதற்கு அவன் நாமத்தை இடைவிடாது 
உச்சரிக்கவும் வேண்டும்.

 நமக்குரிய  கடமைகளை தவறாது 
செய்யவும் வேண்டும் 

 அனைவரையும் 
அவன் வடிவாகக் காணவேண்டும்

பரோபகாரம் இதம் சரீரம் என்ற 
வாக்கியத்திற்கு உகந்த வகையில் 
பிறருக்கு நாம் ஏதாவது 
ஒரு வகையில் உதவிக்கொண்டிருந்தால்.
 மட்டுமே சர்வம் பிரம்மமயம்  என்ற
 மகா வாக்கியத்தின்
 உட்பொருளை உணர்ந்துகொள்ளமுடியும். 

முயற்சி செய்வோம் .
அந்த முகுந்தன் வழிகாட்டுவான்.  

படங்கள்-நன்றி-கூகுல்

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(15)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(15)


பாடல்-15 

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ?
சில்லென் றழையேன்மின்  நங்கையீர் !
போதர்கின்றேன் வல்லை நின் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக 
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள் 
வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை 
மாயனைப் பாடேலோ ரெம்பாவாய் 

விளக்கம் 

தோழிகள்:ஏலே இளங்கிளியே இன்னுமா உறங்குகிறாய் ?

தூங்குவதுபோல் பாசாங்கு செய்பவள்: சரி சரி தொண தொணக்காதீர்கள் .இதோ வந்துவிடுகிறேன்.

தோழிகள்: நீ வாயாடுவதில் வல்லவள். உன் பேச்சும்  வெகு நீளம் 

தூங்குவதுபோல் பாசாங்கு செய்பவள்:சரி சரி. நான் நீங்கள் சொல்வது போல் வாயாடியாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.நீங்களும் என்னைப் போல்தான் வாயாடுவதில் வல்லவர்கள்.தான் 

 தோழிகள்:நாங்களெல்லாம் வந்துவிட்டோம். உனக்கு மட்டும் என்ன ஆயிற்று எங்களுடன் வரவேண்டியதுதானே? 

தூங்குவதுபோல் பாசாங்கு செய்பவள்:எல்லோரும் வந்துவிட்டார்களோ?|

தோழிகள்:வந்துவிட்டார்கள். நீ வந்து எண்ணிப் பார்த்துக்கொள். குவாலயபீடம் என்னும் பலமிக்க மத யானையைக் கொன்றவனும் எதிரிகளை நேருக்கு நேர் சந்திப்பவனும் மாயனுமான கண்ணனை பாடுவதற்காக எழுந்து  வருவாயாக !




14 பாசுரங்களில் உறக்கத்தை விட்டொழித்து 
உலகளந்த உத்தமனின் பேரை பாடி கோயிலுக்கு சென்று வணங்குமாறு  அறிவுறுத்தியும் ஜீவன்கள் உறங்குவதிலேயே சுகம் கண்டு கொண்டு அதிலிருந்து எழுவதற்கு மனம் வராமல் படுக்கையில் இருந்துகொண்டே காலத்தை கடத்தி கொண்டிருக்கின்றனர். 


காலம் யாருக்காகவும் காத்திருக்காது .
அடுத்த கணம் என்ன நடக்கும் என்று யாரும் அறிய முடியாது. 

கடந்த காலத்தை  வீணடித்ததுபோல்
 நிகழ்காலத்தையும் வீணடிப்பவர்கள் மதியிருந்தும்
 உண்மையை உணராது வீணே மாண்டுபோகின்றனர்

விலங்குகளைப் போல் உண்டு உறங்கி 
இரை தேடி உறவுகொண்டு. 
பந்தத்திலும்>பாசத்திலும்> மோகத்திலும்>சிக்கி கர்வம் கொண்டு திரிந்து அரிதாய்க் கிடைத்த பிறவியை 
ஹரியை எண்ணாமல் 
அழிகின்றனர். 



காலையில் எழுந்த ஆதவன் 
மேற்கே மறைவதைக் கண்டும்
 நம் கண்முன்னே பிறந்த கன்று வளர்ந்துமுதுமை அடைந்து 
 மடிவதைக் கண்ட பிறகும்>
நம்மோடு வாழ்ந்து திடீரென்று மாண்டு 
மறைந்து போனவர்களைக் கண்டும்
 வாழ்வின் நிலையாமையை உணராது 
வெட்டிக் கதைகள் பேசி திரிவதைப் பார்த்த
 ஆண்டாள் உறக்கத்தை விட்டொழித்து 
லீலைகள் பல புரிந்த கண்ணனை 
வணங்க வருமாறு மீண்டும் அன்புடன் அழைக்கிறாள். 

அவள் அறிவுரையை கேட்டு
 பிறவி பயனை அடைவதில்
 நாட்டம் கொள்வோமாக. 

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(14)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(14)


உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் 
செங்கழுநீர் வாய் நெகிழ்ந் தாம்பல்வாய் கூம்பின காண் 
செங்கல்பொடிக் கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய் !நாணாதாய் நாவுடையாய் சங்கொடு சக்கரமும் ஏந்தும் தடைக்கைய்யன் பங்கயக் கண்ணானை பாடேலோ ரெம்பாவாய்.  


விளக்கம் 

வீட்டின் பின்புறத்தில் உள்ள குளத்தில் ஆதவன் வரவை முன்னிட்டு அல்லி  மலர்கள் விரிந்த தன்  இதழ்களை மூடத் தொடங்கிவிட்டன 
தாமரை மலரோ தன் இதழ்களை விரிக்கத் தொடங்கிவிட்டது காவிநிற உடை அணிந்த துறவிகள் திருக்கோயிலில் இறைவனை எழுப்பும் விதமாக சங்கினை முழங்க செல்லுகிறார்கள். 
எங்களை முதலில் வந்து எழுப்புவதாகச் சொல்லிவிட்டு இன்னும் உறங்கிக்கொண்டிருக்கும் நங்கையே 
சொன்னபடி செய்யாமைக்கு நாணாமல் வருத்தம் தெரிவிக்காது இருக்கும் நாவுடையவளே சங்கும் சக்கரமும் கையில் ஏந்தி இவ்வுலகைக் காக்கும் தாமரை போன்ற கண்களை உடைய கண்ணனை 
பாடித் துதிக்க வாராய் என்கிறாள் ஆண்டாள். 


  இந்த பாடலில் ஆதவனைக்  
 காண தாமரை மலர்கிறது 


அதுபோல் நம் மனமும் தாமரை போன்ற 
கண்களை உடைய சங்கு சக்கரத்தினை கையில் ஏந்தி காட்சி தரும் கண்ணனைக் கண்டதும் மலர வேண்டும். 

ஆனால் நம் மனம் இன்னும் இரவில் 
இருளில்  மலரும் அல்லியைப் போல் 
உறக்கத்திலேயே இருக்கிறது. 

அந்த மந்த நிலையிலேயே நாம் 
இருப்பதால்தான் கண்ணனின் வருகை
 நமக்கு மகிழ்ச்சியளிக்க வில்லை.

படுக்கையில் இருந்து எழுந்து நீராடி 
இறைவனை தரிசிக்கச் செல்ல மனமில்லாமல் 
தமோ குணத்தில் அழுந்தி கிடக்கிறோம். 

துறவிகள் இறைவனை கோயிலில் 
சங்கை ஊதி துயிலெழுப்பும் ஒலியைக் 
 கேட்டும் உணர்வின்றிக் கிடக்கிறோம்.
 ஊழ்வினையினால். 

குருவாயூரப்பன் சுப்ரபாதத்தில் பட்டத்ரி
 "ஹே .குருவாயூரப்பா "நான் மத்தனாயும் ஜடமாகவும் இருக்கின்றேன் 
நல்ல குணங்கள் ஒன்றும் இல்லை.
வாழ்வில் தரித்திரம்.துக்கம் என எப்போதும் 
அவைகளைப் பற்றியே என் சிந்தனைகள் ஓடுகிறது.
 உன்னை நினைப்பதற்கே மனம் 
செல்ல மாட்டேன் என்கிறது என்கிறார்.

அதுபோலத்தான் நம் மனம் எப்போதும் 
உடலையும் குடலையும் கவனிப்பதற்கே 
பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறது.

 மீதி நேரம் தற்பெருமை பேசி திரிவதிலும்>
 பிறர் மீது குறை கூறி அலைவதிலும்
.பிறருக்கு கேடு நினைப்பதிலும் >நோயிலும்
 மீதி உறக்கத்திலும் வீணாகிப் போய்விடுகிறது. 


மார்கழி மாதம் மட்டுமாவது 
பகவானுக்காக ஒதுக்கி அவன் அருளைப் பெற வழி 
காட்டத்தான்  ஆண்டாள் இப்புவியில் அவதரித்தாள்

அப்படியும் நம்முடைய 
அறியாமையினால் நாம் இன்னும் 
அவள் உபதேசங்களை 
மனதில் கொள்ளாது மயங்கி கிடக்கிறோம்.

இன்னும் காலம் கடந்துவிடவில்லை.
 இனியாவது உறக்கத்தை விட்டொழித்து
 பகவானின் புகழைப் பாடி 
அவன் பாதங்களை சரணடைவோம். 

ஓம் நமோ நாராயணாய   


அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(13)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(13)


பாடல்-13

புள்ளின் வாய்க் கீண்டானை பொல்லா அரக்கனைக் கிள்ளிக்  களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார் வெள்ளி எழுந்து விழாயனும் உறங்கிற்று புள்ளும்  சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் குள்ளக் குழைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ ? பாவை நீ நன்னாளால்  கள்ளம் தவிர்த்து  கலந்தேலோ ரெம்பாவாய்

விளக்கம் 

 கோகுலத்தில்
வளரும்  சிறுவன் கண்ணனை கொல்ல மாமன் கம்சனால் அனுப்பப்பட்ட  பறவை வடிவில் வந்த கொடிய அரக்கனின் வாயைப்  பிளந்து அவனைக் கொன்றவன் கண்ணன்  .அவன் பெருமைகளைப் பாடிக்கொண்டு மற்ற பிள்ளைகள் அவன்  சன்னதிக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். 
வானிலே ஆதவன் உதிக்கும் நேரத்தை அறிவிக்கும் முகமாக வெள்ளி என்னும் சுக்கிரனும் விழாயன் என்னும் குருவும் உறங்குவதுபோல்  கண்ணிலிருந்து மறையத் தொடங்கி விட்டன.
பறவைகளும் தன்  கூட்டை விட்டு பறந்து இரை கிளம்பும் முகத்தான் சத்தம் போடத் தொடங்கிவிட்டன. காலைப் பொழுது புலர்வதை அறிந்தும் நீ கண்களை திறந்து எழுந்து வந்து குளிர்ந்த நீரில் நீராடாமல்  படுக்கையில் கிடப்பது முறையோ? 
இறைவனுக்காக ஏற்பட்டது  மார்கழி மாதம். அதில்  அனைத்து நாட்களும் நல்ல நாட்களே. அதுபோல் இந்த நன்னாளில் மற்ற சிந்தனைகளை விட்டுவிட்டு கண்ணனை நினைத்து அவனுடன் கலக்க வந்திடுவாய். என்கிறாள்  ஆண்டாள். 

12 நாட்களாக தினமும் நல்ல உபதேசங்களை ஆண்டாள் அருளி செய்கிறாள். உலகில்  வாழும் இந்த ஜீவன்களுக்கு.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு அவைகளை செயல்படுத்தாமல் மீண்டும் மீண்டும் இந்த உலக மோகத்தில் மயங்கி சுகமாக நித்திரையை செய்து கொண்டிருகின்றனர் ஜீவர்கள். 



ஆனாலும் ஆண்டாள்
 அவர்களை விடுவதாயில்லை.

புள் என்றால் உயிர்கள். 
உயிர்களை தவறான பாதையில் செலுத்துவது மனம்தான். 
அதுதான் உயிர்களை தீய வழியில் செலுத்துவதும் 
நல்ல பாதையிலிருந்து திசை திருப்புவதுமாக ஓயாமல்  .தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது 

சில நேரங்களில் தீமை செய்யப் புகுந்தாலும் 
பறவை வடிவில் வந்த அரக்கனுக்கு பகவான்கண்ணன் கையினால்மாளும் 
 பாக்கியம் கிடைத்தது.

மனதில் ஆயிரம் தீய சிந்தனைகள் இருந்தாலும் 
அனுதினமும் நாம் பகவானை சிந்தித்துக் கொண்டே வந்தால் 
அவைகள் மறைந்து
 நம் மனம்  முழுவதும் இறை சிந்தனையால் 
ஒருநாள் நிரப்பட்டுவிடும் 

அப்போது நாமும் நரகத்தில்
 விழாமல் காப்பாற்றப்படுவோம்.

அதற்க்கு நல்லவரோடு 
இணங்கவேண்டும்.



தானே இயங்கமுடியாத
 பல ரயில் பெட்டிகளை ஒரு இஞ்சின் 
இழுத்து சென்று நாம் சேருமிடத்தில் கொண்டு சேர்ப்பதுபோல 
பகவானின்  ஒரு நாமத்தை விடாமல் பற்றிக் கொண்டோமானால் 
நாம் அவன் இருக்குமிடத்தை ஒரு முயற்சியுமின்றி எளிதாக அடைவது திண்ணம். 

அதற்கு தான் என்ற அகந்தையற்று அவன் தாள்களை சரணடையவேண்டும் 

சரணடைந்ததுபோல் நடிப்பது பயனளிக்காது. 



Wednesday, December 25, 2013

ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆராதனை - (26.12.13)

ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆராதனை - (26.12.13)

இன்று சத்குரு, அருணாச்சல மகான்
ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் ஆராதனை தினம்.




சித்த புருஷராய் ,அருணாச்சலேஸ்வரர் மீது
அபரிமிதமான பக்தி கொண்ட பித்தராய்
காமாஷி  அன்னையின் அருள் நிறைந்த
அழகு வடிவமாய்திகழ்ந்தவர்

நாற்பது ஆண்டுக்காலம் அருணையிலே
வாசம் செய்து அங்கேயே அடங்கிவிட்ட
மாபெரும் யோக புருஷர்

தவத்தில் மூழ்கியிருந்த
மகரிஷி ரமணரை இவ்வுலகிற்கு
கண்டெடுத்து காத்து
நமக்களித்த கருணை வள்ளல்

களங்கமற்ற அன்போடு
காலடியில் வீழ்ந்தவர்களை
கருணையோடு கைதூக்கி
அபயமளித்து காத்த
அம்பிகையில் புதல்வன்

எத்தர்களையும், ஏமாற்றுக்காரர்களையும்,
ஓட  ஓட விரட்டிய மகான்

அவரை சோதிக்க நினைத்தவர்களை
வீதிக்கு செல்லவைத்தவர்

வணங்கியவர்களின்
வறுமையை ஓட்டிய கற்பக தரு

தீராத நோய்களையும்
தீர்த்து வைத்த தன்வந்திரி பகவான்

இன்றும் அவரை நினைத்து
வழிபடுவோரின் வினைகளை வேரறுத்து
வளமான வாழ்வை அளிப்பவர்.

அவர் மிகவும் போற்றி
பரவியது ராமநாமம்

அவரைப் போற்றி பணிவோம்.
இராம நாமம் சொல்லுவோம்.
இந்த ஜன்மம் கடைத்தேற

திருவண்ணாமலையில் அவர் அடங்கிய
திருக்கோயிலில் ஆராதனை
விமரிசையாக நடக்கும்


வாழ்வில் ஒரு முறையாவது
அங்கு சென்று பணிந்தால் நம்மை
வாட்டும்வினைகள் காணாமல் போய்விடும்
அந்த மகானின் கருணையினால் .

முடியாதவர்கள் மாடம்பாக்கத்தில்
தேனுபுரீஸ்வரர் கோயில் அருகில்
அமைந்துள்ள சித்தர் கோயிலுக்கு
சென்று வழிபட்டு உய்யலாம்.




ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(12)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(12)


பாடல்-12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிறங்கி 
நினைத்து முலைவழியே நின்று பால் சோர 
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்  
பனித்தலை வீழ நின் வாசற்க்கடைப் பற்றிச் 
சினத்தினால் தென்னிலங்கை கோமானை செற்ற 
மனத்துக்கினியானை பாடவும் நீ வாய் திறவாய் 
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் 
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய். 


பாடல் விளக்கம் 

இளங்கன்றுகளுடைய எருமைகள் பால் கறப்பார் இன்றி  
சுரந்தபால் மடியில் சேர்ந்துவுடன் கன்றுகள் தாயை நினைத்து கத்தியவுடன் தாய் எருமை தன்  கன்றுகளுக்கு அதை கொடுக்க நினைத்த மாத்திரத்தில் அதன் முலையில் பால் சுரந்து கொட்டகை முழுதும் தரையில் சிதறி சேறாகிவிடும். அப்படிப்பட்ட கால்நடை செல்வங்களை பெற்ற குடும்பத்தில் உள்ளவளே ! நாங்கள் அதிகாலைப் பனி எங்கள் தலைமீது விழ உன் வீட்டு வாசலில் காத்துக்கிடக்கிறோம் கோயிலுக்கு சென்று காமத்தினால் தவறிழைத்த இலங்கைக்கு அரசனான ராவணனை  அழித்த ஸ்ரீ ராமனை.நம் அனைவரின் மனதுக்கினியானை பாடவும் உன் பேருறக்கத்தை  விட்டு எழுந்து வா என்கிறாள் ஆண்டாள் இந்த பாசுரத்தில் 


இந்த பாசுரத்திலும் ஆண்டாள்
 உயிர்களின் உறக்கத்தை பற்றிதான் பேசுகிறாள். 

கன்றுகளின் குரலைக் கேட்டவுடன்.
 தாய் எருமை கன்று தன்  அருகில் இல்லாவிட்டாலும் அதை நினைத்த மாத்திரத்தில் பாலை சொரிகிறது தாய் எருமை. 

அதுபோல்தான் நாம்  இறைவனை 
நினைத்தவுடன் நாம் எதுவும் கேளாமலேயே 
அனைத்து இன்பங்களையும் தருகிறான்.

நம் மனதிற்கு ஆறுதல்  தருகிறான்
 துன்பங்களைப் போக்குகிறான் 

ராமாயணத்தில் வரும் சீதை பாத்திரம் 
என்பது நம்முடைய ஆன்மாவைக்
 (ஜீவாத்மா)குறிக்கும் 

பத்து தலை ராவணன் என்பது
 பத்து இந்திரியங்களைக் குறிக்கும் ஞானேன்ந்திரியங்கள் 5 கர்மேந்திரியங்கள் 5

காம வயப்பட்ட இந்திரியங்கள்  
ஆன்மாவை இறைவனிடமிருந்து பிரித்துவிடுகிறது

இறைவனிடம் இருக்கும்போது ஜீவனுக்கு 
அவன் மகிமை தெரிவதில்லை 

இறைவனை மறந்து உலக பொருட்களின் மீது 
ஆசைவயப்பட்டு துன்பத்தில் 
சிக்கிகொள்ளுகிறது ஜீவன் 

 இறைவனைப் பிரிந்தவுடன்தான்
 தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்து 
அவனுக்காக ஏங்குகிறது. 


அதை உணர்ந்த ஸ்ரீராமன் ராவணனை
(இந்த உலக விஷயங்களில் கொண்டுள்ள 
பற்றுக்களை அழித்து)  அழித்து சீதையை(ஜீவாத்மாவை தன்னிடம் சேர்த்துக்கொள்கிறான்)  மீட்கிறான் 

இந்த உலக சுகத்தில் மூழ்கி 
பகவானை மறந்து கிடக்கும் ஜீவனை ஸ்ரீராமனின்
 பெருமைகளைக் கூறி எழுப்புகிறாள் 
இந்த  பாசுரத்தில் ஆண்டாள் 

நாமும் உறக்கத்தை ஒழித்து 
 ராமனின் பேரை சொல்லுவோம் 
நம் மனதில் உள்ள
 ஆசைகளை வெல்லுவோம் 

சீரடி சாய்

சீரடி சாய் 

அரிது அரிது
மானிடராய் பிறத்தல் அரிது

நாம் பண்ணிய புண்ணியங்களினால்
இறைவன் மனமுவந்து அளித்த
பரிசு மானிட பிறவி

கிடைத்தற்கரிய இந்த
மானிட பிறவியைக் கொண்டு
மீண்டும் இந்த உலகில் பிறந்து
துன்பப்படாதிருக்கும் வழியை
நாடி பெறவேண்டும்

பிறப்பும் இறப்பும் ஒரு
இடைவெளி இல்லா வளையம்

இந்த வளையத்திலிருந்து
வெளிவருவது மிக கடினம்.

உண்மையில் நாம் பிறப்பையும்
இறப்பையும் கடந்த ஆன்மா

அழியும் இந்த இந்த உடல் என்னும்
கூட்டில் சிக்கி கொண்டதால்
நாம் ஆன்மா என்பதை
மறந்துவிட்டோம்.

ஆன்மா அழியாது. என்றும்
அதன் சக்தி குறையாது.

ஆனால் அது பிறவிதோறும்
தாங்கும் உடல் அழியும்

அணுக்களால் இணைந்த இந்த
உடலில் ஜீவன் வெளியேறிய பின்
இந்த உடல் மீண்டும்
அணுக்களாக சிதறி போய்விடும்.

ஒவ்வொரு பிறவியிலும் நாம்
முற்பிறவிகளில் சேர்த்துக்கொண்ட
வினைகளோடு ஒவ்வொரு
பிறவிகளிலும் வினைகளை
அதிகரித்துகொண்டே போகிறோம்.

வினைகளின் சுமை கூட கூட
நாம் அஞ்ஞானத்தில் மூழ்கி போய்
நம்முடைய ஆன்ம ஸ்வரூபத்தை
அறவே மறந்து போகின்றோம்.

வினைகளை அனுபவிக்கவே
பிறவிகள் போதுவதில்லை.

நாம் செய்யும் செயல்கள்
நம்முடைய எண்ணங்களை பொறுத்து
 நல்லவைகளாகவோ அல்லது
தீயவைகளாகவோ அமைகின்றன

இந்து சுழலிலிருந்து நாம்
விடுபடாவிட்டால்
நம் பிறவிகளுக்கு
முடிவே இல்லை

இறைவன் நமக்கு பல கோடி
இன்பங்களை நாம் கேளாமலே
அளித்திருக்கிறான்.

அவைகளை
அனுபவிப்பதில் தவறில்லை

ஆனால் அதற்காகத்தான் பிறவி என்று
நினைத்தோமானால் அது தவறு

அது நமக்கு எண்ணற்ற
தொல்லைகளுடன் முடிவில்லாப்
பிறவிகளைத்தான் தரும்

ஏனென்றால் இவ்வுலக
இன்பங்கள் நிலையற்றவை

ஒரு மரணம் அனைத்திற்கும்
முற்றுப்புள்ளி வைத்துவிடும்

இந்த உடல் நோயுற்றால் உடல் மூலம்
பெரும் இன்பங்கள் அனைத்தும்
நின்றுவிடும்

மனம் உடைந்தால் நாம் இதுவரை
பெற்ற இன்பங்கள் அனைத்தும்
அணை உடைந்தால்  வெளியேறும் நீர் போல்
அனைத்தும் வெளியேறிவிடும்

இந்த உலகத்திற்கு நாம் வருவதன்
முக்கிய நோக்கம் நம்மை
படைத்தவனை அறிந்துகொள்வதே.

நம்மை படைத்த இறைவன்
நம் இதயத்திலே நம்மோடு
எப்போதும் இருக்கிறான்.

அவனை தேடி நாம் எங்கும்
செல்ல வேண்டியதில்லை.

ஆனால் நம் மனம்
அவனை நாடுவதே இல்லை
அது ஏன்?

ஏனென்றால் மனதிற்கு
இறைவனை உணரும் சக்தி
கிடையாது

மனம் என்பது உலக
சிந்தனைகளால் நிரப்பட்டது
அதில் உள்ள உலக சிந்தனைகளை
இறை சிந்தனைகளால்
அகற்றுதல் வேண்டும்.

நம்மால் அதைச்
செய்ய முடியாது

அதை செய்ய இறை சக்தி படைத்த
ஒருவரிடம் நம் மனதை
ஒப்படைக்க வேண்டும்.

அப்படிப்பட்ட மகான்களில்
ஒருவர் சீரடி சாயிநாத்

அவர் இந்த உடலை உகுத்தாலும்
அவரை அன்போடு நினைத்து
பொறுமையோடு அவர் அருளை
 யாசிப்பவர்களுக்கு
இன்றும் தன்  அருளை
வாரி வாரி பொழிகிறார்.

அவர் பாதங்களை சரணடைவோம்
அவர் நாமத்தை சொல்லுவோம்.



துன்பங்கள் நிறைந்த இந்த வாழ்வை
இன்பங்கள் நிறைந்த
ஆனந்த வாழ்க்கையாக்குவோம்.

ஓம் சாய் ராம்