Tuesday, December 24, 2013

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(10)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(10)


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் 
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் 
நாற்றத் துழாய் முடி நாரணன் நம்மால் 
போற்றப் பறை தரும் புண்ணியனால் 
பண்டொருநாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த 
கும்பகர்ணனும் தோற்றம் உனக்கே 
பெருந்துயில்  தந்தானோ 
ஆற்ற அனந்தல் உடையாய்
அருங்கலமே  தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய் 

பாற்கடலில்  பாம்பணையில்  பள்ளிகொண்டிருந்த
பரந்தாமன். நாம் வாழும் இந்த பாருக்கு
எதற்கு வந்தான்?

அவனை மறந்து,அகந்தையின் பாற்பட்டு அரக்கமனம் கொண்டு அலைந்து அனவருக்கும் துன்பம் தந்து கொண்டிருந்த தீயவர்களை அழித்து இந்த உலகமும் , உலக மக்களும் உய்யவேண்டி(தற்காலத்தில் 
பார் கலாசாரத்திலும் பாப் கலாச்சாரத்திலும்
சிக்கி  தன் நிலை இழந்து விலங்குகள்போல்
வாழ்க்கை  நடத்தி விளங்காமல் போவதைக்
காண சகியாதுதான்) பத்து அவதாரங்களை
எடுத்தான்.நிலைமையை சரி செய்தான்
சென்றுவிட்டான். மீண்டும் பரமபதத்திர்க்கே

மோகத்திலும், போகத்திலும் மூழ்கி
மனமும் உடலும் கெட்டு மதியிருந்தும்
மதியை சூடிய மகேசனை நினையாமல்
மன்னுபுகழ் கோசலை தன் மணி வயிறு
வாய்த்தவனாகிய கோசலராமனை
வணங்காது ,கோக்களை காக்கவேண்டி
கோகுலத்தில் அவதரித்து நமக்கு
நல்வழி காட்ட கீதையை தந்தருளிய
கண்ணனை கருத்தில் கொள்ளாது
உண்டு ,இரைப்பையை நிரப்பி
உறவுகொண்டு, உறங்கி
எமனுக்கு இரையாகிகொண்டிருக்கும்
இந்த மனிதகுலத்தை மீண்டும் நல்வழிப் பாதையில்
திருப்ப மனம் கொண்டான்.

எண்ணற்ற ஞானிகளையும், ஜீவன்முக்தர்களையும்
அவ்வப்போது அனுப்பி வைத்துக்கொண்டே இருக்கிறான்.

அவர்கள் சென்றதும் மீண்டும் முருங்கை மரம் ஏறும் வேதாளம்போல்
இந்த மனித குலம் அறியாமையில் உழன்று கொண்டுதான்
இருக்கிறது.

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல புவிஅன்னை
இந்த மதிகேடர்களையும் குடிகேடர்களையும் எவ்வளவு காலம்தான் பொறுப்பாள்?

அவளே ஆண்டாளாய் அவதரித்தாள்
அறியாமையில் உழலும் தன் குழந்தைகளுக்கு அரங்கனை அடையும் வழியைக் காட்டஎல்லா உபதேசங்களையும் கேட்பதுபோல்
தலையை ஆட்டிவிட்டு தறிகெட்டு அலைந்து
தளர்ந்துபோய் உறங்கி, உறங்கியது மட்டுமல்லாமல்
மதுவில் மயங்கி பிறவியின் நோக்கத்தை அறியாது மண்ணுக்கும் விண்ணுக்கும்
மண்டூகம் போல்நீரிலிருந்து  நிலத்திற்கும்
 நிலத்திலிருந்து நீருக்கும்
போய் வந்து கொண்டிருக்கின்றனர்.
முடிவில் காலன் என்னும் பாம்பிற்கு
இரையாகி வீணே மடிகின்றனர்.

கேட்பாரின்றி அலையும் மாடுகள்போல
புலன்கள் மனம் காட்டும் வழியில்
சென்று மனிதர்களை
தவறான பாதையில் அழித்து சென்று
மீள முடியா நரகத்தில் தள்ளுவதை
அறியாது மயக்கத்தில் கிடக்கின்றனர்.

ஆண்டாள் மீண்டும் ஏன்  இந்த உறக்கம் ?
ஏன்  இந்த உறக்கம்? உறக்கத்தை விட்டு எழுந்திருந்து
கண்ணனை வணங்க வாருங்கள் என்று
கடந்த 9 நாட்களாக வருந்தி அழைக்கின்றாள்.

ஆனால் யார் கேட்கிறார்கள்?
புலனின்பமே புகலிடமாக
பிறர் தன்னை புகழ்வதே
மகிழ்ச்சியாக கொண்டு இப்புவியில்
கிறங்கிப்போய் உறங்கி கிடக்கின்றனர்.

வள்ளலார் விழித்திரு என்றார்.
எதற்காக?

இறைவன்  அருள் எப்போது கிடைக்கும்,
எவ்வாறு கிடைக்கும், எந்த வடிவில்  கிடைக்கும்
என்பதை அறியமுடியாது. அதனால்தான்
உறங்காமல் நாம் விழிப்போடு விழித்திருந்தால்தான்
அவனை காண முடியும். அவன் அருளைப்
பெறமுடியும்.என்றார் யாரும் கேட்கவில்லை
.
திருவண்ணாமலை மகான்  சேஷாத்ரி ஸ்வாமிகள் ,
தூங்காதே ,தூங்கினால் எமன் உன் உயிரை
கவர்ந்து சென்று விடுவான் என்று எச்சரிக்கின்றார்.

பிறந்தவர் இறப்பது உறுதி அதுபோல்
இறந்தவர்.  பிறப்பது உறுதி என்றான் கீதையிலே கண்ணன்

உறங்குவதுபோலும் சாக்காடு. என்றார் வள்ளுவர்
சாவதர்க்கா இந்த உலகில் பிறந்தோம்?
சாகாக் கலையை அறிந்து கொள்ளத்தானே
இந்த உலகில் பிறக்கிறோம்?

வந்த வேலையைவிட்டுவிட்டு
வம்பு தும்புகளில் மாட்டிகொள்வதிலேயே
வாழ்வு கழிந்துவிடுகிறது

நம்முடைய ஆயுள் இந்த உலகில்
100 ஆண்டுகள் என்று வைத்துக்கொண்டால் 50 ஆண்டுகள் உறங்கியே கழித்துவிடுகிறோம்,

மீதம் உள்ள 50 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் ஒன்றுமறியா  பாலகனாகவும், கல்வி கற்கவும் (தற்காலத்தில் சாகும்வரை கவைக்குதவாத கல்வியை கற்றுக்கொண்டிருக்கிறார்கள்,மற்றும் ஆயுள் முழுவதும் காசை தேத்துவதிலேயே காலத்தை கழிக்கிறார்கள் .)நோய்கள், பசி, முதுமை, துன்பம், துக்கம், துயரம் என வாழ்க்கை ஓடிவிடுகிறது. என்று தொண்டரடிப்பொடிஆழ்வார் தெரிவிக்கிறார்.

அவர் காலத்தில் இல்லாத ஆயிரக்கணக்கான சமாச்சாரங்கள் தற்போது நம்முடையே முழு நேரத்தையும் ஆக்கிரமித்துள்ளன
அதையெல்லாம் கருத்தில் கொண்டால். நாம் வாழும் வாழ்க்கையை வாழ்க்கை என்றே சொல்ல முடியாது.அதைத்தான் ஆண்டாள் உண்பதற்கும்,
உறங்குவதர்க்குமே பிறவி எடுத்து எதற்கும் பயனில்லாது
மாண்டுபோன கும்பகர்ணன் மடியும்போது அந்த உறக்கத்தை உனக்கு தந்துவிட்டானோ என்று கேட்கிறாள்.

அவள் ஆண்டுதோறும்
இதை நமக்கு சொல்லிக்கொண்டிருக்கிறாள்.

கேட்பவர் வெகு சிலரே.
மற்றவரெல்லாம் இந்த உபதேசங்களை காதில் வாங்கி கொள்ளாமல் காதிருந்தும் செவிடராய்
கண்ணனின் திருவடிவைக் கண்டு வணங்காமல்
கண்ணிருந்தும் குருடராய்
உள்ளம் என்னும் கோயில்
அந்த உலகளந்த உத்தமன்
தன்னை குறுக்கிக்கொண்டு
நம்முடைய வருகைக்காக காத்திருப்பதை
அறியாமலும் உணராமலும் இருக்கிறீர்களே
உங்கள் மனக்கதவை அவனுக்காக திறவுங்கள்.
திறந்தால் உள்ளே அவன் புலப்படுவான் என்று
அன்போடு கூறுகிறாள்.

என்ன செய்வது?
தூங்குபவரை எழுப்பமுடியும்
ஆனால்  பாசத்திற்கும் பந்தத்திற்கும்
அடிமையாகி கிடந்து தூங்குவதுபோல்
 நடிக்கும் நம் போன்றோரை எப்படி எழுப்ப முடியும்?

இருந்தும் ஆண்டாள் நம்மை விடப் போவதில்லை.
(இன்னும் வரும்)
Pic. courtesy-google images. 

1 comment:

  1. அழகான பாசுரம் + படங்கள் + விளக்கங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    தொடரின் பகுதி 100/1/2 + 100/2/2 அண்ணாவின் வருகைக்காகக் காத்திருக்கின்றன. அன்புடன் VGK

    ReplyDelete