Monday, October 27, 2014

என்னுள்ளே இருக்கின்றாய்.எந்நேரமும் என்னருகில்.


என்னுள்ளே இருக்கின்றாய்.எந்நேரமும்
என்னருகில்.

கானகத்தில் வழி தவறி வந்தவரை
வழிப்பறி செய்து அவர்கள் வாழ்வை
அழித்து வாழ்ந்துவந்த கொள்ளையனை
உன் பக்தனாய் ஏற்றுக்கொண்டாய் .

கலியுகத்தில் எப்போதும் உன்னையே
நினைத்துக்கொண்டிருக்கும் என்
போன்றவர்களை மட்டும்  ஏற்றுக்கொள்ள
உனக்கு இன்னும் மனம் வரவில்லை

கண் முன்னே எப்போதும் இருக்கின்றாய்
ஆனால் கண்ணுக்கு புலப்படாமல்
அங்கும் இங்கும் திரிகின்றாய்

புலால் உண்ணும் கண்ணப்பனுக்கு
காட்சி தந்தாய் புலன்கள் என்னும்
சிலந்தி  வலையில் சிக்கி மீளமுடியாமல்
தவிக்கும் என் போன்றவர்களுக்கு
விடுதலை எப்போது?

உலக மாயையில் சிக்கிகொண்ட
இவனுக்கு உன் மாயாஜாலங்கள்
எவ்வாறு புரியும்?

மரிக்கவே படைக்கப்பட்ட அழியும் உடலைப்
பராமரிக்கவே வீணாகிறது உழைப்பும்
செல்வமும்

பொய்யான உறவுகளுக்காகவே
ஏங்கி வாடி வதங்கி அல்லல்பட்டு
அலைபாய்கிறது பந்தப்பட்ட மனம்

ஓசைப்படாமல் தன்  பக்கம் இழுத்து
என்னை அடிமைப்படுத்தி தன் வசம்
வைத்திருக்கிறது ஆசைகள் என்னும் பேய்கள்

அவம் பேச பொழுது இருக்கிறது ஆனால்
தவம் செய்ய நேரமில்லை.

வெட்டியாய் பொழுது போக்க
நேரம் உண்டு .ஆனால் வெட்ட வெளியாய்
எங்கும் பரந்து  கிடக்கும் உன்னை அறிய
நேரம் இல்லை

என்னுள்ளே இருக்கின்றாய்.எந்நேரமும்
என்னருகில். ஆனால் உன்னை எங்கெங்கோ
எதிலெதிலோ தேடுகிறேன் ஆயுள் முழுதும்.

மதம் சார்ந்து தேடினாலும் நீ கிடைப்பதில்லை
மதம் பிடித்து யானையைப்போல்
அலைவதைத் தவிர

உன்னை இல்லை என்றாலும் உனக்கு
ஒன்றும் ஆவதில்லை நீ இருக்கிறாய் என்று
நம்பினாலும் நீ என்னை சட்டை
செய்வதில்லையே அது ஏன் ?

நான் பட்ட துன்பங்கள் போதும் என்று
நீதான் இவன்மீது இரக்கம் கொள்ளவேண்டும்
எல்லா இடர்களினின்றும் விடுபட வேண்டி

இல்லையேல் காலன் என்னை கொன்றுவிடுவான்
மீண்டும் பிறவி பெற எவ்வளவு காலம்
காத்திருக்கவேண்டும் என்பதை யாரறிவார் ?








Sunday, October 26, 2014

காதறுந்த ஊசியும் கடை வழிக்கு வராது ..ஆனால் ?


காதறுந்த ஊசியும் கடை வழிக்கு  வராது ..ஆனால் ?

காதறுந்த ஊசியும் கடை வழிக்கு வாராது
என்றார் பட்டினத்தடிகள்.

அப்படி என்றால் எதுதான் நாம்  இந்த
உடலை சுடலைக்கு   விட்டு விட்டு
போகும்போது  நம்   கூட   வரும் ?

நம் காதால் கேட்ட ராம  நாமம் நிச்சயம்
நம் கூட வரும் நம்மை நரகத்தில் தள்ளாமல்
நம்மோடு  இருந்து  நம்மைக்  காக்கும்

இந்த உலகில் பிறவி    எடுத்தது  முதல்
சங்கரி புதல்வன் ஐங்கரனை நினைக்கவேண்டும்

இவ்வுலகை விட்டு நீங்கும்போது சங்கரனை
நினைக்க   வேண்டும்

காசினியை விட்டு நீங்கும் போது
சேர்த்து   வைத்த காசு நம்மோடு வாராது



காசி விஸ்வநாதனை நினைத்தால் அவன்
காதில் ஒதுவான் ராம நாமத்தை
நம் ஜன்மம் கடைத்தேற.

அதுவரைக்கும் ஏன் காத்திருக்க வேண்டும்?



இக்கணத்திலிருந்தே     ராம நாமத்தை ஜபம் செய்வோம்  
நற்கதி   அடைவோம்  . 

மனிதர்களே தென்னையைப் போல் இருங்கள் !

 மனிதர்களே  தென்னையைப் போல் இருங்கள் !


மானிடனே நன்றி மறந்து வாழ்வதுதான் உன்
பிறவிக் குணமோ?

ஒரு நாய்க்கு இருக்கும் நன்றி கூட உனக்கு
அணுவளவும் கிடையாது என்பதை
அவ்வப்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறாய்.
உன் அன்றாட செயல்கள் மூலம்.



உன் சுயனலதிர்க்காக நீ எதை வேண்டுமானாலும்
செய்வாய் என்பது அனைவருக்கும் தெரியும்.

என் பல உயிர்களையே ஈவிரக்கமின்றி கொல்வாய்
கொன்றதை தின்னவும் செய்வாய்.

நீ என் காலில் இட்ட கழிவு நீரை சுவையான
சுத்தமான, சுகாதாரமான தாகம் தீர்க்கும்
இளநீராக மாற்றிக் கொடுத்தேன் அதை
குடித்தும், காய்களை  விற்றுக் காசாக்கியும்
பல ஆண்டுகள் நான் வழங்கிய சுகங்களை
அனுபவித்தாய்.





ஆனால் இன்று அடுக்கு மாடி கட்டவேண்டும் அதற்கு நான்
இடையூறாய் இருக்கிறேன் என்று என் தலையை
மொட்டை அடித்தாய். அடுத்த நாளே என் கதையையே
முடித்து விட்டாய்.

உன் தலையை மொட்டை அடித்தால், மீண்டும் முடி வளரும்
ஆனால் என் தலையை மொட்டை அடித்தால். என்ன ஆகும்
என்று உனக்கு தெரியும்.

மாறும் மனம் கொண்ட  குணம் கொண்ட உனக்கு நன்றி மறத்தல்
இயல்பாக இருக்கலாம். ஆனால் நான் மீண்டும் வேறொரு
இடத்தில் முளைப்பேன்  தழைப்பேன். என்னிடம் உள்ள
அனைத்தையும் அனைவருக்கும் வழங்குவேன்.



அதுதான் எனக்கு இறைவன் இட்ட   கட்டளை.

தீமைகள் பல  தனக்கு இழைத்திடினும்    அனைவருக்கும்
நன்மையே நாடிடுவார்கள் நல்லோர்கள் .
அவர்களே மேலோர்கள். இறைவனின் அன்பர்கள்.. 

Thursday, October 16, 2014

பரமனை அடையும் வழி ஒன்றே

பரமனை அடையும் வழி ஒன்றே

வானில் உயரே
பறக்க வழியிருந்தும் நல்ல உணவை
உண்ணாது பூமியில்



அழுகிய பிணத்தை தேடி வயிறு
வளர்க்கும் பருந்து போன்ற பறவைகள்



அதுபோல் இவ்வுலகில் மனிதர்கள் பலர்
வாழ்வில் நல்ல உயர்ந்த
நிலையை அடைந்த பின்னும்
அழியும் அற்ப பொருட்களையே நாடி தேடி ஓடி
அழிந்து போகின்றனர்

பூலோகனாதனை நினைந்து ,பணிந்து
உய்யும் வழியை நாடாது



தீயில் உருகி
காணாமல் போகும் உலோகங்களை
உடலில் அணிந்து உலா வருகின்றனர்.



நம் கண் முன்னே தோன்றி நாம் போடும்
உணவை உண்டு கொழுத்து நோயுற்று
நம் கண்முன்னே மண்ணுக்கு போகும்
உடலை நம்பி மோசம் போகின்றனர்



நம்மைப் படைத்தது மட்டுமல்லாமல்
நம் உடலுக்குள்ளே கோயில் கொண்டு
நம்மை இயக்கும்  உத்தமனை அறிய
முயலாது ஏதேதோ பிதற்றி திரிகின்றனர்
இவ்வுலக மாந்தர்.

ஓராயிரம் நாமங்கள் கொண்ட   அவன்தான்
இறைவன் என்று  உண்மையை
அவனை உணர்ந்தோர் உரக்கக் கூறிடினும்
தான் வணங்கும் வடிவமே உண்மையான
தெய்வம் என்று  உரிமை கொண்டாடி
உலகத்தில் குழப்பம் விளைவிக்கிறது
உண்மையை உணராக் கூட்டம்


படித்தவருக்கும் பாமரனுக்கும்
பரமனை அடையும் வழி ஒன்றே



அவன் பாதங்களைச் சரணடைந்து
அவன் நாமம் சொல்லி அனைத்து
உயிர்களுடன் அன்போடு இணைந்து
வாழ்வதே அவனை அடையும்
எளிதான  வழி என்பதை அவனைக்
கண்டவர்கள் காட்டிய வழி.

படங்கள்-நன்றி-கூகுள்