Saturday, August 24, 2013

எதற்கு ?

எதற்கு ?

அகிலமனைத்தும் உன் வடிவாய் இருக்க
அதை உணராது ஆலயங்களில் மட்டும்
நீ   இருப்பதாக கொண்டு வணங்குவது எதற்கு?

உறங்குவதுபோல் உறங்காமல் விழி
மூடியிருப்பதுபோல் பாவனை செய்து
பாம்பணையில்  படுத்துறங்கும்  பரந்தாமனுக்கு
உரக்க வாய்விட்டு கூப்பாடு போட்டு
பிரார்த்தனை  செய்வது எதற்கு?

மூன்று கண்ணையும் மூடிக்கொண்டு எப்போதும்
தியானத்தில் அமர்ந்து மோனத்தில் திளைக்கும்
முக்கண்ணனுக்கு மணியோசை எழுப்பி
மத்தளங்கள் தட்டி பூஜை செய்வது எதற்கு?

அண்டத்தை படைத்தவளாம் அகிலமெங்கும்
நிறைந்தவளாம் ,ஒவ்வொரு உயிருள்ளும்
இருந்து இயக்குபவளாம்   அன்னை பராசக்தியை
அழுது,தொழுது, ஆர்பாட்டமான
பூஜைகள் செய்வது எதற்கு?

பொய்யான  இவ்வுடலில் உறையும் வாலையே
மெய்யான தெய்வம் என்று
வாழையடிவாழையென
வந்துதித்த சித்தர்கள் பலரும்
செப்பிய மொழிதன்னை மறந்து புறவுலகிலே
அவளை தேடி மாய்கிறது மனிதர் கூட்டம்.

இறை வடிவம் இந்தஉடலென்றால்
அதனுள்ளே உறையும்
ஆன்மா இறைவனன்றோ?

வடிவத்தில் செலுத்தும் மனதை
உள்ளே உறையும் ஆன்மா மீது செலுத்துவீர்
அருளையும்  ஆனந்தத்தையும் பெறுவீர்.

நம் இதயத்திற்குள் ஒளிரும்  தெய்வம்
அங்கிங்கெனாது எங்கும் நிறைந்துள்ள தெய்வம்
உள்ளத்தில் உணர்வோடு அன்போடு
அனைத்து உயிர்களிடம் அன்பு காட்டி
நினைத்து போற்றினால்போதும்
அக்கணமே அருள் செய்யும் அந்த தெய்வம். 

8 comments:

  1. /// வாழையடிவாழையென வந்துதித்த சித்தர்கள் பலரும் செப்பிய மொழிதன்னை மறந்து புறவுலகிலே அவளை தேடி மாய்கிறது மனிதர் கூட்டம்...///

    உண்மை தான்...

    ReplyDelete
  2. //அகிலமனைத்தும் உன் வடிவாய் இருக்க
    அதை உணராது ஆலயங்களில் மட்டும்
    நீ இருப்பதாக கொண்டு வணங்குவது எதற்கு?//

    சரியான கேள்வி தான். இருப்பினும் ஸத்சங்கத்தை சேர்க்கவும் ஒருங்கிணைக்கவும் ஆலயங்கள் ஆற்றும் பங்கு இன்று அதிகமே.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மலை மேல் கோயில் கொண்டுள்ள
      இறைவனை தரிசிக்க பல படிக்கட்டுகள்
      ஏறி செல்ல வேண்டியுள்ளது

      அதைபோல் ஒவ்வொரு உயிரின்
      உள்ளே உறையும் அந்த பரம்பொருளை
      உணரவும் பல தடைகளை தாண்டி
      செல்ல வேண்டியுள்ளது.

      உண்மைப் பொருளை
      உணர்ந்து கொள்ள ஒவ்வொரு
      படியாகத்தான் கடந்து செல்ல வேண்டும்.

      அதில் சில படிகளைக் கடந்தவர்களுக்கு
      இந்த கருத்துக்கள் உதவியாக இருக்கும்.

      அதனால்மற்ற எந்த வழியையும்
      குறை கூறுவதாக எண்ணக்கூடாது.

      Delete
  3. உள்ளத்தில் உணர்வோடு அன்போடு
    அனைத்து உயிர்களிடம் அன்பு காட்டி
    நினைத்து போற்றினால்போதும்
    அக்கணமே அருள் செய்யும் அந்த தெய்வம்.

    அன்பே சிவம்
    அன்பே சிவம்

    ReplyDelete
    Replies
    1. அன்பு கிடைக்காதவன்
      அயோக்கியனாகிறான்

      அன்பு கிடைத்தவனோ
      அதை உணராமல் போகிறான்.

      அன்பினால்
      உயிர்கள் இன்புறுகின்றன

      அன்பு ஒரு எல்லைக்குள்
      நின்றுவிட்டால்
      அது பாசம்

      அதுவே அனைத்து எல்லையையும்
      தாண்டிவிட்டால் நேசம்

      சுயநலம் கொண்டோர்
      அன்பு பாராட்டுவதுபோல் நடிப்பது
      வெறும் வேஷம்.

      அவர்கள் உள்ளத்திலிருப்பதோ
      ஆலாகால விஷம்

      அதை அறியாவிட்டால்
      மனிதர்கள் போவார் மோசம்.

      Delete