Sunday, December 22, 2013

ஸ்ரீ ராமநாத ஆத்ரேயர்


ஸ்ரீ ராமநாத ஆத்ரேயர் 

ஒரு ராம பக்தன் ராமனின் திருவடிகளை அடைந்துவிட்டது என்ற செய்தியைப் படித்தேன்.எழுத்துலகில் பல பரிமாணங்களைக் கண்டவரும். இசையின் நுணுக்கங்களை நன்கு கற்று அதை இசை  உலகிற்கு அளித்தவரும்,ஆன்மீகவாதியுமான இந்த பெரியவரைப் பற்றி இவன் வலைப்பூவில் பதிவு செய்வதை பெருமையாகக் கருதுகிறான். 

 

Post by Amritha Varshini on 3 hours ago

swamintha athreya.jpg

நேற்று (19.12.2013) காலமான எழுத்தாளர் சுவாமிநாத ஆத்ரேயர் 94 வயது நிறைவாழ்வு வாழ்ந்த பெருந்தகை. பழுத்த ஆன்மீகப் பழம். சம்ஸ்க்ருதம், தமிழ் ஆகிய இருமொழி எழுத்தாளர். மணிக்கொடி கால எழுத்தாளர் பரம்பரையின் கடைசி விழுது என்று கூட இவரைச் சொல்லலாம்.

சிமிழி வெங்கட்ராம சாஸ்திரிகள் என்ற புகழ்பெற்ற வேதாந்த ஆசிரியரின் புதல்வர் இவர். காஞ்சி மடத்திற்குத் தொண்டு

செய்தே வாழ்ந்த தலைமுறை இவருடையது. சுவாமிநாத ஆத்ரேயரும் நூற்றாண்டுத் தவமுனிவரான காஞ்சிப் பரமாச்சாரியாரின் அணுக்கத் தொண்டராகப் பல்லாண்டுகள் செயல்படும் பாக்கியம் பெற்றவர். பரமாச்சாரியார் இவரை அன்போடு சிமிழி என்றே அழைப்பார்.

சம்ஸ்க்ருத சிரோன்மணி பட்டத்துடன் ஐரோப்பிய ஒப்பு மொழியியலிலும் பட்டம் பெற்றவர். இந்தியிலும் ஆங்கிலத்திலும் பெரும் புலமை பெற்றவர். கர்நாடக சங்கீத நுணுக்கங்கள் அனைத்தும் அறிந்த சங்கீத நிபுணர். மேடையில் இரண்டரை மணிநேரம் உபன்யாசம் நிகழ்த்தும் வல்லமை பெற்ற தேர்ந்த பேச்சாளர்.

எல்லாரிடமும் இணக்கமும் இனிமையுமாகப் பழகிய இவரின் நண்பர் பட்டியல் மிக விரிந்தது. கி.வா.ஜகந்நாதன், சி.சு.செல்லப்பா, ஆர்வி, கிருஷ்ணசாமி ரெட்டியார், வல்லிக்கண்ணன், திருலோகசீதாராம், தி.ஜ. ரங்கநாதன், பகீரதன் போன்ற அன்றைய இலக்கிய உலக நட்சத்திரங்கள் அனைவருமே இவரது மிக நெருங்கிய தோழர்கள். ரா. கணபதி இவரது நெருங்கிய நண்பராக இருந்ததில் ஆச்சரியமே இல்லை. தெய்வத்தின் குரல் என்ற நூலைப் படைத்த வியாசரான பரமாச்சாரியார் சொல்லச் சொல்ல அதை எழுதிய கணபதி அல்லவா ரா. கணபதி? சுவாமிநாத ஆத்ரேயரும் பரமாச்சாரியாரின் பரம பக்தர் என்பதால் இருவர் மனங்களும் நட்பால் இணைந்தன.

பதரி கேதார யாத்ரப் பிரபந்தம், சங்கர விமான மண்டப தரிசனம் ஆகிய சம்ஸ்க்ருதக் கவிதை நூல்களின் ஆசிரியர் இவர். மகாகவி பாரதியும் காளிதாசனும் இணைந்து பேசினால் என்ற கற்பனையில் பிறந்ததே இவரது மகாகவி சமாகம என்ற சம்ஸ்க்ருத நாடகம். சாகித்ய அகாதமி, ஆத்ரேயரின் சம்ஸ்க்ருத நூல்கள் பலவற்றை வெளியிட்டு இவரைக் கௌரவித்திருக்கிறது.

இவரது மாணிக்க வீணை என்ற தமிழ்ச் சிறுகதைத் தொகுதி தமிழ் இலக்கிய உலகில் அழியாப் புகழ்பெற்றது. ஸ்ரீதர அய்யாவாள் சரிதம், பக்த சாம்ராஜ்யம், நாம சாம்ராஜ்யம் போன்றவை இவரது மற்ற தமிழ் நூல்களில் சில. இவரது தேவப் பிரயாகையில் மாலை என்ற தலைப்புள்ள கவிதை ஞானபீடத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. சிவ ரகஸ்யம், அஸ்வ ரகஸ்யம், வெங்கடேச விவாக சம்பு போன்ற சம்ஸ்க்ருத நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். துளசிதாசரின் ராமசரித மானஸ் என்ற இந்தி ராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த பெருமையும் இவருக்குரியது.

இவரது பகவத் கீதை மொழிபெயர்ப்பை கோரக்பூர் கீதா பிரஸ் வெளியிட்டுள்ளது. சமர்த்த ராமதாசரைப் பற்றி ஓர் அரிய ஆய்வு நூல் எழுதியுள்ளார். நாராயண தீர்த்தரைப் பற்றிய இவரது நூலும் புகழ்பெற்றது. தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள பல அரிய சம்ஸ்க்ருத நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்த பெருமையும் இவருடையது. தியாகராஜ அனுபவங்கள் என்ற தலைப்பில் இவர் எழுதிய இசைச் சிறுகதைகள் தமிழின் சங்கீத இலக்கியத் துறைக்கு வளம் சேர்த்தவை. சுவாமிநாத ஆத்ரேயரைப் போல அதிக எண்ணிக்கையில் சங்கீதச் சிறுகதைகளைப் படைத்த படைப்பாளர்கள் தமிழில் குறைவு.

சம்ஸ்க்ருத, தமிழ்ப் படைப்பாளியாக இயங்கியதோடு ஆராய்ச்சியாளராகவும் தம்மை விமர்சன உலகில் நிலைநிறுத்திக் கொண்டவர். இவரது எழுத்தில் இருக்கும் சொற்செட்டு, நுணுக்கம், சொல்லாமல் சொல்லும் நேர்த்தி, குறிப்பால் உணர்த்தும் திறன் ஆகியவை இளம் எழுத்தாளர்கள் கற்றறிந்து பின்பற்ற வேண்டியவை.

சொன்னவுடன் அடுத்த கணமே சொன்ன பொருளில் கவிபாடும் புலமை பெற்றிருந்ததால், ஆசுகவி திலகம் என்ற பட்டத்தைப் பெற்றார். காஞ்சி மடத்தின் ஆஸ்தான வித்வானாகவும் இருந்தார். சில ஆண்டுகள் முன்பு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் இவரது புலமையின் பெருமையை உணர்ந்து இவருக்கு ஞானச் செம்மல் என்ற பட்டமளித்து கௌரவித்தது.

இலக்கியத்தையே குழந்தையாகக் கொண்டு தம் மனைவி ஜயலட்சுமியுடன் தஞ்சையில் வாழ்ந்துவந்தார். சில ஆண்டுகளுக்கு முன் இவருக்கு உற்ற துணையாக விளங்கிய ஜயலட்சுமி காலமாகிவிட்டார்.

அமைதியாகத் தஞ்சாவூரிலேயே தனித்துத் தவவாழ்க்கை வாழ்ந்து வந்த இவர் வாய்திறந்தால் சொன்னதெல்லாம் ராமநாமம் தான். சம்ஸ்க்ருதம், தமிழ் ஆகிய இருமொழிகளின் தற்கால இலக்கியத்தை வளப்படுத்திய அந்த உன்னதமான ராம பக்தரின் ஆன்மா ராமன் திருவடிகளை அடைந்துவிட்டது.

உதிர்ந்த நட்சத்திரம் - By திருப்பூர் கிருஷ்ணன் - Article published in Dinamani 20th Dec 2013

Read more: http://amrithavarshini.proboards.com/thread/543#ixzz2oGX6henG

4 comments:

 1. நாங்களும் உங்களின் பதிவின் மூலம் அவரின் சிறப்பை அறிந்து கொள்ள முடிந்தது... நன்றி ஐயா...

  ReplyDelete
 2. ஒரு நல்ல மனிதரைப்பற்றி, ஞானியைப்பற்றி அறிய முடிந்ததில் மகிழ்ச்சி. இவருடைய தம்பி தான் திருச்சி ஆயுர்வேத வைத்தியரும், சாஸ்திரோத்தமான ஆசார அனுஷ்டானங்களை இன்றளவும் Very Strict ஆகக் கடை பிடித்து எல்லோருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்கிவரும் Dr. S.V. Radhakrishna Sastrigal என நினைக்கிறேன். அவருக்கும் சுமார் 90 வயது இருக்கும். ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா பக்தரும் கூட.

  ReplyDelete
 3. Pattabi Raman
  Dec 23, 2013
  1
  Edit

  என்ன செய்வது?

  மகான்களும் மகாநீயர்களும்
  நம்மிடையேதான் வாழ்கிறார்கள்

  வேஷடாரிகளைத்தான்
  இந்த உலகம் போற்றிக் கொண்டாடுகிறது.

  மகான்களை அவர்கள் இந்த உலகத்தை விட்டு சென்றபிறகுதான் அவர்களைப் பற்றி
  பேச தொடங்குகிறது.
  அதுவும் சிறிது காலத்திற்குத்தான்

  எனவேதான் அப்படிப்பட்டமகான் ஒருவரை பற்றி அமிர்த வர்ஷினி ஆனந்த வாசுதேவன் தினமணி பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரையை அவர் பதிவு செய்ததை பார்த்ததும் அந்த மகான் ராம பக்தனாக விளங்கியதாலும் இவனின்'ராமரசத்தில்'வெளியிட்டேன்.

  படித்து முதல் நபராக கருத்து வெளியிட்டமைக்கு நன்றி. 

  ReplyDelete