Wednesday, September 18, 2013

முதல் மரியாதையும் இறுதி மரியாதையும்

முதல் மரியாதையும் இறுதி மரியாதையும் 

நான் மண்ணாகவே இருந்திருப்பேன்
வடிவமில்லாமலே





உருவமில்லாது ஒளியாய் இருக்கும்
எனக்கு வடிவம் கொடுத்த என்  படைப்புகளே

நகைகள் பூட்டி மாலைகள் சாற்றி
அழகு பார்த்தீர் .
அறுசுவை உணவுகள் படைத்தீர்.
ஆளுக்கொரு கோரிக்கைகளை
அளவில்லாது வைத்தீர்

உற்சாகமாய் ஏற்றுக்கொண்டேன்
உங்கள் வழிபாடுகளை. உளமார

எல்லாம் வெறும் நடிப்பென்று
இப்போதுதான் புரிகிறது.

வேலை முடிந்ததும்
உங்கள் வேலையைக்
காட்டிவிட்டீர்களே




தொப்பையோடு கூடிய என்னை
குப்பைகளுடன் வீசிஎறிந்துவிட்டு
திரும்பிப் பாராமல்
சென்றுவிட்ட உங்களை நான்
என்னவென்று நினைப்பது ?

மீண்டும் அடுத்த வருடம்
வருவீர்கள் .உங்கள் பாசத்தை
காட்டுவீர்கள். அதை உண்மை என்று
நம்பி நானும் மோசம் போவேன்.
நீங்கள் காட்டுவது நடிப்பு என்றறியாது.

உயிரற்ற பிணத்தை அலங்கரித்து
தூக்கி சென்று மண்ணில் அடக்கம் செய்கின்றீர்
மிகுந்த அடக்கத்துடன். அல்லது
சிதையில் இடுகின்றீர் வருத்தத்துடன்.

உங்களை படைத்து காக்கும்
எனக்கு மட்டும் ஏன்  இந்த கொடுமை?
சிந்திப்பீர் என் பக்தர்களே.

எல்லாம்  கலிகாலம்
உங்களுக்கும் மட்டுமல்ல
என் போன்ற தெய்வங்களுக்கும்
இந்த நிலைமைதான் போலும். 

4 comments:

  1. ஆஹா, மிகவும் உணர்வு பூர்வமாக பிள்ளையாரே பேசுவதுபோல அருமையாக எழுதியுள்ளீர்கள்.

    சிந்திக்க வைக்கும் சிறப்பான பகிர்வுக்கு என் நன்றிகள், பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி VGK

      ஆள்பவர்களும் ,ஆன்மீக மக்களும்
      சுற்றுப்புற சூழலை பாதுகாக்க
      இந்த வழியை பின்பற்றினால் மிகவும் நல்லது.

      இது சாஸ்திரத்திற்கு விரோதமாக
      படவில்லை என என் கருத்து.

      Delete
  2. அந்தக்காலத்தில் வீட்டுக்கு வீடு கிணறுகள் இருந்தன. ஊரில் ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள், ஆறுகள் என நீர் நிரம்பி செழிப்புடன் இருந்தன. களிமண் பிள்ளையார் உருவத்தினை கரைக்க, மக்களுக்கும் மனதில் அமைதியும் நேர அவகாசமும் இருந்தது.

    இன்று அவ்வாறு இல்லை. மக்களே காக்கை குருவிகள் போல அடுக்குமாடி வீடுகளில் ஒண்டி ஒதுங்கி கூட்டைக்கட்டிக்கொண்டு ஏதோ நிம்மதி ஏதும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்கள் பாடே இதுபோல உள்ளபோது, பிள்ளையார் பாடு என்ன ஆவது?

    இருப்பினும் குப்பைத்தொட்டி அருகே கொண்டுபோய், பூஜைசெய்த விநாயகர் சிலைகளை வைப்பது மனம் பொறுக்காமல் தான் உள்ளது.

    ஒன்று செய்யலாம் ... ஒரு பக்கெட் தண்ணீரை எடுத்து, அதை கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி என நினைத்து, அதில் பிள்ளையாரை நன்கு கரைத்து எங்காவது அந்தக் கரைத்த தண்ணீரை ஊற்றி விடலாம்.

    ஆனால் எங்குமே ஜலக்கஷ்டம் வேறு, பாடாய்ப் படுத்தி வருகிறது.

    அவரவர் குளிக்கவோ, கொப்பளிக்கவோ, கழிப்பிட சுத்தம் செய்து கொள்ளவோ ஜலம் இன்றி, பேப்பரால் துடைத்து வரும் நாகரீகம் தான் வளர்ந்துள்ளது.

    கஷ்டம், கஷ்டம், மஹா கஷ்டம் ! ;)))))

    ReplyDelete
    Replies
    1. அவரவர் குளிக்கவோ, கொப்பளிக்கவோ, கழிப்பிட சுத்தம் செய்து கொள்ளவோ ஜலம் இன்றி, பேப்பரால் துடைத்து வரும் நாகரீகம் தான் வளர்ந்துள்ளது.


      அதனால்தான் வேஸ்ட் பேப்பரால் பிள்ளையார் வடிவங்கள் செய்து மீண்டும் வேஸ்ட் பேப்பர் பாஸ்கட்டில் போடுகிறார்கள் போலும்.

      Delete