Thursday, December 19, 2013

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்-4)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்-4)ஆழி மழைக் கண்ணா
ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து
கொடார்த்தேறி  ஊழி முதல்வன்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடை பற்பநாபன் கையில் ஆழிபோல் மின்னி
வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த
சரமழைபோல்வாழ உலகினில் பெய்திடாய்
நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்


http://www.youtube.com/watch?v=bH-JYsfWy0M&feature=youtu.be
நீரின்றி அமையாது உலகு
என்றார் வள்ளுவர்

நீர் பஞ்ச பூதங்களில் ஒன்று.

அதுதான் இந்த உலகில்
75 விழுக்காடுகள் ஆக்கிரமித்துள்ளது
நம் உடலிலும் அதே போல்
75 விழுக்காடுகள் நிறைந்துள்ளது

உடலில் நீர் வற்றிவிட்டால்மரணம்தான்
அதிகமானாலும் தொல்லைதான்

அப்படிப்பட்ட நீர் பல நிலைகளில்
பனிக்கட்டி ,நீராவி, நீர் என
நமக்கு பயன்படுகிறது.

அந்த நீர்
பரப்ரம்மத்தின் அம்சம்.

அதை நமக்கு தேவைப்படும் அளவு,
தேவையான நேரத்தில் வழங்குபவன்
அந்த பத்மநாபன் என அழைக்கப்படும்நாராயணனே

பரந்து  விரிந்த கடல் நீர் நேரடியாக
மனிதர்களுக்கோ, மற்ற உயிர்களுக்கோ பயன்படாது.

ஆழம் எவ்வளவு என்பதை அறிய இயலாத
கடலை ஆழி என்றழைக்கிறோம்.

அதே நேரத்தில் நாராயணனின்
கையில் உள்ளசக்கரம்  சுடராழி என அழைக்கபடுகிறது
அதன் சக்தி எவ்வளவு என்பதை அளவிடமுடியாதது

அவன் கையில் உள்ள வலம்புரி சங்கும் .
ஆழியாகிய கடலிலிருந்துதான் பிறந்தது.

செல்வத்திற்கு அதிபதியாம்
இலக்குமியும் கடலிலிருந்துதான் பிறந்தாள்

அவள் சகோதரனான சந்திரனும்
கடலிருந்துதான் பிறந்து வானில்
ஒளி வீசிக்கொண்டிருக்கிறான்
கடலிலிருந்துதான்  அமிர்தம் பிறந்தது.

அந்த கடலில்தான் பரந்தாமன்
அரி துயில் கொண்டுள்ளான்

இன்னும் கணக்கற்ற செல்வங்களை
கடல்தன்னிடத்தே கொண்டுள்ளது.

நமக்கு வேண்டிய நல்ல நீரை
ஆழியாகிய கடலிலிருந்து
ஆதவனின் உதவியால் மேகமாக மாற்றி
மழையாய் பொழிந்து நீர் நிலைகளை நிரப்பி
நம்மை வாழ வைக்கும் தெய்வம்
கண்ணனாக அவதரித்த நாராயணனே

எல்லா செல்வங்களையும்
தரும் கடலன்னையும் அவனே.

அதனால்தான் ஆழி மழைக் கண்ணா
என்று அவனை அன்போடு
அழைக்கிறாள் ஆண்டாள்

மழை அதிகமாக பெய்தாலும் நாசம்.
பெய்யாவிட்டாலும் நிலைமை மோசம்.

வானத்தில் பலவிதமான மேகங்கள்
தோன்றினாலும் எல்லா மேகங்களும்
மழை மேகங்கள் கிடையாது.

அதிக நீரை கொண்டுள்ள கருத்த
மேகங்கள்தான் மழையை தரும்.

அது எப்படி இருக்கும் என்றால்
ஊழிக்காலத்தில் இந்த உலகம் அழியும் நேரத்தில் இடைவிடாது மழைபெய்து உலகம் முழுவதும் நீரில் மூழ்கிஇருண்டுவிடும்.அதுபோல் கருத்த மேகங்களை கொண்டு
நாராயணனின்  கையில் உள்ள சுடர்மணி போல்
ஒளி வீசும் சக்கரம் போல் மின்னி,
சங்கின் நாதம் போல் இடி இடித்து,
நாராயணனின் கையில் தாங்கியுள்ள
சாரங்கம் என்னும் வில்லிலிருந்து
சரமாரியாக புறப்படும் அம்புகள் போல்
உலகிற்கு நன்மை தரும் வகையில்
மழை பெய்ய வேண்டும் என்று
ஆண்டாள்  பிரார்த்திக்கிறாள்.

அப்போதுதான் நாங்கள் மார்கழி மாதத்தில்
நன்னீராடி உன்னை வழிபடுவதற்கு
ஏதுவாகும்என்கிறாள்

இந்த பாசுரத்தில் ஆண்டாள் வலியுறுத்துவது
என்னவென்றால் மழைக்கடவுள் நாராயணனே என்றும்
அவனை நாம் வணங்குவதால் உரிய காலத்தில்
மழைபெய்து உலகிற்கு நன்மை உண்டாகும் என்பதே.

5 comments:

 1. பாசுரமும் விளக்கங்களும் அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. உங்களுக்கே உரித்தான சிறப்பான விளக்கம் ஐயா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. மெய்மறந்து ஒன்றிப்போனேன் அய்யா! மிகவும் சிறப்பானதொரு எழுத்து நடை! தொடருங்கள் அய்யா! தொடர்கிறேன்!
  http://www.krishnaalaya.com
  http://www.krishnalaya.com

  ReplyDelete