Thursday, December 26, 2013

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(14)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(14)


உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் 
செங்கழுநீர் வாய் நெகிழ்ந் தாம்பல்வாய் கூம்பின காண் 
செங்கல்பொடிக் கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய் !நாணாதாய் நாவுடையாய் சங்கொடு சக்கரமும் ஏந்தும் தடைக்கைய்யன் பங்கயக் கண்ணானை பாடேலோ ரெம்பாவாய்.  


விளக்கம் 

வீட்டின் பின்புறத்தில் உள்ள குளத்தில் ஆதவன் வரவை முன்னிட்டு அல்லி  மலர்கள் விரிந்த தன்  இதழ்களை மூடத் தொடங்கிவிட்டன 
தாமரை மலரோ தன் இதழ்களை விரிக்கத் தொடங்கிவிட்டது காவிநிற உடை அணிந்த துறவிகள் திருக்கோயிலில் இறைவனை எழுப்பும் விதமாக சங்கினை முழங்க செல்லுகிறார்கள். 
எங்களை முதலில் வந்து எழுப்புவதாகச் சொல்லிவிட்டு இன்னும் உறங்கிக்கொண்டிருக்கும் நங்கையே 
சொன்னபடி செய்யாமைக்கு நாணாமல் வருத்தம் தெரிவிக்காது இருக்கும் நாவுடையவளே சங்கும் சக்கரமும் கையில் ஏந்தி இவ்வுலகைக் காக்கும் தாமரை போன்ற கண்களை உடைய கண்ணனை 
பாடித் துதிக்க வாராய் என்கிறாள் ஆண்டாள். 


  இந்த பாடலில் ஆதவனைக்  
 காண தாமரை மலர்கிறது 


அதுபோல் நம் மனமும் தாமரை போன்ற 
கண்களை உடைய சங்கு சக்கரத்தினை கையில் ஏந்தி காட்சி தரும் கண்ணனைக் கண்டதும் மலர வேண்டும். 

ஆனால் நம் மனம் இன்னும் இரவில் 
இருளில்  மலரும் அல்லியைப் போல் 
உறக்கத்திலேயே இருக்கிறது. 

அந்த மந்த நிலையிலேயே நாம் 
இருப்பதால்தான் கண்ணனின் வருகை
 நமக்கு மகிழ்ச்சியளிக்க வில்லை.

படுக்கையில் இருந்து எழுந்து நீராடி 
இறைவனை தரிசிக்கச் செல்ல மனமில்லாமல் 
தமோ குணத்தில் அழுந்தி கிடக்கிறோம். 

துறவிகள் இறைவனை கோயிலில் 
சங்கை ஊதி துயிலெழுப்பும் ஒலியைக் 
 கேட்டும் உணர்வின்றிக் கிடக்கிறோம்.
 ஊழ்வினையினால். 

குருவாயூரப்பன் சுப்ரபாதத்தில் பட்டத்ரி
 "ஹே .குருவாயூரப்பா "நான் மத்தனாயும் ஜடமாகவும் இருக்கின்றேன் 
நல்ல குணங்கள் ஒன்றும் இல்லை.
வாழ்வில் தரித்திரம்.துக்கம் என எப்போதும் 
அவைகளைப் பற்றியே என் சிந்தனைகள் ஓடுகிறது.
 உன்னை நினைப்பதற்கே மனம் 
செல்ல மாட்டேன் என்கிறது என்கிறார்.

அதுபோலத்தான் நம் மனம் எப்போதும் 
உடலையும் குடலையும் கவனிப்பதற்கே 
பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறது.

 மீதி நேரம் தற்பெருமை பேசி திரிவதிலும்>
 பிறர் மீது குறை கூறி அலைவதிலும்
.பிறருக்கு கேடு நினைப்பதிலும் >நோயிலும்
 மீதி உறக்கத்திலும் வீணாகிப் போய்விடுகிறது. 


மார்கழி மாதம் மட்டுமாவது 
பகவானுக்காக ஒதுக்கி அவன் அருளைப் பெற வழி 
காட்டத்தான்  ஆண்டாள் இப்புவியில் அவதரித்தாள்

அப்படியும் நம்முடைய 
அறியாமையினால் நாம் இன்னும் 
அவள் உபதேசங்களை 
மனதில் கொள்ளாது மயங்கி கிடக்கிறோம்.

இன்னும் காலம் கடந்துவிடவில்லை.
 இனியாவது உறக்கத்தை விட்டொழித்து
 பகவானின் புகழைப் பாடி 
அவன் பாதங்களை சரணடைவோம். 

ஓம் நமோ நாராயணாய   


2 comments:

  1. //மார்கழி மாதம் மட்டுமாவது பகவானுக்காக ஒதுக்கி அவன் அருளைப் பெற வழி காட்டத்தான் ஆண்டாள் இப்புவியில் அவதரித்தாள்//

    அவதரித்த ஆண்டாள் வாழ்க !
    அவள் புகழ் பாடும் நம் அண்ணா வாழ்க!!
    அனைவரும் லோகத்தில் வாழ்க வாழ்க !!!

    ReplyDelete
    Replies
    1. எல்லோரையும் வாழ்த்தும் VGK வாழ்க

      Delete