Friday, January 30, 2015

எத்தனை முறை கூறினாலும்?

எத்தனை முறை கூறினாலும்?

எத்தனை முறை கூறினாலும்
ஏற்கமாட்டார் இவ்வுலக மாந்தர்

இறைவன் ஒருவனே என்ற உண்மையை

ஒன்றுதான் பலவாக விரிந்து
பரந்து பிரிந்து காட்சியளிக்கிறது
என்று உண்மையை உணர்ந்தோர்
உரைத்தார். எழுத்தில் எழுதியும்
வைத்தார்.

அந்தோ ! இந்த உண்மையை உணரும்
சக்தியில்லை உணர்ந்தோரின்
மொழியையும் கேட்பதில்லை.இவ்வுலக
மாந்தர்களுக்கு 

தான்  வணங்கும் வடிவமே சக்தியுள்ள தெய்வம் மற்ற
தெய்வங்களெல்லாம் அதற்குள் அடக்கம் என்று
வீணே பிதற்றி திரிகின்றார்.

அனைத்துமாய் இருப்பதும், அதற்குள்ளே இருந்து
இயக்கும்  சக்தியாய் இருப்பதும் அந்த
பரம்பொருளே என்றும் ஒன்றை ஆக்குவதும்
நிலை நிறுத்துவதும்அதை  தன்னுள்
லயமாக்கி கொள்வதும் அந்த வஸ்துவே
என்று கணக்கற்ற மகான்கள் இவ்வுலகிற்கு வந்து
விளக்கிய பின்பும் விளங்கிக் கொள்ளாத கூட்டம்.

அறியாமையால் தெளிவற்று, பிளவுற்று
சண்டையிட்டு மாயும் கூட்டம்.

மாயையிலிருந்து விடுபட வழி அறியாக் கூட்டம்.
பிறந்து பிறந்து மடியும் கூட்டம்.


அறியாமை என்னும் சேற்றில்தான்
அறிவு என்னும் தாமரை முளைத்து மலரும்.
அதற்கு ஹரி -யாதவனைச்
சரணடைவதை தவிர வேறு  வழியில்லை.

Thursday, January 29, 2015

காந்தியும் கோட்சேயும்

இந்தியா பல சமூகங்கள்,
மதங்கள் கொண்ட நாடு

அவர்கள் அனைவரும்
வேற்றுமைகளை விடுத்து
ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று
காந்தி விரும்பினார்.

பெரும்பான்மையான சமூகம்
சிறபான்மை சமூக மக்களை
அரவணைத்து செல்ல வேண்டும் என்று
அறிவுறுத்தினார்.

காந்தியின் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளாத
கோட்சே காந்தியை கொன்று விட்டார்.

காந்தியும் இவ்வுலகில் இல்லை
அவரைக் கொன்ற கோட்சேயும் 
இந்த உலகில் இல்லை.

தொடந்து நடந்த பல அசம்பாவித
நிகழ்வுகளால் கலவரம் ஏற்பட்டு பல
லட்சம் அப்பாவி மக்கள் மாண்டனர்.

அந்த துயர சம்பவங்கள் ஒருகட்டுக்குள் இருந்தாலும்
ஆங்காங்கே சில மத வெறியர்களால்
இன்னும் தொடர்ந்து அரங்கேறி  வருகின்றன.

பகவத் கீதையை இருவருமே படித்தவர்கள்.
இருவருக்கும் தெரியும் பகவான் கண்ணனின்
ஆணைப்படிதான்  இந்த உலகம் இயங்குகிறது.
(விளக்கம் வேண்டுபவர்கள் இரண்டாம் அத்தியாயத்தை படிக்கவும்)

அதை தெரியாதவர்கள்தான் காந்தியின் தியாகத்தை,
எளிமையை ,நேர்மையை இழிவுபடுத்துகிறார்கள்.

அவரைக் கொன்ற கோட்சேவை பெருமைப் படுத்த நினைக்கிறார்கள்.

இருவரும் அவர்களுக்கு இறைவன் அளித்த பாத்திரத்தை செய்துவிட்டு போய்விட்டார்கள்.

ராமாயணத்தில் ராமன் ராவணனைக் கொன்றான்.
ராவணனைக் கொன்ற ராமனை தெய்வமாக போற்றுகிறது ஒரு கூட்டம்.

ஆனால் ராமனை இழிவுபடுத்தி ராவணனை போற்றுகிறது ஒரு கூட்டம்.

ராமாயணத்தை நன்கு கற்றவர்களுக்கு தெரியும் ராமன் (வைகுண்டத்தில் பள்ளி கொண்டுள்ள நாராயணன்தான் ராமாவதாரத்தில் ராமராக வந்தார் என்றும் அவரிடம் வாயில் காப்பவனாக இருந்த ஜயன் தான் ராவணனாக வந்தான் என்று தெரியும்.).அதனால் அவர்கள் அதை புரியாதவர்கள் பிதற்றும் பேச்சுக்களை கண்டுகொள்வதில்லை

ஷேக்ஸ்பியர்சொல்வதுபோல் இந்த உலகம் ஒரு நாடக மேடை. அதில் நாம் அனைவரும் நடிகர்கள். அவரவர் வரலாற்றில் அவர்களுக்கு அளித்த பாத்திரத்தை செவ்வனே செய்துவிட்டு போய்விட்டார்கள்.

அது புரியாமல் சிலர் இதுபோன்ற செயல்களை அரங்கேற்றிக்கொண்டு தாங்களும் குழம்பி இந்த நாட்டு மக்களையும் குழப்பிக்கொண்டு அனைவரின் நேரத்தையும்வீணடித்துக்கொண்டிருக்கின்றனர்

நாட்டில் மக்களின் வாழ்வை முன்னேற்றுவதற்கு மக்களும் தயாராக இல்லை, அவர்களை ஆளும் அரசுகளும் தயாராக இல்லை. ஊடகங்களும் தயாராகஇல்லை.

என்ன செய்வது? நம் நாட்டின் தலைவிதி அப்படி. !

Saturday, January 24, 2015

பகுத்தறிவு என்றால் என்ன ?(3)

பகுத்தறிவு என்றால் என்ன ?(3)

எந்த ஒரு கொள்கையையும் கோட்பாடுகளையும்
அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதன் உண்மைத் தன்மையை
ஆராய்ந்து பிறகு அதை ஏற்றுக்கொள்வதோ அல்லது
ஏற்றுக்கொள்ளாமல் விடுவதோ பகுத்தறிவு.

இந்து மதத்தில் எந்தகருத்தையும் திணிக்கும்
போக்கு கிடையாது.

கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ள
கட்டாயப்படுத்தப்படுவதில்லை

கேள்விகள் கேட்டு, ஐயங்களை முழுவதுமாக
நீக்கிக் கொண்ட பின்னரே பயன்பாட்டிற்கு கொண்டுவர
அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் அனுதினமும் செய்யவேண்டிய கடமைகளை மட்டும்
அதைப் பற்றிய முழு அறிவு பெறாவிட்டாலும். விடாமல் செய்யவேண்டும்
என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காலபோக்கில் அதன் நோக்கத்தையும், பலன்களையும் வாழ்வில்
கற்றறிந்த பெரியோர்கள் மூலம் கற்று தெரிந்துகொள்ளவும் வாய்ப்பு
அளிக்கப்பட்டுள்ளது.


மற்ற மதங்களில் அந்த சுதந்திரம் வழங்கப்படவில்லை.

ஆனால் நடைமுறையில் பகுத்தறிவு வாதிகள் இந்து மதத்தை மட்டும்
குறி வைத்து விமரிசனம் செய்கிறார்கள் .இழிவுபடுத்துகிறார்கள். இந்த மதத்தில்உருவ வழிபாட்டை ஏளனம் செய்வதும், வழிபாட்டு தளங்களில்
புகுந்து குழப்பம் விளைவிப்பதும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்துக்களை பார்த்து கடவுள் இல்லை என்றும் ,கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்றும் கடவுளை வாங்குபவன் காட்டுமிராண்டி என்று காட்டுக் கூச்சல் போடுகின்றனர்.

ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ள மற்ற மதத்தினரை கண்டு கொள்வதில்லை. அவர்களோடு கூடி குலவுகின்றனர்.

அவர்களை கண்டித்தால் அடுத்த நாளைக்கு அவர்களை கண்டிக்க அவர்கள் உடம்பில் தலை இருக்காது என்று அவர்களுக்கு நன்றாக தெரியும்.

இந்துக்கள் இந்த நாத்திகவாதிகளையும் சமூகத்தின் அங்கமாக
ஏற்றுக்கொண்டுள்ளதுதான் காரணம்.

ஏனென்றால் அவர்களுக்கு  நன்றாகத் தெரியும் ,அவர்கள்  இறைவனைப் பற்றிய முழு அறிவையும் பெறாமையால்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று.

அவர்கள் மீது வெறுப்பு  கொள்வதில்லை, விரோதம் பாராட்டுவதில்லை.
அவர்களை அதிக எண்ணிக்கை கொண்ட கடவுள் நம்பிக்கையுள்ள இந்து மக்கள் அவர்களையும் செயல்பட அனுமதித்துள்ள பெருந்தன்மை மற்ற எந்த மதத்தினருக்கும் கிடையாது.

அவர்களை எதிர்த்து வன்முறையில் ஈடுபடும் இந்துக்களுக்கும், அவர்களுக்கும் வேறுபாடு கிடையாது இருவரும் ஒன்றே.


சிலைகளை வணங்கும் இந்துக்களை காட்டுமிராண்டி என்று மேடைதோறும்  முழங்கும் இந்த மூளையில்லாக் கூட்டம். இந்துக்கள் சிலைகளுக்கு செய்யும் அதே வழிபாட்டைத்தான் எல்லா இடங்களிலும் செய்வது கேலிக்குரிய செயலாகும்.

கோயிலில் உள்ள சிலைகளுக்கு நடைபெறும் அத்தனை சடங்குகளையும்
தங்கள் தலைவரை போற்றுவதாக கூறிக்கொண்டு வெட்கமில்லாமல்
செய்துகொண்டிருக்கின்றனர்.

பல கோடி மக்கள் தெய்வமான ஸ்ரீ ராசந்திர மூர்த்தியின் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து அவதூறு செய்த இந்த கூட்டம். தங்கள் தலைவரின் சிலையை உடைத்தால் மட்டும் வன்முறையில் ஈடுபட்டு சேதங்களை விளைவிக்கின்றனர். 

ஆனால் இறைவனை  சிலையிலும் கண்டு வழிபடும் பக்தகோடிகள் . சிலைகள் சேத ப்படுத்தப்பட்டாலோ, திருடு போனாலோ, இந்த கூட்டங்களைப் போல் வன்முறையில் ஈடுபடுவதில்லை.

அதுதான் மனிதர்களை துதி பாடும் கூட்டத்திற்கும் மகேசனை வணங்கும் பக்தர்களுக்கும்   உள்ள வேறுபாடு.

நாம் செய்வது அன்பு வழிபாடு  
அதில் வன்முறைக்கு இடமில்லை. 


மனிதர்களின் சக்திக்கு அப்பாற்பட்டு நடைபெறும் செயல்களை எல்லாம் இறைவன் செயல் என்று இருக்கும் இந்துக்களை மூடர்கள் என்று கூறும் இந்த கூட்டம். அதற்கான காரணங்களை பகுத்து அறிய இயலாத நிலையில் அவைகளை இயற்கை என்று பிதற்றி திரிகின்றனர்.

இப்படி முரணுக்கு பின் முரண்பாடான கருத்துக்களை கூறி மக்களிடையே
பிரசாரம் செய்து ஏமாற்றி திரியும் இவர்களின் கூப்பாடுகள் எடுபடுவதில்லை.

ஆண்டுதோறும் ஆலயங்களும், வழிபாடுகளும், உலகெங்கும் பல்கி பெருகி வருகின்றது.

அனைத்தும் இறைவனின் ஆணையால் தான் இந்த உலகம்
இயங்கிவருகின்றது,அவன் துணையின்றி உள்ளத்தில் அமைதியை பெறமுடியாது என்பதையும் உலக மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டுள்ளனர்.

இன்னும் வரும்

Tuesday, January 20, 2015

ஆனந்தம் அடையும் வழி

 ஆனந்தம் அடையும் வழி 

காடு மலை  எல்லாம்
இரவு பகல் பாராமல்
கணக்கற்ற முறை பறந்து திரிந்து

 

மலர்ந்த மலரின் உள்ளே புகுந்து
சுரக்கும் தேனை உறிஞ்சி
கூட்டில் கட்டி கட்டியாய் தேனடை
சேர்க்கும் தேனீ.

ஐயோ பாவம் !ஆனால் அதை
சுவைத்து இன்புறுமோ ?
யாரோ ஒருவன் கூட்டிற்கு தீ
வைத்து அவைகளை விரட்டியும்
கொன்றும் தேன் முழுவதையும்
கொள்ளை அடித்து சென்றிடுவான்.

மனிதர்களே ,விழிக்கும் நேரமெல்லாம்
உழைத்து காசை சேர்க்க பாடுபடுவார்
பல மனிதர்கள் இவ்வுலகில்
சிலரோ உறக்கத்தை விட்டொழித்து
பணத்தை சேர்ப்பார் .

பொய்யான இன்பத்தை அடைந்திடவே
நம்மோடு என்றும் வராத தங்கத்தையும்
வீடு முழுவதும் நிறைக்கும் பொருட்களையும்

 

வீட்டில் வாங்கி நிரப்பினால் இன்பம்
தருவதாக ஆசை காட்டும்
பேய்க் குணம் கொண்ட காசு பிசாசை
நம்பியவர் எவரேனும் நிலையான
இன்பம் அடைந்தனரோ?

காசைக் கொடுத்து கல்வி கற்று
அந்த கல்வியைக் கொண்டு காசு தேட
உறக்கத்தையும், உடல் நலத்தையும்
விட்டொழித்து எப்போதும் அமைதியில்லா
மனதோடு ,பிறர்முன் நடித்து போலியான
வாழ்க்கை வாழ்ந்து பல கோடிகளை
பன்னாட்டு வங்கிகளில் போட்டு வைத்து
பாஸ் புக்கை பார்த்து பார்த்து இன்பம்
அடைவார் பலபேர் இவ்வுலகில்.

சேர்த்த காசு போடும் வட்டிகளைக்
கண்டு மட்டும் இன்புறாமல் ,பசித்தோருக்கு
உணவிட்டு, வறியவருக்கு வாழ்வளித்து
துன்புற்றோர்க்கு உதவி செய்து இன்புற
பழகாதோர்க்கு இவ்வுலகிலும்
அமைதியில்லை மறுவுலகில் அமைதியில்லை.

ஐயப்பா என்றாலும்,
மலையப்பா என்றாலும்
வேலப்பா என்றாலும்,
சிவனப்பா  என்றாலும்
ஈன்றெடுத்த பெற்றோரை
ஈவிரக்கமில்லாமல் முச்சந்தியில் விடுவோரும்
அவர்களின் தியாகத்தை மதியாது முதியோர்
இல்லத்தில் தள்ளுபவர்களும் பெறமாட்டார்
இறைஅருளை என்றென்றும்.

வரும்போது நாம் முற்பிறவியில் சேர்த்த
சொத்துக்களை கொண்டு வர அனுமதியில்லை
இப்பிறவியிலும் அதே சட்டம்தான் என்று
உணராத அறிவிலிகள் தான் மீண்டும்
சொத்துக்களைச் சேர்ப்பார் சொகுசான
வாழ்வை நாடிடுவார். எல்லாவற்றையும்
 

விட்டுவிட்டு மாண்டு போவார்

 Image result for trailanga swami photo

இறைவனை உணர்ந்த பெரியோர்கள்  சொற்படி நடந்தால்
வாழும் இவ்வுலகம் சொர்க்கமாகும், இந்த உடலை
விட்டு நீங்கினாலும் சொர்க்கத்தில் இடம் . கிடைக்கும்

சுயநலம்  விட்டொழித்து ,பிறருக்கு இயன்ற அளவில்
நன்மை செய்து ,அனைத்து  உயிர்களையும்  அந்த
ஆண்டவனின் வடிவென்று உள்ளத்தில் கொண்டு
அவன் நாமத்தை எப்போதும் உச்சரித்து அன்போடு
நடந்து கொண்டால் .ஆனந்தம் நிறைந்திடும் வாழ்விலே.

படங்கள்- நன்றி-கூகுள்




 

Monday, January 19, 2015

மூலத்தை தேடி ?(1)

மூலத்தை தேடி ?(1)

ஆம் இந்த அண்டத்தில் உள்ள அனைத்து
உயிர்களும் ஒரு மூலப் பொருளிருந்துதான்
வெளிவந்துள்ளன

அது வெளி வந்தவுடன் அது தங்குவதற்கு  ஒரு உடலை
அந்த மூலப் பொருளே அமைத்து தருகிறது

அமைத்து தருவது மட்டுமல்லாமல்
அந்த உயிருக்குள் அதை
இயக்கும்   சக்தியாக உள்ளே புகுந்து கொள்கிறது

தன்னுள்ளே புகுந்து கொண்ட சக்தியை அறிந்து கொள்ளும் அறிவு
அபோது அந்த உயிருக்கு கிடையாது

அந்த கணத்திலிருந்து அந்த உயிர் தொடங்கியது
முடிவை நோக்கி முடிவில்லா பயணம்

அந்த உடலை சுடலையில் இடும் வரை
அது கூடுகளை மாற்றிக்கொண்டே இருக்கிறது.

அந்த உடலை பராமரித்து பராமரித்து
பாதுகாத்தும் அது மரித்துப் போய்விடுகிறது

பிறகு செல்லரித்து போய்விடுகிறது

ஒருயிராய் தொடங்கிய பயணம் தன் பாதையில்
வரும் மற்ற உயிரினங்களோடு சேர்ந்துகொண்டு
பயணத்தை தொடர்கிறது .

ஆனால் எதுவும் அந்த உயிரோடு இறுதிவரை
வருவதில்லை.

இருந்தும் அது  அவ்வபோது பல புதிய உயிர்களை
தன்னோடு இணைத்துக்கொண்டு பயணத்தை தொடர்கிறது.

ஒரு உயிர் ஒரு கூட்டிற்குள் நுழைவதை பிறப்பு என்றும்
அதை விட்டு வெளியேறுவதை இறப்பு என்றும் கூறுகிறோம்.

இப்படியாக பிறப்பிலிருந்து இறப்பை நோக்கி செல்லும்
பயணத்தை வாழ்க்கை என்கிறோம்.

வாழ்க்கையில் பலவிதமான இன்ப துன்ப, இழப்பு
போன்ற அனுபவங்களைப் பெறுகின்றோம்.

இப்படி சங்கிலித் தொடர் போன்ற நிகழ்வுகளில் சிக்கிவிட்ட
உயிர் தான் யார் என்பதையே மறந்துவிடுகிறது .

தான்  வசிக்கும் உடலே தான் என்று எண்ணத் தொடங்கி
தன், எண்ணம், சொல். செயல் அனைத்தையும் அந்த
உடலைச் சுற்றியே அமைத்துக்கொள்ளுகிறது.

இன்னும் வரும்


Sunday, January 18, 2015

ராமரசம் 1000-ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் -பகுதி(2)(103)

ராமரசம் 1000


ஸ்ரீ தியாகராஜ  சுவாமிகளின் சிந்தனைகள் -பகுதி(2)(103)



ஆம் ராமரசம் வலைபூ பூக்கும்
1000 மாவது மலர்தான் இந்த பதிவு. 



ஸ்ரீராமனின் திருவடிகளைப் பற்றிய
ராம பக்தனான இவனை அவன்
பெருமைகளைப் பற்றி எழுத சொன்னான்

8.10.2011 அன்று தொடங்கியது முதல் பதிவு.
இவனின் அனுபவங்கள், அவனை
ஆராதித்து அளப்பரிய ஆனந்தத்தை
அடைந்த மகான்களின் அனுபவங்கள்,
என பூக்கள் மலர்ந்து மணம் பரப்பியதை
படித்து சுவைத்து இன்புற்ற வாசகர்களும்
பக்தர்களும் ஆனந்தம் அடைந்த அனைவருக்கும்
இந்த 1000 மாவது பூ சமர்ப்பணம்.



ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன்

நமக்கு வேண்டியதெல்லாம் அந்த
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் கருணையைத்
தவிர வேறென்ன வேண்டும்.?

ஸ்ரீ தியாகராஜ  சுவாமிகளின் சிந்தனைகள் -பகுதி(2)(103)

இந்த பதிவை ஸ்ரீ தியாகராஜா சுவாமியின் 
மோகன ராகத்தில்,ஆதி தாளத்தில் அமைந்துள்ள 
(கீர்த்தனை-626) 'தயராநீ-தராநீ தாசரதீ ராமா "
என்ற கீர்த்தனையின் மூலமாக ஸ்ரீராமனை அனைவரும் வேண்டி 
இன்பம் பெறுவோமாக. 

உனது கருணை வரட்டும்!
உனது தயை வருக! தசரதராமனே!

ரகு வீரனே என் மகிழ்ச்சியை விவரிக்க இயலுமா?

நினைத்தால் என்னுடல் புள காங்கிதமடைகிறது.
உன்னைக் காணும் ஆனந்தத்தால் கண்ணீரால் என் கண்கள் குளமாகின்றன

உன் மீது நான் பக்தி பூண்டபோது இவ்வுலகமே துரும்பாக ஆகிவிடுகிறது
உன் திருவடிகளைத் தழுவும்போது மெய்மறந்து போகின்றேன்
நீ என் அருகிலிருந்தால் என் கவலைகள் ஒழிகின்றன

உன் மர்மத்தை அறியாதவர்களுடன் (ஹரியை அறியாதவர்களுடன்)
நான் கூடுவதை என் வினைப்பயன் என்றே கருதுகிறேன்(இரவும் பகலும் என்னுள்ளத்தில்  உன் நாமம் ஒலிப்பதால் அவர்களின் தொடர்பு முற்றிலும் அகன்றுவிட்டது உண்மை)

எனக்காகவே நீ ராம அவதாரம் எடுத்தனையோ?(நிச்சயமாக)
என் போன்ற அடியார்களை காப்பதற்கே புறப்பட்டாயோ (முக்காலும் உண்மை)

மும்மூர்த்திகளுக்கும் ஆதி தெய்வம் நீயே?(நீயே உன் அடி பணிந்தவர்களை 
காக்கும் தெய்வம்,)(அடியார்களுக்கு அல்லல்தந்த அசுரக் கூட்டங்களை மாய்த்த தெய்வம் )(உன் திருவடியே கதி என்று நம்பியவர்களை உன்னோடு சேர்த்துக்கொண்ட கருணை தெய்வம்) 

ஸ்ரீ தியாகராஜனுக்கும் உயிர்த்தோழனும் நீயே (அவருக்கு மட்டுமல்ல எனக்கும்தான்)(உன்னை உள்ளன்போடு நாடும் அனைவருக்கும்தான்)



Saturday, January 17, 2015

பகுத்தறிவு என்றால் என்ன? (2)

பகுத்தறிவு என்றால் என்ன? (2)

நம்முடைய தமிழ் நாட்டில் ஒவ்வொரு கிராமங்களிலும்
பல்லாண்டு  காலமாக அங்கிருக்கும் கோயில்களில் உறையும்
தெய்வங்களை ஆராதித்துக்கொண்டு  உலக நன்மைக்காக
வேதங்களை ஒதுவித்தும் ,அதை தொடர்ந்து எதிர்கால சந்ததிக்களுக்கு
கற்பித்தும் வாழ்ந்துவந்த பிராம்மண சமூகம் அந்த காலத்தில் மன்னர்களாலும் பின்பு வந்த ஆட்சியாளர்களாலும் கௌரவிக்கப்பட்டும், மான்யங்கள் வழங்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டு வந்தனர்.

அதனால் அவர்கள் தற்காலத்தில் பிழைப்புக்காக பேய்போல் அலையும் நிர்பந்தம் இல்லாமையால் வேதம், இதிகாசம், புராணம், ஜோதிடம், இசை, தர்ம சாஸ்திரங்களைக் பிழையறக் கற்று அனைவருக்கும் அதன் உண்மைகளை
எடுத்து சொல்லி  நல்வழிப் படுத்தி வந்தனர்.

இந்த உலகம் செம்மையாக செயல்படவும், மக்கள் அனைவரும் நன்றாக
வாழவேண்டும் என்ற நோக்கில் பல சாஸ்திர நூல்கள் இயற்றப்பட்டு வழிகாட்டி வந்தது.

அவைகள் அனைத்தும் சம்ஸ்க்ருத மொழியில் இருந்தன. பிறகு அவை
பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன.

நம் நாட்டை தந்திரமாக ஏமாற்றி நம்மை அடிமை செய்த ஆங்கிலேயர்கள்
நம் நாட்டு மக்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டு மென்றால்
நம்முடைய கலாச்சாரத்தை ,தெய்வ நம்பிக்கையை ஒழித்தால்தான் முடியும் என்று தெரிந்துகொண்டு நம்முடைய அனைத்து சாத்திரங்களையும்
கற்றுக்கொள்ள சம்ஸ்க்ருத மொழியைக் கற்றுக்கொண்டு அவைகளை தங்கள் மனம் போன போக்கில் தங்களுக்கு சாதகமாக திரித்து ஆங்கில மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டனர்.

அவர்களிடமிருந்து இந்த சாத்திரங்கள் அனைத்தும் நாத்திகவாதிகளிடம் போய் சேர்ந்து அவர்கள் சாத்திரங்களில் உள்ள தங்களுக்கு சாதகமாக் உள்ள கருத்துக்களை மட்டும் பெரிதுபடுத்தி மக்களைக் குழப்பி அனைவரையும் பிராம்மண சமுதாயத்திர்க்கெதிராக திருப்பிவிட்டனர்.

இலங்கையில் தமிழர்களுக்காக தொடங்கிய சிங்கள வெறியர்களின் தாக்குதல் போல் பிராமண சமூகத்திற்கான போராட்டம் தொடர்ந்தது.

அஹிம்சாவதிகளான பிராம்மணர்கள். தாங்கள் பல்லாண்டு காலமாக் வசித்து வந்த இடத்தையும், வீடுகளையும், உயிரினும் மேலாக தாங்கள் போசித்து வந்த தெய்வங்களையும் விட்டு விட்டு பல்வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தனர்.

ஈழத்தில் பல லட்சக்கணக்கான் மக்கள் வெளி நாடு புலம் பெயர்ந்ததால் இன்று காப்பாற்றப்பட்டு நல்ல நிலையில் வாழ்கின்றனர். சிங்களரின் பலத்தினை உணராது தவறான முடிவை எடுத்து  பலர் அங்கேயே தங்கி இலங்கை அரசுடன்போர் தொடுத்து மாண்டனர். .இன்னும் துன்பத்தில் சிக்கி வாடுகின்றனர்.

தற்போது நிலைமை மாறியுள்ளது கிராமங்களில் உள்ள கோயில்கள் புனருத்தாரணம் செய்யப்பட்டு மக்களிடையே ஆன்மீக மலர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கோயிலுக்கும் லட்சக்கணக்கில் மக்கள் சென்று வழிபாடு செய்கின்றனர். ,பிராம்மணர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்லர் என்பதை புரிந்துகொண்டுள்ளனர் அவர்களும் தமிழ் நாட்டின் ஒரு அங்கம் என்ற எண்ணம் இருந்தாலும். நாத்திகவாதிகள் விதைத்த நச்சு விதைகள் அவ்வபோது தலை தூக்கி வந்துகொண்டுதான் இருக்கிறது. அது எப்போதும் இருக்கும்.

இன்னும் வரும்.


Friday, January 16, 2015

பகுத்தறிவு என்றால் என்ன? (1)

பகுத்தறிவு என்றால் என்ன? (1)

இந்த தலைமுறையினருக்கு
பகுத்தறிவு என்றால் தந்தை
பெரியார்தான் நினைவு வரும்

ஏனென்றால் அவர்தான் மக்களிடையே
நிலவி வந்த ஏற்ற தாழ்வுகளுக்காக  எதிராக
போராடியவர் என்று திராவிட கட்சிகள்
தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றன.

அதற்க்கு அவர்கள் கையில்
எடுத்துக்கொண்ட ஆயுதம்
அஹிம்சை வழியில், அமைதியாக தங்களின்
கொள்கைகளை கடைபிடித்துக் கொண்டு
இறைவனை அடையும் நோக்கம் ஒன்றையே
முழு நேர வாழ்க்கை முறையாக கொண்டு
வாழ்ந்து வந்த பிராம்மண சமுதாயத்தினரை இழிவு படுத்துவதும்
அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து அவர்களை
அவர்களின் இருப்பிடங்களிலிருந்து விரட்டியதும் தான்

ஆனால் அவர்கள் எதிர்பார்த்த சமரச சமுதாயம் வர வில்லை
வரவும் வர வாய்ப்பில்லை. இன்று தமிழ் நாடு மதம், ஜாதி, இனம்
நிறம் என அனைத்து அடிப்படையிலும் பிரிந்து ஒன்றுக்கொண்டு சண்டையிட்டு மடிந்துகொண்டிருக்கின்றன.

வெளியே பார்ப்பதற்கு தாங்கள் அனைவரும் தமிழர்கள் என்று மக்களிடையே
புளுகிக் கொண்டு , தொடர்ந்து பிராமணர்களை ஆரியர்கள் என்றும் பார்ப்பான் என்றும், நாட்டில் எந்த சம்பவம் நடந்தாலும், பார்ப்பனர்களும், பார்ப்பநீயமும்தான் காரணம் என்று தொடர்ந்து பொய்களை திரும்ப உரக்கக் கூவி தமிழ்  நாட்டின் வளங்களைக் தொடர்ந்து கொள்ளை அடித்து தங்கள் பையை நிரப்புவதிலும்,குறியாய் இருக்கின்றன

பிராம்மணர்கள் தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிரானவர்களாக
சித்தரித்து அவ்வப்போது  செல்லரித்துப்போன தங்களின் கொள்கைகள்
இன்னும் உயிரோடு இருப்பதாக காட்டிக்கொண்டு திரிகின்றன

வாழ்வாதாரங்களை இழந்த பிராம்மண  சமூகம்
தங்களின் உயரிய நெறிகளை கடைபிடிக்க இயலாமல்
வேறு வகையான வாழ்வாதாரங்களைத் தேடி வேறு மாநிலங்களுக்கும்,
உலகில் உள்ள மற்றநாடுகளுக்கும் சென்று பாரம்பரியமான
தங்கள் குல வழி வந்த உயரிய சிந்தனைகளாலும் அறிவின் தெளிவாலும்
தங்களைக் காத்துக்கொண்டு, தாங்களும் உயர்ந்து தங்கள் வாழும் நாட்டிலும்
தங்களின் உயரிய கலாச்சாரங்களை பாதுகாத்துக்கொண்டு, மற்ற நாட்டு மக்களுக்கும் தங்களின் பெருமையை உணரும்படி செய்ததுடன், அவர்களையும் அந்த நன்மையை பெற்று மேன்மையடையச் செய்தனர்.  

அவ்வப்போது தோன்றிய மகான்களின் வழி காட்டுதலைக்  கொண்டு
இந்த பொய்ப் பிரசாரங்களை கண்டு அஞ்சாமல் தங்களை நெறிப்படுத்திக் கொண்டு தாங்களும் நல்வழியில் நின்றுகொண்டு மற்றவர்களுக்கும் அதை
கடைபிடிக்கவும் செய்து வருவது பாராட்டிற்குரியது.

இன்னும் வரும்


Tuesday, January 13, 2015

ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை (பாசுரம்(30)

   

  ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை (பாசுரம்(30)

பாடல்-30
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
     திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்
     பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
     இங்கு இப்பரிசு உறைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கன் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
     எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்
விளக்கம் 

இந்த புனிதமான பாரத மண்ணில்
மானிடராக  பிறப்பது எதற்காக ?



மானிடர் என்று
பெயர் வந்து எதற்க்காக?

இடர் என்றால் துன்பம்
என்று அனைவருக்கும் தெரியும்
மானிடர் என்றால் மிகப் பெரும் துன்பம்

ஒரு ஜீவன்  தாயின் வயிற்றில்
கருவாய் உருவாகி
வளர்ந்து குழந்தையாக உருவெடுத்து
இப்புவிக்கு வந்து வளர்ந்து வாழ்ந்து
மீண்டும் மண்ணுக்குள் போகும் வரை
ஒவ்வொரு கணமும் ஆபத்துக்கள் அதை எந்நேரமும்
தொடர்ந்து கொண்டே இருகின்றன.

உயிர்கள் மீது அபரிமிதமான
கருணை கொண்ட
ஹரி இதயத்தில் வந்து அமர்ந்து கொண்டு
 நம்மை அறியாமலேயே
நம்மைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறான்
என்பதை உணர்ந்த ஞானிகளும் யோகிகளும்
அவனை எப்போதும் அவனை



அந்தர்யாமியாய்  கண்டு மகிழ்ந்து
துதித்துக் கொண்டு இன்புறுகிறார்கள்.

அவனை தன்னுள் கண்டுகொண்ட
காரணத்தினால் அவன் எல்லா ஜீவராசிகளிலும் அண்ட
சராசரம் முழுவதிலும் வியாபித்து இருப்பதை உணர்ந்து கொண்டு அனைத்திலும் அவனைக் கண்டு ஆனந்தமுறுகிரார்கள்

அதனால்தான் சர்வ ஜீவ நமஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி என்று சொல்கிறார்கள்

விஷ்ணு சஹஸ்ரநாமமும் அனைத்து உயிரிலும் வாசம் செய்யும் வாசுதேவனே உனக்கு நமஸ்காரம் என்கிறது.




அந்த ஆனந்தம் அவர்களின் முகத்தில்
தெய்வீக பு ன்னகையாய்
 மலர்வதை நாம் காண முடியும்



துன்பங்களும் துயரங்களும்
மாறி மாறி கடலலைகள் போல் வாழ்வில்
வருவதால் இந்த பிறவியை பிறவிக் கடல்
என்று அழைக்கப்படுகிறது.

இந்த கடல்தான்
அனைத்திற்கும் தாயாவாள்.

பிரளயத்தின் போது இந்த உலகமனைத்தும்
கடலில்தான் மூழ்குகின்றன .



மீண்டும் அதிலிருந்துதான் தோன்றுகின்றன .
ஏராளமான தோன்றிய பொருட்களிடையே நம்மையெல்லாம் பகவானோடு இருந்துகொண்டு காக்கும்
செல்வத்திற்கு அதிபதியான மகா லக்ஷ்மியும்
 கடலிருந்துதான் தோன்றினாள்



எப்படி பாலைக் காய்ச்சி ஆறவைத்து
புரை  ஊற்றி தயிராக்கி அதில் வெண்ணையை கடைந்து எடுத்து அதிலிருந்து நெய்யைஅடைகிறோமோ

அதுபோல்தீய மற்றும் நல்ல எண்ணங்களைக் கொண்ட நம் மனதை பகவானின் நாமத்தின் துணைக் கொண்டு கடைந்தால் நம் இதயத்தில் அடியில் நமக்காக காத்திருக்கும் கண்ணன் வெளிவந்து நமக்கு காட்சி தருவான்.

 அவன் காட்சியைக் கண்ட பின் நமக்கு
வேண்டியதெல்லாம் அவன் தருவான்.
அதை பெற்று அவன் நினைவுடனே அவன் தாள் பணிந்துகொண்டு  இந்த உலகில் இன்பமாக வாழ்ந்து முடிவில்
அவன் திருவடிகளை அடையலாம்



பரமனை அடைய வழிகாட்டும்
பாமாலை 30 யும் அனுதினமும் அரங்கனோடு கலந்து  அவனோடு நின்றுகொண்டு நமக்கு காட்சி தரும் ஆண்டாளின் திருவடிகளை சிந்தித்து வாழ்க்கையை நடத்தினால் நாமும் இன்புற்று இந்த உலகமும் இன்புறும் என்பது சத்தியம்.

மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாளின் கருணையினால் அரங்கனின் புகழ் பாடி பரமானந்தத்தில் திளைத்த நாம் அதை தொடர்ந்து அனுபவிக்க வேண்டுமென்றால் ஒவ்வொருநாளும் அதிகாலையில் எழுந்து நீராடி தூய மனதுடன் அவள் நமக்களித்த பாமாலையைப்  பாடி பரமனின் பாதங்களில் பூமாலையை அர்ச்சித்து அவனின்  நினைவாக நம் கடமைகளை தொடங்கினோமானால் புவியில் நாம் வாழும் காலம் வரை  இன்பமான, அமைதியான, வாழ்வை நாம் அடைவோம் என்பதில் ஐயமில்லை

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் .
திருவரங்கன் திருவடிகளே சரணம்

Monday, January 12, 2015

ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை (பாசுரம்(29)

   

  ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை (பாசுரம்(29)



பாடல்-29
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச்சேவித்துன் 
பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய் 
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில்  பிறந்து நீ குற்றவேல் 
எங்களைக் கொள்ளாமல் போகாது 
இற்றைப் பறை கொள்வான் அன்றுகாண் கோவிந்தா 
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்  உந்தன்னோடு 
உற்றோமே ஆவோம் உனக்கேதான் ஆட்செய்வோம் 
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் 
விளக்கம் 

மார்கழி மாதத்தின் தொடக்கத்தில்
 நாம் அனைவரும் உலக மோகத்தில் மயங்கி
 கிடந்து உறக்கத்தில் கிடந்தோம்.

தன் குழந்தைகள் இப்படி அறியாமையில் 
கிடந்தது உழல்கிரார்களே என்று கவலைப்பட்டு
 நம்மையெல்லாம் கடைதேற்ற பூமிதேவியே 
 மழலையாய் மண் மீது வந்துதித்தாள்

 .மாலவனே அனைவருக்கும் மேலானவன் 
 என்று இவ்வுலகில் நிலை நாட்டி 



அவனைப்  பணிவதே பிறவி எடுத்ததின்பணி 
 என்று மாலுக்கு மலர் மாலைகளை சாற்றியும் 
அவன் மீது பாமாலை சாற்றியும் 
முதலும்  முடிவும் இல்லாத பரந்தாமனுக்கு 
பல்லாண்டு பாடி தன் வாழ்வை 
கண்ணனுக்கே அர்ப்பணித்த பெரியாழ்வாரின் 
 வளர்ப்பு மகளாக வளர்ந்தாள்
 


இவ்வுலகில் பிறவி எடுத்ததின் நோக்கம் அழியும் பொருட்களைச் சேர்ப்பதிலேயே வாழ்நாளை கழிப்பது அல்ல  என்றும் அழியாப் பரம்பொருளான ஹரியை நினைந்து அவன் புகழ் பாடி துதித்து அவனுடன் அயிக்கியமாவதுதான் என்ற பேருண்மையை வலியுறுத்தினாள் ஆண்டாள் 

  மற்ற பெண்கள் போல் இல்லாமல் 
ஜீவான்மாவின் இலக்கு பரமாத்மாதான் 
என்று வாழ்ந்து காட்டினாள்.

 முடிவில் அரங்கனுடன் அனைவரும் 
முன்பாக கலக்கவும் செய்தாள்.



அத்தோடு விடவில்லை 
பெரியாழ்வார் பரமனுக்காக  
தொடுத்த மாலைகளை தான் அணிந்து கொண்டு பக்திக்கு ஆட்பட்ட பக்தைக்கும்  பரமனுக்கும் பேதம் இல்லை என்று இவ்வுலகத்திற்கு காட்டினாள் ஆண்டாள் 



  .அவள் பக்தியை மெச்சிய அரங்கன் அவள் சூடிக் கொடுத்த மாலைகளை அன்போடு ஏற்றுக்கொண்டதோடு சூடி கொடுத்த சுடர்க்கொடி என்று அவளைப் பாராட்டி அவளையும் ஏற்றுக்கொண்டான்.



  பரமன் மீது வேதத்தின் சாரத்தை பாமரரும் அறியும் வண்ணம்  30  பாமாலைகளாக 
சூட்டி மகிழ்ந்தாள் அந்த பக்தை  கோதை. 

28 பாசுரங்களை பாடி மகிழ்ந்தோம்.
 நம் மனம் கண்ணன் திருவடிகளின் 
கருணையை நினைத்து நினைத்து பரவசப்படுகிறது.

 ஆனால் நமக்கு இந்த உலகத்தில் விதி வசத்தால் பல காரியங்களை காலையில் கண் விழித்தது  முதல் உறங்கப் போகும் வரை ஆற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 
இறைவனுக்கும் அது தெரியும். 

அதனால்தான் ஆதவன் உதயம் ஆனவுடன் நன்னீராடி அவன் சன்னதியில் போய்  நின்று அவனைக் கண்ணார கண்டு அவன் புகழைப் போற்றிப்  பாடி >தங்க நிறம் போன்று ஒளி வீசும் தாமரை போன்ற பாதங்களை சேவித்து கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு விட்டுஅவன் அருள் பெற்றுக்கொண்டு  உலக கடமைகளை ஆற்றப் புகுந்துள்ளோம்.  



எங்களுக்கு கல்வியறிவு கிடையாது>
பக்தி கிடையாது

மாடுகள் போல் மேய்ப்ப்பாரின்றி 
திரியும் எண்ணங்கள் உடைய 
 மனம் கொண்டவர்கள்  நாங்கள் .

அப்படிப்பட்ட இடையர்கள் குலத்தில் 
 வந்துதித்த கண்ணா ! எங்களின் உண்மையான பக்தியை ஏற்றுக்கொண்டு எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்.

இந்தப் பிறவி மட்டுமல்லாது 
அடுத்தடுத்து வரும் பிறவிகளிலும்
 உன் திருவடியைத் தான் எங்கள் ஜீவன் பற்றாகக் கொள்ளவேண்டும்

 .உனக்குத்தான் தொண்டாற்றவேண்டும் 
.அதற்க்கெதிரான  சிந்தனைகளை எங்கள் மனதில் எழாதவாறு நீதான் அவைகளை  அழித்து எங்களை காப்பாற்றவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறோம். 



இந்த பாக்கியத்தை நமக்களித்த 
ஆண்டாளின் திருவடிகளைச் சிந்தித்து 




அதிகாலையில் அனுதினமும் வணங்கினாலே போதும்
 அரங்கனின் அருள் நமக்கெல்லாம் எளிதாகக் கிட்டிவிடும் என்பதில் ஐயமில்லை.  

ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை (பாசுரம்(28)(தொடர்ச்சி)


  ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை (பாசுரம்(28)(தொடர்ச்சி)


பாடல்-28
கறவைகள் பின்  சென்று கானம்  சேர்ந்துண்போம் 
அறிவொன்றும்இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப் 
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் 

கறவைகள் என்றால் ஆநினம் என்று பொருள்.
 தற்காலத்தில் கால்நடைகள் என்று அழைக்கிறார்கள்.
 அந்த காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஆயர்பாடி  என்று ஒரு பகுதி கிராமத்தின் மேற்குப் பக்கம் இருக்கும்.
மேய்ச்சல் நிலங்கள் இருக்கும்.கால்நடைகள் மேய

  
 ஏனென்றால் கிழக்குபக்கம்
 நீர்நிலைகள் பயிர்கள் இருக்கும்.
அங்கு கிராமத்தில் உள்ள மாடுகளனைத்தையும்
 பராமரிப்பவர்கள் இருந்தார்கள். அது தவிர ஒவ்வொரு வீட்டிலும் பசுக்கள் இருந்தது அவைகள் அனைத்தும்  காலையில் மேயப் புறப்படும் கூட்டம் கூட்டமாக  

.மாலை மஞ்சள் வெயிலில் அவைகளின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள விதவிதமான மணிகளின் ஒலிகளை எழுப்பிக்கொண்டு அதனதன்  வீட்டு கொட்டகைகளை அடையும். பார்க்க கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

 அவைகள் வரும் போது எழும் தூசி மாலை மஞ்சள் வெயிலில் தங்க துகள்கள் காற்றில்பறப்பதுபோல் போல் அழகாக இருக்கும்.
 இன்று எல்லாம் போய்விட்டது. 

எல்லா இடங்களிலும் அனைத்து  இயற்கை வளங்களையும் அழித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டன 

மாடுகளை பராமரிப்பு என்பது முழுநேரப்பணி 
அந்த துறையில் ஈடுபட்டவர்களுக்கு 
கல்வி  கற்கநேரம் கிடையாது.
ஆனால் உள்ளத்தில்  கள்ளம் கபடு கிடையாது 

பகவான் எங்கிருக்கிறான் என்ற கேள்விக்கு மாசில்லா மனதில் இருக்கிறான் என்கிறார். தொண்டரடிப்பொடிஆழ்வார்.
அதனால்தான் பகவான் கண்ணன் அங்கு அவதரித்தான் 
அவர்களோடு விளையாடினான் 

மாடுகளை யாராவதுகண்காணித்து வரவேண்டும். 
இல்லாவிடில் அது காட்டிற்குள் நுழைந்தால் காட்டு விலங்குகளுக்கு இரையாகிவிடும்.
 இல்லாவிடில் பயிர் நிலங்களை மேய்ந்துவிடும்.
 கன்றுகள் பாலை குடித்துவிடும். 

மனிதரின் மனத்தை மாட்டிற்கு
 உவமையாக சித்தர்கள் சொல்லுகிறார்கள். 
அதை மனம் என்னும் மாடடங்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
அதை கட்டுப்பாட்டில் வைக்காமல் போனதால்தான் 
உலகின் இன்று இத்தனை அலங்கோலம். 
அழிவுகள் ஆபத்துக்கள் துன்பங்கள்.
மனதை ஒரு யானையின் 
துதிக்கைக்கும் ஒப்பிடுகிறார்கள்.
 யானையின் துதிக்கை சும்மா இருக்காது 
அசைந்துகொண்டே இருக்கும்.
 நன்றாக நீராட்டி கொண்டு நிற்க வைத்தால் 
மண்ணை எடுத்து தன்  தலையில் போட்டுக்கொண்டு 
அசுத்தமாக்கிக் கொள்ளும். 

அதற்குதான் அதன் துதிக்கையில் 
 ஒரு சங்கிலியை கொடுத்துவிடுவார்கள் அது அதையே பல மணி நேரம் ஆட்டிக்கொண்டே இருக்கும்.

நம் மனம் ஏதாவது பொருளைப் பற்றிக்கொண்டு 
சதா சலித்துக்கொண்டே இருக்கும். 
சலிப்பது அதன் இயல்பு.
அதனால்தான் மகான்கள் 
ஒரு பகவன் நாமாவை அதனிடம் கொடுத்துவிட்டால் எப்போதும் அதை பற்றிக்கொண்டு மற்ற வேண்டாத எண்ணங்களை மறக்க தொடங்கும்.
மிகவும் எளிமையான மந்திரம் கோவிந்தா 
என்னும் நாமம்தான். முதலும் முடிவும் அதுதான்.

 எங்கிருந்து நம் ஜீவன் வந்ததோ  அதனுடன் மீண்டும் 
 சேர்ந்துகொள்ள வழி வகை செய்யும் நாமம்தான்  கோவிந்தா என்னும் திருநாமம். 

ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


நன்மையை தரும் நாமம் கோவிந்தா 
என்கிறாள் ஆண்டாள். 

அதை வாயினால் பாட வேண்டும் 
மனதினால் சிந்திக்க வேண்டும்.
இரண்டு கண்களாலும் அவன் வடிவைக் 
கண்டு ஆனந்தமுற  வேண்டும்.  
அதுதான் மனித பிறவி எடுத்ததன் பயன். 
அதுதான் உண்மையான கல்வி கற்றதன் பயன். 
கண்கள்படைத்ததின்  பயன். 

காசும் பணமும் நாம் செய்த
 நற்பயன்களால் தானே வந்தமையும். 
அதைத்தான் நாம் அனுபவிக்க முடியும்.
அதர்மத்திற்கு புறம்பான வழிகளில் 
வரும் செல்வம் நமக்கு எந்தவிதத்திலும் பயன்படாது. 

இந்த உலகத்தில் எல்லாம் ஏதாவது 
ஒன்றை சுற்றுகின்றன. கல் இயந்திரத்தில் 
அச்சைச் சுற்றிதான் கல் சுழல்கிறது 

அச்சு அசையாமல் இருக்கிறது 
அச்சைவிட்டு விலகி வரும் பொருட்கள் இடிந்து மாவாகிறது
 அச்சுடன் ஒதுங்கி  நிற்கும் பொருட்கள் பத்திரமாக இருக்கின்றன. 

அனைத்திற்கும் ஆதரமானவன் அச்சுதன் >
 அவன்தான்என்றும்  அழியாதவன்
அவன் பெருமை அளவிடமுடியாதது 
அனந்தன் அவன்தான் கோவிந்தன் 
.அவனிடம் நம் மனதை ஒப்படைத்துவிடுவோம் ..
அல்லல் இல்லா வாழ்க்கையை வாழ்வோம்.  

படங்கள்-உதவி-கூகிள்