Tuesday, April 30, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(33)


தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள்(33)
இராமா !
இன்னும் உனது தயை
வராவிடில் நான் 
எப்படிப் பொறுப்பேன்?

உன் மீது ஆசைகொண்ட
என்னைக் காக்க பெரிய மனம்
வைத்து வாராயோ?

சீதை மணாளனே!

உத்தம குருவாக
வந்து பாலிப்பனே!

எவ்வளவென்று சகிப்பேன்?

இன்னும் வாராமலே இருப்பாயோ?

இவைஅனைத்தும்
சரியென்று மாந்தர் கூறுவாரோ?

நான் வேறு யாரை இரப்பேன்?

வேறு தெய்வங்கள் இலரோ?
பலர் உள்ளனர்

ஆயினும் அவர்கள்
 உன் போல் ஆவரோ?

துஷ்டரென்னும்  மேகங்களை
 கலைப்பதில் காற்றையொத்தவனே!

சிறந்த தனி தெய்வம் நீயே!

தாமரையை பழிக்கும் அழகிய 
கண்களை உடையவனே

கோவர்த்தனகிரியை தாங்கியவனே!

இரகுராஜ!

அச்சம் தவிர்ந்த
பக்தரால் சூழப்பெறுபவனே!

(கீர்த்தனை-இங்கா-தய-ராகுண்டே (535)-ராகம்-நாராயன் கௌள-தாளம்-ஆதி)

இந்த கீர்த்தனையில் ஒரு உண்மையான பக்தனின் 
மனம் படும் பாட்டினை தெள்ள 
தெளிவாக விளக்க்கின்றார் ஸ்வாமிகள். 


பக்தன் அனைத்தும் இறைவனே கதி  என்று 
இருப்பதால் எதற்கும் அஞ்சுவதில்லை .

ஒரு பக்தனுக்கு இறைஅருள் கிடைக்க 
தாமதம் ஆவது துன்பம் என்றாலும் 
பக்தனின் மனநிலை அறியாத 
இந்த உலக மாந்தர் அவர்களை
எள்ளி நகையாடும் துன்பம் 
அதைவிட கொடியது.

இருந்தாலும் உண்மை பக்தன் 
அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது 
இறைஅருள் பெறுவதை மட்டும் 
கருத்தில் கொண்டு மற்றவற்றை
தள்ளிவிடவேண்டும்  என்பது 
இந்த கீர்த்தனையின் மூல கருத்து.

இராமா நீ சொல்!


இராமா நீ சொல்!
இடர் கெடுக்கும் தெய்வம்
நீ என் இதயத்துள் 
உறைவதை உணர்ந்துகொண்டபின்
புறஉலகில் உன்னை தேடி இங்கும் 
அங்கும் என்றாவது அலைந்தேனா சொல்?

காணும் அனைத்தும் நீதான் என்றெண்ணி 
பழகிய என்னை இவன் நமக்கு உதவான் 
என்றெண்ணி உன்னை உணரா இவ்வுலக மாந்தர்
எனக்கிழைத்த இன்னல்களை களைய உன்னை 
நான்  என்றாவது நாடினேனா சொல்?

தீயவர்களுக்கிடையே என்னை நீ பணி 
செய்ய பணித்தபோதும் என் நிலை தவறி 
என்றாவது அவர்களுடன் சேர்ந்துகொண்டு
தவறான வழியில் சென்றேனா சொல்?

அல்லும் பகலும் உன் நாமமதை 
உள்ளத்தில் கொண்டு உள்ளத்தில் கள்ளமின்றி 
என் கடமைகளை நான் எப்போதாவது 
ஆற்ற தவறியதுண்டா சொல்? 

அண்டியவரனைவருக்கும் நன்மையே புரிந்த 
எனக்கு அந்த நன்மை பெற்றவர்கள் சுயநலம் 
கொண்டு எனக்கு இழைத்த இன்னல்களை 
என்றாவது மனதில் கொண்டேனா சொல்? 

உன் அருளை தவிர வேறொன்றும் 
உன்னிடம் யாசியாது பொன்னும் 
பொருளும் வேண்டி உன்னிடம் 
என்றாவது முறையிட்டேனா சொல்?

பிறர் பெற்ற புகழ் ,செல்வம் குறித்து 
மனம் பொருமி என்றாவது உள்ளத்தில் 
பொறாமை கொண்டு புலம்பி 
திரிந்தேனா சொல்?

என் வினைப் பயனாய் வாழ்வில் 
அலை அலையாய் துன்பம் வந்த போதும் 
அடுத்தடுத்து இழப்புகள் வந்தபோதும் 
எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனைகள் 
என்று  நான் உன்னை என்றாவது 
நொந்துகொண்டேனா சொல்? 

நீ அளித்ததை இன்பமுடன் ஏற்றேன் 
நீ என்னிடமிருந்து எடுத்ததையும் 
இன்பமுடன் ஏற்றேன்
நீ என்னுடன் எப்போதும் அகலாது 
இருப்பாய் என்று எண்ணித்தான். 


இசைக்கு மயங்கும் இராமா 
வசைக்கு ஆளாகிய இராமா 
பக்தர்களின் சித்தமிசை 
நடமிடும் இராமா 

ஓசையின்றி இரவும் பகலும் 
உன்னை நாடி 
உன் அருள் வேண்டி 
இங்கொரு ஜீவன்
காத்திருக்கிறது 
என்பதை மறவாதே. 

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(32)


தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள்(32)


இராமா நானும் 
உன்னுடைய மைந்தன்  

என்னை வஞ்சனை செய்யாதே
இராகவா!

நான்கு பேர் மெச்சுவதர்க்காக  
நான் உன்னை நம்பவில்லை
ஸ்ரீராமச்சந்திரா!

வஞ்சகம் நிறைந்த மனிதர்களுடன் 
உறவாடிப் பிறர் மீது பொறாமை கொண்டு திரிந்தேனா?

என் பங்காளிகளுடன் இவ்விஷயத்தில்
 நான் சண்டையிட்டாலும் உன் அடியவன்  
என்ற முறையிலேயே உன்னை வேண்டிக்கொள்ளும் 
என்னை வஞ்சனை செய்யாதே

பெற்றோர்களுடன் வாக்குவாதம் புரியும் சிறுவர்கள் 
"நீ எங்கிருந்து வந்தவன்.நில். உனக்கு புத்தியில்லையா ? என்று பேசியபோதிலும் மிகுந்த பொறுமையுடன்  தாய் தந்தையர் அவர்களை நோக்கி "இவர்கள் நமது மக்கள்"என்று முத்தமிட்டு அணைத்து கொள்வாரல்லவா?

நானும் உனக்கு அப்படிப்பட்ட 
மைந்தன் அல்லவா?
என்னை காத்தருள். 

(கீர்த்தனை-நாயெட -வஞ்சந-(402)-ராகம்-நபோமணி (மேள-40)-தாளம்-ஆதி )

இந்த கீர்த்தனையில் இராம  பக்தர்கள்  பிறர் மெச்சுவதற்காக போலி பக்தி செய்யக்கூடாது என்று கூறுகிறார்.

வஞ்சகம் நிறைந்த மனிதர்களுடன் பழகி மற்றவர்களின் மீது பொறாமை கொண்டு திரியக்கூடாது. 

எப்படி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மரியாதைஇல்லாது  நடந்துகொண்டாலும் அவற்றை கருத்தில் கொள்ளாது அன்பு செலுத்துவரோ அதுபோல் தன்னையும் மைந்தனாக கருதி அருள் செய்ய வேண்டுகிறார் ஸ்வாமிகள்.  

பணிவும், அன்பும், சரணாகதியும் ,நம்பிக்கையும் இல்லாத பக்தி விழலுக்கு இரைத்த நீர்போல் பயனளிக்காது.  வறட்டு பக்தியினால் பயனில்லை. 

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (31)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள் (31)

மனதிற்கு உபதேசம் 


இராமா என்னை காப்பாற்று !
கல்யாணசுந்தர வடிவனான இராமா!
என்னைக் காத்தருள்.

நான் கற்றவன் அல்லன்
எது நற்புத்தி என்று அறியாதவன்

உன் பஜனையை செய்ய புத்தியில்லாமல்
பிறரை இரந்து இதுவரையில் திரிந்தேன்

தினந்தோறும் வயிற்றுப் பிழைப்பிற்காக
 தனிகர்களை நாடினேன்

மனைவி மக்கள் மீது கொண்ட ஆசையை
உன் திருவடிகளில் செலுத்த முடியாதவனானேன்

இல்வாழ்க்கையின் இன்பமே
நிலையானதென்று எண்ணி
உன் திருநாம சாரத்தை
அறிவதை மறந்தேன்

சிற்றின்பத்தை வெறுக்கமுடியாமல்
கர்வத்தினால் மோசம் போனேன்

எத்தனையோ பிழைகள் புரிந்தும்
மன்னிக்குமாறு உன்னை வேண்டினேன்

சுகர் வணங்கும் என் தந்தையே !
நீயே சரண்! என்று முறையிட்டேன்

தாமரைக் கண்ணனான ரகுவீரா !
உன்னையே நம்பிய என்னை ஏற்றுக்கொள்.

உன்னை நம்பியவரின்
வாய்ப்பே சிறப்புற்றது.

உன் திருவடி சேவை
பத்து லட்சத்திற்கு ஈடாகும்

சாகேத ராம !

என் மீது அன்பு காட்டாமலிருப்பது
நியாயமல்ல

சரண்யனே!
கோசலராம !
தியாகராஜனை காப்பவனே!

(கீர்த்தனை-பாஹி-கல்யானசுந்தரராம மாம்-பாஹி-(491)-ராகம் புன்னாகவராளி -தாளம்-சாபு)

இந்த கீர்த்தனையில் நாம் செய்யும்
அத்தனை அபராதங்களையும்
தான் செய்ததாக ராமபிரானிடம்
முறையிடுகிறார் ஸ்வாமிகள்.

அதை நாம் உணர்ந்து குறைகளை தவிர்த்து
 ராமபிரானிடம் பக்தி செலுத்தவேண்டும்
என்பதே சுவாமிகளின் நோக்கம்.
முயற்சி செய்வோம்.
முயற்சி திருவினையாக்கும்.


Monday, April 29, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (30)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள் (30)

மனதிற்கு உபதேசம் 


மனமே!
ராமநாமத்தை 
சதா பஜனை செய்வாயாக!


அவன் அளவற்ற
நன்மைகளுக்கு சுரங்கம் போன்றவன்

பாவங்களென்னும் இருளை
அகற்றும் சூரியன்

நூறு தலை ராவணனால்
வணங்கபெற்ற சிவனால்
போற்றப்படுபவன்

தஞ்சமடைந்தோருக்கு
கற்பகதரு

உலகோரை காப்பவன்

கபாலியான சிவனால்
துதிக்கபெரும் குணசீலன்

உந்திக்கமலத்தோன்

காலனையும் முப்புரங்களையும்
வென்ற சிவனுக்கு பாக்கியமானவன்

பிரம்மானந்தம் தருபவன்

தேவராலும் முனிவராலும்
வணங்கப் பெறுபவன்

வடிவழகன்

தீரன்

இத்தியாகராஜனின் ஜீவாதாரம்

வில்லையும் 
கணைகளையும் ஏந்தியவன்

நற்குணங்கள் நிரம்பியவன்

சம்சார கடலை
கடக்க உதவும் நாவாய்

பிரம்மன் முதலியோருக்கு தந்தை

அனுமனின் நண்பன்

சிறப்புற்ற சீதையின் நாதன்

சந்திரசூரியரைக்  
கண்களாக உடையவன்

தியாகராஜரின் பரம மித்திரன்

(கீர்த்தனை-பஜ ராமம்-சததம்(521)-ராகம்- ஹுசேனி -தாளம்-ஆதி)-

இராமபிரானின் அருமைகளையும்,
பெருமைகளையும் விவரித்து 
அவன் நாமத்தை பஜனை செய்யுமாறு 
மீண்டும் மனதிற்கு ஸ்வாமிகள் 
நமக்கும் சேர்த்துதான் 
உபதேசம் செய்கிறார் 
இந்த  கீர்த்தனையில்.

இடைவிடாது நம்பிக்கையுடன் 
இராம நாமம் சொல்வோம். 
இகபர சுகம் அடைவோம். எளிதாக

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (29)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள் (29)

மனதிற்கு உபதேசம் 


ஒ மனமே !

இராம நாமத்தை 
சதா பஜனை செய்வாயாக
திருடனை போல்
நீ ஒளிந்து திரிவானேன்?

ஸ்ரீரங்கனின் திருவடிகளை 
அணைத்துக்கொள் 

மானிட ஜன்மம் கிடைத்திருப்பதால் 
சிறிதும் சந்தேகமின்றி வைதேஹி நாயகனை 
"எனக்கு பக்தியை கொடு ,பக்தியை கொடு?
 என்று வேண்டிக்கொள் எங்கிருந்தாலும் இருப்பது ஹரி ஒருவநேயன்றி 
துணிந்து அவன் கருணையை 
எண்ணி மெய்ம்மறந்து பஜனை செய்

வேறெங்கும் போகாமல் முழுமதி வதனனை
உன் இதயத்திற்குள் தரிசித்து  பயன் பெறு

சாதுக்களின் உபதேசத்தாலும் 
உன் சாதகத்தாலும்  இவ்வுலகின் 
இடர்களை போக்கிகொள் 

பற்றில்லாத துறவிகளின் 
பேரதிர்ஷ்டமாகிய பகவானைத் 
தவிர வேறு  புகழ் ஏது?

(கீர்த்தனை-ராம நாமம் பஜரே-மானஸ-ராகம்-மத்யமாவதி-தாளம்-ஆதி)

மனம்தான் நம்மை இந்த 
உலக மாயையில் தள்ளி 
நம்மை துன்பத்திர்க்குள்ளாக்கிறது 

ஆனால் அதே மனதை நாம் 
இறைவன்பால் திருப்பிவிட்டால் 
அதுவே நம் விடுதலைக்கு 
வழி வகுக்கிறது. 

மனித ஜன்ம கிடைத்ததே
 நாம் செய்த 
புண்ணியத்தினால்தான். 

அதைகொண்டு விலங்குபோல் 
வாழ்க்கை நடத்துவது அறிவில்லா 
மூடர்கள் செய்யும் காரியம்.

எனவே நாம் இந்த கிடைத்தற்கரிய 
வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு 
ராமபிரானின் திருவடிகளில் 
பக்தி செய்து உய்யவேண்டும் 
என்று மனதிற்கும் 
நமக்கும் மீண்டும் 
தியாகராஜ ஸ்வாமிகள் 
வலியுறுத்துகிறார்.  

Sunday, April 28, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (28)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள் (28)

மனதிற்கு உபதேசம் 

திவ்ய நாம சங்கீர்த்தனை 

கீர்த்தனை-ரே மானச -சிந்தைய ஸ்ரீராமம் -ராகம்-தோடி -தாளம்-ரூபகம்)

மனமே இராமனையே 
என்றும் நினைப்பாயாக!சாகேத நகரத்தின் அதாவது 
அயோத்தியின் அதிபதியும் 
இணையற்ற திருமகள் நாயகனும் 
காமம் முதலிய குணங்களற்ற 
சாதுக்களின் இதயமென்னும் கடலுக்கு 
சந்திரன் போன்றவனும் 
பூமிதேவியின் கணவனும் 
,பக்தர்களின் பாவங்கள் 
என்னும் மேகங்களுக்கு 
காற்றையொத்தவனும்,
மாசற்றவனும் ,
கருடனின் துயராகிய 
இருட்டை அகற்றும் சூரியனும் 
நலம் புரிபவனும் ,
இந்திரனால் ஆராதிக்கப்படுபவனும் ,
திசைகளை ஆடைகளாக உடையவனும் 
சைதன்யமே ஆவரணமாக உடையவனும் 
அடிபணியும் தேவர்களுக்கு வரங்களையும், 
அபயத்தையும்,அளிக்கும் இராகவனும் 
தியாகராஜனால் அர்சிக்கப்பெறும் 
தாமரைப் பாதனும் 
எப்போதும் இதம் தருபவனாகிய 
இராமனை நினைப்பாயாக!  

இந்த கீர்த்தனையில்  பலவிதமான 
பெருமைகளை உடையவனும் நம்பியவர்களை கைவிடாமல் 
ஆதரித்து காப்பவனுமாகிய இராமபிரானின் திருவடிகளை 
பற்றிகொள்வாயாக என்று மனதிற்கு உபதேசம்செய்கிறார் 

இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்குவான்


தாள்சடையானுக்கும் நீள் முடியானுக்கும் 
இடம் கொடுப்போம்.
சங்கடங்கள் இல்லாமல் வாழ்வோம். 

இடத்தை கொடுத்தால்
மடத்தை பிடுங்குவான் 
என்று ஒரு பழமொழி உண்டு

உடனே எல்லோரும் நினைப்பது
என்னவென்றால்
ஒரு தீயவனுக்கு நாம் இரக்கம் காட்டி
நம்முடைய இடத்தை கொடுத்தால்
காலபோக்கில் அவன் நம்
இடத்தைபிடித்துக்கொண்டு நம்மையே
அந்த இடத்திலிருந்து துரத்திவிடுவான்
என்ற நோக்கில் பொருள் கொள்ளப்பட்டுவிட்டது

ஆனால் அவர்கள்
அவ்வாறு நினைப்பதில் தவறில்லை.

ஏனென்றால் இன்றைய உலகில்
அதைப்போல மனிதர்கள்தான் அதிகம்.

உதவி செய்யப்போய் உபத்திரவத்தில்
மாட்டிக்கொண்டு அவதிப்படுபவர்களை பார்க்கும்போது
உதவும் மனம் கொண்டவர்கள் கூட சற்று யோசித்து
பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது காலத்தின் கட்டாயம்.

ஆனால் என்ன இன்னல்கள் வந்தாலும்
நான் ஆபத்தில் உள்ளவர்களுக்கு உதவிக்கரம்  நீட்டுவேன்
என்ற உத்தம பிறவிகளும் இந்த உலகில் உண்டு.

அதே நேரத்தில் சுய விளம்பரதிற்க்காக
உதவுவதுபோல் நாடகமாடும்
அரசியல் கட்சி தலைவர்களும்
ஏராளமாக உண்டு.
அவர்கள் போராட்டங்கள் நடத்தி
இதுவரை எந்த பிரச்சினைகளும்
முடிவுக்கு வந்தது கிடையாது
என்பதுதான் உண்மை.

ஏனெறால் எந்த பிரச்சினைகளிலும்
அது ஒரு முடிவுக்கு வரும்வரை
அவர்கள் தொடர்ந்து தங்களை
ஈடுபடுத்திக்கொள்வதில்லை.

மறுநாளே வேறு பிரச்சினைக்கு
அவர்கள் தாவிவிடுவார்கள்.
இதனால் பாதிக்கப்படுவது
அப்பாவி பொதுமக்களும் ,
அந்த கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டு
அடி உதை வாங்கும் அடிமட்ட தொண்டர்களும்தான்.

சரி விஷயத்திற்கு வருவோம்
எத்தனையோ பழமொழிகள்காலபோக்கில் 
சிதைந்து உருமாரியதைப்போல் போல்தான் 
இந்த பழமொழியும் ஆகிவிட்டது.

நம்முடைய மனமாகிய மடத்தில் 
இறைவனுக்கு நாம் இடத்தை கொடுத்தால் 
அவன் நம் அறியாமையாகிய மடத்தனத்தை 
பிடுங்கி எறிந்து நமக்கு ஞானத்தை. 
அளிப்பான் என்பதே அதன் உண்மையான பொருள்

எனவே நம் மனதில் கண்ட கழிசடைகளுக்கு 
இடம்கொடுத்து நம் அழிந்து போகாமால் 
தாள்சடையானுக்கும் நீள் முடியானுக்கும் 
இடம் கொடுப்போம்.
சங்கடங்கள் இல்லாமல் வாழ்வோம். 

Pic.courtesy-google0images யார் இந்த ஜேஷ்டா தேவி?

Sri Ayur Devi, the Empress of the Universe


ஜேஷ்டா தேவி 

யார் இந்த ஜேஷ்டா  தேவி?

மக்களிடையே ஒரு தவறான நம்பிக்கை 
பரவி அது அவர்களின் மரபணுவில் பதிந்துவிட்டது

அயிஸ்வர்யத்தை வாரி வாரி வழங்கும்
 இலக்குமி தேவியின் 
மூத்த சகோதரி ஜேஷ்டா தேவி 
என்றும் அதாவது மூதேவி என்றும் 
அவள் வீட்டில் இருந்தால் 
அனைத்தும் நாசம் 
என்றும் கதை கட்டி விட்டு விட்டனர். 

முப்பெரும்  தேவி என்றும் 
மூன்று சக்திகளும் இணைந்த 
மூன்று தேவி என்றிருந்தவள்  
காலப்போக்கில் மூதேவி என்று 
நாமம் சூட்டப்பட்டு 
தரித்திரத்தை தருபவள் 
என்று ஓரங்கட்டப்பட்டுவிட்டாள்  
என்றால் அது மனித குலத்தின் 
துரதிஷ்டவசமே 

என் செய்வது?'
குழந்தையும் தெய்வமும் 
கொண்டாடும் இடத்திலேதான்?என்பது 
தெய்வங்களுக்கும் பொருந்தும்

குழந்தை கண்ணனை கொண்டாடுகிறோம்,
குழந்தை விநாயகனை கொண்டாடுகிறோம்,
குழந்தை முருகனைகொண்டாடுகிறோம்
சிறுமியாக லலிதையின் அம்சமாக
பாலாவை கொண்டாடுகிறோம்.
இன்று கிறித்துவர்களும் குழந்தை இயேசு 
என்று கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். 

ஆனால் பாவம் முப்பெரும்தேவியாக 
சர்வ சக்தி படைத்தவளாக விளங்கும் 
ஜேஷ்டாதேவிக்கு 
ஏன்  இந்த நிலை?

ஆனால் உண்மை எத்தனை 
காலம் மறைந்து வாழும் ?

இன்று அவளுக்கு 
விடிவு காலம் பிறந்துவிட்டது

பலஆயிரம் ஆண்டுகளுக்கு 
முன் அவள் வழிபாடு இருந்திருக்கிறது.

சமீபத்தில் ஆலயம் கண்டேன் 
வலைப்பதிவில் ஒரு பாழடைந்த 
சிவ ஆலயத்தை
பற்றிய கட்டுரை வெளியாகிஉள்ளது. 
அதில்  ஜேஷ்டாதேவி சிலை உள்ளது 
அதைகண்டதும் ஜேஷ்டாதேவி 
பற்றிய விவரங்களை தேடியதில்

ஜேஷ்டாதேவி பற்றிய 
ஏராளமான தகவல்கள் 
உள்ளதை கண்டேன். 

நாம் அஷ்ட தரித்திரங்களை 
பற்றிதான் கேள்விப்பட்டிருக்கிறோம் 

ஆனால் இந்த தேவி 64 விதமான 
தரித்திரங்களை  
நாசம்  செய்பவள் என்றும். 
இலக்குமி தேவி அளித்த செல்வதை 
காப்பாற்றி கொடுக்கும் சக்தி படைத்தவள் என்றும் 
அவளின் வழிபாடு ஒரு தனி மனிதருக்கும்
ஒரு நாட்டிற்கும் இன்றியமையாதது 
என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. 

மேலும் அவள் கோயில் கொண்டுள்ள 
தலங்கள்,வழிபாட்டு முறைகள் 
தெளிவாக விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

வலையுலக அன்பர்கள் மேற்கண்ட 
வலைதளங்களுக்கு சென்றுதகவல்களை 
அறிந்துகொண்டு   பயன் பெறுமாறு 
அன்புடன் வேண்டுகிறேன். 


Saturday, April 27, 2013

ஞானபழமாம் மாம்பழத்தை பெற வாருங்கள்


ஞானபழமாம் மாம்பழத்தை 
பெற வாருங்கள் ஒரு ஊருக்கு வெளிப்புறத்தில்
ஒரு இடம் இருந்தது 

அந்த இடத்தை சுற்றி முழுவதும் 
உயரமான சுற்று சுவர் எழுப்பப்பட்டு இருந்தது 

அதன் உள்ளே என்ன இருக்கிறது
என்று யாருக்கும் தெரியாது

மக்கள் அவரவர் பிரச்சினைகளிலே 
எப்போதும் மூழ்கியிருந்ததால் 
அதை பற்றி அவர்கள் அக்கறை கொள்ளவில்லை 

அவர்களில் ஒருவன் அந்த சுவற்றிற்கு
பின்னால் என்னதான்  இருக்கிறது 
என்று பார்ப்போமே 
என்று அதன் மேல் ஏறி பார்த்தான்.
உள்ளே இருப்பதை பார்த்ததும் 
ஆச்சரியப்பட்டு உள்ளே குதித்துவிட்டான்

அவன் சென்றதை பார்த்த மற்றொருவன் 
சுவற்றின் மீது ஏறினான்.
ஆஹ்ஹா இதன் உள்ளே இவ்வளவு 
ஆச்சரியம் இருக்கிறதா என்று 
கத்திக்கொண்டே அவனும் குதித்துவிட்டான்

இதைக்கண்ட மற்றொருவன்.
சுவற்றின்மீது நின்றுகொண்டு 
உரக்க சொன்னான் 
உள்ளே நிறைய மல்கோவா மாம்பழங்கள் 
காய்த்து தொங்குகின்றன 
எல்லோரும் வாருங்கள் என்று 
அவனும் குதித்துவிட்டான்

இப்படி உள்ளே சென்றவர்கள் 
அங்கே இருந்த பழங்களை வயிறார 
சாப்பிட்டுவிட்டு
அங்கேயே கிடந்தார்கள்.
அவர்கள் திரும்பிவரவில்லை. 

ஆனால் ஒருவன் வெளியே வந்து 
அனைவருக்கும் தெரிவித்து அவர்களையும் 
சென்று சாப்பிட்டு மகிழ சொன்னான். 

ஆனால் ஒரே ஒருவன் மட்டும் அனைவரையும் 
அங்கு செல்ல வசதியாக வழி ஏற்படுத்தி 
கொடுத்து அவர்களையும் இன்புற செய்தான். 

இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறது?

நம்முடையே உடல்தான் அந்த ஊர் 

நாம் எப்போதும் புறவுலகிலே புலன்கள் மூலம் 
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

நமக்கு அருகே அகத்தில் சுவையான
இனிப்பான மாம்பழங்கள் காய்த்து பழுத்து 
தொங்குவதை அறிவதில்லை. 

அதை அறிந்த மகான்கள் சிலர் 
நமக்கு அறிவிக்கிறார்கள்
அப்போதும் நாம் அதை 
உணர்ந்துகொள்வதில்லை 

ஆனால் சில ஞானிகள் மட்டும் 
தாம் பெற்ற இன்பம்
 பெருக இவ்வையகம் என்று 
மற்றவர்களையும் 
அழைத்து சென்று அந்த இன்பத்தை
 நாமும் பெற வழி செய்கிறார்கள்.

கால காலமாக இது போன்ற 
கருணை உள்ளங்கள்
மனித குலத்தின்மீது அன்பு கொண்டு
வழி காட்டி  வருகின்றனர். 

அன்று விநாயகன்  
அந்த மாங்கனியை உண்டான்.
 அவனே கற்பக கனியானான்.

கனியை தேடி நமக்கெல்லாம் 
அருள் செய்ய உலகை வலம் வந்தவனோ 
ஞானப்பழமாக இங்கேயே தங்கிவிட்டான்  


அவர்களை போல ஒரு மகான்தான் சமீப காலத்தில்
நம்மோடு வாழ்ந்து நமக்கெல்லாம் வழி காட்டி 
மனஇருள் போக்கி மந்த மாருதம்போல் வீசி 
சண்ட மாருதம்போல் பேசி இன்றும் 
நம் எண்ணங்களில் வாழும் 
காஞ்சி மாமுனி பெரியவா அவர்கள். 

அவர் அறிவுரைகளை உள்ளத்தில்
கள்ளம் தவிர்த்து கருத்தில் கொள்ளுவோம்.
கடைத்தேறுவோம் 


தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(27)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(27)
அனுபம குணாம்புதீ- என்ற இந்த பாடல் அடாண ராகத்தில் அமைந்த அற்புதமான கீர்த்தனை

இந்த கீர்த்தனத்தை கேட்டவர்கள் இந்த பாட்டில் உள்ள கம்பீரத்தினை உணர்ந்திருப்பார்கள். கேட்டவுடன் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் கிருதி  

அதன் விளக்கத்தினை பார்ப்போம் 

நிகரற்ற குணக்கடல் நீயே என்று 
திடமாக நம்பி உன்னை பின்பற்றுபவனாக ஆனேன்

ஆனால் நீ என்னைக் 
காப்பாற்றாமலே இருக்கிறாயே?

மனுவம்சத்தின் நாயகனே!
என் எளிமையை விவரித்து 
உனக்கு எழுதியனுப்ப எனக்கு யாருளர் ?

இதை கேள்
உன் தயை  வருமாறு செய்வாய்.

ஜனக மகாராஜனின் மருமகனே?
ஜானகியின் தாயாகிய பூமிதேவியை போல் 
பொறுமையுள்ளவனே?

என் தந்தையே!
கால தாமதம் இனி போதும்,
போதும்,அய்யனே 

பொன்னாடை அணிந்தவன் 
என்னைப் பார்த்து உனக்கு கபடமேன்?

இவ்வுடலேன்னும் செல்வத்தையே 
நான் சதா நினைக்கின்றேனா?

சகலலோக நாதனே!
கனவிலும் நீயே என் தெய்வம்
(திரௌபதிக்கும் ,கோபியருக்கும்) அவர்களது பக்திக்கு வசப்பட்டு நீ ஆடையளித்து  காப்பாற்றியதை நான் கேள்வியுற்றிருக்கிறேன்

அரச வம்சமேனும் கடலில் உதித்த சந்திரன் நீ
தேவரைக் காப்பவன் கஜேந்திரனை ரட்சித்தவன்
தியாகராஜனால் வணங்கப்பெறுபவன் 
(கீர்த்தனை-அனுபம குணாம்புதீ-(321)-ராகம் அடாண -தாளம்-ஜம்ப)

இறைவனை நம்பவேண்டும்.
பல சோதனைகளுக்கு பக்தனை ஆட்படுத்திதான் 
அவன் அருள் செய்வான். 

ஆனால்  பக்தனின் மனதில் 
அவ்வப்போது அவ நம்பிக்கைகள் எழத்தான் செய்யும்
இருந்தும் அந்த அவநம்பிக்கை நீண்ட நேரம் 
 நீடிக்க செய்யாமல் நனவிலும் கனவிலும் 
அவனையே நினைத்து அவனிடமே
 நாம் தஞ்சம் புகுந்தால்தான் 
இறைவனின் அருளை பெறமுடியும் என்று 
சுவாமிகள் இந்த கீர்த்தனையில் தெளிவாக்குகிறார். 
 

Friday, April 26, 2013

மகான் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் (3)


மகான் ஸ்ரீ  சேஷாத்ரி ஸ்வாமிகள் (3)

அண்ணாமலையின்
அடிவாரத்தில்
தன் உள்ள குகையில்
உறையும் அருணாசலனை
நாடி தவமிருந்தான்
ரமணபெருமான்

அவர் பெருமை அறியாது
அவரை துன்புறுத்தியது
அறிவில்லா அற்ப கூட்டம்

இவை ஏதும் அறியாது
மோனத்தில்ஆழ்ந்தவனை
ஏது செய்யும் இதுபோன்ற
அடாத செயல்கள்

காமாஷி அன்னையின்
வடிவமாய் அங்கு உலவிய
சேஷாத்ரிஸ்வாமிகள் தன் மகன்
படும் பாட்டை கண்டார்
அவர் துன்பம் நீக்க வழி கண்டார்

அவர் தவம் முடிந்ததும் அவரை
துஷ்டர்களிடமிருந்து காப்பாற்றி
இந்த உலக மக்கள் உய்ய வழி காட்டும்
மகானை நமக்கு தந்த
தயாபரனனன்ரோ ஸ்வாமிகள்

உள்ளத்தில் அப்பழுக்கற்ற ஞானி
ஆனால் அவன் உலகத்தின் கண்களுக்கு
அழுக்கு மூட்டை கோணி

கந்தை துணியோடு அலைந்த அவனை
உள்ளத்தில் அகந்தைகொண்டவர்கள்
அணுக இயலாமல் ஏமாற்றத்துடன்
அலைந்து திரிந்ததுதான் மிச்சம்

உரைக்காமல் உள்ளத்தில்
உள்ளதை தானே அறிவான்
மறைக்க முயன்றால் பட்டென்று
போட்டு உடைப்பான்
பல பேர் முன்னிலையில்

அவன் பாதம் பணிவோம்
அவனருள் பெற்று இன்பமாய் வாழ்வோம்.மகான் சேஷாத்ரி ஸ்வாமிகள் (2)


மகான் சேஷாத்ரி ஸ்வாமிகள் (2)


மகான் சேஷாத்ரி ஸ்வாமிகள் 
கருணைக்கடல் 

அன்புக்கு வசப்பட்டு
ஆனந்தத்தை அள்ளித்தரும் 
வற்றாத ஜீவ நதி 

மன இருளை போக்கும்
மங்காத ஒளி

இகபர சுகத்தை 
அள்ளித்தரும் 
கர்ப்பகவிருஷ்ம்

உடல்பிணி, உள்ளப்பிணியை
நீக்கி பிறவி பிணியையும் 
வேரறுக்கும் 
தெய்வ அருள் பெற்ற ஞானி 

அவர் வடிவத்தை வணங்கினால் 
போதும் வாழ்வு வளமாகும்

அவர் நாமம் சொன்னால் போதும்
நம் பாவவினைகள் தீயில் 
பஞ்சாய் பொசுங்கிவிடும்

பார்ப்பதற்குதான் நோஞ்சான் 
யாருக்கும் அஞ்சான்
எதற்கும் அஞ்சான் 

அட்டமாசித்திகளையும் தன்
வசத்தில் கொண்டான் 

அருணையில் சுற்றிதிரிந்தான் 
அயராமல் 40 ஆண்டுகள்

இன்றும் அங்கு தான் 
உறைகின்றான் 

அவன் ஆஸ்ரமதிற்கு வரும்  
அடியவர்களில் 
அல்லல் போக்குவதற்கு.

அவன் நாமம் ஒன்றே போதும்
கலியில் நம்மை பிடித்துள்ள 
கிலிகள் போக  

ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே!

ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே!

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்((26)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்((26)


இராமா நீயே என்னை 
பரிவுடன் காத்தருள வேண்டும் 

எளியவரைக் காப்பவனே!
நான் பிற தெய்வங்களை வேண்டேன்
யானைக்குக் கூட வரமளித்தவனே !
நீயே என்னை பரிவுடன் 
காத்தருலவேண்டும்

தேவருள் சிறந்தவனே!
அற்புதமான உன் திருநாமத்தையே
 என் ஜீவனமாக கொண்டுள்ளேன். 

(கீர்த்தனை-பருலன்னு வேடனு (277)-ராகம் பலஹம்ச-தாளம்-ஆதி)

இந்த கீர்த்தனையில் இராம நாமத்தையே 
ராம பக்தன் ஜீவனமாக கொள்ள வேண்டும்
 என்று வலியுறுத்துகிறார் ஸ்வாமிகள். 

Thursday, April 25, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(25)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(25)
ஸ்ரீராமா என்னை அன்புடன் 
காப்பவர் உன்னை தவிர வேறு யாருளர்? 

இரகுபதி! 
என்னை அன்புடன் காப்பவர் 
உன்னைத் தவிர வேறு யாருளர்?

சகலலோக நாயகா!
நர ஸ்ரேஷ்டனே !

தேவேந்திரன் முதலியோரும் புகழும்வண்ணம் தயையுடன் விபீஷணனுக்கு இலங்கையை தானம் வழங்கி காத்தவர் யார்?

முனிவரின் யாகத்தை காண அவர் பின் சென்று ,துஷ்டனான மாரீசன் முதலியோரைக் கொன்று ஒழித்துக் காத்தவர் யார்?

வாலியை ஒரு கணை எய்து கொன்று.நீ சூரிய புத்திரனான சுக்ரீவனை அரசனாக்கியதுபோல் காத்தவர் யார்?

சம்சாரக்க்கடலை கடக்க உபாயமறியாத தியாகராஜனை கைபிடித்து காப்பவர் 
உன்னையன்றி  யாருளர்? 

(கீர்த்தனம்-ப்ரோசே-வாரெவெரெ-ரகுபதீ(529)-ராகம்-ஸ்ரீ ரஞ்சனி -தாளம்-ஆதி)

தன்பக்தர்களை கை பிடித்து காப்பதில் 
ஸ்ரீ ராமனுக்கு நிகர் யாரும் இல்லை 
என்று ஸ்வாமிகள் தெளிவாக கூறுகிறார் 

அபயம் என்று வந்தவன் எவராயினும் 
காக்கும் காகுத்தன் கோசலைராமன்.  

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(24)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(24)
மனமே!நீ மகிழ்ச்சியுடன்
இராததேன்?

மனமே !
அகிலாண்டகோடி 
பிரம்மாண்ட நாயகனாகிய 
ஸ்ரீமான் நாராயணன்
உன் உள்ளத்தில் 
குடி கொண்டிருக்கையில்
உனக்கு வேண்டுவது வேறென்ன?

நீ மகிழ்ச்சியுடன் இராததேன்?

முற்பிறப்புக்களில் செய்த 
பாவக் கூட்டமாகிய காட்டையழிக்க
 நந்தகமென்னும் வாளைஏந்தி 
ஆனந்தம் தருபவனாகிய 
சீதாபதி இருக்கையில் ,
காமம், லோபம்  ,மோகம் ,மதம்
இவற்றின் சேர்கையாகிய
இருட்டைப் போக்குவதற்கு 
சூரிய சந்திரர்களை கண்களாகவுடைய
ஸ்ரீ. ராமச்சந்திரமூர்த்தி 
உன் உள்ளத்தில் வசிக்கையில் சேமம்,சுபம் ஆகியவற்றையும் தியாகராஜா கோரும் மற்ற விருப்பங்களையும் நியமத்துடன் வழங்கும் தயாநிதியாகிய இராமபத்ரன் உன்னிடமே விளங்கும்போது நீ  வேண்டுவது வேறென்ன?  

(கீர்த்தனை-இக காவலஸிந-( 273)-ராகம் -பலஹம்ச -   தாளம்  -ஆதி )-

மனித மனதின் இயல்பு என்னவென்றால் எப்போதும்
இருப்பதை கொண்டு  இன்புறுவதை  விட்டுவிட்டு  இல்லாத  ஒன்றை  நினைந்து  வேதனைப்படுவதுதான் 

நம்முடைய எல்லாவிதமான  விருப்பங்களையும்  நிறைவேற்றவும், நம்மை  துன்பத்தில் ஆழ்த்தும் வினைகளை அழிக்கவும், நம் உள்ளத்திலேயே ஸ்ரீமான் நாராயணனும், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியும் வசிக்கையிலெ மகிழ்ச்சிக்கு குறைவில்லை. 

ஆனால் அதை உணராது ஏன் சோகத்தோடு காணப்படுகிறாய் 
என்று தன் மனதை கேட்கிறார் ஸ்வாமிகள் 
.
அவர் மனம் மட்டும்தானா அப்படி இருக்கிறது 
நம்முடைய மனமும் அந்த நிலையில்தான் இருக்கிறது.

இனியாவது நம் மனதின் போக்கை நாம் மாற்றிக்கொண்டு பிலாக்கணம் பாடாமல் இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணத்தை கற்றுக்கொள்வோம். 

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (23)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள் (23)
க்ரஹ பலம் எம்மாத்திரம்?

ஸ்ரீ இராமனின் அனுக்ரஹ பலமே
உண்மையான பலம்

ஒளிமயமான அவனது 
திருவுருவத்தை தியாநிப்பவர்களுக்கு 
நவக்ரஹ பலம் எம்மாத்திரம்?

க்ரஹங்களினால் ஏற்படும் பீடைகளையும்
ஐந்து வகை பாபங்களையும் ,
அகந்தை நிரம்பிய காமம் முதலிய 
தீக்கு சமமான தீய குணங்களையும் 
நாசம் செய்யும் ஸ்ரீ ஹரியைத் துதிக்கும் தியாகராஜனுக்கும் சரசகுணம் படைத்த பக்தர்களுக்கும் க்ரஹ பலம் எம்மாத்திரம்? 

(கீர்த்தனை-க்ரஹ பலமேமி-(73)-ராகம்-ரேவகுப்தி-தாளம்-தேசாதி )

இன்று மக்கள் பாவங்கள்
செய்ய பயப்படுவதில்லை 

ஆனால் அதன் விளைவால்
ஏற்பட்ட துன்பங்களை மட்டும் 
கண்டு அலறுகின்றனர். 

பாவங்கள் செய்ததினால் 
விளைந்த வினைகளை 
அனுபவித்து தீர்க்காமல்
பரிகாரம் தேடி அலைகின்றனர்.

லட்சக்கணக்கில் பணத்தையும் 
நேரத்தையும் விரயம் செய்கின்றனர். 

இது போன்ற மூடர்களை நன்றாக
 பயன்படுத்திக்கொண்டு ஜோதிடர்களும் 
மாந்திரீகர்களும் கோடி கோடியாய் 
காசை அள்ளுகின்றனர்.  

கோள்கள் மனிதர்களின் 
வினைகளை அனுபவித்து திருந்த 
துன்பங்களை இறைவனின் 
ஆணைப்படி அளிக்கின்றனர். 

வினைகளை அனுபவித்து 
தீர்க்காமல் கோள்களை வணங்கி 
வினைகளை தீர்க்குமாறு வேண்டுகின்றனர்.

கோள்களே ஒரு காலத்தில் ராவணனின் 
சிம்மாசனத்தின் படிக்கட்டுகளாக அமைந்து 
துன்புற்றதும்  பின்பு ராவணனை அழித்து 
அனைவரையும் ஸ்ரீ  ராமன் விடுவித்ததையும் 
ராம பக்தர்கள் நினைவில் கொள்ளவேண்டும். 

வினைகளை தீர்க்க வல்லவன் 
இறைவன் ஒருவனே. 

அவனிடம் சரணடைந்தவர்கள் 
கோள்களை பற்றி கவலைப்படவேண்டியதில்லை 
என ஸ்வாமிகள் அறுதியிட்டு கூறுகிறார். 

மகான் சேஷாத்ரி ஸ்வாமிகள்


மகான் சேஷாத்ரி ஸ்வாமிகள் 


ஒளி  மயமாய்  நாத  மயமாய்
இருக்கும்  இறைவன் ;
அக்னி  ஸ்வரூபமாய்  விளங்கும் 
 ஈசன்  குளிர்ந்தான் ;
அண்ணாமலையாக  
கோயிலில்  சிலையாய்  நின்றான்  
உண்ணாமுலை  உடனுறை  
அருணாசலேஸ்வரராக 
அடியவருக்கு  காட்சி  தந்து 
கடைத்தேற்றும்   பொருட்டே !
அவன்  திருப்பாதம்  போற்றி !

மகான் சேஷாத்ரி ஸ்வாமிகள் 

அத்திகிரியில்   தொடங்கிய 
 உன்  ஆன்மீக  பயணம்  ;;
அருணாச்சல கிரியில்  
அல்லவோ  நிறைவுற்றது  

அன்னையின்  அருள்  பெற்றவனே  
அண்டினோரை  அபயமளித்து  காத்தவனே 
உன்  நாமமொன்றே  போதும்  அனைத்து 
பாபங்களையும்  அழித்தொழிப்பதற்கு 

அம்பிகை  புதல்வா  போற்றி 
அருணாசலேஸ்வரரின் 
 அருள்  பெற்றவா   போற்றி  
அண்ணாமலையை  வலம்  வந்த  
ஸ்ரீ  சேஷாத்ரி   ஸ்வாமிகள்  திருவடிகள்  போற்றி  !

யார்  அறிந்தார்  உன்  பெருமையை  
நீ  இப்பூவுலகில்  நடமாடி  லீலைகள்  புரிந்தபோது ?

பிறை  சூடிய  பித்தனை  நெஞ்சில் 
சுமந்துசிவானந்த  வெள்ளத்தில்  மிதந்த  
உன்னை பித்தன்ன்றல்லவோ   என்று  
இவ்வுலக  மாந்தர்  எள்ளி  நகையாடினர் 

தன்னையறியும்  வழியை தரணிக்குணர்த்த 
அவதரித்த  ஸ்ரீ  ரமண  மகரிஷியை  கண்டெடுத்து  
காத்து  உலகுக்களித்த  உன்  கருணையை 
 கூற  வார்த்தைகள்  உண்டோ ?

அன்னை  காமாட்சியின்  அருட்காட்சியில் 
 முக்காலமும்  மூழ்கி  பேரின்பத்தில்  திளைத்திருந்த
 உன்னை  சிறுமதி  படைத்து  சிற்றின்பத்தில் 
 மூழ்கியுள்ள  அற்ப  மாந்தர்கள்  எவ்வாறு  அறிய  இயலும் ?

காண்போர்  வெறுக்கும்  
வெளித்தோற்றம்  காட்டியே  பரப்ரம்மத்துடன்  
கலந்துவிட்ட  நீ  மாயையில்  மூழ்கியுள்ள  
இவ்வுலக  மாந்தர்களை  உன்னருகில்  
வரவிடாமல்  செய்த  மாயம்  
உனக்கல்லவோ  தெரியும்  

கந்தை  துணியணிந்து  வலம்  வந்த  நீ  
உன்னை  நாடி  வந்தவர்களை  விரட்டியடித்தாலும் 
அதை  பொருட்படுத்தாது 
உன்  திருவடியை  பற்றியவர்களின்  
அகந்தையை  போக்கி  அவர்களின்  
துன்பத்தை  துடைத்த 
தயாபரன்   நீயன்றோ !

மெத்த  படித்தோரும் 
சாத்திர  ஞானம்  கொண்டோரும்  
அனுபவ  ஞானம்  கொண்ட  உன்னிடம்  
தோற்று  ஓடி  பின்பு உன் மகிமை உணர்ந்து 
உன்  திருவடியில்  தஞ்சமடைந்ததில்
வியப்பேதுமில்லையன்ரோ !

உன்  பெருமையறியாது  உள்ளத்தில்  
கள்ளம்  கொண்டு  உன்னை  
சோதனை  செய்ய  வந்தவர்கள்  வேதனைப்பட்டு 
ஓடியது  உன்  அவதார  லீலையன்றோ !

பூதஉடலை உதிர்த்தாலும்  
இன்றும்  சூட்சும  நிலையில்  நின்று 
உன்னை  நினைத்து  நாடி  வணங்குபவர்களின்
 பாபம்  போக்கி  தாபம்  நீக்கி  
நல்வழி  காட்டும்  கருணா  மூர்த்தியே  ! 
நின்  திருவடிகள்  போற்றி  போற்றி .

ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே. !
தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (22)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள் (22)ஸ்ரீராமா உன் மனம் 
ஏன் இரங்கவில்லை?   

எக்காரணத்தினாலோ 
உன் மனம் இரங்கவில்லை

நான் செய்த பிழை என்னவோ நானறியேன்
எங்கு அல்லது எதை நோக்கினும் 
அதை தயரதன் மைந்தனான இராமனாக எண்ணும் 
 என்னிடம் உன்மனம் இளகவில்லை 

என்னிடம் அன்பு பூண்டவர்கள் கூட 
என்மீது பொறாமை கொள்கின்றனர்
என்னை வெறுப்பவர்களோ "இவன் எம்மாத்திரம்" 
என்று என்னை பலவிதங்களில் திட்டுகின்றனர்

ஒருசிலர் "இவன் ஆதரவிற்கு தகுந்தவநல்லன் " 
என்று திரும்பி பார்க்கவும் யோசித்தனர்

நியமமாக என்னைக் காப்பவர் யாருமிலறென்று 
உன்னையே வேண்டிநிற்கும் 
ஏன் மீது உன் மனம் இரங்கவில்லை

செல்வம், மக்கள்,பெண்டிர்,ஆகியவை 
கண்டு "இவை நம்மை சேர்ந்தவை" என்று மயங்கினர்  

ரகுவம்சம்மென்னும்  கடலில் உதித்த சந்திரனே 

! ஸ்ரீராமா!என்னையும் அக்கதிக்கு ஆளாக்காமல்
உன்னிடம் ஆயிரக்கணக்கில் கோரிக்கைகளை 
வைக்கும் என்னை கருணையுடன் நீ காப்பாற்றவேண்டும். 

பற்றில்லாத இராமபிரானே!
இவ்வளவு அலட்சியம் நீ செய்யலாகாது

சரணடைந்தவர்களை காப்பவனே !
உன்னையே நம்பினேன்.
தாரக நாமத்தாய்!பராத்பரா!
இத்தியாகராஜனின் சித்தமிசை வசிப்பவன் நீயே
என்று தெரிந்து மிகவும் வேண்டினேன்

நீயே கதியென்று இரவு பகலாய் 
ஆயிரம் தடவை முறையிட்டஎன் மீது உன்மனம்  
ஏனோ இரங்கவில்லை 
(கீர்த்தனை-எந்துகோ-நீ மனசு கரகது(435)-ராகம்-கல்யாணி-தாளம்-ஆதி)

உலக மோகத்தில் மூழ்கியுள்ள மனிதர்களால் 
இராம பக்தனின் மன நிலையை புரிந்து கொள்ள இயலாது.

எதற்கெடுத்தாலும் எதிலும் ஆதாயத்தை 
எதிர்பார்க்கும் இந்தமக்கள் இறைவனின் அருள் வேண்டி 
அல்லும் பகலும் தவிக்கும் 
இராம பக்தனின் நிலையை அறியமாட்டார்கள்.

மாறாக பரிகசிப்பதிலும், 
துன்புறுத்துவதிலுமே நாட்டம் கொள்வார்கள் 

ஆனால் அவைகளைஎல்லாம் பொருட்படுத்தாது 
இராமனிடமே ஸ்வாமிகள் முறையிடுகின்றார். 

அதனால்தான் அந்த தெய்வத்தின் அருள்கிடைத்து 
அந்த அனுபவத்தை நமக்கெல்லாம் 
விட்டு சென்றிருக்கின்றார். 

எனவே எத்தனை சோதனைகளும் 
வேதனைகளும் வந்தாலும் 
ஸ்ரீராமனின் மீது உள்ள பக்தியை 
ராம பக்தர்கள் விடக்கூடாது 

நன்றி படம்-கூகிள் Wednesday, April 24, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (21)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள் (21)ஸ்ரீ ராமா நீ என்னை ஆட்கொள்வாயோ,
கொள்ளமாட்டாயோ
நானறியேன்!

இராமா நீ என்னை ஆட்கொள்வாயோ 
கொள்ளமாட்டாயோ!

முன்பு நாங்கள் நோற்ற 
நோன்புகளின் பயன் எத்தகையதோ?

மனதில் உன் மீது பக்தி மிகுந்து உன்னையே
நம்பினோமென்று  கூறித் திரிந்தோமே தவிர 
அதை உண்மையென்று கருதி நீ என்னை ஆட்கொள்வாயோ,கொள்ளமாட்டாயோ?

சம்சாரக் கடலில் தோன்றும் இன்னல்கள் 
எங்களை அணுகாமலிருப்பதும் 
விவேகமற்ற மாந்தர்களின் நட்பை நாங்கள் 
விரும்பாமல் விலகியிருப்பதும் ,இவ்வுலகில் வேதம்,ஆகமம்,முதலியவற்றின்
 மர்மங்களை தெரிந்து நாங்கள்
 உன்னை நம்பியிருப்பதும் 
போதுமென்றெண்ணி நீ என்னை 
ஆட்கொள்வாயோ,கொள்ளமாட்டாயோ? 

கார்முகில்வண்ணனே!

நியமம் தவறாமல் வாழும் பக்தர்களுக்கு
நிலையான சுகம் உண்டென்று
உரைக்கும் பெரியோர்களை நம்பி,அழகு ததும்பும் 
உன் வடிவத்தை ஆனந்தத்துடன் தியானித்துக்கொண்டு 
அனவரதமும் உன்னைப் போற்றினோம்,
பூர்ணச்சந்திர  வதனனே !

உன் ஜெபமே எங்களுக்கு கதியாததால் 
தாமரைக்கண்ணனே !

குதிரை,யானை,செல்வம் முதலியன பெரிதல்ல 
சீதையின்  உள்ளம் கவ்ர்வோனே!
சாதி மலரை அணிந்தவனே .
என் பிழைகளை பொருட்படுத்தாமல் 
என்னை ஆட்கொள்வாயோ,கொள்ளமாட்டாயோ?

(கீர்த்தனம்-ராம நீ -வாது-கொந்து (442)-ராகம்-கல்யாணி-தாளம்-ஆதி )

மிக அருமையான கீர்த்தனை.
நம்மை நாமே ஆத்ம பரிசோதனை செய்யும் கீர்த்தனை.

நாம் உண்மையாக நோன்புகளை நோற்றிருந்தால்
உண்மையான பக்தி பண்ணியிருந்தால் 
நம்முடைய நோக்கம் எப்போதோ நிறைவேறி இருக்கும்.

அதனால்தான் உலக மோகங்களை தவிர்த்து 
உண்மையான பக்தி ராமனின் திருவடிகளில் 
கொள்ளவேண்டும் என்பது 
இந்த கீர்த்தனையின் நோக்கம் ஆகும்.  

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (20)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள் (20)

இராம நாமத்தை 
பஜனை செய்யலாகாதா?

பிரம்மன்,உருத்திரன் 
முதலியோருக்கு 
ஆத்ம மந்திரமாகிய 
இராம நாமத்தை 
பஜனை செய்யலாகாதா?

பத்தரை மாற்று பொன்னாடை
அரையில் அழகுடன் விளங்க 
புன்சிரிப்பு தவழும் 
அவனுடைய திருமுகத்தை
நினைத்து பஜனை செய்யலாகாதா?

அவனுடைய 
சிவந்த உதடுகளையும் 
முத்துப்போன்ற   
பல் வரிசையையும்
 பளபளவென்று மின்னும் 
இரு கன்னங்களையும்
சதா எண்ணி 
பஜனை செய்யலாகாதா?

மனக் கற்பனையிலுதித்த 
சம்சார கடலை கடக்க உதவும் 
தாரக மந்திரமாகிய இராம நாமத்தை 
இத்தியாகராஜனின் 
விண்ணப்பத்தை கேட்டாவது 
பஜனை செய்யலாகாதா? 

(கீர்த்தனம்-(327)-பஜன சேய ராதா ராம -ராகம்-அடாண-தாளம்-ரூபகம்)

தான் பெற்ற இன்பம் பெருக  
இவ்வையகம் என்ற  எண்ணத்தில் 
அனைவரையும் ராம் பக்தியில் ஈடுபடுமாறு 
ஸ்வாமிகள் வேண்டுகிறார். 

மேலும் ஆதி சங்கரரின் கொள்கையாகிய
பிரம்மமே சத்தியம் இந்த உலகம்
மனத்தால் கற்பிக்கப்பட மாயை
என்பதையும் அதிலிருந்து மீள
இராம நாமத்தை ஜபம் செய்யலாகாதா 
என்றும் ஸ்வாமிகள் 
நமக்கு தெளிவுபடுத்துகிறார்.