Friday, August 2, 2013

பரிவோடு உன்னை அழைக்கின்றேன்

பரிவோடு உன்னை 
அழைக்கின்றேன்
பரங்குன்றத்தில்
உறையும் முருகா 


பாரில் உன் கண்
முன் நடக்கும்
அவலங்களை கண்டும்
காணாததுபோல்
நின்று கொண்டிருப்பதன்
மர்மம் ஏனோ?

உன்னை தரிசிக்க கோயிலுக்குள்
நுழைந்தால் கேட்கின்றார் காசு
தர மறுப்போருக்கு கிடைக்கும்
ஏச்சு   பேச்சு

பக்தர்கள் என்ற பெயரில் எத்தர்கள்
கூட்டம் உன் கோயிலில் வலம்
வருதப்பா ,வருவோர் போவோரிடம்
அச்சடித்த சீட்டுகளை கொடுத்து
அரசு அச்சடித்த நோட்டுக்களை
பிடுங்குதப்பா?

ஒரு சில கோயில்களிலோ
அலை மோதுகிறது  பெருங்கூட்டம்
பல கோயில்களிலோஉன் இடையில்
உனக்கு உடுத்த ஆடையில்லை
தீபம் ஏற்ற ஆளில்லை

காசினியில் காசுதான் ஆட்சி செய்யுதப்பா
காசில்லோர் உன் கோயில் வாசலில்
பிச்சை எடுத்து வயிற்றை கழுவும்
நிலை நாள்தோறும் கூடுதப்பா

கசடர்களும் காமுகர்களும்
பெருகிவிட்டனர் இவ்வுலகில்
வியாபாரக் கூடங்களாகிவிட்டன நீ
உறையும் திருத்தலங்கள்

காசுள்ளவன் கோயிலில் நுழைந்தவுடன்
காணுகிறான்  பலவிதமாய்
உன் தரிசனங்கள்.
கணினி மூலம் பெற்ற
அனுமதி சீட்டை கொண்டு

காசில்லாதவனுக்கு
கால் கடுக்க பலமணி
நேரம் நின்று காண்பது
வெறும் கண  நேர
தரும   தரிசனம் தான்

ஆண்டவன் முன் அனைவரும் சமம்
என்று மேடை போட்டு பேசுகின்றார்
ஆனால் உன்னிடம் வருகையிலே
அவற்றை தன்  காலில்
போட்டு மிதிக்கின்றார்.

வறுமை பெருகிவிட்டது பாரெங்கும்
ஒரு சிலர் அனைத்து  வளங்களையும்
தன்னுடையதென எடுத்துக்கொண்டதாலே


வறண்டுவிட்டன
ஆறுகள் நீரில்லாமல்
வண்டல்மண்ணை சுரண்டியதால்

வயலூர் முருகா
இன்று வயல்களும் இல்லை
உயிர்களின் உயிரைக்காக்கும்
பயிர் செய்ய

அன்று நீ அரக்கர்களை வதைத்து
அவர்களின் கொட்டம் ஒடுக்கினாய்
இன்றோ உன் பக்தர்கள் தன்னையே
வருத்திக்கொள்கின்றனர்
பக்தி  என்ற போர்வையில்  

உலகில் சுத்தமும் இல்லை
சுகாதாரமும் இல்லை
அனைத்திற்கும்
ஆதாரமான அன்பும் இல்லை

உடலில் ஆறு ஆதாரங்களின்
ஒளியாய் திகழ்வோனே

ஆறுமுகனே , குகனே,
அனைத்தையும்
சரி செய்ய வேண்டுகிறேன்

இந்த அவனியில் உள்ளோர்
உன்  புகழ்  பணிந்துபாடி
துன்பம் நீங்கி இன்பமாய்
வாழ  வேண்டுகிறேன்.

ஓம் சரவணபவ 

5 comments:

 1. உண்மைகள்... எல்லாவற்றிக்கும் ஒரு நாள் தீர்வு உண்டு...

  ReplyDelete
 2. //பரிவோடு உன்னை அழைக்கின்றேன்//

  ஏற்றுக்கொள்வார் ..... கூட்டிச்செல்வேன் ..... என்னுடன் ஓடிவா ........ நீ

  என்று ”திருவிளையாடல்” படத்தில் ஒளவையாராக நடித்த கே.பி.சுந்தராம்பாள் பாடியது நினைவுக்கு வருகிறது.

  நல்ல பகிர்வு. நியாயமான புலம்பல்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

  ReplyDelete
 3. வாழ்த்து பாராட்டு நன்றி

  ReplyDelete
 4. கடவுள் கண்டிப்பாக அனைத்தையும் சரி செய்து விடுவார்... நம்புவோம்...!

  ReplyDelete
  Replies
  1. நம்பினார் கெடுவதில்லை
   நான்குமறை தீர்ப்பு

   Delete