Tuesday, September 9, 2014

கண்ணா கண்ணா என்று

கண்ணா கண்ணா என்று


கண்ணா கண்ணா என்று
அவன்  காலடியில் விழுந்தபின்
கள்ள மனமே கன்னா பினனா
என்ற சிந்தனைகள் உன் உள்ளே
புக இடம் தரலாமோ?

உண்மைப் பொருள்
அவனென்று உணர்ந்தபின்
தோன்றி மறையும் உலகப்
பொருட்கள் மீது மோகம்
கொண்டு விலங்குகள்போல்
அங்குமிங்கும் வீணே
அலைவது முறையாமோ?

காக்கும் கடவுளாம் கண்ணன்
அருகிருந்தும்
சூதும் வாதும் வேதனை செய்யும்
என்ற தர்மம் அறிந்திருந்தும்
சூதாடி அனைத்தையும் இழந்து
அல்லல்பட்ட தருமரைப் போல்
மனமே நீ இருக்கலாமோ?

வாழ்க்கைப் போரில் வாகை சூட
கண்ணனின் கீதை வழி காட்ட
நமக்கிருந்தும் அதை நாடாது
போதையில் ஆழ்த்தி நரகத்தில் தள்ளும்
பேதைகள் கூறும் மொழிகளை நாடி
மோசம் போகலாமோ?

அனைத்தும் அவனே என்றான் கண்ணன்
ஆனால் நாமோ அனைத்தும் எனதே
என்று வீணே என்று கோட்டை கட்டி
அரிதான மனித பிறவி கிடைத்தும்
அவன் புகழ் பாடாது
அவன் அருளை நாடாது அனைத்தையும்
கோட்டை விடுவது அறியாமையன்றோ?



குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்டவன் 
ஊழல் செய்யும் பேர்வழிகளை கூண்டோடு அழிப்பவன் 
செந்தழல்போல் துன்பம் தரும் இவ்வுலக துன்பங்களை நீக்குபவன் 
அழியாப் பதம் தந்து ஆனந்தத்தில் திளைக்கச் செய்பவன் 
என்றும் அவன் புகழ் பாடு மனமே !

அனைத்தும் அவன் மாயை என்றாலும்
நம்மை  மாயையிலிருந்து விடுவிக்கும்
அந்த மாயவன், மாலவன், மாதவன்,
முகுந்தன், கண்ணனின்  நாமம் சொல்லுவோம்
மூச்சிருக்கும் வரை பேச்சிருக்கும்வரை

தாபங்கள் அகல,பாபங்கள் அழிய 
தடைகள் நீங்க என்றும் அவன் தாள்களை
மறவாது பற்றி உய்வோம்.

1 comment:

  1. அலைபாயும் மனதை அவனிடம் தருவோம். அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்று வந்து நம்மை உய்விப்பான் கண்ணன்.

    ReplyDelete