Thursday, December 26, 2013

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(15)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(15)


பாடல்-15 

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ?
சில்லென் றழையேன்மின்  நங்கையீர் !
போதர்கின்றேன் வல்லை நின் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக 
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள் 
வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை 
மாயனைப் பாடேலோ ரெம்பாவாய் 

விளக்கம் 

தோழிகள்:ஏலே இளங்கிளியே இன்னுமா உறங்குகிறாய் ?

தூங்குவதுபோல் பாசாங்கு செய்பவள்: சரி சரி தொண தொணக்காதீர்கள் .இதோ வந்துவிடுகிறேன்.

தோழிகள்: நீ வாயாடுவதில் வல்லவள். உன் பேச்சும்  வெகு நீளம் 

தூங்குவதுபோல் பாசாங்கு செய்பவள்:சரி சரி. நான் நீங்கள் சொல்வது போல் வாயாடியாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.நீங்களும் என்னைப் போல்தான் வாயாடுவதில் வல்லவர்கள்.தான் 

 தோழிகள்:நாங்களெல்லாம் வந்துவிட்டோம். உனக்கு மட்டும் என்ன ஆயிற்று எங்களுடன் வரவேண்டியதுதானே? 

தூங்குவதுபோல் பாசாங்கு செய்பவள்:எல்லோரும் வந்துவிட்டார்களோ?|

தோழிகள்:வந்துவிட்டார்கள். நீ வந்து எண்ணிப் பார்த்துக்கொள். குவாலயபீடம் என்னும் பலமிக்க மத யானையைக் கொன்றவனும் எதிரிகளை நேருக்கு நேர் சந்திப்பவனும் மாயனுமான கண்ணனை பாடுவதற்காக எழுந்து  வருவாயாக !
14 பாசுரங்களில் உறக்கத்தை விட்டொழித்து 
உலகளந்த உத்தமனின் பேரை பாடி கோயிலுக்கு சென்று வணங்குமாறு  அறிவுறுத்தியும் ஜீவன்கள் உறங்குவதிலேயே சுகம் கண்டு கொண்டு அதிலிருந்து எழுவதற்கு மனம் வராமல் படுக்கையில் இருந்துகொண்டே காலத்தை கடத்தி கொண்டிருக்கின்றனர். 


காலம் யாருக்காகவும் காத்திருக்காது .
அடுத்த கணம் என்ன நடக்கும் என்று யாரும் அறிய முடியாது. 

கடந்த காலத்தை  வீணடித்ததுபோல்
 நிகழ்காலத்தையும் வீணடிப்பவர்கள் மதியிருந்தும்
 உண்மையை உணராது வீணே மாண்டுபோகின்றனர்

விலங்குகளைப் போல் உண்டு உறங்கி 
இரை தேடி உறவுகொண்டு. 
பந்தத்திலும்>பாசத்திலும்> மோகத்திலும்>சிக்கி கர்வம் கொண்டு திரிந்து அரிதாய்க் கிடைத்த பிறவியை 
ஹரியை எண்ணாமல் 
அழிகின்றனர். காலையில் எழுந்த ஆதவன் 
மேற்கே மறைவதைக் கண்டும்
 நம் கண்முன்னே பிறந்த கன்று வளர்ந்துமுதுமை அடைந்து 
 மடிவதைக் கண்ட பிறகும்>
நம்மோடு வாழ்ந்து திடீரென்று மாண்டு 
மறைந்து போனவர்களைக் கண்டும்
 வாழ்வின் நிலையாமையை உணராது 
வெட்டிக் கதைகள் பேசி திரிவதைப் பார்த்த
 ஆண்டாள் உறக்கத்தை விட்டொழித்து 
லீலைகள் பல புரிந்த கண்ணனை 
வணங்க வருமாறு மீண்டும் அன்புடன் அழைக்கிறாள். 

அவள் அறிவுரையை கேட்டு
 பிறவி பயனை அடைவதில்
 நாட்டம் கொள்வோமாக. 

4 comments:

 1. // ஆண்டாள் உறக்கத்தை விட்டொழித்து லீலைகள் பல புரிந்த கண்ணனை வணங்க வருமாறு மீண்டும் அன்புடன் அழைக்கிறாள்.

  அவள் அறிவுரையை கேட்டு பிறவி பயனை அடைவதில் நாட்டம் கொள்வோமாக. //

  ஆஹா அப்படியே செய்வோமாக. நல்லதொரு பாசுரம் + விளக்கங்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா அப்படியே செய்வோமாக.
   பிறவி பயனை அடைவதில் நாட்டம் கொள்வோமாக.

   Delete
 2. நல்லதொரு பாசுரம்
  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. ஆண்டாள் அருளிய பாசுரங்களை
   அனுதினமும் பாடித் கண்ணனைத்
   துதித்தால் நம்மைப் பிடித்து வாட்டும்
   உலக மோகம் என்னும்
   தீரா சுரம் நம்மை விட்டு பறந்துவிடும்.

   Delete