Thursday, October 31, 2013

தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்

தீப ஒளி  திருநாள் வாழ்த்துக்கள் 

தீபாவளி பற்றிய கதைகள்
ஒரு பக்கம் இருக்கட்டும்.
புராணங்கள் இருக்கட்டும்.

ஒளி இருக்கும் இடத்தில்
இருள் இருக்காது

அறியாமை என்னும் இருள் நீங்கினால்
அறிவில் ஒளி உண்டாகும்
சிந்தனையில் தெளிவு உண்டாகும்.

இறைவன் ஒளியாய் இருக்கின்றான்
நம் உள்ளத்தில்
புறத்தே ஆதவனாய் ஒளி வீசி
இந்த அவனியை இயக்குகின்றான்

புறத்தே உள்ள அவனை
அகத்தேயும் கண்டு ஆனந்தம்
அடைய செய்யும் முயற்சிகளே
விளக்கை ஏற்றுதல், வெடிகளை வெடித்து
அதிலிருந்து வெளிப்படும் வண்ண வண்ண ஒளி
சிதறல்களை கண்டு மகிழ்வது.

உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கில்
ஒளியுண்டாகும் என்றான் பாரதி

இந்த நல்ல நாளில் மக்கள் மனதில்
 உள்ள அறியாமை, பொறாமை, கல்லாமை,
பொல்லாமை  போன்ற எதிர்மறை எண்ணங்கள்
விலகி அன்பு ஒளிவிட்டு பிரகாசிக்கட்டும்.

இல்லங்களில் இல்லாமை நீங்கட்டும்.

Wednesday, October 30, 2013

காலத்தை வென்ற கணநாதா!

காலத்தை வென்ற கணநாதா!


ஸ்ரீ வித்யாரண்யர் என்ற
மகானின் ஆசியுடன் விஜயநகர
சாம்ராஜ்யம் தோன்றியது.செல்வ
செழிப்போடு விளங்கியது.

சாநாதன  மதம் தளிர்த்து,
தழைத்து வளர்ந்தது.

ஆயிரக்கணக்கான கோயில்கள் கட்டப்பட்டன
.ஒவ்வொரும் கற்பனை செய்து பார்க்க முடியாத
அளவிற்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டன.

விஜயநகர சாம்ராஜ்யத்தில் வைரமும் ,
 வைடூரியமும் மற்றும் தங்கம்
தெருவில் கூறு கூறாக
 கட்டி விற்கப்பட்டது
என்று சொல்வார்கள்.

வெளிநாட்டு வர்த்தகர்கள்
இங்கு வியாபாரம்
செய்ய வந்தார்கள்.
செல்வ  செழிப்பை கண்டார்கள்
பொறாமை கொண்டார்கள்
போர் தொடுத்தார்கள் .
எல்லா செல்வங்களும் கொள்ளை
போய்விட்டது.

கலைகளும், பக்தியும்
நிறைந்து  விளங்கிய
பொற்காலம் விஜயநகர
சாம்ராஜ்யத்தை கட்டிக்
காத்த கிருஷ்ணதேவராயர்.

ஆனால் இந்த உலகில்
 எதுவும் நிரந்தரம் அல்லவே .

எல்லாவற்றிற்கும்
அழியும் நேரம் உண்டு
அதுபோல்தான் கலா ரசனையற்ற
கொள்ளையர்களால் ஈவு இரக்கமின்றி
அனைத்தும் அழித்து நொறுக்கப்பட்டன.

அப்படி இருந்தும் அந்த மன்னர்கள்
அமைத்த கோயில்களின் இடிபாடுகள்
இன்னும் கம்பீரமாக
அதே எழிலுடன் மிளிர்கின்றன.

ஹம்பியில் இன்னும்
கணேசப் பெருமானின் கண் கவர் வடிவம்
இன்னும் அதே எழிலுடன் வீற்றிருக்கிறதை
கண்டு வணங்கி மகிழ்வோம்.

pic.courtesy-google images


Tuesday, October 29, 2013

எல்லாம் பிரம்ம மயம்

எல்லாம் பிரம்ம மயம் 

ஒரு கதை உண்டு 


ஒரு அரசனுக்கு திடீரென்று ஞானம்


பிறந்ததாக நினைத்துக்கொண்டான். 

எல்லாம் பிரம்மம் என்று

பிதற்ற தொடங்கினான்.

அரசியை நீயும் பிரம்மம், 

மாட்டையும் பிரம்மம் என்றான் 

காண்பவர் எல்லாரையும் பிரம்மம் 

என்று பிதற்றிக்கொண்டு 
.
நாட்டை சரிவர கவனிக்க வில்லை .

அரசிக்கு தர்ம சங்கடமாய் போய்விட்டது. 

அவள் குருவிடம் சென்று முறையிட்டாள் 

குரு நீ கவலைப்படாமல் போ.

இன்று மதியம் சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்.

மன்னன் இலையில் மட்டும், மாட்டு சாணி,

 கற்கள் , முள்,குப்பை இவற்றை வை. 

என் இலையில் மட்டும் எல்லா 

உணவுகளையும் வை. என்று சொன்னார். 


மதியம் அரசனும் குருவும் 

உணவு உண்ண அமர்ந்தார்கள்.

இலையில் உள்ளதை பார்த்த அரசனுக்கு 

கோபம் பீறிட்டுக்கொண்டு வந்தது 

அரசியைப் பார்த்து சத்தம் போட்டான்.


அப்போது குரு பொறுமையாக சொன்னார்.

அரசனே, நீதான் எல்லாவற்றையும் 

பிரம்மமாக பார்ப்பதாக சொன்னாய். 

இலையும் அதில் போடப்பட்டுள்ள 

அனைத்தும் பிரம்மம்.

நீயும் பிரம்மம். பிரம்மம் 

பிரம்மத்தை சாப்பிடட்டும். 

ஆகட்டும் என்றார்.

அப்போதுதான் அரசனுக்கு 

தான் செய்யும் மடத்தனம் புரிந்தது. 


தத்துவம் வேறு 

வாழ்க்கை வேறு

தத்துவத்தை புரிந்துகொள்ளாமல் 

அதை வாழ்க்கையில் நடைமுறைபடுத்த முடியாது

என்பதை உணர்ந்துகொண்டு 

தன் சகஜ நிலைமைக்கு திரும்பினான்.


அரசன்போல் இன்று பலர்  நூல்களைப் படித்துவிட்டு 

தானே பிரம்மம் என்று கூறிக்கொண்டு 

கடமைகளை செய்யாமல், தன்னையும் 

ஏமாற்றிக்கொண்டு பிறரையும் 

ஏமாற்றிக்கொண்டு திரிகின்றனர்.


அவர்கள் இதை படித்த பிறகாவது 

உண்மை நிலையை அறிந்துகொள்ளட்டும். 

Monday, October 28, 2013

“”ராமநாம பாட்டி”

“”ராமநாம பாட்டி”
காஞ்சிப்பெரியவரை தரிசிக்க மடத்திற்கு ஒரு பக்தர் வந்திருந்தார். அவரது ஊரில் சிவன் கோயிலோ, பெருமாள் கோயிலோ கிடையாது. ஒரே ஒரு பிள்ளையார் கோயில் மட்டும் தான். வந்திருந்த பக்தர் தன்னுடைய ஊரைச் சொன்னதும், பெரியவர் அவரிடம், “”உங்கள் ஊர் பிள்ளையார் கோயிலை, ராமபிள்ளையார் கோயில் என்று தானே கூறுவார்கள்,” என்றார். அவரும்,””ஆமாம் சுவாமி!” என்று சொல்லி தலையசைத்தார்.

சிறிது நேர யோசனைக்குப் பின் பெரியவர் மீண்டும் பக்தரை அழைத்து,

“”உங்க கிராமத்தில் அந்த காலத்தில் துக்கிரிப்பாட்டி என்றொருத்தி இருந்தாள் தெரியுமா?” என்று கேட்டார்

. பக்தரும் பயபக்தியுடன்,””நான் கேள்விபட்டிருக்கிறேன்!” என்றார்.

“”உங்கள் ஊர் துக்கிரிப்பாட்டி பற்றி நானே உனக்குச் சொல்கிறேன்” என்று தொடர்ந்தார்.

“”அந்த காலத்தில் உங்கள் ஊர் பிள்ளையார் கோயிலில் தான் ராமநாமஜெபம் நடக்கும். அதனால் அக்கோயிலுக்கு “”ராம பிள்ளையார் கோயில் ” என்ற பெயர் வந்தது” என்றார். பெரியவர்

பேச்சை பக்தர் மெய்மறந்து கேட்கத் தொடங்கினார்.

பெரியவர், ””அதுசரி! ராமபிள்ளையார் இருக்கட்டும்.
துக்கிரிப்பாட்டி கதைக்கு வருகிறேன்!” என்று தொடர்ந்தார்.

“”துக்கிரிப்பாட்டியின் இளவயதிலேயே கணவர் இறந்து விட்டார். அதனால், அவளை உலகம் பழித்துப்பேசியது. அவளைக் கண்டால் ஆகாது என்று எண்ணி “”அடி! துக்கிரி! துக்கிரி!” என்று திட்டித்தீர்த்தது. விதியின் கொடுமையை எண்ணிய அவள் தன் மனநிம்மதிக்காக ராமநாமாவைச் சொல்லத் தொடங்கினாள். அதுவே ஜபவேள்வியானது. ஆண்டுகள் உருண்டோடின. அவளும் பாட்டியாகிவிட்டாள். ஒரு சந்தர்ப்பத்தில், ஊர் பிரமுகரின் பிள்ளைக்கு உடம்புக்கு முடியாமல் போனது. வயிற்றுவலியால் குழந்தை துடித்தது. வைத்தியம் செய்தும் குணம் கிடைக்கவில்லை

. விஷயத்தை அறிந்த துக்கிரிப்பாட்டி தானாகவே பிரமுகரின் வீட்டுக்கு கிளம்பி வந்தாள். ராமநாமத்தை ஜெபித்து, குழந்தையின் நெற்றியில் விபூதியிட்டு, “”பூரண குணம் உண்டாகும்” என்று சொல்லிச் சென்றாள். என்ன ஆச்சர்யம்! அன்றைக்கே வயிற்றுவலி குறைந்து பிள்ளை எழுந்து நிற்கும் அளவு சக்தி பெற்றான். இதன் பிறகு, ராமநாமம் ஜெபிக்கும் அவளை “”துக்கிரிப்பாட்டி” என்று அழைத்தோமே என ஊர்மக்கள் வருந்தினர்.

“”ராமநாம பாட்டி” என்று பக்தியோடு அழைக்கத் தொடங்கினர். பாட்டியும் செல்வாக்கோடு வாழத் தொடங்கினாள். நீயும் அந்த பாட்டிபோல சதாசர்வ காலமும் ராமநாமத்தை ஜெபித்துவா. எல்லாம் நல்லவிதமாக நடந்தேறும்,” என்று ஆசியளித்து அனுப்பினார். பெரியவரின் பேச்சைக் கேட்ட அனைவரும் ராமநாமத்தின் மகத்துவத்தை உணர்ந்தனர்(இந்த தகவலை இவனுக்கு அனுப்பிய திரு ஆனந்த வாசுதேவன் ,அமிர்தவர்ஷிணி வலை இதழ் ஆசிரியருக்கு அனந்த கோடி நமஸ்காரம்.ராம பக்தர்கள் தங்கள் பக்தியை இன்னும் தீவிரப்படுத்த இந்த உண்மை சம்பவம் ஊக்கம் தரும். )

இராம நாமம் சொல்லுங்கோ!

இராம நாமம் சொல்லுங்கோ!

இராம நாமம் சொல்லுங்கோ!

இதைதான் இவன் சந்திக்கின்ற
அனைவரிடமும்
விடுக்கின்ற வேண்டுகோள்

Saturday, October 26, 2013

தலைஎழுத்தை மாற்றும் எழுத்து எது?

தலைஎழுத்தை மாற்றும் 
எழுத்து  எது?

எல்லாம் எழுதி வைத்தபடிதான் நடக்கும்
நடக்கிறது. நடக்கும்.

சட்ட புத்தகத்தில் எழுதி வைத்தபடிதான்
நிர்வாகம் நடக்கும்.

சட்டத்தை மீறினால்
தண்டனைதான் கிடைக்கும்.

சட்டம் படித்தவனுக்கு
மட்டும் தெரியும்
எந்த விதிகளை மீறினால்
என்னென்ன தண்டனை
கிடைக்கும்.என்று.

சட்டம் தெரியாதவனுக்கு
அந்த விவரம் தெரியாது.

ஒருவேளை தண்டனை அனுபவித்தபின்
அந்த விவரத்தை அவன் அனுபவத்தில்
அறிந்து கொள்வான்.

ஆனால் சிலர் எல்லாம் தெரிந்துகொண்டே
சட்டத்தை மீறுகிறார்கள்.

பலமுறை சட்டத்தின் கண்களுக்கு
அகப்பாடாமல் தப்பித்துக்கொண்டே
இருக்கிறார்கள்.

ஆனால் சட்டம்  ஒருநாள் தன்
கடமையை செய்துவிடுகிறது.
அவர்களை பிடித்து சிறையில் தள்ளி
அவர்களின் செயல்பாட்டை
முடக்கிவிடுகிறது.

ஒரு சிலரை தலையெடுக்கவிடாமல்
அழித்துவிடுகிறது.

சட்டத்தை மதித்து வாழ்பவன்.
பிறரால் மதிக்கப்படுகிறான்.
மீறுபவன் தண்டிக்கப்படுகிறான்.

அதே சட்டம் சட்டத்தின்
சில விதிகளை மீறுவதற்கு
அனுமதித்துள்ளது.

அடக்குமுறையை,
சுரண்டலை எதிர்த்து
போராட அனுமதிக்கிறது.

ஆனால் அதற்கும் தண்டனை ஆளும்
வர்க்கத்தினரால் அளிக்கப்படதான் செய்யும்.

ஆனால் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு.

அதுபோல் இந்த உலகையும் நம்மையும்
படைத்த இறைவன் ஒரு விதிக்குட்பட்டுத்தான்
செயல்பட அனுமதித்துள்ளான்

அதை மீறும் போது  நாம் துன்பங்களை
அனுபவிக்கிறோம். அதை மீறாதபோது
எல்லாம்  இன்பமாக இருக்கிறது.

அறியாமையால் பல தீய செயல்களை
சுயநலத்தினால் செய்து அதனால்
ஏற்படும் விளைவுகளே
நம் தலை எழுத்தாக மாறுகிறது.

நல்ல செயல்கள்
புண்ணியமாக மாறுகிறது.
அது நமக்கு இன்பமான வாழ்வு தருகிறது.

நம் தீய  தலைஎழுத்தை
மாற்ற வழி வகை உண்டு.

அதற்கு இரண்டெழுத்து மந்திரம் உள்ளது.

அது பென்சிலால் எழுதப்பட்ட எழுத்தை
அழிக்கும் ரப்பர் போல் அந்த இரண்டு மந்திரத்தை
சொல்ல சொல்ல நம் தலையில் நாம் செய்த
தீய வினைகளினால் உண்டான
தலைஎழுத்து அழிந்து அது மீண்டும்
வெள்ளை காகிதம்
போல் பரிசுத்தமாகிவிடும்.

ராம,சிவா ,குகா ,உமா,காளி என்று
ஏதாவது ஒரு இரண்டெழுத்தை சொல்லிக்கொண்டே
நம் தவறுகளுக்கு வருந்துவோமானால்
நம் தலைஎழுத்து நம்மை அறியாமல் மாறி
வாழ்வில் அமைதியும் இன்பமும் தானே வரும்

அதுதான் இல்லை

அதுதான் இல்லை 

எது?

அதுதான் எந்நிலையிலும்
மாறாத ,மகிழ்ச்சி

மனிதர்களிடமும், பொருட்களிடமும் மகிழ்ச்சியை தேடுகிறோம். ஏதோ கிடைக்கிறது

ஆனால் அது நிலைப்பதில்லை.

நம் உயிர் தாங்கும் இந்த உடல்  மூலம் தேடுகிறோம். அதுவும் நிலைப்பதில்லை.

நிலைத்த இன்பம் எங்கே உள்ளது?
எதில் உள்ளது?
இதுதான் நாம் பிறவி எடுத்ததின்
தேடலாக இருக்கவேண்டும்.  

பணம் ஏராளமாக இருக்கிறது
வாழ்க்கையை நடத்த அனைத்து வசதிகளும் இருக்கிறது
 உதவி செய்ய வேலையாட்கள் இருக்கிறார்கள்
 எல்லாம் இருந்தும் இன்று பல கோடி பேர்கள்
மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?
என்றால் இல்லை
என்றுதான் பதில் கிடைக்கும்

எல்லாம் இருந்தும் ஏன்
அவர்கள் மகிழ்ச்சியாக
இருக்க முடியவில்லை?

மனதின் போக்கை சரியாக புரிந்துகொள்ள
இயலாமையால் மனம் போன போக்கில்
 மீளமுடியாத தவறான் பழக்க வழக்கங்களுக்கு
ஆளாகி பெரும்துன்பதிர்க்கு ஆளாகிவிடுகிறார்கள்.பலர்

தன் முட்டாள்தனத்தினால் விளைந்த செயல்களுக்கு
பிறர் மீது குற்றம் செலுத்தி தனி மனிதர்கள்
அனைவருக்கும் கேடு விளைவிக்கிறார்கள்

அதை போன்ற எண்ணம் கொண்ட சில நாடுகளின் தலைவர்கள் மற்ற நாடுகளின் மீது போர் தொடுத்து கோடிகணக்கில் பணத்தை வீணடித்து, லட்சகணக்கில் மக்களை கொன்று குவித்து உலகில் அமைதியை குழி தோண்டி புதைக்கிறார்கள்.

முடிவில் அவர்களும்
புதையுண்டு போகிறார்கள்

ஆனால்  அவர்கள் தோற்றுவித்த அழிவுகள்
பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும்

இதுபோன்ற மன நோயாளிகளின்
போக்கிற்கு காரணம் சுயநலம்தான்

அவர்களிடம் கூட்டு சேரும் அதுபோன்ற
சில மனிதர்களும்தான் இந்த நிலைமைக்கு காரணம்.

எல்லாவற்றிற்கும் காரணம் மனம்தான்
அதில் உள்ள எண்ணங்கள்தான் காரணம்

 அது இந்த உலக பொருட்கள் மீது இன்பத்தை தேடுகிறது
 உயிரற்ற பொருட்கள் இன்பத்தை எப்படி தரமுடியும்
என்று யாரும் யோசிப்பதில்லை

அழகிய உயிருள்ள பூனைக்குட்டியோ
நாய்க்குட்டியோ தரும் இன்பம்
தங்க நகைகளோ வைர நகைகளோ தர இயலுமா?

அழகிய உயிருள்ள குழந்தையின்
ஒவ்வொரு அசைவும் மழலையும் தரும் மட்டற்ற இன்பம்
ஒரு பொம்மை தர இயலுமா?

பிணமாகிவிட்டால் பணமோ இந்த வசதிகளோ
நம்முடன் வருமா என்பதை ஒவ்வொருவரும்
 தினமும் ஒரு கணமாவது சிந்தித்து பார்க்கவேண்டும்

உயிருடன் இருக்கும்போதே
அனைவருடன் அன்போடு பழக வேண்டும்

வேதனையை தரும் வெறுப்பை நீக்க வேண்டும்

பிறர் மனம் நோகும்படி வார்த்தைகளை கூறாமல்
 பிறர் மீது புறங்கூறாமல்,
 பிறருக்கு துன்பம் விளைவிக்காமல்,
 பிறர் சொத்துக்களை .அபகரிக்காமல் ,
 இல்லாதவருக்கு உதவுவதும்,
 பிறர் துன்பங்களை நீக்க பாடுபடுவதும்
துன்பங்களையும், ஏமாற்றங்களையும்
 ஏற்றுக்கொள்ள பழகிகொள்வதும்,
இன்பம் தரும்.

எல்லாம் வல்ல இறைவன் மீது நம்மையும்
 இந்த உலகையும் படைத்த இறைவன் மீது
எப்போதும் நம்பிக்கை வைத்து அகந்தையில்லாமல்
வாழ்க்கை நடத்த பழகி கொண்டால் எந்நிலையிலும்
கவலைகள் இல்லாமல் வாழலாம்

மனம் அங்குமிங்கும் அலையாமல் இருக்க
 தினமும் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்யவேண்டும்.

இவ்வுலகில் அமைதி தவழவும்,
நம் மனதில் அமைதி நிலவவும்
நம்மை படைத்த இறைவனை நினைந்து
காலையில் கண் விழித்ததும்
தினமும்  பிரார்த்தனை செய்வோம்
நன்மை பெறுவோம். 

Friday, October 25, 2013

திருட்டு போகாத சேமிப்பு

திருட்டு போகாத சேமிப்பு இந்த உலகில் எதையும் நிரந்தரமாக 
சேமிக்கவும் முடியாது. 
சேமித்து பயன்படுத்தவும் முடியாது.

அப்படி சேர்த்தால் அதை உடனே நாம் 
பயன்படுத்தி இன்புறவேண்டும்.

நாம் பயன்படுத்தியது போகே மீதம் 
உள்ளதை இந்த உலகத்திற்கே  
திரும்ப அளித்து விடவேண்டும். 

அவ்வாறு செய்யாவிடில் 
அப்பொருள் அழிந்துவிடும் .

இல்லாவிடில் நம்மிடமிருந்து 
கள்வர்களால் களவாடப்படுவிடும்.
 சில நேரங்களில் அந்த பொருட்களே 
உயிருக்கு எமனாகிவிடும். 

அதனால்தான் எதையுமே தேவைக்குமேல் வைத்துகொள்வதும்,பயன்படுத்துவதும் தவறு 
என்று சாத்திரங்கள் சொல்கின்றன .எப்படி?

உள்ளத்தில் பிறர் பொருள் மீது ஆசை எழுந்தாலே
அது திருட்டு என்கிறது நீதி சாஸ்திரம் 

அளவுக்கு மேலே பொருள் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் (ஒரு திரைப்பட பாடல்)
ஒருவன் தன் தேவைக்கு மேல் பொருட்களை சேமித்து அதை தானும் பயன்படுத்தாமலும்பிறர் பயன்படுத்த அனுமதிக்காமலும் வைத்திருந்தால் அந்த பொருள் நிச்சயம்கொள்ளையர்களால் கொள்ளையிடப்படும்என்கிறது பதஞ்சலி யோக சூத்திரம்

ஒருவருக்கு மிக குறைந்தளவு நகைகள் இருந்தாலே போதுமானது. ஆனால் கணக்கிட முடியாத அளவிற்கு நகைகளை சேமித்து வைக்கும் செல்வந்தர்களின் வீடுகளில்அவைகள் கொள்ளையிடப்படுகின்றன .
 பல நேரங்களில் அது அவர்களின் வாழ்விற்கு எமனாகவே முடிந்துவிடுவதை தினமும் நாம் காண்கின்றோம்

நம் நாட்டில் பயன்படுத்தப்படாமல் சேமித்து வைக்கப்பட்ட கணக்கிடமுடியாத செல்வங்களை கொள்ளை அடிப்பதையே தங்கள் பரம்பரை தொழிலாகக் கொண்டு பல நாடுகளிலிருந்து நம் நாட்டின் மீது பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து கணக்கற்ற கொள்ளையர்கள் படையெடுத்து நம் நாட்டு வளங்களை அபகரித்தும், நம் நாட்டு மக்களை அடிமைப்படுத்தியும் வந்திருப்பதே இதற்க்கு சான்று. 

இன்றும் அதே ஈனச்செயலை பல்வேறு விஞ்ஞான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அந்த தொழிலை அவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர். 
இருந்தும் நாம் நாட்டில் வளங்கள் அழியாமல் இருப்பதற்கு காரணம் இங்கு அழியா செல்வமான இறைவனை மக்கள் நாடுவதுதான். 
எனவே தன்னிடம் அளவுக்கதிகமான உள்ளவற்றைஇல்லாதவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் உயர்ந்த எண்ணம் உலகில் அதிகரித்தால் மக்களிடையே ஏற்ற தாழ்வுகள் நிச்சயம் குறையும்
அதே சமயத்தில் நாம் அழிகின்ற பொருளைக்கொண்டு அழியாப் பொருட்களை உண்டுபண்ணி அதை சேமித்து பயன்படுத்தலாம். அதை யாராலும் கொள்ளை அடிக்கமுடியாது  அது என்ன  பொருள்?
அதுதான் புண்ணியம். 
புண்ணியத்தை எப்படி சேமிப்பது.?
அது எல்லோருக்கும் சாத்தியமா?
செல்வம் இருப்பவன்,அதை ஈட்ட முடியாத நிலையிலிருப்பவர்களுக்கு தானமாக 
,உதவியாக வழங்கலாம். 
நோயுற்றவர்களுக்கும், நலிவுற்றவர்களுக்கும், பலமாக நலமாக வாழ வழி வகை செய்யலாம்.
 பசித்தோர்க்கு அன்னம் பாலிக்கலாம்.
இவைகளெல்லாம் நம் புண்ணியக்கணக்கில்  சேரும். இதை யாரும் கொண்டுபோகமுடியாது நம்முடனேயே வரும்..நமக்கு நன்மைகளை செய்துகொண்டிருக்கும்.
பொருட்களை சேமிக்க சேமிக்க அதன் மீது பற்று மிகுந்து நாம் நம்மையே மறந்து, நம்மை படைத்த இறைவனை மறந்து போவோம்.
 அந்நிலையில் அப்பொருட்களை இழக்க நமக்கு மனம் வராது .இழந்தால் பெருந்துன்பம் உண்டாகும். 
அதனால்தான் விலைமிகுந்த பொக்கிஷங்களை கோயிலில் இறைவனுக்கு  சாற்றி கண்டு மகிழும் முறை வந்தது. 
அதனால் பந்தமும் அழியும் பொருட்கள்மீது பற்றுக்கள் ஒழிந்து  இறைவன் மீது நம்மையறியாமல்  அன்பு உண்டாகி பிறவிப்பிணி தீர வழி ஏற்படும் . 
அதுபோல் மற்றொரு அழியா செல்வம் 
ராம நாமம் சொல்வது. 
அதை சொல்ல ஏதும் செலவு செய்ய வேண்டியதில்லை. செலவில்லாமலே நம் கணக்கில் சேரும் செல்வம்.
 நம்மையும் காக்கும், நம் சென்ற மற்றும் ,, வரும் தலைமுறைகளையும் காக்கும். 
அழியும் பொருள் வேண்டுமா அல்லது அழியா பதம் தரும் இறைவனின் அருள் வேண்டுமா   என்பதை நீங்களே முடிவு செய்வீர்.

கருமை நிற கண்ணா ! கார்மேக வண்ணா !

கருமை நிற கண்ணா !
கார்மேக வண்ணா !
குருவாயூரில் உறைபவனே
குழந்தை வடிவாய் நின்றவனே

வாதப் பிணியை நீக்கும்
வாதபுராதினாதனே

வாதம் செய்வோரின்
மனதிற்கு எட்டாதவனே

எட்டாப் பொருளாகிய நீ
உன் எட்டெழுத்து மந்திரம்
ஜபித்தால் வசமாவாய்

கல்விகற்று கர்வம் கொண்டோர்
கண்களுக்கு காண இயலாத கண்ணா
உன் பாதமே கதி என்றிருப்போருக்கு
என்றும் காட்சி தந்திடுவாய்

கருமை நிற வண்ணனே
கருணை உள்ளம் கொண்டவனே
உன்னை மறவாது இருந்தால்போதும்
மீண்டும் பிறவாது செய்யும்
அருள் செய்யும் யாதவகுல திலகமே


Monday, October 21, 2013

ஜாபாலி மகரிஷியும் ராமாயணமும் (3)

ஜாபாலி மகரிஷியும் ராமாயணமும் (3)

ஜாபாலி மகரிஷியும் 
ராமாயணமும் (3)

ஜாபாலி மகரிஷி இராமனிடம்
நீ பரதனின் பிரார்த்தனைக்கு இணங்கு.
ராஜ்யத்தை ஒப்புக்கொள் என்றார்.

ஆனால் இராமன் தர்மத்தை 
பரிபாலனம் செய்யவே அவதரித்தவன்.

அவர் கூறியதை ஏற்கவில்லை.
மாறாக தன் கொள்கையில் உறுதியாக 
இருந்து செயல்பட்டான் என்பது 
அனைவரும் அறிந்ததே.


இராமன் தான் கூறுவதை 
ஏற்றுக்கொள்ளமாட்டான் 
என்று மகரிஷிக்கு தெரியாதா 
என்று சிலர் கேட்கலாம். 

பரதனுடைய துக்கத்தை அகற்றவும் 
,அயோத்திமக்களின் ஆவலைப் பூர்த்தி செய்யவும்,
அவர் இராமனுக்கு எடுத்துரைத்த உபதேசங்களை 
உலகாயவாதமெனக் கூறுவார்கள். 

பெரிய பண்டிதரான ஜாபாலி மகரிஷி 
இராமரை சோதிக்கவே தான் அவ்வாறு 
கூறினாரே ஒழிய ,தந்தை வாக்கை மீறவேண்டும்  
என்ற எண்ணமே அவருக்கு இல்லை .

இராமச்சந்திரனையே சோதித்து 
அதனால் புகழடைந்த அம்மகான் 
நர்மதை நதி தீரத்தை அடைந்து
ஒரு ரமணீயமான ஒரு சிறந்த இடத்தை 
தேர்ந்தெடுத்து அங்கேயே 
பிற்காலத்தில் தவமியற்றினாராம் 

அத்தலமே ஜாபாலிப்பட்டினம் 
என்று அழைக்கப்பட்டு பின்னாளில்  
ஜபல்பூர் என்று மருவி விட்டது 
என்று கூறுவர் .

இந்த தகவல் ஸ்ரீமத்  வால்மீகி ராமாயணத்தில் 
அயோத்யா  காண்டத்தில் 108 வது சர்க்கம் 
முழுவதும்  விவரமாகக்  காணலாம். 

(பதிவில் உள்ள தகவல்கள் 1995 ஆம் ஆண்டு  ஓம் சக்தி தீபாவளி மலரில் அரவரசன் என்பவர் எழுதிய கட்டுரையை தழுவி எழுதப்பட்டுள்ளது)
அவருக்கு நன்றி. )

pic.courtesy-google images. 


  

Sunday, October 20, 2013

ஜாபாலி மகரிஷியும் ராமாயணமும் (2)

ஜாபாலி மகரிஷியும் ராமாயணமும் (2)

ஜாபாலி மகரிஷியும் 
ராமாயணமும் (2)

ஸ்ரீ ராமன் தான் கொண்ட கொள்கையில் 
உறுதியாக இருக்கிறானா என்பதை 
சோதிக்கும் வகையில் கீழ்கண்டவாறு 
ஜாபாலி மகரிஷி அவனிடம் கூறுகிறார். 

இராமா! உன் தந்தையின் ராஜ்ஜியம் 
உனக்கு கிடைக்க வேண்டியது .

அதி விரைவில் நீ அயோத்திக்கு 
சென்று பட்டாபிஷேகம்  செய்துகொள்.அரசர்கள் அனுபவிக்கத் தகுந்த 
சகல போகங்களையும் அனுபவித்துக்கொண்டு 
சொர்க்கத்தில் தேவேந்திரன் சுகமாக 
இருப்பதுபோல் கோசல நாட்டை
பரிபாலனம் செய்,

மீண்டும் மீண்டும் தந்தையின் ஆணை 
என்று திரும்ப திரும்பப் பிதற்றாதே!என்றார்

மேலும் அவர் கூறுகிறார்.

தசரதன் என்பது ஒரு உடல்
அது மடிந்து சாம்பலாகிவிட்டது. 

அழிந்த அவ்வுருவத்திர்க்கும் 
உனக்கும் இப்போது 
எந்த தொடர்பும் இல்லை

கண்ணெதிரில் காத்துக் கிடக்கும்
சுகங்களைத் தள்ளிவிட்டு ,தருமம் என்றும்,
பரலோக என்றும் மூடர்களைப் போல்
நீயும் பேசுகிறாய்.முட்களும், கற்களும்,நிறைந்த 
இந்த காட்டில் ஏன்  உன்னை 
வருத்திக்கொள்ளுகிறாய் என்று 
அவனை உசுப்பிவிடுகிறார். 

மகா புத்திசாலியான நீ பரலோகம் 
உண்மை என்று நம்புவது 
வியப்பாக உள்ளது !

பரலோகம் என்று 
ஒன்றும் கிடையாது 

பித்ருவாக்கிய பரிபாலனம் செய்தால்
( அதாவது தந்தை சொற்படி நடந்தால்) 
உனக்கும் தசரதருக்கும் விசேஷமான 
நன்மை கிடைக்கும் என்பது 
எப்படிப் பொருந்தும்?

நமது இந்த ராஜ்ஜியமும் ,
அதனால் கிடைக்கும் போகங்களும் ,
அதிகாரமும் சுகமும் ஆகியவைகள்தான்
நிதரிசனமான உண்மை. 

எனவே அவைகளை
எல்லாம் கைப்பற்று .

ஸ்வர்க நரகங்களையும் 
பாவ புண்ணியங்களையும் 
திரும்பிப் பாராதே !

நான் சொல்லும் இந்த நீதி 
உலகோர் எல்லோரும் 
ஏற்றுக்கொள்ளும்படியான ஒன்று .

வே நீ பரதனின் கோரிக்கையை 
ஏற்று ராஜ்ய  பாரத்தை ஏற்றுக்கொள் 
என்று கூறினார். 

(இன்னும் வரும்) 

pic.courtesy-google images