Saturday, August 31, 2013

தெய்வம் நின்று கொல்லும்


தெய்வம் நின்று கொல்லும்





உள்ளம் என்பது ஒரு கோயில்
அதில் தெய்வத்தைத்தான்
குடி வைக்க வேண்டுமே தவிர
குடி கெடுக்கும் அகந்தைக்கு
இடம் தரக்கூடாது

கோயில் தீபங்கள்தான்
ஒளி சிந்த வேண்டுமே தவிர
சினம், மோகம் போன்ற துர்நாற்றம் வீசி
அழிவைத் தரும் குப்பைகளை
எரிய அனுமதிக்கக்கூடாது

கோயிலில்  குடி இருக்கும் இறைவனுக்கு
நறுமணம் வீசி நன்மை பயக்கும் மலர்களை
சாற்றி மகிழ வேண்டுமே அல்லாது மணமில்லா
மலர்களை அணிவித்தல் கூடாது

அதைப்போல் உள்ளத்தில் அன்பு ஊற்றெடுத்து
அது பெருக்கெடுத்து சுற்றிப் பரவ வேண்டும்
மாறாது அது அழுக்காறு என்னும்
பொறாமை குணமாக
மாறி தானும் கெட்டு பிறரையும் அழிக்கும்
செயலாக  விடக்கூடாது

இறைவன் சந்நிதியில் அமைதி நிலவ வேண்டும்
ஆனந்தம் பெருக வேண்டும்.அதைபோல்தான்
ஒவ்வொருவர் உள்ளத்திலும் அமைதி பெருகினால்
அன்பு ஊற்றெடுத்தால் இந்த அவனியெல்லாம்
அவன் அருட்ப்ரவாகம் பெருகி
அனைவருக்கும் நன்மைகள் விளையும்

ஒவ்வொரு உயிரின் இதயத்திலும்
இறைவன் குடி கொண்டுள்ளான்

அவர்கள் அறிந்தாலும் அறியாவிட்டாலும்
அனைத்தையும் அவன் கண்காணிக்கின்றான்.

இந்த உண்மையை உணர்ந்துகொண்டோர்
தவறு செய்வதில்லை

உணராத மூடர்கள் இறைவன் எங்கோ
இருக்கிறான் என்று எண்ணி
அவனை நினையாது தொடர்ந்து
தவறுகளை செய்து பாவக் குழியில்
வீழ்ந்து துன்புறுகின்றனர்.

அவனை உணர்ந்தவர்களோ
மன அமைதியும் ஆனந்தமும் பெற்று
இக பர சுகங்களை அடைந்து
இனிதே வாழ்கிறார்கள்.

எச்சரிக்கை.
நம் செயல்கள்  அனைத்தையும் நம்மை
படைத்த தெய்வம் கண்காணிக்கிறது
என்பதை மறவாதீர்.

யாராயினும் தவறு செய்தால்
தண்டனை தவறாமல் உண்டு.

தெய்வம் நின்று கொல்லும்  

Friday, August 30, 2013

கோகுலாஷ்டமி சிந்தனைகள்

கோகுலாஷ்டமி சிந்தனைகள் 





கோகுலாஷ்டமியை
கோலாகலமாக
கொண்டாடி ,மகிழ்ந்தது
கோவிந்தனின்
அடியார்கள் கூட்டம்




கண்ணுக்கினியானை
காண்போர் உள்ளத்தை
கொள்ளை  கொள்வானை
தன்னை கொல்ல கம்சன்
அனுப்பிய மதம் கொண்ட
யானையை கொன்றவனான கண்ணன்
மதம் பிடித்து மற்றவர்களை
துன்புறுத்தும் மனிதர்களை திருத்தி
மனித நேயமுள்ளவர்களாக
மாற்றியருளட்டும்




அழியும் உடலே தானென்று எண்ணி
மதி மயங்கி இருந்த மக்கள் கூட்டத்திற்கு
தான் உடலல்ல அழியாத,எந்த சக்தியாலும்
அழிக்கமுடியாத ஆன்மா என்று
ஒவ்வொரு மனிதரின் உள்ளத்தில்
நல்ல சக்திகளுக்கும் தீய சக்திகளுக்கும்
நடைபெறும் இடைவிடாத போரின் இடையே
இனிக்க இனிக்க தன்  திருவாயால் மொழிந்த
கீதை ஆசிரியனான கண்ணனுக்கு
நாம் அனைவரும் நன்றி கூறுவோமாக




உடலும் உடலும் சேரும் காம இச்சையை
இன்பமென்று எண்ணி திரிந்த காமுகர்களுக்கு
நிலைத்த இன்பம் ஜீவாத்மாவும்  பரமாத்மாவும்
கூடுவதுதான் என்று தன்  ராச  லீலை மூலம்
உலகுக்குணர்த்திய உத்தம பேரொளியே
உனக்கு வணக்கம்

எதைக் கொண்டு வந்தாய்
நீ இவ்வுலகத்திற்கு வரும்போது
எதைக் கொண்டு செல்லமுடியும்
உன்னோடு  இவ்வுலகத்தை விட்டு நீங்கும்போது
பற்றுகளை விட்டுவிட்டு பரந்தாமனாகிய
என் பாதங்களை பற்றிக்கொள் என்று
பரம கருணையுடன் பாருக்குரைத்த
அந்த பரம தயாள மூர்த்தியின்
பாதங்களை பற்றிகொள்வோம்.




உன்னை கண்டாலும் இன்பம்
உன் சரிதம் கேட்டாலும் இன்பம்
உன் மொழிகளை செவி மடுத்து செயல்பட்டால்
இப்புவியில் உள்ளோரை என்றும் பற்றாது துன்பம்

Pic.courtesy-google images. 

Tuesday, August 27, 2013

அன்றே சொன்னான் ஆயர் குல சிறுவன்

அன்றே சொன்னான் 
ஆயர் குல சிறுவன் 





ஆடையின்றி பொது இடத்தில் குளித்தல்
ஆபத்தை விளைவிக்கும் என்று அன்றே
சொன்னான் ஆயர் குல சிறுவன்

அப்படி செய்த மங்கையரின் ஆடைகளை
ஒளித்து   வைத்தான் அவர்களின்
தவறை  உணர  வைத்தான்

ஆண்கள் மட்டும்  ஆடையின்றி
திரிவது மட்டும் முறையோ
நாங்களும் ஆடையின்றி
திரிவோம் ஆட்டம் போடுவோம்
என்று பொது இடத்தில்
ஆர்பரிக்கின்றார்.அகிலம்
முழுவதும் பெண்கள் இன்று

ஆனால் ஆபத்தில் சிக்கி விட்டால் மட்டும்
கூப்பாடு போடுகின்றார். அவர்களுக்கு
பாதுகாப்பு இல்லை என்று.

அவர்களின் ஆட்டத்தை அணு அணுவாக ரசிக்கும்
காமக் கொடூரன்களும்  கூட்டமும் அவர்களோடு
சேர்ந்துகொண்டு கூச்சல் போடுகின்றார். நீதி கேட்டு

இன்று வீட்டிலும் பாதுகாப்பில்லை,
பொது இடத்திலும் பாதுகாப்பில்லை பெண்களுக்கு.
அது சிறு குழந்தையாயினும்
பருவமடைந்த மங்கையாயினும்,
வயது கடந்தவராயினும் காமகொடூரன்களின்
இச்சைக்கு  பலியாகும் கொடுமை அனுதினம்
 நடக்கும்  செய்தியாகிவிட்டது.

கடமையைச்  செய்
பலனை எதிர்பாராதே
என்றான் அன்று கண்ணன்

ஆனால் இன்றோ
கடமையை செய்வதற்கு
காசு கேட்கின்றார். தராதவர்கள் மீது
தரம் குறைந்த வார்த்தைகளை
அள்ளி வீசுகின்றார்
இந்த தரணியிலே



கண்ணா நீ படைத்த படைப்புக்கள்
எல்லாம்  தரம் தாழ்ந்து போய்விட்டன
உன்னையும் மறந்தனர்
உன் அறிவுரைகளையும் மறந்தனர்.
இன்று   அல்லல்படுகின்றனர்.

ஒழுக்கமும் இல்லை
ஒழுங்கும் இல்லை இவ்வுலகில்

வெளியிலும் புழுக்கம்
சுற்று சூழல் கெட்டதினால்

உள்ளத்திலும் புழுக்கம்
சுயநலமும் பொறாமையும்
நிறைந்து வழிவதனால்.

நீ படைத்த இந்த உலகை நீதான்
சரி செய்ய வேண்டும் ஹரியே
அனைவருக்கும் உன் அவதார திருநாளிலிருந்து
 நல்ல புத்தி பிறக்குமாறு வரம் தருவாயே.

pic. courtesy-google images 

கண்ணனை நினைத்தால்

கண்ணனை நினைத்தால் 






கள்ள மனம் காட்டும் பாதையில்
காலமெல்லாம் சென்று கண்ட
பலன் என்னவென்று கணநேரமாவது    
சிந்தித்துப் பார்ப்பீர்   மானிடரே  ?

கடன்  வாங்கி காசை  தொலைத்து  
கற்ற கல்வியைக் கொண்டு
கடல்கடந்து சென்று பாழும் பொருளைத்
தேடி என்ன  பயன் ?

இன்பம் பொருட்களிலே தான்
இருக்கிறதென்று
நம்பி அழியும் பொருட்களை
பார்த்து பார்த்து
வீட்டை நிரப்பும் மானிடரே
சற்றே சிந்தியுங்கள்.

பொருட்களில் இன்பம் இல்லை
ஒருநாள் அழிந்துபோகும் இந்த
உடலிற்குள்தான்    அந்த   இன்பம்
ஒளிந்திருக்கிறது   என்பதை   என்றுதான்  
அறிந்துகொண்டு  தெளிவீரோ ?

காம  சேற்றில்  தள்ளி
காலமெல்லாமின்பம்
தருவதுபோல் தோற்றமளித்து
மீளா நரகத்தில்  தள்ளும்
எண்ணங்களுக்கு மனதில்
இடம் தருவதை என்றுதான்
விடைகொடுக்க போகின்றீரோ ?

உருவமற்று  வெளியில்
திரிந்துவந்த  ஆன்மா
பிண்டமாய்  தாயின்  வயிற்றில்
புகுந்து குழந்தையாய்
உருவெடுத்து  வெளிவந்த  நாள்
முதல் தன்   வடிவத்தை
மாற்றிக்கொண்டே
இருக்கும் உண்மையைக் கண்ட
பின்னும் மூடராய்
இருந்து மடிவதேனோ?

அழியாப் பதம் அளிக்க
காத்திருக்கும்
ஆபத்பாந்தவனை,
ஆயர்குல திலகனை
ஒவ்வொரு கணமும்
நினையுங்கள்.

பக்தருக்கு  அனைத்தையும்
கேளாது வழங்கும்
கண்ணனை நினைத்தால்
மாளாது சலிக்கும் மனம் அடங்கும்
அவன்  திருவடியில் ஒடுங்கும்
பரிதியைக் கண்ட தாமரை போல்
உள்ளம் மலரும்
வாழ்வு சிறக்கும்.

pic. courtesy-google images
-

என்ன புண்ணியம் செய்தாய் வேய்ந்குழலே?

என்ன புண்ணியம் செய்தாய் 
வேய்ந்குழலே?



வேய்ந்குழலூதும் கண்ணா
ஒரு சாதாரண மூங்கில்
உன் கொவ்வை  செவ்வாயில்
தவழ அது என்ன
புண்ணியம் செய்தது?



அண்ணன் பலராமனுடன்
கண்ணன்  விருந்தாவனத்தில்
பரந்த பசும்புல்வெளியில்
பசுக்களை மேயவிட்டான்.

கையிலெடுத்தான் குழலை
இனிய கீதம் இசைக்கலானான்

எங்கும் பரந்த இறைவனைப்போல்
எங்கும் நிறைந்த காற்று கண்ணன்
வாயின் மூலம் மூங்கிலால் செய்யப்பட்ட
குழலில் நுழைந்து வெளியேறி
காற்றில்  கலந்தது
இனிமையான
தெய்வீக இசையாக

நாத வடிவமான பரம்பொருளாம் கண்ணன்
இசைக்கும் ஓசை இசையாகி நிலத்திலும்,
நீரிலும், ஆகாயத்திலும், ஒவ்வொரு
உயிரின்  ஆன்மாவிலும்
ஊடுருவத் தொடங்கியது.

அவரவர் கடமைகளில் ஈடுபட்டிருந்த
ஆண்களும் பெண்களும் இசையை
கேட்ட மாத்திரத்தில் தங்களை
இழந்தனர்

.தங்கள் செய்து கொண்டிருக்கும்
பணியை  மறந்து சிலைபோல்
இசை வந்த திக்கை
நோக்கி நின்றனர்

பசுமையான் புல்லை
ருசித்து தின்று கொண்டிருந்த
 பசுக்கள் புல்லை மேய்வதை
நிறுத்திவிட்டன.




இசையில் மயங்கிய அவைகள்
சித்திரத்தில் உள்ள உருவங்கள்போல்
போல் நிலைத்து அசையாது நின்றன.

பசுக்கள் அசையாது நின்றதை
கண்ட ஆயர்கள்
இசை வந்த திசையை நோக்கி
தங்கள் பார்வையை செலுத்தினர்



அங்குமிங்கும் துள்ளி திரிந்து
ஓடிக் கொண்டிருந்த புள்ளி மான்களும்
 தங்கள் ஓட்டத்தை நிறுத்திவிட்டு
ஓசை வந்த திசையை  நோக்கி
கண்ணன் அருகில் சென்று நின்றன

ஆங்காங்கே பறந்து சென்றுகொண்டிருந்த
பறவைக் கூட்டங்கள் வானில் தாங்கள்
பறப்பதை விட்டுவிட்டு கண்ணனின்
குழலோசை கேட்கும்
இடத்திற்கு விரைந்தன

 

சப்தமிட்டுக்கொண்டு
ஓடிக்கொண்டிருந்த ஆறுகளும்
தெய்வீக கீதத்தை இசைக்கும்
கண்ணனின் திருவடிகளை வருட
அவனை நோக்கி வந்தன





தோகை  விரித்தாடும்
மயில்களோ தாங்கள் ஆடிய
ஆட்டத்தை நிறுத்திவிட்டு
கோபாலனின் இசைகேற்ப
தங்கள் நடனத்தை மாற்றி
ஆடத் தொடங்கின

( இன்னும் வரும் )

This tamil poem  is based on the article What is so special about Krishna. written by Mr. V.S. Krishnan published in vsk_tiruppugazh@yahoo.com

Pic. courtesy-google images