Monday, June 30, 2014

அகிலத்தில் பிறவி எடுத்ததின் நோக்கம்

அகிலத்தில் பிறவி எடுத்ததின் 
நோக்கம்

உலையில் வைத்த பாத்திரத்தில்
போடப்பட்ட ஆமை சிறிது நேரத்தில்
உயிர் போகப்போவதை அறியாது
உற்சாகமாய் சுற்றி சுற்றி வலம்
வருவதுபோல் இவ்வுலக மாந்தர்களும்
எந்த கணமும் மண்ணில் விழுந்துவிடும்
என்பதை அறியாது ஆசைகள் விரிக்கும்
வலையில்  சிக்கி அற்ப இன்பங்களை
நாடி துன்பப்பட்டு மடிகின்றனர்.

என்றும் உறங்காது உயிர்களைக்
காக்கும் அரங்கனை நினையாது
உறங்கிக்கொண்டு கனவுலகில்
காட்சிகளைக் கண்டு மனம்
மகிழ்ந்து திரிகிறது அறியாமையில்
உழலும் மனிதக் கூட்டம்

இருக்கும் செல்வம் இல்லாதோருக்கு
அளித்து இன்பம் அடைவதற்கே
என்பதை அறியாது இன்னும்
இன்னும் வேண்டும் என்று இவ்வுடல்
கீழே விழும் வரை பொருள் தேடும்
மனிதர்கள் பெறுவதோ
என்றும் துன்பம்தான்

அகந்தையும் சுயநலமும்
அகத்தே நிறைந்திருக்க புறத்தே
செய்யும் போலி  சடங்குகளாலும்
அன்பின்றி பிறருக்கு துன்பம்
இழைப்பதையே வாழ்க்கையில்
குறிக்கோளாகக் கொண்டு செய்யும்
வழிபாடுகளாலும் என்ன பயன்? 

மதம், மொழி, இனம்  என எதனோடு
இணைந்தாலும் என்றும் துன்பம்தான்
அனைத்திற்கும் அப்பாற்ப்பட்டு
ஆதாரமாய் விளங்கும் நம்முள்ளே
உறையும் ஆன்மாவை அறிந்து
அனைத்து துன்பங்களிலிருந்து
விடுபட்டு மாறா ஆனந்தத்தில்
திளைக்க முற்படுவதுதான்
அகிலத்தில் பிறவி எடுத்ததின்
நோக்கம் 

3 comments:

 1. தெரிகிறது.... ஆனால் தெரியவில்லை!

  ReplyDelete
 2. அன்பின் பட்டாபி ராமன் - சிந்தனை நன்று - கருத்துகள் அருமை - கடைப் பிடிக்க வேண்டிய ஒன்று - ஆனால் கடைப் பிடிக்க இயலுமா ? ஆன்மாவினை அறிந்து அனைத்துத் துன்பங்களில் இருந்து விடுபட இயலுமா ? நாம் ஆன்மீகத்தில் முழுவதும் ஈடுபட்டவர்கள் இல்லையே - பொறுத்திருப்போம் - காலம் கனிந்து வரும் போது சிந்திப்ப்போம். நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

   இறைவன்தான் அனைத்தையும் படைத்தான் படைத்தது மட்டுமல்லாமல் அவ்வுயிர்களின் உள்ள ஆன்மாவாக இருந்து இயக்குகின்றான்.

   நாமாக எதுவும் செய்ய இயலாது என்ற உண்மையை புரிந்துக்கொண்டு
   அகந்தை இல்லாமல் வாழ்க்கையை நடத்துவதுதான் ஆன்மிகம்

   கொலையாளியின் கையில் உள்ள கத்தி ஒரு உயிரை பலி வாங்குகிறது
   மருத்துவரின் கையில் உள்ள கத்தி ஒரு உயிரை காப்பாற்றுகிறது

   அதுபோல்தான் நம் மனது இறைவனிடம் லயித்தால் அதுவும் ஆனந்தப்படுகிறது மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைக்கிறது.

   அந்த மனம் காம் குரோத உணர்வுகளிடம் சிக்கிக் கொண்டால் அதுவும் நிம்மதியற்று மற்றவர்களையும் துன்பத்திற்கு ஆளாக்குகிறது.

   மனதை ஆன்மாவில் நிலைக்க செய்வது மிக எளிது. நமது எண்ணங்களை தொடர்பு படுத்துவதில்தான் அதன் வெற்றி அடங்கியுள்ளது. நாம் எதை நினைக்கிறோமோ அதுவே ஆகிறோம்.
   கடவுளை நினைத்தால் கடவுளாகவே ஆகிவிடுவோம்.காமுகனை நினைத்தால் நாமும் காமுகனாகதான் ஆவோம்.

   நாம் வாழும் இந்தகணம்தான் நமக்கு சொந்தம் .கடந்த காலமோ அல்லது எதிர் காலமோ நமக்கு சொந்தம் இல்லை.

   எனவே இந்த கணமே ஆன்மாவைப் பற்றிய சிந்தனையை தொடங்கி அதில் நிலை பெற தொடர்ந்து முயல வேண்டும்.

   Delete